Thursday, October 06, 2005

டீஜே

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த போது மொபைலில் ப்ரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு.

"ஹலோ டுபுக்கா..! என் பெயர் ஷ்ரேயா...நான் உங்கள் வலைப்பதிவை ரொம்ப நாளாக படித்துவருகிறேன்...ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை..." என்ற ரீதியில் ஆரம்பித்து தொடர்ந்தது.

எனக்கு ஒரே படபடப்பு...ஓவராய் தாக்குதல் தொடர்ந்தது. என்ன பதில் சொல்லுவது..."ம்ம்ம் ஹீ ஹீ.." என்ற ரீதியில். நல்ல வேளை அன்று வெண்டைக்காய் சாப்பிட்டதால் சீக்கிரமே மண்டையில் பல்பு எரிந்து என்னோட தங்கமணி தான் ஷ்ரெயா பெயரில் குரலை மாற்றி மாட்லாடிக் கொண்டிருக்கிறதென்று புரிந்து "ஐய்யா யாரு...எங்கிட்டயேவா..." என்று தெளிவாக சமாளித்துவிட்டேன்.

இந்த வாரம் வேலைப் பார்ப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒரு அழைப்பு...இந்த முறை ஆண் குரல்
"ஹலோ டுபுக்கு நாந்தான் ஜே.ஜே பேசுறேன்...நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா " என்று நேர விஷயத்துக்கு வந்துவிட்டார். கொஞ்சம் முழித்துக் கொண்ட பிறகு தான் பேசியது டீ.ஜே என்று புரிந்தது. நேற்று சந்தித்தோம். "இந்த மாமா எல்லாரையும் பார்க்கும் போது ஆரஞ்சு ஜூஸ் பரிசளிப்பார்..இன்னிக்கு சாயங்காலம் உனக்கும் ஒன்று கிடைக்கும்" என்று மகளிடம் சொல்லியிருந்தேன். ஆனால் டீஜே ஏமாற்றிவிட்டார். ஆனாலும் ரொம்ப நாள் பழகியவர்களைப் போல் எடுத்தலிருந்தே...ரெண்டு பேரும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். அவருக்கு ஆபிஸில் ஜோலியிருந்ததால் ஒரு மணிநேரம் தான் பேசினோம். ஆனாலும் இனிமையாக இருந்தது.

அம்பாசமுத்திரத்தில் எங்களுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் என்று டீஜே ஆரம்பித்தார்...கடைசியில் யாரென்று பார்த்தால் ஹிந்தி மாமியின் நாத்தனார். எதுக்கு வம்பு என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். நல்லவேளை ஹிந்தி மாமி நேரடி சொந்தமில்லையாதலால் தப்பித்தேன். இனிமே கொஞ்சம் உஷாரா இருக்கனும்பா.

லிவர்பூல் ஸ்டிரீட்டில் சென்னை தோசா இல்லாததால்...மெக்டோனால்டில் இலைதழைகளை மென்று கொண்டே பேசினோம். நான் தான் பில்லு குடுத்தேன். ப்ளாகினால் என்னென்ன செலவுகள் வரும் என்றும் தெரிந்து கொண்டேன். :)
(சும்மா டமாஸு..கோவிக்காதீர்கள் டீஜே)

(வர வர எழுத்தாளர் சாருநிவேதா மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றுகிறது. சாருநிவேதா இதைப் படித்தால் கெட்ட கெட்ட வார்த்தையால் வையப்போகிறார்...சொல்லிவிடாதீர்கள் ப்ளீஸ்)

No comments:

Post a Comment

Related Posts