Tuesday, September 06, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...5

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4

அவன் நெட்டையன். அவனுக்கு கத்திரிக்காயைப் பிடிக்காது அதனால் காதலையும் பிடிக்காது. இவன் குட்டையன். இவனுக்கு கத்திரிக்காயையும் தெரியாது காதலையும் தெரியாது. ஆனால் தெரிந்த மாதிரி நடித்தால் தனது பென்சில் மீசையை அரும்பு மீசை என்று காலேஜில் நம்பி விடுவார்கள் என்று நடித்துக் கொண்டிருப்பான். இருவருக்கும் எதிர் துருவங்களில் வீடு. காலேஜ் நடுவில்.

மெகா சீரியல் மாதிரி நிதானமாய் போய்க் கொண்டிருந்த இருவர் வாழ்விலும் புயலாய் நுழைந்தாள் அவள். நடிகர் முரளி கனவில் கொலுசு போட்டு அழகு பார்த்து ஃபீலிங்காய் பாட்டு பாடுவாரே அந்த அழகு. துடைத்து வைத்த குத்து விளக்கு மாதிரி பளிச்சென்று இருப்பாள். அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் எனக்கென்னவோ அவளை பார்த்த போது தீப்பொறி பத்தவே இல்லை. (ஹைய்யா..இன்னிக்கி தங்கமாளிகை பில்லு ஏறாது).

அதற்கப்புறம் நெட்டையனும், குட்டையனும் அநியாயத்திற்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இந்தப் படத்துக்குப் போலாமா அந்தப் படத்துக்குப் போலாமா என்று அலைபவர்கள் ஒழுங்காய் கல்லூரிக்கு வர ஆரம்பித்தார்கள். "தேவர் மகனில் கமல் கௌதமிக்கு உண்மையிலேயே உம்மா குடுத்தாரா" என்ற அறிவுப் பசியைத் தூண்டும் கலா தத்துவ விவாதங்களிலே கலந்து கொள்ளாமல், குத்துவிளக்கிற்கு தேவுடு காக்க ஆரம்பித்தார்கள். குத்துவிளக்கு எங்களுக்கு ஜூனியர். குத்துவிளக்குக்கு குட்டையனோட் ஊர். வசதியாய் போயிற்று. ஒன்பது மணி காலேஜுக்கு, குத்துவிளக்கு 8 மணிக்கே வருகிறதென்று குட்டையனும் அதே பஸ்ஸில் வர ஆரம்பித்தான்.

முதலில் குட்டையனுக்கும் நெட்டையனுக்கும் லேசாக மனஸ்தாபம் ஆரம்பித்தது. அப்புறம் "ஜோ ஜீத்தா வோ ஹீ சிகந்தர்" ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் அபூர்வ சகோதரர்கள் ஆனார்கள். ஆனால் இருவருமே ஜென்டில்மேன் சிகந்தர்கள். குட்டையன் குத்துவிளக்கு எப்போ எந்த பஸ்ஸில் ஏறினாள், எவ்வளவு சில்லறை குடுத்து டிக்கெட் வாங்கினாள், நெயில் பாலீஷ் போட்டிருக்கிறாளா, என்ன கலர் கர்சீப் கொண்டு வந்திருக்கிறாள் என்ற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வான். நெட்டையன் குட்டையன் இல்லாத போது என்ன நடந்தது என்பதை கவனித்து நியாபகமாக அப்டேட் செய்வான். மொத்தத்தில் ஷிப்ட் முறையில் முழுநேர குத்துவிளக்கு வாட்ச்மேன் சர்வீஸ் இனிதாக நடந்தேறி வந்தது.

எங்கள் கல்லூரிக்குப் பெண்கள் புதுசாகையால் (பாகம் இரண்டு அதிகாரம் நான்கு) வகுப்பு இல்லாத நேரங்களில் பையன்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்களுக்குத் தனியாக ஒரு ஓய்வறை கொடுத்திருந்தார்கள். இது போதாதென்று அந்த கல் நெஞ்ச ப்ரின்ஸிபால், குஞ்சம்மா (உண்மையான பெயர்) என்ற ஒரு கடுத்த மூஞ்சி அம்மணியை வேறு அதற்கு காவலாக அமர்த்தியிருந்தார். பெண்கள் கமேண்டோ பிரிவில் கருப்பு பெல்ட் வாங்கின மாதிரி இருப்பார். எப்போதும் சந்தேகப் பார்வை தான். அபூர்வ சகோதரகளுக்கு தலைவலியே அவள் தான். அக்னிநட்சத்திரம் மாதிரி அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள்.

குட்டையன் நோட்ஸ் தருகிறேன் அது இதுவென்று அஜால் குஜால் பண்ணி ஒருவழியாக கடைசியில் குத்துவிளக்கை பஸ் சினேகம் பிடித்துவிட்டான். நெட்டையனும் ஒட்டிக் கொண்டான். இருவரும் குஞ்சம்மாவுக்கு தெரியாமல் மரத்தடியில் நைஸாக குத்துவிளக்கிடம் கடலை போடுவார்கள். அவளுக்கு நோட்ஸ் குடுக்கவேண்டும் என்று லைப்ரெரிக்கு சென்று ரெபரன்ஸ் புத்தகத்தையெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுப்பார்கள்.

"இந்தப் படிப்பை போன வருஷம் படித்திருந்தாலாவது பிரயோஜனமாக இருந்திருக்கும்...இன்னமும் கெட்டுப் போகவில்லை இந்தவருஷப் படிப்பை படிங்கடா..அடுத்த வருஷம் நோட்ஸ் குடுத்துக்கலாம் "

கேட்டால் தானே! மன்மதக் குஞ்சுகள் மிதப்பில் இருந்தார்கள். சீன் காட்டும் படலம் ரொம்ப நாள் தொடர்ந்தது. இப்படியாக ஒருநாள் குட்டையன் நோட்ஸ் குடுக்கிறேன் பேர்வழி என்று ராகு காலமும் யெம கண்டமும் கூடி வரும் வேளையில் அவள் வீடுக்கே ஒரு நாள் போய்விட்டான். நல்ல நேரம் பார்த்துப் போயிருக்க வேண்டாமோ. கூட இருந்த நல்லவர்களின் வயித்தெரிச்சல் வேறு சேர்ந்து கொண்டது. அப்புறம் மரக்தடி கடலை சாகுபடி கம்மியாகிவிட்டது. அதற்கப்புறம் என்னமோ குத்துவிளக்கு இவர்களைப் பார்த்தால் விஷயமாகப் பேசி விட்டு போய்விடுவாள். என்னமோ நடந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கு ஒரு நாள் "நீங்கள் இருவரும் எனக்கு நோட்ஸ் குடுத்து அறிவுக் கண்ணைத் திறந்த அண்ணன்கள்" என்று ராக்கி கட்டிவிட்டது.

அண்ணன்களும் விஷயத்தை அமுக்கப் பார்த்தார்கள். ம்ஹூம்...அரசல் புரசலாகி வெளியே தெரிந்து விட்டது.

"டேய் குட்டையா உனக்கு நான் அப்பவே சொன்னேன்ல...ஆட்டுக்கு வால் அளந்து தான்டா வைச்சுருக்கான்..எதோ இந்த மட்டுக்கும் உன்ன தம்பீன்னு சொல்லாம அண்ணன்னு சொன்னாளே...அந்த மட்டுக்கும் சந்தோஷப் பட்டுக்கோ..."

ஆனாலும் அபூர்வ சகோதரர்கள் அதற்கப்புறமும் அடங்கவே இல்லை....

கேட்டால் - "அவளைப் பிடிக்கும் ஆனால் அந்த மாதிரியெல்லாம் இல்லை, அவள் எங்களை அண்ணன்னு சொன்னது எங்களுக்கு சந்தோஷம் தான்" என்று தங்கைக் கோர் கீதம் பாட்டுப் பாடுவார்கள்.

"சரி சரி என்னையும் உன் கூடப் பிறந்த தம்பியா நினைச்சு சாலிட் ஸ்டேட் நோட்ஸ் எடுத்துக் குடுடா "

"டேய் நீங்க குத்துவிளக்க பார்க்கறீங்களா இல்ல குஞ்சம்மாவ பார்க்கறீங்களா...என்ன கருமாந்திரம்டா...உங்க கேரக்டரயே புரிஞ்சுக் முடியலயே..."

சிவாஜி குரலில் "அம்மா அம்மாடி..உனக்கு நியாபகம் இருக்கா..நீ பர்ஸ்ட் செமெஸ்டர்ல இருக்கும் போது எல்க்டிரிசிட்டி நோட்ஸ் கேட்ட...யுனிவர்ஸிட்டி புக்க படிச்சா..ஊத்திக்கும்ன்னு லைப்ரேரிக்கு ஓடிப்போய் பிர்ஜ்லால் சுப்ரமணியம் புக்க பார்த்து நோட்ஸ் எடுத்துக் குடுத்தேனே..நீயும் படிச்சுட்டு 85 பெர்சன்ட் மார்க் வாங்கினியே...இப்பிடியெல்லாம் செஞ்சா உன் மனம் கவர்ந்த கண்ணனாக ஆவேன்னு நானும் நினைச்சேனே; ஆனா நீ...கண்ணன் இல்லடா வெண்ணை அண்ணன்னு அன்னிக்கு சொல்லிட்டியே..."

அடிக்கடி விதவிதமாய் பையன்கள் கலாய்ப்பான்கள்.

அண்ணன்கள் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சவில்லை. ரொம்ப நாள் பாசமலர் படம் தொடர்ந்தது. அப்புறம் குத்துவிளக்கு கல்யாணத்திற்கும் போய் சாப்பிட்டுவிட்டு முறை செய்துவிட்டு வந்ததாகக் கேள்விப் பட்டேன்.

--இன்னும் ஜொள்ளுவேன்
Use this Comments(#)

No comments:

Post a Comment

Related Posts