Thursday, April 08, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 4

For Picture version of this post (split into three picture files) Part 4a -- Part 4b -- Part 4c

பெண்களுக்கு முதன் முதலாகப் புடவை/ தாவணி அணிவது எப்படி ஒரு ஸ்பெஷல் அனுபவமோ அதே மாதிரி தான் ஆண்களுக்கு வேஷ்டி/பேண்ட் அணிவது.

"இந்தா புதுசா இப்போத் தான் வண்ணான்கிட்டேர்ந்து வெளுத்து வந்திருக்கு இதக் கட்டிக்கோ"

"வேண்டாம் அதுல் கட்சிக்காரன் மாதிரி கறை போட்டிருக்கு"

"சரி அப்போ இந்த சரிகை போட்ட மயிற்கண் வேஷ்டி கட்டிக்கோ"

"இத கட்டிண்டா நாதஸ்வரக்காரன்னு நாதஸ்வரத்த வாசிக்க சொல்லிடுவா"

"சரி அப்போ பட்டு வேஷ்டி கட்டிக்கோ"

"ஏற்கனவே எம்பொண்ணக் கட்டிக்கோ உம்பொண்ணக் கட்டிக்கோன்னு தெருவில மாமிகளெல்லாம் போட்டி போடறா இத கட்டிண்டா நான் சிக்னல் குடுத்த மாதிரி இன்னிக்கே கல்யாணம் பண்ணி வெச்சுருவா" - ஹீ ஹீ இதைச் சொல்லலவில்லை சும்மா மனசுல இப்படி எல்லாம் இருக்கக்கூடாதா என்று நினைத்துக் கொண்டேன்...முத நாளே இது வேண்டாம் நான் யாரையாவது பிராக்கெட் போடணும்னா அன்னிக்கு இத வைச்சுக்கலாம்.

"இல்ல அது ரொம்பப் பகட்டா இருக்கும் வேண்டாம்"

"அப்போ என்னதான்டா வேணும் நோக்கு?"

"அந்த பாலிஸ்டர் வேஷ்டி தாங்கோ அது தான் எடுப்பா இருக்கும்"

"டேய் பாலிஸ்டர் வேஷ்டி வேண்டாம்டா, ரொம்ப வழுகும்னு மாமாவே ரொம்ப கட்டிக்கமாட்டார், உனக்கு பழக்கம் வேற இல்லை..."

"ஆமா கட்டிண்டுருக்கவா எல்லாரும் இதுக்குனு படிச்சு பட்டமா வாங்கிருக்கா...பெல்டல்லாம் போட்டு இருக்கிடுவேன் அவிழாது"

"சரி அப்போ உன்பாடு"

அரைமணி நேரம் ஆயிற்று கட்டி முடிக்க. அலுங்காமல் குலுங்காமல் தெருவில் நடந்தேன். எல்லோரும் தெருவில் என்னையே பார்க்கிற மாதிரி இருந்தது. யாரவது சிரித்தால் என்னப் பார்த்து தான் சிரிக்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்தேன். பொண்ணுங்களெல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களோ என்று சந்தேகமாகவே இருந்தது.

"என்னடா வேஷ்டியெல்லாம் கட்டிண்டு ...மனசுல என்ன மம்மூட்டினு நெனப்போ"

"உங்க அப்பா தரமாட்டேன்னுட்டார்னு ரொம்ப பேசாதடா..."

நேரம் பார்த்து மாமிபாட்டி வந்தாள்.(போன தடவை சொன்னேனே அவாளே தான்).

"என்னடா மலச்சிக்கல்காரன் மாதிரி ஒரு மாதிரி நடந்து வர?"

"சும்மாத்தான் மாமி"

"ஓ வேஷ்டிலாம் கட்டிண்டு பிராமதப் படறதோ?"

கீழ கிடந்த கல்லை எடுத்து மாமிபாட்டி மேல் எறியாமல் பக்கத்தில் 'ஹீ ஹீன்னு சிரித்துக் கொண்டிருந்த வயத்தெரிச்சல் பிடித்தவன் மேல் எறிந்தேன்.

"நன்னாத் தான் இருக்கு நோக்கு தினமும் கட்டிக்கோ" - ரகு அண்ணா

"ரொம்ப தேங்க்ஸ்"

"போதும்டா ரொம்பத்தான் மொதக்காத ...நேர பார்த்து நடந்து போ கீழ விழுந்து பல்ல உடைச்சுக்கப் போற" - கல்லடி பட்டும் புத்தி வரவில்லை வயத்தெரிச்சல் பிடித்த நண்பனுக்கு.

"சீக்கிரம் வா ரமேஷூ உஞ்சவிர்திக்கு மிருதங்கம் வாசிக்க ஆளில்லை ...நீ தான் வாசிக்கனும் இன்னிக்கு"

"என்னது...இங்க நடக்கவே உம்பாடு எம்பாடா இருக்கு இதுல மிருதங்கம் வேறயா? சான்ஸே இல்ல"

"அதெல்லாம் கவலையே படாத..அதான் பெல்ட் போட்டுண்டுருகியோல்லயோ ஒன்னும் அவிழாது. மிருதங்கத்த கயிறுல கட்டி தோள்ல தொங்கவிட்டுக்கலாம்"

"இல்லண்ணா இன்னிக்கு வாசிக்க முடியாதுண்ணா"

"வாசிச்சா பிள்ளையார் நல்ல அனுக்கிரஹம் பண்ணுவார்"

"அனுக்கிரஹம் பண்ணுவார்...வேட்டி அவிழ்ந்தா கட்டி விடுவாரா? கொஞ்சம் பழக்கமாகட்டும் அப்புறம் வாசிக்கறேன்"

ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்தேன். உஞ்சவிர்தி கிளம்பி முக்கால்வாசி தூரம் வந்து எங்க தெருவிற்கு வந்தது.

"டேய் மம்மூட்டி இங்க வா ...இந்த அரிசி சாக்க பிடி நான் போய் இந்த மூட்டைய பஜனை மடத்துல போட்டுட்டு வந்துடறேன்"

"இல்லடா என்னால முடியாதுடா"

"சரி அப்போ நீ சைக்கிள்ல போய் போட்டுட்டு வா.." - கல்லடி வாங்கின கோபம் போல அவனுக்கு.

"தொலஞ்சு போ...சாக்க நான் புடிச்சுக்கிறேன் சீக்கிரம் வந்து சேரு"

இங்கே "முன்னாபாய்" பற்றி சொல்லவேண்டும். எங்க தெரு ஹிந்தி பைத்தியம். ஹிந்தியில் தான் பேசுவாள். நான் "கலம் கஹாங் ஹை? கலம் மேஜ் பர் ஹை" - என்று ஹிந்தி படித்த புதிதில் அவளிடம் போய் கேட்பேன். அவள் கெட்ட கெட்ட ஹிந்தி வார்த்தையால் திட்டுவாள்.
"என்னளவுக்கு அவளுக்கு ஹிந்தி தெரியலைடா..." என்று ஹிந்தி தெரியாத நண்பர்களிடம் சரடு விடுவேன்.

பஜனைக்குப் பக்கத்தில் பன்றி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதுபாட்டுக்கு போய் கொண்டிருந்ததை விரட்டுகிறேன் பேர்வழி என்று வானரப் படையில் ஒன்று கல்லெடுத்து வீசியது. கல் பன்றிமேல் பட்டு அது பயந்து திண்ணையில் "தேமே"ன்னு படுத்துக் கொண்டிருந்த முன்னாபாய் மேல் ஏறி தாவி ஓடி விட்டது.

தூக்க கலக்கத்தில் முன்னாபாய்க்கு என்ன நடந்து என்று புரியவில்லை. பக்கத்தில் கல் கிடப்பதையும், ஒரு பையன் இன்னொரு கல்லோடு நிற்பதையும் பார்த்துவிட்டு அவளைத்தான் கல்லால் அடிக்கிறான் என்று அனர்த்தம் செய்துகொண்டுவிட்டாள்.

கோபத்தோடு பதிலுக்கு பக்கத்திலிருந்த கல்லை எடுத்து முன்னாபாய் குறிபார்க்க அவ்வளவு தான் இங்கு பஜனையில் பாம்பு புகுந்த மாதிரி எல்லாரும் ஒட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருமாமா பயத்தில் என் வேஷ்டியை மிதிக்க நான் எதிர்புறமாக ஒட எத்தனிக்க...பெல்ட் கில்டெல்லாம் பிய்த்துக் கொண்டு பாலிஸ்ட்டர் வேஷ்டி புத்தியைக் காட்டத் துவங்கியது. கையில் வேறு குட்டி பருப்புச் சாக்கு.

மானத்துக்கு முன்னால் புளியாவது பருப்பாவது என்று பருப்புச் சாக்கை சிதற விட்டு மிதித்துக் கொண்டிருந்த மாமாவை ஒரு தள்ளு தள்ளி வேஷ்டியை வெற்றிகரமாக பிடித்துவிட்டேன்.

இதற்குள் முன்னாபாய் பெரிய மனசு பண்ணி கல்லைக் கீழே போட்டிருந்தாள்.

"என்னடா பருப்பையெல்லாம் கொட்டிட்டே? மெதுவா பொறுக்கி எடுத்துண்டு வா" - ஒரு மாமா கன்னிப் பையனின் மானத்தைப் பெரிதாக நினைக்காமல் பெரிய பருப்பு மாதிரி சொல்லிவிட்டுப் போனார்.

பிள்ளையாரைப் பழித்ததால் சோதனை செய்தாலும், அன்று பிள்ளையார் ஒரு வழியாக என் கற்பு பறி போகாமல் காப்பாற்றிவிட்டார்.

- தொடரும். (மெகா சீரியல் மாதிரி இழுக்கறேனோ?)

1 comment:

SS said...

dubukku sir officela vera vazhi illaama intha blogla irukkura ella pathivaiyum padichikitte thaan varen. arumaiyaana kosuvathi pathivugal. unga peru Ramesh aa??? sathyamaa naan thirunelveli pakkam kediaathu. pls tell ur name.

Post a Comment

Related Posts