Monday, April 19, 2010

கச்சேரி

சின்ன வயதில் அதிலும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த பிறகு கர்நாடக சங்கீத கச்சேரி என்றாலே கொஞ்சம் வயிற்றைக் கலக்கும். "டேய்...வாடா மிருதங்க வித்துவான்...இது என்ன ராகம் சொல்லு பார்ப்போம்..."ன்னு இழுத்துப் பிடித்து கேள்வி கேட்ப்பார்கள். மிருதங்க சிலபஸ்ல ராகம் கிடையாது தாளம் தான் என்று எவ்வளவு சொன்னாலும் விட மாட்டார்கள் கவுண்டமணி தவில்ல நலந்தானா வாசிக்க சொல்லுவது மாதிரி சில பெருசுகள் தொல்லை சொல்லி மாளாது. இந்த மாதிரி கச்சேரிகளில் நிறை குடங்கள் தளும்பவே தளும்பாது. சில அரைகுறைகள் பண்ணுகிற சேட்டை தான் தாங்காது.

சீனா தானா மாமா கொஞ்சம் சங்கீதத்தில் அரைகுறை தான். எல்லா ராகங்களும் தெரியாது என்றாலும் அவருக்கு சில ராகங்கள் தெரியும். அவருக்கு தெரிந்த ராகம் வந்து விட்டால் சித்தார்த் பாஸு மாதிரி க்விஸ் வைக்க ஆரம்பித்துவிடுவார். காபி ராகத்தை வைத்து உலவும் அரத ஜோக்குகளில் சேர்ப்பதற்காக எங்கள் வானரக் கூட்டத்திலும் ஒன்று உண்டு. ராதா கல்யாணத்தை முன்னிட்டு பஜனை மடத்தில் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். வந்திருப்போருக்கு காபி சப்ளை எடுபிடி பார்த்துக் கொண்டிருந்த சாது வானரத்திடம் அப்போது தான் வந்திருந்த சீனாதானா மாமா என்னடா போன பாட்டு என்ன காப்பியான்னு நக்கலாய் கேட்க மைக் சத்தத்தில் வானரம் சரியாய் காதில் வாங்கிக் கொள்ளாமல் "இல்லை மாமா டீ தான் இருக்கு...கன்னுக்குட்டி கணேசன் காப்பிப் பொடி வாங்கப் போய் இருக்கான்"ன்னு கர்ம சிரத்தையாய் பதில் சொல்ல சீனாதான மாமா அவனை மட்டும் ஏனோ அன்றிலிருந்து க்விஸ்லிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்.

"டேய் நம்ம சீனாதானா மாமா தொல்லை தாங்க முடியலை...இதான் ஷண்முகப் ப்ரியா அதான் ஹரஹ்ரப் ப்ரியான்னு என்னம்மோ ராகதேவன் மாதிரி ஓவரா ப்லிம் காட்டறார். திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு எனக்கும் தான் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியும் அதுக்காக இவர்ட்ட போய் மேலத்தெரு ப்ரியாவைத் தெரியுமான்னு என்னிக்காவது கேட்டிருப்பேன்...?? .ஒரு நாள் இவருக்கு இருக்கு" கன்னுக்குட்டி கணேசனுக்கு சீனாதானா மாம பிஹேவியர் பிடிக்காமல் ரொம்ப நாள் கருவிக் கொண்டிருந்தான்.

அடுத்த தரம் சீனா தானா மாமா அவருடைய கட்டைத் தொண்டையில் பாடி இதென்ன ராகம்ன்னு கன்னுக்குட்டி கணேசனைக் கேட்க "இது ஒரு தலை ராகம்" மாமான்னு அவனும் சொல்ல "போடா தறுதலை ராகம்...சினிமாலயே நில்லுங்கோ இன்டர்வ்யூல கேட்பா போய் சொல்லுங்கோ உடனே மேனேஜர் உத்தியோகம் குடுப்பான்"ன்னு சீனாதானா மாமா டென்ஷனாகி அத்தோடு ராக க்விஸ் போட்டி எங்களுக்கு இனிதே நிறைவைந்தது,

நிற்க இந்த கச்சேரி கொசுவத்தி எதுக்கு சுத்தினேன் என்றால் ரொம்ப்பபபபபப நாட்களுக்குப் பிறகு இங்கே யூ.கேவில் மில்ட்டன் கீன்ஸ் த்வனி புண்யத்தில் ஒரு சங்கீதக் கச்சேரிக்கு போன வாரம் போய்வந்தேன். முதலில் டாக்டர் ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் மற்றும் சுதீந்திரா அவர்கள் கச்சேரியும், அடுத்து  சஞ்சய் சுப்ரமண்யம், நெய்வேலி வெங்கடேஷ், மற்றும் வரதராஜன் அவரகளின் கச்சேரியும் நடந்தேறியது. மிகக் குறைந்த டிக்கெட் விலையில் த்வனி சுமார் மூன்றரை மணி நேர கச்சேரியை அருமையாய் பேக்கேஜ் செய்து நடத்திக் காட்டினார்கள்.

சங்கீதக் கச்சேரிக்குப் போவதற்கு என்று சில ஜபர்தர்ஸுகள் இருக்கின்றன. அங்கங்கே 'ச்....ச்'ன்னு உச்சுக் கொட்டி முன் வரிசையில் நாலு பேருக்கு கேட்கும் படியாக அங்கங்கே சபாஷ் பலே போடத் தெரிந்திருக்கவேண்டும். (நம்ம்) தொடையைத் தட்டி விரல் விட்டு எண்ணி என்னம்மோ பாடுபவர்க்கு தாளம் சொல்லிக் குடுக்கிற மாதிரி தாளம் போடத்தெரிய வேண்டும். இந்தப் பக்கம் உள்ளவரிடம் "ஆமா இந்தப் பாட்டு என்ன ராகம் தொண்டையில நிக்கிறது பேரு நியாபகம் வரமாட்டேங்கிறது"ன்னு நைசாக நூல் விட்டு தெரிந்து கொண்டு அந்தப் பக்கம் உள்ளவரிடம் "என்னமா இழையறது இந்தோளம்"ன்னு சங்கீத பூஷணமாக தெரிந்திருக்க வேண்டும்.

இத்தனை 'வேண்டும்'களுக்கு மத்தியில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டே தான் போனேன். போன இடத்தில் கேமிராவை ஆன் பண்ணி ஆப் செய்கிற வேலையை நைஸாக எடுத்துக் கொண்டு முதல் வரிசையிலேயே உட்கார்ந்துவிட்டேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ராஜா (அந்தப்பக்கத்லிருந்து கேட்டு) ராகங்கள் சொல்லி அசத்திக் கொண்டிருந்தார். நடுவில் இது அந்த ராகம் தானேன்னு ஏதோ ராகத்தை டவுட் வேற கேட்டார். நானும் "ரீ மா...செ...ன்"ன்னு மனதிற்குள் பாடுவது மாதிரி பாவ்லா காட்டி ஆமா அத மாதிரி தான் இருக்குன்னு சொல்லி சமாளித்தேன். அடுத்த பாட்டிற்கு திரும்பவும் ராகத்தில் டவுட் கேட்க "உளுந்த வடை,தோசை கொண்டு வந்திருக்கான் ...சாம்பார் வந்த மாதிரி வசனை தெரியலையேன்னு..." நம்ம ஞானத்தை மூக்காலயே காட்ட அப்புறம் அவருக்கு டவுட்டே வரலையே.

ஜோக்ஸ் அபார்ட்ன்னு துரை மாதிரி சொல்லிட்டு விஷயத்திற்கு வருகிறேன். ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் வயலினில் புகுந்து விளையாடினார். சுதீந்திரா மிருதங்கம் இதமாய் இருக்க இன்னும் கொஞ்சம் வாசிக்க மாட்டாரா என்று இருக்கும் போது கச்சேரி முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம் நடந்த சஞ்சை சுப்ரமண்யம் கச்சேரியும் மிக அருமை. மனிதர் அன்யாசமாய் அசராமல் இதமாய் பாடுகிறார். த்வனி,  நேயர் விருப்பம் மற்றும் கேள்விகளுக்கு தனியாய் ஒரு விண்ணப்ப படிவத்தை டிக்கெட்டோடு குடுத்திருந்தார்கள்.  அதில் "ஆல் தோட்ட பூபதி" எழுதிக் கேட்டால் ஆளை வைத்து அடித்து விரட்டிவிடுவார்கள் என்பதால் மெனக்கடவில்லை. ஆனால் எனக்கு சஞ்சயிடம் பிடித்ததே அவர் கேள்விகளுக்கு விடையளித்த பாங்கு. மிக இயல்பாய் நகைச்சுவை கலந்து எந்த தலைக்கணமும் இல்லாமல் என்னை மாதிரி பாமரனுக்கும் புரியும் வண்ணம் பதிலளித்தார்.

மொத்தத்தில் ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல கச்சேரி போய் வந்த அனுபவ்ம் கிடைத்தது. "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போயிருக்கார்"ன்னு வீட்டிலிருந்து வழியணுப்பி வைத்த தங்கமணி திரும்பி வந்தவுடன் நான் பயந்துகொண்டிருந்த "ஆமா என்னென்ன பாட்டு பாடினார்" கேள்வியைக் கரெக்ட்டாய் கேட்டு விட்டார்.

நானும் நாயகன் கமல் மாதிரி உணர்ச்சி பொங்க பல ரியாக்க்ஷன் குடுத்து விட்டு உச்சி மண்டையில் கையால் வகிடெடுத்து தெரியலையேம்மான்னு சொல்லிவிட்டு "ஆனா உளுந்தவடையில மிளகு போட மறந்துட்டான்"ன்னு க்ரெக்ட்டாய் ரிப்போர்ட் குடுத்துவிட்டேன். யாருகிட்ட நம்மகிட்டயேவா..

Wednesday, April 07, 2010

திரைப்பயணம்

ரொம்ப நாட்களாகவே ஏங்கிக் கொண்டிருந்த சினிமா தாகம் இங்கே யூகே வந்த பின் கொளுந்து விட்டு எரிந்தது தாங்கள் அறிந்ததே. போன வருடம் அக்டோபரில் அருமையான நாட் என்று நான் நம்பும் ஒரு மேட்டர் சிக்க அதை வைத்து ஒரு கதையை உருவாக்கி இதை டெலி பிலிமாக எடுக்கலாமே என்று யத்தம் கட்ட ஆரம்பித்தேன்.

இந்தப் பற்றி திரைவட்டாரத்தில் உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அனைவரும் ஏன் டெலிபிலிம் எடுக்கறீங்க..ஒழுங்கா திரைப்படமாகவே எடுக்கலாமே என்று ஆலோசனை சொன்னார்கள். முழு நீள திரைப்படமா என்று கொஞ்சம் தயக்கம் இருக்க, சரி ஜூலையில் ஊருக்கு வரும் போது மேலும் சில திரை நண்பர்களை சந்தித்து ஒரு முடிவுக்கு வருவோம் என்று நினைத்து சில சந்திப்புகளை ப்ளான் செய்து வந்தேன்.இதற்கு நடுவில் ஒரு கார்ப்பரேட் வீடியோ ஒன்றும் நண்பரின் கம்பெனிக்காக தயாரிக்கும் பணியிலும் ஈடுபட நேர்ந்தது. சில ப்ரொடெக்க்ஷன் வேலைகள் செய்யுமளவிற்க்கு  ஒரு மீடியா ப்ரொடெக்க்ஷன் கம்பெனி ஒன்றும் துவங்கி இருக்கிறேன்.

எல்லாவற்றிக்கும் மேலாக மும்பை ப்ரொடக்க்ஷன் தயாரிப்பில் இங்கே படமாகவிருக்கும் ஒரு  சின்ன பட்ஜெட் பாலிவுட் திரைப்படத்திற்கு தற்போது எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். படத்தின் டைரக்டர் நேஷனல் ஜியோக்ரபி சேனலில் கேமிராமேனாக பணியாற்றியவர். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட் ஜூனில் ப்ளான் செய்திருக்கிறோம்.

நிற்க. இந்தப் பாலிவுட் படத்தில் வேலை செய்யும் தைரியத்தில் தற்போது என்னுடைய படம் பற்றியும் மிகவும் யோசித்து வருகிறேன். என்னுடைய படம் தொடர்பாக சில ஆரம்ப கட்ட வேலைகளை நகர்த்த ஆரம்பித்திருக்கிறேன். ஒரு ஷேப்பிற்கு வந்தவுடன் மேலும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்தும் ஆதரவும் என்றும் போல் அன்பனுக்கு (...நாந்தேன் :)) வேண்டும். இன்னும் பட விஷயத்தில் பிள்ளையார் சுழியே முழுதாய் போடவில்லை என்று தெரியும். இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது வழமையான வார்த்தைகளில் பசப்பினால் சும்மா வருவாளா சுகுமாரின்னு வழமையாய் பின்னூட்டத்தில் பின்னிவிடுவீர்கள் என்பதால் அப்படியே நேரா மேட்டருக்கு வருகிறேன்.

இந்த விஷயத்திற்காகவும் மற்றும் என்னுடைய ப்ரொடெக்க்ஷன் கம்பனி தொடர்பான சில ப்ராஜெக்டுகளுக்காகவும் தொழில் ரீதியாகவும் சில டெக்னிகல் தொடர்புகள் தேவைப்படுகிறது. ஆரம்ப காலம் என்பதால் சம்பளம் பிரதானமாய் இல்லாமல் ஆர்வமும் passionனும் உள்ள சில நபர்கள் உள்ள டீம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன். வரும் ப்ராஜெக்டுகளுக்கு ஒரு டீமாக வேலை செய்யும் விதமாக இதை செயல் படுத்த நினைக்கிறேன். போட்டோஷாப், போஸ்டர் மற்றும் க்ரியேட்டிவ் டிசைன், சி.ஜி,  அனிமேஷன் ஆகிய துறைகளில் நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ இருந்து வாய்ப்புக்காக காத்திருப்பவராய் இருந்தால் எனக்குப் பின்னூட்டத்திலோ இல்லை rengasub at hotmail dot co dot uk - ஈமெயிலிலோ தொடர்பு கொள்ளவும். ப்ரீலேன்சர்களும் பார்ட் டைமாக இதை செயல்படுத்த நினைப்போரும் தொடர்பு கொள்ளலாம்.

 - இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் நாடும் அன்பன் (யெம்மா... இதுக்கு மேல குனிய முடியல தலை தரையில தட்டுது :))