Monday, May 17, 2004

வந்துட்டான்யா வந்துட்டான்யா..

for picture version click here

ஒரு வாரம் வேலை பெண்ட நிமிர்ந்துவிட்டது. வலைப்பூ..மற்றும் பல்வேறு வேலைகள். வலைப்பூ மிகவும் சுவாரசியமாக இருந்தது.(எனக்கு). நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். அனேகமாக அடுத்தவாரம் இந்தியா போவேன் (ஒரு வாரத்துக்கு). டிக்கெட் புக் செய்யவில்லை, லீவுக்கு சொல்லவில்லை. என் பெற்றோரைக் கூட்டி வருகிறேன். எப்போ கிளம்பவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கேட்கும் போது சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றையும் கடைசி வரை வைத்துக்கொள்வேன். "கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பா ஆனாலும் மாறவே இல்லைடா நீ..." எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டும் என்று இந்த முறையும் குடுத்து வைத்து இருக்கிறது. என்னமோ என் ராசி அப்பிடி. "ப்ளைட் பிடிக்கப் போகனும் சீக்கிரம் வெட்டுப்பா" என்று முதல் தரம் கிளம்ப்பும் போது முடிவெட்டும் கடையில் சொன்ன போது கடைக்காரன் நம்பவேஇல்லை. நான் இருந்த கோலம் அப்பிடி, அந்தக் கடையும் அப்பிடி. "விட்டா லண்டனுக்குப் போறேன்னு சொல்லுவியே"ன்னு ஒரு பார்வை தான் பார்த்தான். நான் பதிலே சொல்லவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில் கிளம்பினாலும் இதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது. இப்பிடித்தான் ஒரு தரம் இந்தியாவில் இருக்கும் போது மே மாசத்தில் அகமதாபாத் அக்கா வீட்டிற்கு பம்பாய் வழியாகச் செல்ல திட்டம் போட்டேன். கடைசி நேரத்தில் பம்பாய் வரை மட்டும் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடைக்க..சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று ஒருவருக்கும் தகவல் குடுக்காமல் அதில் ஏறி பம்பாய் அக்கா வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குப் போய் பெல் அடித்தால் திறக்கவே இல்லை. ஒரு வேளை தூங்குகிறார்கள் என்று அப்பிடி வாசலிலேயே தேவுடு காத்திருந்தேன். காலையில் தான் தகவல் கிடைத்தது. எல்லாரும் வெளியூருக்குப் போய்விட்டார்களென்று. "முஜே பச்சாவ் முஜே பச்சாவ் " என்று முழித்ததில் எதிர்த்த வீட்டில் "அய்யோ பாவம்" என்று குடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அகமதாபாத்துக்கு தட்டுத் தடுமாறி பஸ் பிடித்தேன். பஸ்ஸில் பாதிபேர் டிக்கெட் எடுக்கவில்லை. என்னைப் போல் கொஞ்ச பேர்கள் மட்டும் டிக்கெட் எடுத்திருந்தார்கள். மற்றவர்கள் கண்டெக்டர் கையில் பத்தோ இருபதோ அம்பதோ குடுத்தார்கள். அவரும் ஹிந்தியில் பல்லைக் காட்டிக் கொண்டு ஜேப்பில் போட்டுக் கொண்டுவிட்டார். முரடன் முத்துவாக இருந்த எல்லார் வாயிலும் பான் வேறு. நான் எதுக்கும் இருக்கட்டும் என்று பான் வாங்கிக் கொடுத்து ஒரு முத்துவை ஃபிரெண்ட் பிடித்துக் கொண்டேன். குடுத்த பான்னுக்கு கடைசி வரை விசுவாசமாக என்னோடு பாட்டெல்லாம் பாடிக்கொண்டு வந்தான் அவன். ஒரு வழியாக அகமதாபாத் வந்து சேர்ந்தேன். அகமதாபாத் அக்கா வீட்டில் இல்லாவிட்டால் இன்னொரு மாமா வீடு இருக்கிற தைரியம். நல்லவேளை எல்லாரும் இருந்தார்கள். ஆனால் எல்லாருக்கும் நான் வரப் போவது தெரிந்து இருந்தது. எங்கப்பா முன்னாடியே முன் ஜாக்கிரதையாக போன் பண்ணிச் சொல்லிருந்தார். பம்பாயில் ப்ளாப் ஆன கதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இந்த முறை என்னெல்லாம் கூத்து அடிக்கப் போகிறேன்று தெரியவில்லை. போகும் போது தனியாகப் போகிறேன். ஜாலி. வரும் போது அப்பா அம்மா வருகிறார்களென்பதால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுவேன். வரும் போதாவது பொறுப்பு வரட்டும். மெட்ராஸ் வழியா திருவனந்தபுரம் வழியா தெரியவில்லை. திருவனந்தபுரமாக இருந்தால் "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" தவிர வேறேதாவது மலையாளம் கத்துக் கொள்ளவேண்டும். ப்ளைட்டில் கேரளத்து ஏர்ஹோஸ்டஸிடம் கடலை போட வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts