Tuesday, April 06, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 3

For Picture version of this post (split into two parts) Part 3a -- Part 3b

நித்ய பஜனை போக சில விசேஷ தினங்களில் அதிகப்படி பஜனை வேறு நடக்கும். அஷ்டபதி நாள், உஞ்சவிர்த்தி, சீதா கல்யாணம் - இந்த தினங்களில் காலை பஜனை முடிந்தவுடன் சின்ன இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும். வார நாட்களில் வைத்தால் ஒரு பயலும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்று சனி/ஞாயிறு அன்று தான் வைப்பார்கள்.

அஷ்டபதி நாள் அன்று ஜெயதேவரின் இருபத்தி நான்கு அஷ்டபதி பாடல்களையும் நிறுத்தி நிதானமாக "தியாகராஜ ஆராதனை" மாதிரி அழகாக விஷயம் தெரிந்த பாகவதர்களும்,மாமாக்களும்,மாமிகளும் பாடுவார்கள்.

அஷ்டபதி வடமொழியில் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு தரம் டெய்லி பஜனையில் "சத்குரு ஸ்வாமிக்கு ஜே!" என்பதற்கு பதிலாக "சத்ரு மாமிக்கு ஜே" என்று சத்தமாக உளறிவிட்டேன். அதற்கே லோக்கலில் விஷயம் தெரிந்த மாதிரி நடிக்கும் ஒரு மாமா "அற்பப் பதரே போடா அந்தாண்ட ..."ங்கற மாதிரி முறைத்துப் பார்த்தார். அதனால் அஷ்டபதியில் ரொம்ப மெனெக்கட மாட்டேன். சத்தம் போடாம சும்மா 'வழவழ கொழகொழ'னு நைஸா ஒப்பேத்திவிடுவேன்.

வீட்டில் இருந்தால் படிக்கவேண்டும், அங்கே போனால் அப்போ அப்போ பானகம், பழம், ஜூஸ்னு எதாவது தருவார்கள். அதனால் தெருவில் உள்ள வானரங்கள் எல்லோரும் கண்டிப்பாக குழுமிவிடுவோம். பிரசாதம் வினியோகம் பண்ணுகிறோம் பேர்வழி என்று பாதியை அமுக்கி விடுவான்கள் பையன்கள். பஜனை மடத்துக்கு உள்ளேயே சைடில் மறைவான தட்டி போட்ட இடத்தில் தனியாக ஸ்வாகா செய்யப்படும். ஒருமுறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் தொண்டை கட்டியிருந்ததால் சுக்கு மிளகு நிறைய போட்ட ஆறின வெந்நீரை சொம்பில் வைத்திருந்தார். இது தெரியாமல் வானரப் படையில் ஒரு வானரம் அதை பானகம் என்று நினைத்து அபேஸ் செய்துவிட்டது. ஸ்வாகா பார்ட்டியில் பாகவதர் பார்த்துவிடப் போகிறாரென்று நாலு பேர் அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டார்கள்.
அவ்வளவு தான் குடித்த நாலு பேரும் கண்ணில் ஜலம் வர இரும, அவர்கள் அவஸ்தையை பார்த்து மற்றவர்கள் எல்லாரும் கண்ணில் ஜலம் வர சிரிக்க- குட்டு வெளிப்பட்டு விட்டது.

"ஏன்டா ஓசில கிடைச்சா பினாயில கூட ஒன்றரை லிட்டர் குடிச்சுருவேளோ?" - மாமிகளுக்கெல்லாம் ஏகக் கொண்டாட்டம்.

"ஏன் நீங்களெல்லாம் ஓசில வடை கிடைச்சா நேக்கொன்னு நாத்னாருக்கு ஒன்னுன்னு வாங்கிக்கலையா அத மாதிரி தான்" - சூடாகத் திருப்பி குடுத்தான்கள் பையன்கள்.

"சீதா மாமி பிள்ளை தானே...ரொம்ப தான் வாயாயிடுத்து நோக்கு, சீதா மாமி வரட்டும் கேக்கறேன்"

மாமியும் இல்லாமல் பாட்டியும் இல்லாமல் இருந்த அந்த மாமிபாட்டிக்கும் எங்களுக்கும் அப்புறம் ஒத்துக்கவே இல்லை. பிளாக்லிஸ்ட் செய்துவிட்டோம்.

பாகவதர்களெல்லாம் அப்புறம் உஷாராக கோவணத்தைக் கூட பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

கிரிகெட் நடக்கும் நாட்களில் பஜனை மடத்துக்கு அருகில் இருக்கும் பையன் வீட்டில் கிரிக்கெட் பார்ப்போம். ஜூஸாவது பொங்கலாவது கொடுக்கும் போது விஷயத்தைச் சொல்ல ஒரு பொடியனை ஏற்பாடு செய்து இருப்போம். உடனே கொஞச நேரம் போய் உட்கார்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு கிடைத்ததை அமுக்கிக் கொண்டு நைஸாக ஒருவர் ஒருவராக கழண்டு திரும்பவும் இங்கு வந்துவிடுவோம். ரகு அண்ணாக்கு விஷயம் தெரிந்தாலும் வானரங்களை ஒன்றும் செய்யமுடியாதென்று தெரியும், அதனால் தலையில் அடித்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வார்.

ஒரு முறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் இது பொறுக்காமல் ரொம்பவே சிலிர்துக்கொண்டார்.

"எங்கடா போற?"

எனக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் சட்டென்று மூச்சாங்கற மாதிரி சைகை காட்டிவிட்டு ஓடிவிட்டேன். அதிலிருந்து பையன்களும் அதையே சொல்ல ஆரம்பித்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெலாம் என்ன நீரழிவா என்ன? மூனு பாட்டு பாடறதுக்குள்ள முன்னூறு தரம் மூச்சா போகப் போறேளே? அதுவும் எல்லாருக்கும் அலாரம் வெச்ச மாதிரி ஒன்னு போலத் தான் வருமோ?"

எங்கேயோ மழை பெய்யறது எங்கேயோ இடி இடிக்கறதுன்னு நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்.

நான் மிருதங்கம் வாசிக்க உட்கார்ந்து விட்டால் மாட்டிக் கொள்வேன். எங்கேயும் நகர முடியாது.அதற்காகவே என்னை மிருதங்கம் வாசிக்க சொல்லி விடுவார் ரகு அண்ணா.

அஷ்டபதியை விட உஞ்சவிருத்தியும் சீதா கல்யாணமும் விறுவிறுப்பாக இருக்கும்.உஞ்சவிருத்தியன்று "நாம சூத்ரம்" உபதேசம் வாங்கிய பாகவதர் தலைப்பாகு, தம்பூரா, சிப்லாக்கட்டை, அக்க்ஷய பாத்திரம் சகிதமாக ஊர்வலம் வருவார். அவர் கூட எல்லாரும் கூட்டமாக பஜனை பாடல்களையெல்லாம் பாடிக் கொண்டு வருவார்கள். எல்லார் வீட்டிலும் உஞ்சவிருத்தி பாகவதரின் காலை குளிர்ந்த த்ண்ணீர் கொண்டு அலம்பி குங்கும சந்தனம் வைத்து தீப ஆரத்தி எடுத்து, அரிசியும் பருப்பும் அக்க்ஷ்ய பாத்திரத்தில் போட்டு வலம் வந்து வணங்குவார்கள்.

இதில் வரும் அரிசியையும் பருப்பையும் கொண்டு சீதா கல்யாணத்தில் ஊருக்கெல்லாம் புளியோதரையும் சர்கரைப் பொங்கலும் பிரசாதமாக குடுப்பார்கள்.

நாங்கள் தான் அரிசி மூட்டையை தூக்குவதிலிருந்து அனைத்து எடுபிடி வேலையும் பார்ப்போம். அப்பேற்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் விபரீதம் புரியாமல் நான் முதல் முதலாக வேஷ்டி கட்டினேன்.

--வேறு வழியில்லாமல் இன்னும் வளரும்.

1 comment:

Kavitha said...

Your writing style brings out spontaneous laughter. Awesome.

Post a Comment

Related Posts