Friday, April 02, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 2

For Picture version of this post (split into two parts) Part 2a -- Part 2b

விசேஷமான நாட்களுக்கு மட்டும் மிருதங்கத்தை பஜனை மடத்தில் வைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ரகு அண்ணா தான் எங்களை மாதிரி பஜனை சேனையை எல்லாம் தலைமை தாங்கி மேய்ப்பார். நல்ல சுறுசுறுப்பு. அனுபவஸ்தர். 35 - 40 வயது இருக்கும். மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)

எனக்கு ரொம்ப ஆச்சரியம்.

"என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.

"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல...என்னடா ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - என்னால் பாதிக்கப்பட்டவன் போல, சமயம் பார்த்து மானத்த வாங்கினான்.

குரங்காட்டி மாதிரி நிலமை ஆகிவிட்டதே என்று இருந்தாலும்..மானமாவது வெட்கமாவது என்று விடாமல் திறமை காட்டினேன்.

பஜனை முடிந்ததற்கு அப்புறம் ஓர் ஓரமாக "அண்ணா தளபதி- காட்டுக் குயிலு பாட்டுல வர்ற மாதிரி வாசிங்கண்ணா " என்று நேயர் விருப்பமெல்லாம் ஜோரா நடக்கும்.

"எத்தனை நாளைக்குடா காட்டுக் குயிலு கூட்டுக் குயிலுனு காலத்த தள்ளுவீங்க...மைக்கேல் ஜாக்ஸன் என்னமா பீட் போட்டுருக்கார் தெரியுமா இப்ப வாசிக்கிறேன் பாரு இதக் கேட்டு ரசனையை வளர்த்துக்கோங்கோடா.."

"யாருண்ணா மைக்கேல் ஜாக்ஸன்? சிலுவை பாதிரியாரா?"

"அடப்பாவி டேய் பஜனை மடத்துல வெச்சு என்ன வம்புல மாட்டிவுட்ராதடா...அவர் பாப் கலைஞர்டா.."

"ஓ அரசியல்வாதியா..."

பசங்க ஞானம் இந்த ரேஞ்சு தான்னு தெரிஞ்சப்புறமென்ன அதுவரை மனசுல அடக்கி வைத்திருந்தது எல்லாம் புதுசு புதுசாகப் பிரவாகமாகி மைக்கேல் ஜாக்ஸன் பெயரில் அரங்கேறும்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்.

அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும்.

அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்.

ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.

நண்பன் வேண்டிய பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டான்.

"ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா...முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...எலிக்குப் பிறந்தது எருமைமாடாகுமாங்கிற ஆராய்சிகளில் மட்டுமே அதுவரை ஈடுபட்டிருந்த பாட்டி அன்றைக்கு மைக்கேல் மதன காமராஜன் பாட்டியாக மாறி ஏகக் களேபரம்.

"சட்டசபை மாதிரி ஒரே வயலென்ஸ் டா அங்க..." அப்புறம் திசைக்கும் தலை வைத்து படுக்கவில்லை நண்பன்.

ஆனால் நான் பனங்காட்டு நரியாக தொடர்ந்து கொண்டிருந்தேன்.

"இவங்க ஏன் பெரிய பாத்திரம் கொண்டு வராங்க தெரியுமா?..அப்போ தான் நாம குடுக்கற பொங்கல் ரொம்ப கொஞ்சமாக தெரியும் அதனால் நிறைய போடுவோம்னு" - இருந்த சீனியரிடம் நான் முன்பு கற்ற பால பாடத்தை சொன்னேன்.

"அது தெரியும். அதனால தான் நான் சுண்டல் போடற கரண்டிய சின்னதா வெச்சிருக்கேன். ரெண்டு மூனு தரம் போட்டாலும் நிறைய விழாது அதே சமயம் நிறைய போட்ட மாதிரியும் இருக்கும், பசங்களும் நிறைய போட்டாச்சுன்னு நகர்ந்து போய்டுவாங்க.." - வாயை பொளந்து கொண்டு மேனேஜ்மெண்ட் பாடம் கற்றேன்.

--மேலும் வளரும்

1 comment:

Kavitha said...

Super..why don't you try writing screen play for movies?? For some reason I am reminded of Avvai Shanmugi dialogues, while reading this.

Post a Comment

Related Posts