Thursday, September 23, 2004

டுபுக்கோதெரப்பி

For picture version of this post click here

மலச்சிக்கல் தீர முத்தான மூன்று வழிகள்

1. தினமும் ஹார்லிக்ஸ் அருந்த வேண்டும், அவங்களுக்குத் தான் "Insideலேர்ந்து outside போகனும் அவசியம்"ன்னு தெரிஞ்சுருக்கு. அதோட ஸ்கூல் ட்ரெஸ் போட்டுக்கிட்டு பென்ஞ் மேலே ஏறி "இபான்ங்...உபான்ங்."னு மாவரைக்கிற மாதிரி ஆடிக்கிட்டே சொன்னா உத்தமம்.
2. ஒரு பாட்டில் ப்ரான்ஞ் ஆயில ஒரே கல்ப்ல அடிச்சுட்டு சீனா தானா பாட்டு வீணை டான்ஸ்(அம்மணகுன்ஸ்) ஆட்டம் போட்டா உடனடி நிவாரணம் தான்.
3. ஜெயலெச்சுமி அக்கா கிட்ட ஒரு பொட்டிய வாங்கிட்டு சன் டிவியை பகைத்துக் கொண்டால் வயிற்றைக் கலக்குவதற்கு அவர்கள் க்யாரண்டி.
(அடிக்கடி வெண்ணிறாடை மூர்த்தி மாதிரி வயிற்றைத் தட்டிக் கொண்டு தம்பிரீரீ...ப்ராக்டீஸ் செய்தால் இந்தப் பிரச்சனை தலையே காட்டாது).
பி.கு - டுபுக்கு சொன்னா நக்கல்வுடுவீங்க...கட்டிப்புடி வைத்தியம், கேரம் போடு வைத்தியமெல்லாம் நம்ம சகலகலா டாக்டர் சொன்னா ஃப்லீங்கா பார்ப்பீங்க...ஹும்ம்...

Wednesday, September 22, 2004

திரைக் கண்ணோட்டம்

for picture version of this post click here

மெகா சீரியல் மயக்கத்திலிருந்து தப்பிக்கலாமென்று போன வாரம் இரண்டு படங்கள் பார்த்தோம். வசூல் ராஜாவும், நியுவும்.

சகல கலா டாக்டர்

தலைவர் கமல் படமென்றால் மிகுந்த எத்ர்பார்ப்புடன் நல்ல ப்ரிண்ட் வரும் வரை தேவுடு காத்து ஆசையோடு பார்ப்பேன். படம் குப்பையாக இருந்தாலும் கமல் கலக்குவார் என்ற நம்பிக்கை உண்டு எனக்கு. டாக்டர் படமும் பரவாயில்லை, கமலும் வழக்கம் போல கலக்கியிருந்தார். கிரேஸி மோகன் வசனம் - கிச்சுக்கிச்விற்கு குறைவில்லை. கதை நார்மல் மசாலா கதை தான் என்றாலும் கமல், பிரபு, பிரகாஷ்ராஜ் இவர்களால் சோபிக்கிறது. பிரபுவிற்கு நல்ல வாய்ப்பு. பிரபு கமல் காம்பினேஷனில் காமெடி நன்றாக இருக்கிறது. ஸ்னேகா கண்ணுக்கு குளிர்ச்சியாக...வேண்டாம் நான் ஒன்னுமே சொல்லலை..மறந்திருங்க. டி.வி. பேட்டிகளிலெல்லாம் கமலுடன் நடித்தது பற்றி அம்மணி சொல்லும் போது பயங்கரமாக ஜொள்ளினது போல் தோன்றியது எனக்கு.
கமலுக்கு நிறைய பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். ஆனால் உடம்பு பயங்கர குண்டாயிட்ட மாதிரி தெரிகிறது. பிரபு கமல் பக்கத்தில் ஒல்லியா இருக்கார். படத்தில் குறிப்பிட வேண்டியது சீனா தானா பாட்டு. ஒரு புது குட்டி(யாரு இது??) நாலஞ்சு குட்டிகளோட பஞ்சகச்சம் மாதிரி (அதாங்க வயல்ல வேலை செய்யற ஆம்பளைங்க கட்டிகினு இருப்பாங்களே அது மாதிரி) புடவைய துக்குனூன்டு கட்டிண்டு சீய்ச் சீய்...ஒரே சல்லியம். பாட்டும் பாட்டுக்கேத்த மாதிரி அந்த குட்டிகள் போடற கெட்ட ஆட்டமும்...வாய், கண், காதுன்னு பொத்திக்கறதுக்கு ரெண்டு கை போறாது. அந்த குட்டி இதுல வீணை வேறு வாசிக்கற மாதிரி ஆடறா...சரஸ்வதி கடாட்ஷம் தாண்டவமாடறது. நானும் ட்ரை பண்ணினேன் சுளுக்கிக் கொண்டது தான் மிச்சம். நான் ரொம்ப சாட்றேன்னு நினைக்காதீங்கோ...நானும் ஒருதடவைக்கு ரெண்டு மூணு தரம் பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் சொல்லறேன்.
ஆனாலும் படம் நல்லா இருக்கு.

நியூ

போட்ட கொஞ்ச நேரத்துலயே சவுண்ட ம்யூட் செய்ய வேண்டி இருந்தது. அப்பிடியும் படம் ரொம்ப ஆபாசமா இருந்த்துனால...இப்ப்பிடிப்பட்ட படத்தை எல்லாம் பார்கனுமான்னு ஆஃப் பண்ணி எல்லாரையும் தூங்கச் சொல்லிட்டு அப்புறம் நான் மட்டும் ராத்திரி தனியா பார்த்தேன். சொல்லறதுக்கு ஒன்னும் விசேஷமா இல்லை.

Saturday, September 11, 2004

புதுசு கண்ணா புதுசு

For picture version click here

அப்பா அம்மாக்கு போர் அடிக்கிறதே என்று சன் டி.வி. போட்டாச்சு. நான்கு வருட இடைவெளிக்கப்புறம் திரும்பவும் சன் டி.வி. உறவு. குடுத்த முன்னூறு பவுண்டுக்கு குறைவில்லாமல் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஆரம்பித்து அம்மாக்காக மெகா சீரியல் போட்டு இப்போது எனக்கும் சீரியல் கிறுக்கு தலைக்கேறியாச்சு. முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருந்த்து. ஒரே நடிகர்கள் அடுத்த அடுத்த சீரியலில் வெவ்வேறு காரக்டர்களில் வந்தது குழப்பமாக இருந்த்து. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகி விட்டது.
நாங்களும் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி விட்டு அண்ணாமலை ஜீவா இறந்த்ததிற்கு துக்கம் அனுஷ்டித்தோம். எட்டு மணிக்கு மெட்டி ஒலியில் ஆரம்பித்து 9:30 மணிக்கு மனைவி முடிந்த அப்புறம் தான் வயிறே பசிக்கிறது. இது ரொம்ப ஓவராகி ஒரு நாள் லேட்டாக வரும் போது பித்தம் தலைக்கேறி செல்போன் வழியாக சீரியல் வசனமெல்லாம் கேட்டேன். இப்போதெல்லாம் நானும் பொம்மனாட்டிகள் கனக்க சீரியல் கதை விவாதங்களிலெல்லாம் வீட்டில் கலந்து கொள்கிறேன்.
இது தவிர எனக்கு டி.வி.யில் பிடித்த இன்னொரு விஷயம் விளம்பரங்கள். முன்னாடி மாதிரி ஒரு கரகர மாமா உச்ச ஸ்தாயியில் அலறாமல் இப்போதெல்லாம் விளம்பரங்களில் மிகவும் மெனக்கெடுகிறார்கள். விக்கோ வஜ்ரதந்தி, நிஜாம் பாக்கு மாதிரி ஒன்றிரண்டு பேர் மட்டும் ஆதிகால விளம்பரங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாளவிகா தொப்பையைக் காட்டிக் கொண்டு திங் திங்கென்று ஆடுகிற மாதிரி குதிக்கிறார். ஸ்னேகா சமைக்கிறதுக்கெல்லாம் ஆடுகிறார். ஜில்லெட், டாட்ட இன்டிகா விளம்பரங்களில் பொம்மனாட்டிகள் ரொம்ப ஈடுபாட்டுடன் ஷேவிங் செய்கிறார்கள். அதில் வரும் ஆம்பளைகள் வழக்கம் போல் அவர்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். (&*&*?!£!?)
விளம்பரங்களில் பின்னனி இசை மிகவும் முன்னேறி இருக்கிறது. ஜிங்கிள்ஸ் (அதாங்க பின்னனி இசை - நேக்கும் இந்த டெக்கினிக்கல் டேர்ம் எல்லாம் தெரியுமாக்கும்) எல்லாம் மனதில் பதிந்து முனுமுனுக்க வைக்கிறது. கல்யாணி கவரிங், குமரன் சில்க்ஸ், விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் - பிடித்தவற்றில் சில.
குங்குமம், ஆனந்தவிகடன் போன்றவர்களும் விளம்பர கோதாவில் குதித்திருக்கிறார்கள். குங்குமம் செலவழிக்கும் ரூபாய்க்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என் தனிபட்ட அபிப்ராயம். ஆனால் மொத்தத்தில் விளம்பரங்கள் முன்ன மாதிரி போரடித்து ரிமோடைத் தேட வைக்கவில்லை.

Tuesday, September 07, 2004

சௌபாக்கியவதி

for picture version click here

போன முறை பெற்றோரை அழைத்து வர இந்தியா சென்ற போது, ரெண்டு மூனு டி.வி.டி வாங்கி வந்தேன். தில்லானா மோகனாம்பாள் வாங்கிவிட்டு வேறென்ன வாங்கலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அது கண்ணில் பட்டது. எல்லாமே பழைய படங்கள் தான் என்று முடிவு செய்திருந்தேனாகையால் பழைய படங்கள் வரிசையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.(நான் கூட இல்லாட்ட இந்த மாதிரி தான் கூத்தடிப்பீங்க - மனைவி). திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் கிளம்பும் முன் இவ்வளவு கூத்தும். நல்ல கடை. அரதப் பழசு படங்கள் கூட இருந்தது. சௌபாக்கியவதி - ஜெமினி கணேசன், சாவித்திரி, தங்கவேலு இவர்களுடன் மந்திரவாதி மாமா வேஷத்தில் ரங்கராவ் வேறு நின்று கொண்டிருந்ததால் டபக்கென்று வாங்கிவிட்டேன். இருந்தாலும் நல்ல படமா என்று சந்தேகமாக இருந்த்து. பஸ்ஸில் வந்து அம்மா,அப்பாவிடம் காட்டினேன். "ஏன்டா கில்லி நன்னாருக்காமே அதெல்லாம் வாங்காம இதப் போய் வாங்கிருக்கியே? " - அவர்கள் கேட்டவுடனேயே புரிஞ்சு போச்சு வீட்டுல ரியாக்சஷன் எப்பிடி இருக்கும் என்று. அதே மாதிரி ஒரு வாரம் கழித்து தான் படத்தைப் போட முடிந்தது.
நல்ல படம். எழுத்து போடும் போதே லலிதா சகஸ்ரநாமம் மாதிரி ஏதோ ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். "இந்த ஸ்லோகம் நம்மாத்துல இல்லையே...ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..ஸ்லோக கேஸட்டுமாவும் ஆச்சு, படமாவும் ஆச்சு" என்று சப்பைக் கட்டு கட்டிப் பார்த்தேன். எடுபடவில்லை.
ரங்கராவ் மந்திரவாதி என்று படம் முழுக்க செல்ஃப் டிசைன் போட்ட கருப்பு உள்பாவாடையைக் கட்டிக் கொண்டு வருகிறார். ஆள் நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஜெமினி கணேசன் ஜரி வேலைப்பாடு கொண்ட பேண்ட்டுடன் மிடி போட்டுக் கொண்டு வருகிறார். கதை - ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியை தன்னுடைய சுயநலத்துக்காக பிரிக்கப் பார்க்கிறான் மந்திரவாதி ரங்கராவ். சாவித்திரி உம்மாச்சியைக்கு துணைக்கழைக்கிறார். ஜெமினி - ரங்கராவ் டிஷ்ஷூம் டிஷ்ஷும் ஜெயம் சுபம். தங்கவேலு- முத்துலெட்சுமி காமெடி. "திலலையம்பல நடராஜா..." சூப்பர் ஹிட் பாடல்.

Sunday, September 05, 2004

வந்துட்டான்யா...வந்துட்டான்யா

For picture version Click here

வணக்கம்....நலம் நலமறிய ஆவல். கொஞ்ச நாளாக ஆபிஸிலும் வீட்டிலும் கூடுதல் பொறுப்பு. வேலை பெண்ட் நிமிர்ந்து விட்டது. அதான் இந்தப் பக்கம் ஆளையே காணவில்லை.மீண்டும் அப்பாவாகிருக்கிறேன். கடவுள் அருளால் பெண் குழந்தை. அத்விகா(Advika) என்று பெயரிட்டிருக்கிறோம். தாயும் சேயும் நலம். ஆபிஸ் வேலையில் கூடுதல் பொறுப்பு வேண்டாம் சமாளிக்கமுடியவில்லை என்று கேட்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் விடியுமென்று நினைக்கிறேன்.
மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமென்று நம்புகிறேன். அக்கறையுடன் என்னை விசாரித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. தகவல் கேட்டிருந்தவர்களுக்கு தனியே பதில் அனுப்ப முயற்சி செய்கிறேன்.