Friday, May 21, 2004

வா !

for picture version of this post click here

ஆச்சு...டிக்கெட் புக் பண்ணியாச்சு, லீவுக்குச் சொல்லியாச்சு, ஊர்ல அப்பா அம்மாக்குச் சொல்லி ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. நாளைக்குப் பொட்டியத் தூக்கவேண்டிதான். டிக்கெட்டை ஏர்போட்டில் வாங்கிக்கச் சொன்னார் ஏஜன்ட். ஏர்போட்டில் "டுபுக்குகா தோஸ்து" என்று சொன்னால் டிக்கெட்டைத் தருவான் என்றார் ஏஜன்ட். எனக்கு முன்னாலேயே இது மாதிரி ஒரு தரம் சுகானுபவம் இருந்த்தால் நானே உன் வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்தியாவில் இருக்கும் போது. போர்பந்தரில் இருந்து மும்பாய் வழியாக டிக்கெட் தருவதற்குப் பதிலாக மும்பை வழியாக டெல்லிக்குத் தந்துவிட்டான் ஒரு புண்ணியவான். ப்ளைட் ஏறும் போது தான் பார்த்தேன். அப்புறம் மும்பையில் 'ஐய்யோப் பாவம் பன்னி விட்டைதான் லாபம்' முழியெல்லாம் முழித்துக் கொண்டு டிக்கெட்டை மாத்திக் கேட்டேன். மாத்திக் குடுத்து..கையில் 500 ரூபாய் வழிச்செலவுக்கும் குடுத்தார்கள்.


இன்னும் ராத்திரி இருக்கே என்று துணிமணியெல்லாம் எடுத்து வைக்கவில்லை. சிங்காரச் சென்னை வழிதான். என்னுடன் மலையாளத்தில் சம்சாரிக்க் கேரளத்து ஏர்ஹோஸ்டஸ்கள் குடுத்து வைக்கலை. சீய்ச் சீ... திருவனந்தபுரம் புளிக்குமாமே? அங்கு ஒரே வெய்யிலாம்...கச கசவென்று இருக்குமாம் தண்ணிக் கஷ்டம் வேறாம். மனுஷன் போவானா இப்போ அங்க. சென்னைதான் குளு குளுவென்று இருக்காம் பாலும் தேனும் ஓடுகிறதாம். டிக்கெட் கிடைக்கலையேன்னு இதெல்லாம் சொல்லலை சார்...

ஒருவாரம் சூறாவளிப் பயணம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்திருவேன். ஊர்லேர்ந்து வலைப் பதிவு போடமுடியுமா தெரியவில்லை. எல்லாம் வல்ல வி.எஸ்.என்.எல் கருணை கிட்டவேண்டும்.(கிடைச்சாலும் கிழிச்சேன்னு யாருய்யா அங்க சவுண்டு விடறது?)

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லா வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள். எண்ணை தேய்ச்சுக் குளியுங்கள். தோ..ஓடி வந்துறுவேன்.....கண்ணைத் தொடைச்சிக்கோங்கோ அழலாம் பிடாது....அதுவரைக்கும்....வா

அன்புடன்
டுபுக்கு

பி.கு - அதென்ன வா??..."வா என்றால் வணக்கம்"..நியூ.பாட்டுகேட்டதில்லையா? கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் :P

(அட இது என்னோட நூறாவது பதிவு!!)

Wednesday, May 19, 2004

தஞ்சாவூர் உபசாரமும் திருநெல்வேலி பாயாசமும்

for picture version of this post click here

அரசியல் பற்றி எழுதவே கூடாதென்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கை பரபரவென்கிறது.
எனக்கு அரசியல் ரொம்பத் தெரியாது. இன்றைய நிகழ்வுகளை இந்தியன் என்ற உணர்விலே எல்லாரையும் போல் கவனித்து வருகிறேன். காங்கிரஸின் மேல் எனக்கு பச்சாதாபம் உண்டே தவிர துவேஷம் என்று இல்லை. இருந்தாலும் திருமதி.சோனியா பிரதமர் ஆவதில் எனக்கு முழு உடன்பாடு இல்லைதான். ஏன் எதற்கு என்ற விபரங்களுக்குள் செல்லாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

திருநெல்வேலிக்கும் தஞ்சாவூருக்கும் ரொம்ப ஆகாது. பெண் குடுக்கவோ எடுக்கவோ கொஞ்சம் தயங்குவார்கள். இந்த துவேஷம் காரணமாகவே தஞ்சாவூர் உபசாரம் பற்றி திருநெல்வேலியில் இப்படித்தான் சொல்வார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்.."நீங்க எங்காத்துலலாம் சாப்பிடுவேளா?..நீங்க ஏற்கனவே சாப்பிட்டுட்டு வந்திருப்பேளே... இந்த வெய்யில்ல உங்க ஊர்க்காராளெல்லாம் காபி குடிக்கமாட்டேளாமே...etc." - இது தஞ்சாவூருக்கு மட்டுமே உரித்தான குணம் என்று நான் நம்புபவனில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல் திருநெல்வேலியில் ஒரு வழக்கு உண்டு. பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் தனக்குப் பாயாஸம் வேண்டுமென்றால் "எனக்குப் பாயாஸம் வேண்டும் விடுங்கோ" என்று கேட்கமாட்டான். பக்கத்தில் உள்ளவன் இலையை காட்டி..."ஏன்பா இவருக்கு கூடகொஞ்சம் பாயாஸம் விடுங்கோப்பா...நல்லா கவனியுங்கோ" என்பான். பக்கத்திலிருப்பவன் சும்மா இருக்கமாட்டான் திரும்ப "எனக்கு விட்டது போறும் அவருக்கும் விடுங்கோ..." என்பான். இப்படியாக இவனுக்குப் பாயாஸம் கிடைக்கும்.

இது தான் இப்போ நடக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. சோனியா இரண்டையும் கலந்து அடிக்கிறார். நல்லது. எது எப்பிடியோ...என்னை மாதிரி தத்து பித்தென்று ஹிந்தி மட்டும் தான் பேசுவார் அன்னை என்று நினைத்தேன். வூடு கட்டி அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்...இப்படிப்பட்ட ஆள் தான் வேண்டும் காங்கிரஸுக்கு. தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டிருக்கிற ஹிந்தி மாமாக்களையும் நம்மாளுகளையும் கட்டி மேய்கிறதென்றால் சும்மாவா.

அட்ரா சக்கை இப்போ தான் களைக் கட்டியிருக்கிறது டெல்லி.

பி.கு - பி.பி.சி பார்கிறேளோ? டெய்லி இங்க லோக்கல் நியூஸ்லயே இதப் பத்தி 15நிமிஷம் ரிப்போர்ட் போடறான். எனக்கு என்னமோ அவன் ஓவரா சோனியக்கு ஜால்ரா அடிக்கிறான்னு தோன்றுகிறது

Monday, May 17, 2004

வந்துட்டான்யா வந்துட்டான்யா..

for picture version click here

ஒரு வாரம் வேலை பெண்ட நிமிர்ந்துவிட்டது. வலைப்பூ..மற்றும் பல்வேறு வேலைகள். வலைப்பூ மிகவும் சுவாரசியமாக இருந்தது.(எனக்கு). நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். அனேகமாக அடுத்தவாரம் இந்தியா போவேன் (ஒரு வாரத்துக்கு). டிக்கெட் புக் செய்யவில்லை, லீவுக்கு சொல்லவில்லை. என் பெற்றோரைக் கூட்டி வருகிறேன். எப்போ கிளம்பவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கேட்கும் போது சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றையும் கடைசி வரை வைத்துக்கொள்வேன். "கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பா ஆனாலும் மாறவே இல்லைடா நீ..." எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டும் என்று இந்த முறையும் குடுத்து வைத்து இருக்கிறது. என்னமோ என் ராசி அப்பிடி. "ப்ளைட் பிடிக்கப் போகனும் சீக்கிரம் வெட்டுப்பா" என்று முதல் தரம் கிளம்ப்பும் போது முடிவெட்டும் கடையில் சொன்ன போது கடைக்காரன் நம்பவேஇல்லை. நான் இருந்த கோலம் அப்பிடி, அந்தக் கடையும் அப்பிடி. "விட்டா லண்டனுக்குப் போறேன்னு சொல்லுவியே"ன்னு ஒரு பார்வை தான் பார்த்தான். நான் பதிலே சொல்லவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில் கிளம்பினாலும் இதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது. இப்பிடித்தான் ஒரு தரம் இந்தியாவில் இருக்கும் போது மே மாசத்தில் அகமதாபாத் அக்கா வீட்டிற்கு பம்பாய் வழியாகச் செல்ல திட்டம் போட்டேன். கடைசி நேரத்தில் பம்பாய் வரை மட்டும் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடைக்க..சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று ஒருவருக்கும் தகவல் குடுக்காமல் அதில் ஏறி பம்பாய் அக்கா வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குப் போய் பெல் அடித்தால் திறக்கவே இல்லை. ஒரு வேளை தூங்குகிறார்கள் என்று அப்பிடி வாசலிலேயே தேவுடு காத்திருந்தேன். காலையில் தான் தகவல் கிடைத்தது. எல்லாரும் வெளியூருக்குப் போய்விட்டார்களென்று. "முஜே பச்சாவ் முஜே பச்சாவ் " என்று முழித்ததில் எதிர்த்த வீட்டில் "அய்யோ பாவம்" என்று குடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அகமதாபாத்துக்கு தட்டுத் தடுமாறி பஸ் பிடித்தேன். பஸ்ஸில் பாதிபேர் டிக்கெட் எடுக்கவில்லை. என்னைப் போல் கொஞ்ச பேர்கள் மட்டும் டிக்கெட் எடுத்திருந்தார்கள். மற்றவர்கள் கண்டெக்டர் கையில் பத்தோ இருபதோ அம்பதோ குடுத்தார்கள். அவரும் ஹிந்தியில் பல்லைக் காட்டிக் கொண்டு ஜேப்பில் போட்டுக் கொண்டுவிட்டார். முரடன் முத்துவாக இருந்த எல்லார் வாயிலும் பான் வேறு. நான் எதுக்கும் இருக்கட்டும் என்று பான் வாங்கிக் கொடுத்து ஒரு முத்துவை ஃபிரெண்ட் பிடித்துக் கொண்டேன். குடுத்த பான்னுக்கு கடைசி வரை விசுவாசமாக என்னோடு பாட்டெல்லாம் பாடிக்கொண்டு வந்தான் அவன். ஒரு வழியாக அகமதாபாத் வந்து சேர்ந்தேன். அகமதாபாத் அக்கா வீட்டில் இல்லாவிட்டால் இன்னொரு மாமா வீடு இருக்கிற தைரியம். நல்லவேளை எல்லாரும் இருந்தார்கள். ஆனால் எல்லாருக்கும் நான் வரப் போவது தெரிந்து இருந்தது. எங்கப்பா முன்னாடியே முன் ஜாக்கிரதையாக போன் பண்ணிச் சொல்லிருந்தார். பம்பாயில் ப்ளாப் ஆன கதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இந்த முறை என்னெல்லாம் கூத்து அடிக்கப் போகிறேன்று தெரியவில்லை. போகும் போது தனியாகப் போகிறேன். ஜாலி. வரும் போது அப்பா அம்மா வருகிறார்களென்பதால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுவேன். வரும் போதாவது பொறுப்பு வரட்டும். மெட்ராஸ் வழியா திருவனந்தபுரம் வழியா தெரியவில்லை. திருவனந்தபுரமாக இருந்தால் "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" தவிர வேறேதாவது மலையாளம் கத்துக் கொள்ளவேண்டும். ப்ளைட்டில் கேரளத்து ஏர்ஹோஸ்டஸிடம் கடலை போட வசதியாக இருக்கும்.

Sunday, May 09, 2004

Valaipoo and a break again...

The gist of this post is that I have been invited to be the editor of this weeks 'Valaipoo'. Valaipoo is a tamil bloggers journal. They invite tamil bloggers to be editors on a weekly basis and its going to be me from May 9th to 15th. I will be making atleast two posts per day there. So I invite you all there on behalf of Valaipoo. I will be resume my posts here from next week.

For picture version of this post click here

கொஞ்சம் உப்பு, ரெண்டு மூனு மிளகாய் பழம், ஒரு கத்தை வேப்பிலை, காலடி மண் ஒரு பிடிச்சு இதெயெல்லாம் ஒரு பக்காவில் போட்டு கடிகார சுற்றில் மூன்று தடவை, எதிர் சுற்றில் மூன்று தடவை, பிறகு ஒரு துப்பு துப்பவேண்டும் - உட்கார வைத்து இதெல்லாம் திருஷ்டி கழிக்க எங்கள் வீட்டில் செய்வார்கள். இந்த வலைப்பதிவிற்கும்(ப்ளாக்) இதைத் தான் செய்யவேண்டும் போல. யாரோ ரொம்ப திருஷ்டி பட்டுவிட்டார்கள். ஒழுங்காக இங்கே எழுதிக் கொண்டிருந்தவன் ரெண்டு வாரமாக நிறைய லீவு போட்டுவிட்டேன். இதெல்லாம் போறாதென்று இந்த வாரமும் இங்கே எழுத முடியாதென்று நினைக்கிறேன். ஆனால் இந்த வாரம் ஒரு நல்ல விஷயத்திற்காக. வலைப்பூவில் ஒரு வாரம் ஆசிரியர் பணி.வலைப்பூ பற்றி ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் தமிழ் வலைப்பதிவாளர்களால் வாரம் ஒருவர் என்று நடத்தப்படும் வலைப்பதிவு. இந்த வாரம் என்னை அங்கு எழுத அழைத்திருக்கிறார்கள். அதனால் அங்கு எழுதப் போகிறேன். ஆனால் அங்கே ஓ.பி. அடிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவாவது போட வேண்டும்.

மீண்டும் அடுத்த வாரத்திலேர்ந்து இங்கே தொடர்வேன். அது வரை உங்களை அன்புடன் அங்கே அழைக்கிறேன்.

Friday, May 07, 2004

தாமிரபரணித் தென்றல் - 3

For picture version of this post Part3a Part 3b
நாடக கான சபா- 2

பரிசு வாங்க மைக்கில் அழைத்த போது மேடைக்கு பின்புறம் நான் வாலை அவிழ்த்திருந்தேன். திரும்ப் வைக்க நேரமாகுமே என்று வாலில்லாத அனுமாராக மேடைக்குச் சென்று பரிசை வாங்க..எல்லாரும் ஒரே சிரிப்பு.

பரிசை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் எதிரே முன்வரிசையில் என் பள்ளித் தமிழாசிரியர். மிக மிக கண்டிப்பான வாத்தியார். பேரைச் சுருக்கி சோபா சோபா என்று தான் எல்லாரும் அவரைக் கூப்பிடுவார்கள். டி.ராஜேந்தர் ரசிகன். பையனுக்கு சிலம்பரசன் என்று பேர் வைத்திருந்தார். கம்பை வைத்துக்கொண்டு அடிப்பதற்கு முன்னால் பயங்கரமாக பில்டப் குடுப்பார். வாட்சைக் கழட்டிவிடுவார். கம்பு பலமாக இருக்கா என்று சேரில் அடித்து ஒருதரம் செக் பண்ணிப் பார்ப்பார். இந்த மிரட்டல்களிலேயே பல பையன்கள் மூச்சா போய்விடுவான்கள். நான் ரொம்ப அடிவாங்காமல் கொஞ்சம் தப்பித்துக்கொண்டிருந்தேன் அதுவரை.

அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு பலூனில் காத்து போன மாதிரி ஆகிவிட்டது. இவர் எங்கே இங்கே வந்தார் வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ஆயிற்றே என்று அனுமார் வேஷத்திலேயே சலாம் போட்டேன். புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டார். அதற்கப்புறம் அவர் இருக்காரென்று வெளியிலேயெ தலை காட்டவில்லை. அவர் போயாச்சு என்று சொன்ன அப்புறம் வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் முடிந்தது என்று நினைத்த தலைவலி திரும்ப ஆரம்பித்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் சொல்லிக்குடுத்து விட்டு ஆரம்பித்தார்.

"உங்கள்ல யாராவது அனுமாரப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்"

"அந்த அனுமார் நம்ம கிளாசுலதான் படிக்கிறார். டேன்ஸ்லாம் நல்லா ஆடுவார். யாரு தெரியுமா?"

பலத்த அமைதி நிலவியது.

"நான் யாருன்னு சொல்லமாட்டேன்....இப்போ அனுமாரே உங்க முன்னாடி வருவார் பாருங்க. வாங்க அனுமாரே வாங்க..."

நடிகர் அருண்பாண்டியன் வசனம் பேசுவது மாதிரி மிரட்டுகிறாரா இல்லை அன்போடு தான் அழைக்கிறாரா என்று புரியவில்லை எனக்கு.

நான் தான் அனுமாரென்று தெரிந்த முன்னால் உட்கார்திருந்த முந்திரிக் கொட்டைகள் ரெண்டு திரும்பிப் பார்த்தது.

வேறு வழியில்லை மெதுவாக முன்னால் போனேன்.

"வாலில்லா அனுமார், பரவால்ல...நேத்திக்கு அருமையாக ஆடின அனுமார்...இப்போ நம்மளுக்கெல்லாம் ஆடிக் காட்டப் போறார்"

"......."

"ஆடுங்க...அனுமாரே என்ன வெட்கம் நேத்திக்கு அங்கே எம்புட்டு பேர் இருந்தாங்க...இப்போ மட்டும் என்ன வெட்கம்?"

"இல்ல சார்...வேஷம்லாம் இல்ல..."

"அதான் பரவால்ல சொன்னேன்ல சும்மா ஆடுங்க..."

"அதுவந்து அங்க பாட்டெல்லாம் இருந்துது..."

"'பாட்டு' தானே...டேய் அந்த செய்யுள் புஸ்தகத்த கொண்டா..." - வாங்கிப் புரட்டினார்.

"ஆங்...தேசிங்குராஜன் கதை...அருமையான பாட்டு இதப் பாடறேன் ஆடுங்க அனுமாரே"

வேற வழியில்லை ...அதற்க்கு மேல் ஏதாவது சாக்கு சொன்னால் பிரம்பினால் பட்டையைக் கிளப்பிவிடுவாரோ என்று பயமாக இருந்தது.

தேசிங்குராஜன் கதைக்கு ஆடிய முதல் அனுமாராக நான் தான் இருக்கமுடியும். கிட்டத்தட்ட...ஆடுறா ராமா ஆடுறா ராமா மாதிரி இருந்தது. மூன்றாம் பிறைக் கமல் மாதிரி என்னலாமோ ஆடினேன். பையன்கள் விழுந்து விழுந்து சிரித்தான்கள்.

"டேய் நேத்திக்கு சொறிஞ்சு காட்டி அப்பிடியே பண்ணினயே?..."

"சார் அது சிவப்பு கலருக்காக குங்குமத்த குழைச்சு பூசியிருந்தாங்க அந்த அரிப்பில் சொறிஞ்சிருப்பேன் "

"பரவால்ல இங்கயும் சொறிஞ்சிக்கோ அப்போ தான் நல்ல தத்பரூபமாக இருக்கும் "

ஆஞ்சனேயா இவன் படுத்தற பாட்டுக்கு இவன நல்லா கவனி...இவன் அரிப்பெடுத்தே அழிஞ்சு போகனும் மனதார வேண்டிக்கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக நின்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை...இடத்துக்கு போகச் சொல்லிவிட்டார்.

அடுத்த வருடம் பள்ளியை விட்டுப் போய்விட்டார். அரிப்பெடுத்ததா தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மனதிலிருந்து அகலவே இல்லை...தேசிங்கு ராஜன் பாட்டும் தான்.

Tuesday, May 04, 2004

பிறந்தநாள்...

For picture version of this post click here
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை நடத்திப் பார். நானாயிருந்தால் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சேர்த்திருப்பேன். அப்பா சாமி தலை சுத்தி இப்போதான் கொஞ்சம் நிலமைக்கு வந்திருக்கேன். பரவால்ல என் புள்ளதாச்சி மனைவியோடு ஒரு வழியா நல்ல படியாக நடத்தி முடிச்சுட்டோம். இத்தனைக்கும் மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே ப்ளான் போட்டு வாரக்கடைசிகளில் வாஙக ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் தொட்டு தொட்டு வேலை இருந்து கொண்டே தான் இருந்தது. வீட்டை சுத்தப் படுத்தும் வேலையில் என்ன பொழப்புடா இது - மாட்டைக் கூட குளிப்பாட்ட வேண்டி இருந்தது.(ஹீ ஹீ எங்க வீட்டுல ப்ரெஷ் ஹோல்டர் மாடு வடிவத்தில் இருக்கும்). ஹோட்டல் பாதி சமையல் மீதி என்று ஆளவந்தான் ஸ்டைலில் முடிவாயிருந்தது. சுவை, தரம்,மணம்,பணம் எல்லாவற்றையும் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொண்டு தேர்தெடுத்த ஹோட்டலை அம்போவென்று விட்டுவிட்டு கடைசியில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கே லாட்டரி அடித்தது.

செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த மனைவி திரும்பத் திரும்ப கேட்டாள்

"ஹோட்டலிலிருந்து வாங்கி வர வேண்டாமா? கடைசி வரையில் வைத்துக்கொள்வார்களா? போட்டோ எடுக்க ப்லிம் எல்லாம் போட்டு வைச்சாச்சா?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ எல்லாத்தையும் போட்டு மண்டைய குழப்பிக்காத"

இரண்டு மணிநேரம் முன்னாடி ஹோட்டலிலிருந்து ஆர்டர் குடுத்திருந்ததை வாங்கி வந்தேன். வாங்கி வந்ததை திறந்து பார்த்தால், வணக்க்க்க்கெம் என்று குழப்பங்கள் ஆஜர்..... சட்னியைக் காணோம். திரும்ப போய் வாங்க முடியாதென்று போன் செய்து வீட்டிற்கு கொண்டுவந்து குடுக்கச் சொன்னேன்.

நான்கு மணிக்கு என்று சொன்னால் தான் நாலரை மணிக்கு வருவார்கள் என்று பாட்டிக் கணக்கு போட்டு சொல்லி இருந்ததோம். நம்ம யோகத்திற்கு ஒரு நண்பர் கிளம்பிவிட்டதாக தொலைபேசியில் சொன்னார். வழியில் போக்குவரத்தினால் தாமதமாகுமென்று சீக்கிரமே கிளம்பிவிட்டிருக்கிறார். அதே போல் இன்னும் இரண்டு பேர் கிளம்பி இருக்கிறார்கள். எப்பிடியும் கார் நம்மூரை தொடுவதற்க்கு இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று அரக்க பரக்க மனைவியும் குழந்தையும் தயாரக ஆரம்பித்தார்கள். நான் சுப்பன் மாதிரி பனியனோடு தோட்டதிலிருந்த இருக்கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பன் தொலைபேசியில் வழி கேட்டான். அவன் வந்தடைந்திருந்த இடத்திலிருந்து இரண்டு நிமிஷம் தான் ஆகும் எங்கள் வீட்டிற்கு. அவ்வளவு தான் அவ்வை சண்முகி மாதிரி எல்லாத்தையும் அப்பிடியே போட்டுவிட்டு அரக்க பரக்க குழாயை மாட்டிக்கொண்டு வரவேற்பறை பெண் மாதிரி இன்முகத்தோடு வரவேற்றேன்.

விருந்தினர்கள் ஒவ்வொரு பேராக வர ஆரம்பித்தார்கள்.சட்னியும் வந்து மனதில் (தேங்காய்)பால் வார்த்தது. தமிழ்பட முடிவில் சிரிக்கற மாதிரி எல்லாரும் சேர்ந்து சிரிக்கிறார்களே...போட்டோ பிடித்து வைத்துக்கொள்வோமென்று காமிரா பையை பிரித்து பார்த்தால் இருக்கிறதென்று நினைத்திருந்த ப்லிமிக்கு பதிலாக வெறும் அட்டைப்பெட்டி தான் இருந்தது.
தூரத்திலிருந்து நெற்றிக்கண் பார்வை பார்துக்கொண்டிருந்த தங்கமணியை நான் திரும்பியே பார்க்கவில்லை(தங்கமணி மனைவி பெயரில்லை - சும்மா அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணியில் அப்பிடிக் கூப்பிடுவேன்). அப்புறம் காமிராவில் மிச்சமிருந்த ஆறு போட்டோக்களை வைத்துக்கொண்டு நான் ப்லிம் காட்டிக்கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் பக்கத்து கடைக்குச் சென்று வாங்கிவந்துவிட்டான்.

சரி கேக்கை வெட்டுவோம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க நான் எத்தனிக்கையில் வாங்கி வைத்திருந்த மெழுகுவர்த்திகளைக் காணோம். இதுவும் பக்கத்து நாட்டு சதிதான் என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி கண்ணன் தேவன் டீ விளம்பரம் மாதிரி காடு மலையெல்லாம் ஓடியே மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடி வாங்கி வந்து ஏற்றியதை ஏற்றிய உடனேயே என் செல்ல மகள் ஊதி அனைக்க அனைவரும் வெள்ளக்காரன் மாதிரி பாட்டு பாடி கைத்தட்டினோம்.

அப்புறமென்ன சாப்பாடு தான். சாப்பாடு மிக நன்றாக இருந்ததென்று எல்லாரும் வாயார புகழ என் மனைவி பிதாமகனில் வந்துட்டாய்யா கோடீஸ்வரி என்று சூர்யா சொல்லும் போது ஒரு அம்மணி பெருமையாய் புன்னகைப்பார்களே அதே மாதிரி என்னைப் பார்த்து புன்னகைக்க நான் பாசமலர் சிவாஜி மாதிரி ப்லீங்கா திரும்ப புன்னகைக்க...பார்ட்டி இனிதே நிறைவடைந்தது.

அந்த போட்டோ ப்லிம் மேட்டர தங்கமணி பார்ட்டி முடிந்து கேட்பாளென்று நினைத்தேன். என்னமோ மறந்துவிட்டாள். இதைப் படித்து பிறகு மண்டகப்படி நடந்தாலும் நடக்கும். ஈஷ்வரா...