Thursday, March 04, 2004

ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்

"பாட்டையா" நரைத்த முடி, பஞ்சடைந்த கண்கள், ஒல்லியான தேகம். அழுக்கு வேட்டி தான் கட்டி இருப்பார். சட்டையில் ஒரு ஊக்கு மாட்டி இருப்பார். ஒரு பித்தான் இருக்காது. முதன் முதலாக இவரை பார்த்த போது எனக்கு வயது 12 இருக்க்கும். நூலகத்தில் புஸ்தகங்களை அடுக்குவது, டீ வாங்கி கொடுப்பது, கேட்கும் போது உள்ளே இருந்து பழைய பேப்பர்களை எடுத்து தருவது போன்ற வேலைகள் செய்து வந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். அடிக்கடி தனக்கு தானே பேசிக்கொள்வார்.

"பஞ்ச தந்திர கதைகள் எங்கு இருக்கும்?"

"பஞ்சாங்கமெல்லாம் இங்க கிடையாது போய் உங்க பஜனை மடத்துல கேளு கிடைக்கும்"

பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். எனக்கு எரிச்சலுடன் வெட்கமாகவும் இருந்தது. அதுதான் அவருடன் நடந்த முதல் சம்பாஷனை. அப்புறம் அவரைப் பற்றி தெரியுமாகையால் ரொம்ப பேச்சு குடுக்க மாட்டேன்.

"யோவ் பாட்டையா அங்கென்ன மயிர புடுங்குதீரா? இந்த புஸ்தகத்தையெல்லாம் எடுத்து அடுக்கும்வே" உதவி நூலகரிடமிருந்து அடிக்கடி அர்சனை விழும் அவருக்கு.

பெரிய நூலகர் அவ்வளவு அடிக்கடி திட்ட மாட்டார். ஆனால் அவரிடமிருந்தும் அவ்வப்போது விழும்.

"டீல என்னவே எதோ மொதக்குது?"

பாட்டையா என்னவோ முனகினார். அவ்வளவு தான் நூலகர் எழுந்து வந்து மண்டையில் ஒங்கி அடித்து விட்டார். நானும் இரண்டு பேரும் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எழுந்து போய் விட்டேன்.
ஆனால் பாட்டையாவோ ஒன்றும் நடக்காத மாதிரி டீயை மாத்திக் கொண்டிருந்தார்.

"எவன் கேக்கிறது இவங்கள,இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே கிடையாது" பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர் வெளியில் வந்து புலம்பினார்.

இன்னொரு நாள் நூலகத்திற்கு சென்ற பொழுது பாட்டையாவிற்கு அர்சனை விழுந்து கொண்டிருந்தது.

"செத்த மூதி உன்னய அன்னிக்கே அத இடத்த மாத்த சொன்னேம்ல ஏம்வே செய்யல? இப்போ பாரும் அவ்வளவும் கரையான் புடிச்சிட்டு. எவன் தண்டம் கட்டுவான் இதுக்கு? உமக்கு இந்த மாசம் சம்பளம் கைக்கு வந்த மாதிரி தான். உம்ம சோலிக்கு வேட்டு வெச்சா தாம்வே இது சரியா வரும்"

பாட்டையா அன்றைக்கு எதோ பதில் சொன்னார். உதவி நூலகர் உர்ரென்று இருந்தார். சிறிது நேரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்த நேரத்தில் ஒரு புஸ்தக அலமாரி பின்னாலிருந்து பாட்டையாவை கூப்பிட்டார். "தம் திம்" என்று கொஞ்ச நேரம் சத்தம் வந்தது. மடித்து கட்டிய வேடியோடு உதவி நூலகர் முதலில் வந்தார். பிறகு பாட்டையா. கலைந்த தலை முடி, சட்டை பித்தான் பிய்ந்து கொஞ்சம் திறந்த சட்டை. கண்ணில் திரண்ட கண்ணீர். உள்ளே என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது.

எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

"உம்ம பேத்தி வந்தாச்சு...போய் தூக்கு சட்டிய வாங்கி வந்து கொட்டிக்கிடும் வேளா வேளைக்கு அது மட்டும் நல்ல நட்க்கட்டும்"

பாட்டையா சட்டையை சரி செய்து கொண்டு போனார். எனக்கு அதற்கு மேல் அங்கு இருகக பிடிக்கவில்லை. நானும் கிளம்பினேன்.

"தாத்தா புது பாவாடை எப்போ தாத்தா வாங்கியாருவ?" கடந்து செல்லும் போது அவர் பேத்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.

நான் படிக்காத "ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்" நாவலின் தலைப்பு தான் நியாபகத்துக்கு வரும் - இதை நினைக்கும் போதெல்லாம் .

பின் குறிப்பு - சில எருமை மாடுகளும்- மா இல்லை நான்கு எருமை மாடுகளும்-மா என்று சரியாக நினைவில்லை.

1 comment:

Madhu Ramanujam said...

கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் இந்தப் பதிவை பலமுறை படித்திருக்கிறேன். ஒவ்வொருதரம் படிக்கும்போதும் எனக்குள்ள ஒவ்வொரு விதமான உணர்வு. சக மனிதர்களை தன்னைப் போல் பாவிப்பதில்லை என்பதில் சாதி, மதம், படிப்பு இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரே மாதிரி இருக்கிறோம்.

Post a Comment

Related Posts