Friday, August 26, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...4

For previous Parts -- >Part 1      Part 2     Part 3

எனக்கு உள்ளூர அக்மார்க் படபடப்பு. அது வரை தள்ளியிருந்து கலாய்த்திருந்தாலும் நேருக்கு நேர் பேசுவதற்கு என்னமோ செய்தது. ஆனால் கிளி கூப்பிட்டது உப்பு இருக்கா பருப்பு இருக்கான்னு சப்பை மேட்டருக்கு. இருந்தாலும் வாய்ப்பை நழுவ விடவில்லை, கடலை சாகுபடிக்கு தேவையான சீதோஷண நிலையைக் கொண்டுவந்திருந்தேன்.

"அண்ணா நீங்க நல்ல க்ரிக்கெட் விளையாடறேள்ன்னு உங்களுக்கு நாங்க ஒரு பேர் வைச்சிருக்கோம்.." - சிறு குழந்தையும் பல் குத்த உதவியது.

"சொல்லாதேன்னு சொன்னேன் இல்ல..." கிளிக்கு அந்தச் சின்னப் பெண் சொல்லிவிட்டாளே என்று வெட்கமாயிருந்தது.

"உங்களுக்கு கபாஸ்கர்ன்னு அக்கா பேர் வைச்சிறுக்கா..நீங்க அவர மாதிரி நன்னா விளையாடறேளாம்" - குழந்தைக்கு "வா"-ன்னா பராது.

"வெல்...இதெல்லாம் ஒன்னுமில்ல..போன மேட்சுல..." என்று நான் மானே தேனே போடுவதற்குள் தூரத்தில் வானரப் படை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்காக கொஞ்ச நேரம் நல்ல சிரித்துப் பேசுவது மாதிரி படம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வயத்தெரிச்சல் வானரம் என் வீட்டுக்கு ஓடியது. எதாவது செய்து நான் கடலை போடுவதை வீட்டில் மறைமுகமாக தெரியப்படுத்தும் வழக்கமான நல்லெண்ணம் தான். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாகையால் எதிர் பக்கமாக நழுவினேன்.

"கபாஸ்கர்...கபாஸ்கர்...கபாஸ்கர்..." இந்த பெயரும் நன்றாகத் தான் இருந்தது. அங்கே இங்கே சுற்றிவிட்டு வரும் வரை வானரப் படை காத்துக்கொண்டிருந்தது. வயத்தெரிச்சலில் புகை மண்டலம் மண்டிப் போயிருந்தது.

"டேய் கபாஸ்கர் இங்க வாடா" - அதற்குள் சிறுமியைப் பிடித்து இன்டெலிஜ்ன்ஸ் ப்யூரோ விஷயத்தை வாங்கி இருந்தது. டீமில் ஒருத்தனுக்கு கவாஸ்கரை ரொம்பப் பிடிக்கும். அவனும் க்வாஸ்கர் மாதிரி குட்டையாக கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருப்பானாகையால் அவனுக்கு தான் தான் கவாஸ்கர் என்று நினைப்பு.

"என்னடா சோலோ சோலையப்பன் மாதிரி அங்கே தனியா கச்சேரி நடத்திட்டு வந்தா எங்களுக்கு விஷயம் தெரியாதா என்ன? கபாஸ்கர்.....க்ர்ர்ர்ர்ர் தூ...எல்லாம் நேரம் டா"

"டேய் நிப்பாட்டுடா...ரொம்ப ஓட்டாதீங்கடா...நான் கவாஸ்கர் மாதிரி ஸ்கொயர் ட்ரைவ் பண்ணறேன்னு அந்தப் பொண்ணு பெயர் வைச்சிருக்கா...உனக்கு வேனும்ன்னா நீயும் நல்ல பவுலிங் போட்டு கபில் தேவ்னு பெயர் வாங்கிக்கோ யாரு வேணாம்ன்னா"

"யாரு ...நீ...கேட்டுக்கோங்கடா கிழிச்ச கோமணம் மாதிரி இருக்கற தெருவுல அய்யா ஸ்கொயர் ட்ரைவ் அடிச்சாராம் ..அவ பார்தாளாம் அதனால கபாஸ்கராம்...அவளுக்கு ஸ்கொயர் ட்ரைவ்ன்னா என்னன்னு தெரியுமாடா?" - கவாஸ்கர் குட்டையனுக்கு ரொம்பவே வயித்தெரிச்சல்.

அப்புறம் அங்கே பார்லிமெண்ட் மாதிரி குழப்பமாகிவிட்டது. கடைசியில் மம்தா பானர்ஜி மாதிரி நானும் பேட்டை வீசி விட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் அனைத்துக் கட்சி சமாதானக் கூட்டம் நட்ந்து சரிசெய்யப்பட்டது. ஆனால் குட்டையன் மட்டும் கிளி வரும் போது "ஹலோ கபாஸ்கர்..." என்று சத்தமாக கூப்பிட்டு கலாய்ப்பான்.

ஒருநாள் கிளி அவள் மாமியுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வழக்கமாக விளையாடும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். குட்டையன் தான் பேட்டிங்.

"டேய் கபாஸ்கர்..ஒரிஜினல் கவாஸ்கர் எப்பிடி விளையாடுவார்ன்னு இப்போ காட்டறேன் பார்துக்கோ...எல்லாரையும் பார்த்துக்கச் சொல்லு...டேய் மொக்கை கரெக்டா பாலைப் போடுறா"

குட்டையன் சரியான ஷாட் அடித்தான்...பந்து நேராக கிளியைக் குறி வைத்துப் பறந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கிளியின் டிக்கியில் பதம் பார்த்துவிட்டது. நான் ஃபீல்டிங்கில் இருந்ததால் நான் தான் பந்தைப் பொறுக்கப் போயிருந்தேன். கிளிக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. கிளியின் மாமிக்கு அதற்குள் சாமியேறியிருந்தது.

"தெருவுல மனுஷா நடக்கமுடியல...என்ன க்ரிக்கெட்டோ கருமாந்திரமோ...க்ரவுண்டுக்குப் போங்கடான்னு அடிச்சிக்கறோம்...கேட்டாத்தானே...எல்லாம் வானரக் கூட்டமான்னா இருக்கு...யாருடா பந்த அடிச்சது"

இன்னொரு தீவிரவாதி மாமியும் சேர்ந்து கொண்டார். "வயசுப் பொண்ணு வராளேன்னு..குறி பார்த்து அடிச்சிருப்பான்கள்...பையன்கள் மாதிரியா நடந்துக்கறா...எல்லாம் பிசாசுகள்"

கிளிக்கு அடி பட்ட இடத்தில் தேய்த்து விட்டுக்க கூட முடிய்வில்லை. வெட்கமாயிருந்தது.

"மாமி நான் அடிக்கல மாமி...நான் பீல்டிங் தான்...அவன் தான்..." - எங்கே அடிச்ச மறுநிமிடமே இடமே காலியாயிருந்தது. தெரு கிரிக்கெட் விதிமுறைகளின் தலையாய கோட்பாடே இது தான். ஆள் மேல் பட்டுவிட்டால் மறுநிமிடமே எஸ்.வீ.சேகர் ட்ராமாவில் வருவது மாதிரி மறைந்துவிட வேண்டும். விட்டிருந்தார்கள். நான் தான் பேக்கு மாதிரி மாமி சாமி என்று நின்று கொண்டிருந்தேன்.

"ஸாரி மாமி நான் பார்க்கல...இனிமே இப்பிடி..."

"நான் தான் பார்த்தேனே...கல்யாணி மாமி புள்ள தானே...கல்யாணி வரட்டும் நாங்க சொல்லி இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டறோம்...நீ உன் ஜோலியப் பார்த்துண்டு போடா.." - தீவிரவாதி மாமி கண்கொத்திப் பாம்பாய் பார்த்து வைத்திருந்தாள்.

நல்ல வேளை என் தலை தப்பியது. பந்தைக் கேட்டால் பல்லை உடைத்துவிடுவார்களோ என்று அப்பிடியே ஓடிவிட்டேன். அடுத்த நாள் கிளியை பார்த்து மன்னிப்பு கேட்கலாமென்று போன போது...குட்டையன் என்க்கு முன்னால் ஆஜராகியிருந்தான். என்னமோ சிரித்து சிரித்துப் பசப்பிக் கொண்டிருந்தான். நான் பார்க்கிறேன் என்று ஓவராய் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் போனதுககப்புறம் நான் பேசினேன். பொதுவாக கால் வலி எப்படி இருக்கென்று விசாரித்தேன். அன்று கிளி வழக்கம்போல் பேசவில்லையோ என்று தோன்றியது. குட்டையன் குட்டையக் கலக்கியிருப்பான் என்று சந்தேகமாக இருந்தது.

"பார்தீல்ல...எப்பிடி சிரிச்சு சிரிச்சு பேசின்னேன்னு...." குட்டையன் சாயங்காலம் கெக்கலித்தான்.

"அவளுக்கு நான் விளையாடற ஸ்டையில் பிடிச்சிருக்காம்...நான் விவியன் ரிச்சர்ட்ஸ் மாதிரி விளையாடறேனாம்...அதனால எனக்கு விவ் ரிச்சர்ட்ஸ்ன்னு பெயர் வைச்சிருக்காளாம்"

"இந்த விஷயம் கிளிக்குத் தெரியுமா?"

"தோடா இவரு மட்டும் கபாஸ்கராம் நாம நம்பனுமாம்...ஆனா இவரு மாட்டாராம்"

அப்புறம் கபில் தேவ், ஸ்ரிகாந், அம்ர்நாத், வால்ஷ் என்று நிறைய பேர் வந்தார்கள். போட்டியும் பலமாக இருந்தது. இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை...அப்புறம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து..கிளி கூண்டவிட்டு பறந்து போயிடுத்து...!

--இன்னும் ஜொள்ளுவேன்
Use this Comments(#)

No comments:

Post a Comment

Related Posts