Friday, April 23, 2004

தாமிரபரணித் தென்றல் - 1

For picture version of this post click here

காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதென்று நினைக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த காலம் அது. கதைக்கான கரு கவிதை மாதிரி பீலிங்கா யோசித்தால் வராது. எப்போதாவது தீடிரென்று சென்னையில் மழைவருவது போல் பூச்சாண்டி காட்டிவிட்டு போய்விடும். அதை அப்பிடியே மானே தேனே பொன்மானே போட்டு டெவெலெப் செய்ய வேண்டும். எதை எழுதலாம் என்று யோசிக்கையில் நம்ம கதையே பெரிய கதையா இருக்கே இதையே ஏன் எழுதக்கூடாதென்று நீயுட்டன் மாதிரி கேட்டுக்கொண்டேன். இரண்டாயிரத்தில் உலகம் அழிந்து போய்விடுமென்று யாகவா முனிவர் சொல்லிவிட்டதால்...கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டு எழுதலாமென்று தள்ளி போட்டுவிட்டேன். ஆனால் மனதிலேயே மானே தேனே பொன்மானே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நூலகத்திலிருந்து "ஸ்ரிரங்கத்து தேவதைகள்"(ச்ஸ்ரி எப்பிடி போடுவது என்று தெரியவில்லை) புத்தகத்தை எடுத்துவந்தேன். படிக்க படிக்க ஒரே படபடப்பு, ஆத்திரம். என்னாடா இத மாதிரி தானே நாமளும் எழுதனும்னு நினைச்சிருந்தோம்(??!!$R$?). அதற்குள் இந்த ஆள் சுஜாதா எழுதிவிட்டாரே என்று வருத்தமாக இருந்தது. நல்ல வேளை இத மாதிரி நாமளும் எழுதி யார்கிட்டயாவது காட்டிருந்தா என்ன ஆயிருக்கும். திருவிளையாடல் தருமி மாதிரி - ஏற்கனவே நான் தான் எழுதினேன்ன்னு ஒரு பயலும் நம்ப மாட்டேங்கிறான், நல்லவேளை தப்பிச்சோம்ன்னு மனதை தேற்றிக்கொண்டேன். ஆனாலும் அந்த ஏக்கம் மனதைவிட்டு போகவேஇல்லை. அதில் ஒருபகுதி தான் "நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்". நீங்க வேற படிச்சுட்டு நல்லா இருக்குனு சொல்லிடீங்களா...(சொல்லலையேன்னு சொல்ல நினைச்சா கொஞ்சம் அடக்கி வாசீங்க ப்ளீஸ் :) ) எனக்கு மனதில் அமுக்கி வைத்திருந்த வேதாளம் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிட்டது.

என்னடா இவன் எப்போ பார்த்தாலும் ஒரு கதை சொல்லச் சொன்னா...தேவர்மகன் சிவாஜி மாதிரி "அம்ம பாட்டுத் தேன்ங்"ன்னு இவன் கதையையே சொல்ல ஆரம்பிச்சுற்றான்னு நினைக்காதீங்க. என்ன செய்யட்டும் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல் புரண்டு வளர்ந்த பூமியை மறக்கமுடியவில்லை. தாய்பால் மாதிரி தாமிரபரணித் தண்ணீரையும் மறக்க முடியவில்லை. அடித்த கூத்துக்களை மறக்கமுடியவில்லை. இந்த சுயபுராணம் போர் அடிக்கிறதென்றால் யாரும் அடக்கி வாசிக்க வேண்டாம். தாராளமாக உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.ஆனால் அதைக் கேட்டு இந்த பதிவை நிப்பாட்டிவிடுவேனா என்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.:P சரி அதென்ன தாமிரபரணித் தென்றல்? இன்றைக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதி என்று சொன்னால் தாமிரபரணிக்குத் தான் முதல் இடம் என்று நான் சொல்லுவேன். தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடியும் இந்த நதி உண்மையிலேயே வற்றாத ஜீவநதி. மற்ற ஊர் மாதிரி நதி என்று சொல்லிக் கொண்டு கிரிக்கெட் ஸ்டம்பு நட்டுக்கொண்டு விளையாடும் அவலமோ, இல்லை எலி மூச்சா போன மாதிரி இழையோடும் ஒழுகலோ, இல்லை ஊரில்லுள்ள சாக்கடைகளின் ஓட்டத்தோடு திசைக்கும் திரும்ப முடியாத வீச்சத்தொடு நிற்கும் அவலமோ தாமிரபரணிக்கு கிடையாது.(எலேய் வீச்சருவா ரெடி பண்ணுலேய்...எல்லா ஊர்காரனும் சண்டைக்கு வரப்போறாங்கடோய்).

தென்பொதிகை மலையிலிருந்து தென்றலாய் தவழ்ந்து வரும் தாமிரபரணி கோடையில் கூட அணையில் தடுத்துவிடுவதால் வழக்கத்தை விட கொஞ்சம் குறைவாக வருமே தவிர...காய்ந்துவிடாது நிறைய பேர் குளிக்கும் அளவுக்கு ஓட்டத்தோடு இருக்கும். ஹி ஹி இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த தலைப்பு எனக்கென்னமோ ரொம்ப பிடிச்சு போய் அழகா இருக்கே என்று தோன்றியதால் வைத்தேன். மேற்சொன்ன அத்தனையும் தலைப்பை வைத்துவிட்டு யோசித்து எழுதியவைதான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை ஆனால் தாமிரபரணியப் பற்றி நான் சொன்னதெல்லாம் உண்மை.

இந்த பதிவில் என்ன எழுதலாமென்று இருக்கேன்? வேறென்ன...நான் பார்த்த செய்த ரசித்த, குறும்புகளை, அட்டகாசகங்ளைத் தான். இனி படிப்பதும் படிக்காத்தும் உங்கள் இஷ்டம்.இது என் ஆத்ம திருப்திக்காகத் தான் என்றாலும் என் எழுத்தில் உள்ள குறை நிறைகளை சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


--தொடரும்

No comments:

Post a Comment

Related Posts