Monday, November 24, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4

பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.

அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.

"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.

பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.

இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.

இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.

அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.

அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.

விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.

"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.

நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.

அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.

"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.

"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.

நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.

கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.

அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.

29 comments:

Mahesh said...

இந்த வாரம் செண்டிமெண்ட் படமாப் போச்சே !! அன்னலும் உங்க எழுத்து நடை மறுபடி மறுபடி படிக்க வெக்குது !!

இலவசக்கொத்தனார் said...

என்னதான் கணேசன் கொஞ்சம் குண்டா இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை அவனை கண்ணுக்குட்டின்னு சொல்லறது நல்லாவா இருக்கு?!

அப்புறம் உங்க ஊரில் யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னாக்கூட எங்க ஊர் பக்கம் வந்தாத்தான் சரியாகும் என்ற வாக்குமூலத்திற்கு நன்றி! :)

Anonymous said...

இலவசம்,

என்ன இது நுண்ணரசியல்? சின்ன புள்ளதனமா இருக்கு. புகுந்த (வீட்டின்) ஊரின் பெருமை சொல்ல அவருக்கு முழு உரிமை இருக்கு. என்ன டுபுக்கு சரிதானே?

-அரசு

ambi said...

//வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். //

ஹிஹி. :)))

புகுந்த ஊரின் பெருமையை பேசலைன்னா தான் கவனிப்பு பலமா இருக்கும்னு டுபுக்குவுக்கு நல்லாத் தெரியும். :)))

ambi said...

@இலவசம், நம்மூர்ல தான் நல்ல ஆஸ்பத்திரி. அவங்க ஊர்ல ஒரே பிரசவ ஆஸ்பத்திரி தான்னே இருக்கு. :))

வாழவந்தான் said...
This comment has been removed by the author.
வாழவந்தான் said...

///வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும்.
சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.."
அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்///
இந்த வரிகளால் எனக்கு நான் பள்ளி முடித்து கல்லூரி செல்ல தயாரகிக்கொண்டிருந்த காலத்தில் குறைந்தபட்ச முயற்சியில், ஒரு கெட் அப் சேஞ் மற்றும் வளர்ப்பு மகன் இமேஜ் -காக சந்தனம் வைக்க ஆரம்பித்தது நினைவிற்கு வந்தது
///சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை///
எல்லா கிளாமர் கிச்சாவும் ஊமைகுசும்பன் இல்லப்பா!!
இவண்,
(சில காலம் மேற்படி கிளாமருடன் திரிந்தவன்)

Anonymous said...

பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால்-இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால -nice . jooli thirintha kalamnathum formuku vanthachu.பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ippadi ennga setlayum oru kathai solli irunthan, oru nall sema mothu mothunathula saria pochu.ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். ippadithan ragasiyatha kappathanum.- isthri potti

Arunram said...

//திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும்.
-- விழுந்து விழுந்து சிரிச்சேன்... அப்படி என்ன ஹார்லிக்ஸ் மேல கோபம்...

//பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு
-- again, LoL... ஜெனரலாவே, ஒரு breadboard, 2 டயோடு, 4 ரெஸிஸ்டர், சில பல ஒயருங்க... இதெல்லாம் சேர்த்து ஒரு 3 மணி நேரம் தாறுமாறா கனெக்‌ஷன் குடுத்து short-circuit ஆக்கினாத்தான் திருப்தி ஆவாங்க.

//கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
-- என்ன ஒரு ஃபீலிங்ஸ்...

பாசகி said...

//அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன்//

நீங்க ரொம்ப நல்லநல்லவருங்க :-)

//கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன்//

அவசரப்பட்டு பாராட்டிட்டனோ???

//அவன் சித்தபாவிற்க்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும்//

யாருப்பா அது நம்ம அவார்டு குறும்பட இயக்குனர்கிட்டயே கதைவிட்டது.

=================================

அடுத்த(வங்க) ஜொள்ளுக்காக காத்திருக்கும்... :-)

பாசகி said...

Arunram said...
///கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
-- என்ன ஒரு ஃபீலிங்ஸ்...///

இது ஃபீலிங்ஸ் இல்லீங்க, வயித்தெரிச்சல் :-)

Divyapriya said...

கிளாமர் கிச்சா…சரி காமடி :D

குப்பன்.யாஹூ said...

கல்லிடை கல்யாணி தெர்யுமா, சீ எ பண்ணின பொண்ணு. தெரு பெயர் மறந்து போயிற்று.

அதே போல் கிச்சாப்பு (பேங்க் வேலை செய்பவர்) தெர்யுமா.

ஜோ தி கா வில் பெண்களுக்கு தாங்கள் வைத்த பட்ட பெயர் எல்லாம் எழுதுங்க.

குப்பன்_யாஹூ

ச.சங்கர் said...

வழக்கம் போலவே நகைச்சுவையான பதிவு.

rapp said...

ஹா ஹா ஹா, இதே மாதிரி ஒரு கதையைத்தான் எங்க கிளாசில் குங்குமப் போட்டு வெச்சவங்களுக்கும் சொல்வாங்க, ஆனா இப்டி எதிர்பார்ப்போட திரியறவங்க மட்டும் குறையல:):):)

//அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து //

ஹி ஹி அவ்ளோ யூத்தா நீங்க:):):)

Anonymous said...

dubukku sir,asathal post.expecting part 6 of the story.balachandarplus barathiraja combination...too good.santhana pottu mela ulla kobam puriyuthu.
nivi.

Pradeep said...

/* Reposting my comment I posted on 15th Oct, juz to convey my pleasure on reading this */

Hi Dubukks,

I got to know about your blog from a directory that lists best indian blogs, and surprisingly, this is the only blog listed under the category 'Tamil'.

My curiosity let me start reading JTK part 1 and the series compelled me to steal some of my time out of the tight schedule to read it all in one go, although I remember that I gotta shoot out to fly hastily in a short while.

Eager to read the sequel too; will check it out in a weeks time.

Thanks for making something this huge. Consider my thanks as an ackonwledgement from my side for this recent-decent(?) good work in Tamil that enjoys this fine popularity

Regards,
Pradeep G

Anonymous said...

//"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்// - Escape from Alcatraz படத்தைவிட பெரிய எஸ்கேப்பா இருக்கே...

//பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில்// - கல்லிடைலயும் உண்டா.... இங்க திருநெல்வேலி (பாளையங்கோட்டை)லயும் உண்டு. யாரையாவது நல்ல கவனிக்கணும்னா இங்க கூட்டிபோய்...செம மாத்து மாத்துவோம்.

Natty said...

:) ஜூப்பர்.. இரசித்து படித்தேன்..

மன்மதக்குஞ்சு said...

ரொம்ப நாள் கழித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

Anonymous said...

ரொம்ப நல்லா இருந்தது தல...

//டேய் "அந்த கால" பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து//

தல, இந்த சம்பவம் எந்த வருஷம் நடந்தது...

//ஹி ஹி அவ்ளோ யூத்தா நீங்க:):):)//

டபுள் ரிப்பீட்டு.......


Kathir.

நாடோடி said...

//கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.//
ஹி ஹி..எல்லாருக்குமே இது தாங்க பிரச்சனை.. :)

வழக்கம் போல கலக்கல்!!

///
தல, இந்த சம்பவம் எந்த வருஷம் நடந்தது...
//ஹி ஹி அவ்ளோ யூத்தா நீங்க:):):)//
டபுள் ரிப்பீட்டு.......
//

மீ டூ ரிப்பீட்டு!!

Anonymous said...

தல,கலக்கல்!!!


August 27, 2008
September 01, 2008
September 27, 2008
October 29, 2008
November 10, 2008
November 24, 2008

அடுத்து எப்போ???

அன்புடன்
கார்த்திக்...

Madhu Ramanujam said...

வழக்கமா இருக்கிற நகைச்சுவைய காணுமே டுபுக்கு! அடுத்த தடவை சேர்த்துத் தருவீங்கன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

Auto thedikittu irukkom....Kedachhu anuparathukkula adutha pathivai publish seiyavum.

All India Dubukku Fans Association.

Dubukku said...

மஹேஷ் - நல்லவேளை படிச்சீங்களே :)))

கொத்ஸ் - வீட்டுப்பாடத்தை சரியா செய்யலை...நூறு தடவை நீங்க எழுதனும். கணேசன் குண்டாய் இருப்பதால் கன்னுக்குட்டி என்று வழங்கவில்லை...இங்கே பாரும்

அரசு - அவருக்கு அவங்க ஊரப் பத்தி நல்லாவே தெரியும் அதுவும் அம்பை சிட்டி பக்கத்துல நிக்கவே முடியாதுன்னு அதான் ஊருக்கு முன்னாடி அவரே பாட்டு பாடிக்கிறார் :))))

அம்பி - டேய் இநத கல்லிடைகாரங்க காமெடி தாங்கமுடியலைடா..எங்க ஊர்ல இழுத்துகினு இருக்கிற கேஸையெல்லாம் உங்க ஊர் ஆஸ்பத்திரில சேர்த்தா உடனே டிக்கெட் குடுத்துருவீங்க....மத்த படி எல்லாத்துக்கும் அம்பை சிட்டிக்கு தானே நீங்களே பஸ் புடிச்சு வருவீங்க....அப்புறம் இங்க வந்து என்ன ரொம்ப ஓவரா சீன் போடறீங்க...??


வாழவந்தான் - ஆஹா நிங்களும் சந்தன பார்ட்டியா...ஏதாவது வொர்கவுட் ஆச்சா? :))))

அனானி - ஆமாம் ரகசியத்தை காப்பாத்துவோம்ல :))))


அருண்ராம் - ஹீ ஹீ ஹார்லிக்ஸ்னா அவ்வளவு லவ்ஸ் :)) நீங்க எலெக்ட்ரானிக்ஸா? கலக்கறீங்க :)))

பாசகி - வாங்க நீங்களும் ரெம்ப நல்லவரா இருந்திருப்பீங்களே காலேஜ் படிக்கும் போது? ஆல் பார்ட் ஆஃப் த கேம் :)) கரெக்டா ப்லீங்க்ஸுக்கும் வயெத்தெரிச்சலுக்கும் வித்தியாசம் சொல்றீங்களே அதான் கேட்டேன் :)))

திவ்யப்ரியா - வாங்க மிக்க நன்றி.

குப்பன் - நல்லாத்தேன் குசும்பு பண்ணுறீங்க...சாடை மாடையா சொல்றதுக்கே டின் கட்டிடுவாங்க அங்க...உதுல பட்டப்பெயர வேற சொல்லனுமா?

சங்கர் - மிக்க நன்றி ஹை

ராப் - அதான் அந்தக் காலம்ன்னு தெளிவா சொல்லீருகேன்ல...போற போக்குல வெடிகுண்ட வீசிட்டு போறீங்களே நியாமா??

நிவி - நன்றி ஹை சந்தனப் பொட்ட ஹூம் நானும் கொஞ்ச நாள் ட்ரை பண்ணினேன்...

ப்ரதீப் - மிக்க நன்றி. படித்ததோடு நில்லாமல் வந்து கமெண்டியதற்க்கும் மிக்க நன்றி ரொம்ப ஊக்கமக இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.

இராமசந்திரன் - கேட்டீங்களே ஒரு கேள்வி...அம்பையில் தெருக்களுக்கு நடுவில அங்க அங்க மூதிரச் சந்து...கல்லிடைல அப்படியே உல்டா மூத்திரச்சந்துக்கு நடுவில அங்கங்க தெரு இருக்கும் (இன்னிக்கு கல்லிடைகாரன் கையில தான் வாங்கனும்ன்னு இருக்கு)

நட்டி - மிக்க நன்றி ஹை

மன்மதக்குஞ்சு - கையோட பிழைகளையும் சுட்டி மெயில் தட்டிவிட்டதற்க்கு உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லனும். இப்போ திருத்திட்டேன்.

கதிர் - இதெல்லாம் ரொம்ப ஓவரு அதான் "அந்தக் கால"ன்னு போட்டிருக்கேன்ல...நீங்க வேற ,....என்ன கோவம் சார்?

நாடோடி - கலக்கல்ன்னு சொல்லிட்டு அடுத்தாப்புல என் வயத்தை கலக்குறீங்களே நியாமா? :))

கார்த்திக் - மன்னிச்சிக்கோங்க எனக்கே தெரியுது...ஆனா ஏதாவது வேலை வந்திடறது...சாரி

மதுசூதனன் - அப்படீங்கறீங்க...சாரி ஏமாந்திட்டீங்கபோல அடுத்த தரம் கவனமா இருக்கேன்.

அனானி - யோவ் பேராவது போடுங்கைய்யா நானே எனக்கு சங்கம் வெச்சிக்கறேன்னு புரளியக் கிளப்பிவிட்டுருவாங்க. உங்க அன்புக்கு நான் அடிமை (டயலாக் பேசி நாளாச்சு :))) )

மங்களூர் சிவா said...

as usual செம கலக்கல்!

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Thala Dubukku,

Sangam vechhathu naanthan...Post illatha kaduppula login in panna maranthunten...sorry..Auto matter mattum nijam :)..Ithukku munna association comment pottathum naanthan :)

Ananya Mahadevan said...

"நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும்."- தனியா உக்காந்து சிரிக்க வச்சிட்டாநேய்யா...கிச்சாவுக்கு அந்நியன் மாதிரி ஸ்ப்ளிட் பெர்சொனளிட்டி போலும், எது எப்படி இருந்தாலும் சிரித்து சிரித்து வயிற்று வலி

Post a Comment

Related Posts