Friday, May 07, 2004

தாமிரபரணித் தென்றல் - 3

For picture version of this post Part3a Part 3b
நாடக கான சபா- 2

பரிசு வாங்க மைக்கில் அழைத்த போது மேடைக்கு பின்புறம் நான் வாலை அவிழ்த்திருந்தேன். திரும்ப் வைக்க நேரமாகுமே என்று வாலில்லாத அனுமாராக மேடைக்குச் சென்று பரிசை வாங்க..எல்லாரும் ஒரே சிரிப்பு.

பரிசை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் எதிரே முன்வரிசையில் என் பள்ளித் தமிழாசிரியர். மிக மிக கண்டிப்பான வாத்தியார். பேரைச் சுருக்கி சோபா சோபா என்று தான் எல்லாரும் அவரைக் கூப்பிடுவார்கள். டி.ராஜேந்தர் ரசிகன். பையனுக்கு சிலம்பரசன் என்று பேர் வைத்திருந்தார். கம்பை வைத்துக்கொண்டு அடிப்பதற்கு முன்னால் பயங்கரமாக பில்டப் குடுப்பார். வாட்சைக் கழட்டிவிடுவார். கம்பு பலமாக இருக்கா என்று சேரில் அடித்து ஒருதரம் செக் பண்ணிப் பார்ப்பார். இந்த மிரட்டல்களிலேயே பல பையன்கள் மூச்சா போய்விடுவான்கள். நான் ரொம்ப அடிவாங்காமல் கொஞ்சம் தப்பித்துக்கொண்டிருந்தேன் அதுவரை.

அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு பலூனில் காத்து போன மாதிரி ஆகிவிட்டது. இவர் எங்கே இங்கே வந்தார் வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ஆயிற்றே என்று அனுமார் வேஷத்திலேயே சலாம் போட்டேன். புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டார். அதற்கப்புறம் அவர் இருக்காரென்று வெளியிலேயெ தலை காட்டவில்லை. அவர் போயாச்சு என்று சொன்ன அப்புறம் வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் முடிந்தது என்று நினைத்த தலைவலி திரும்ப ஆரம்பித்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் சொல்லிக்குடுத்து விட்டு ஆரம்பித்தார்.

"உங்கள்ல யாராவது அனுமாரப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்"

"அந்த அனுமார் நம்ம கிளாசுலதான் படிக்கிறார். டேன்ஸ்லாம் நல்லா ஆடுவார். யாரு தெரியுமா?"

பலத்த அமைதி நிலவியது.

"நான் யாருன்னு சொல்லமாட்டேன்....இப்போ அனுமாரே உங்க முன்னாடி வருவார் பாருங்க. வாங்க அனுமாரே வாங்க..."

நடிகர் அருண்பாண்டியன் வசனம் பேசுவது மாதிரி மிரட்டுகிறாரா இல்லை அன்போடு தான் அழைக்கிறாரா என்று புரியவில்லை எனக்கு.

நான் தான் அனுமாரென்று தெரிந்த முன்னால் உட்கார்திருந்த முந்திரிக் கொட்டைகள் ரெண்டு திரும்பிப் பார்த்தது.

வேறு வழியில்லை மெதுவாக முன்னால் போனேன்.

"வாலில்லா அனுமார், பரவால்ல...நேத்திக்கு அருமையாக ஆடின அனுமார்...இப்போ நம்மளுக்கெல்லாம் ஆடிக் காட்டப் போறார்"

"......."

"ஆடுங்க...அனுமாரே என்ன வெட்கம் நேத்திக்கு அங்கே எம்புட்டு பேர் இருந்தாங்க...இப்போ மட்டும் என்ன வெட்கம்?"

"இல்ல சார்...வேஷம்லாம் இல்ல..."

"அதான் பரவால்ல சொன்னேன்ல சும்மா ஆடுங்க..."

"அதுவந்து அங்க பாட்டெல்லாம் இருந்துது..."

"'பாட்டு' தானே...டேய் அந்த செய்யுள் புஸ்தகத்த கொண்டா..." - வாங்கிப் புரட்டினார்.

"ஆங்...தேசிங்குராஜன் கதை...அருமையான பாட்டு இதப் பாடறேன் ஆடுங்க அனுமாரே"

வேற வழியில்லை ...அதற்க்கு மேல் ஏதாவது சாக்கு சொன்னால் பிரம்பினால் பட்டையைக் கிளப்பிவிடுவாரோ என்று பயமாக இருந்தது.

தேசிங்குராஜன் கதைக்கு ஆடிய முதல் அனுமாராக நான் தான் இருக்கமுடியும். கிட்டத்தட்ட...ஆடுறா ராமா ஆடுறா ராமா மாதிரி இருந்தது. மூன்றாம் பிறைக் கமல் மாதிரி என்னலாமோ ஆடினேன். பையன்கள் விழுந்து விழுந்து சிரித்தான்கள்.

"டேய் நேத்திக்கு சொறிஞ்சு காட்டி அப்பிடியே பண்ணினயே?..."

"சார் அது சிவப்பு கலருக்காக குங்குமத்த குழைச்சு பூசியிருந்தாங்க அந்த அரிப்பில் சொறிஞ்சிருப்பேன் "

"பரவால்ல இங்கயும் சொறிஞ்சிக்கோ அப்போ தான் நல்ல தத்பரூபமாக இருக்கும் "

ஆஞ்சனேயா இவன் படுத்தற பாட்டுக்கு இவன நல்லா கவனி...இவன் அரிப்பெடுத்தே அழிஞ்சு போகனும் மனதார வேண்டிக்கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக நின்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை...இடத்துக்கு போகச் சொல்லிவிட்டார்.

அடுத்த வருடம் பள்ளியை விட்டுப் போய்விட்டார். அரிப்பெடுத்ததா தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மனதிலிருந்து அகலவே இல்லை...தேசிங்கு ராஜன் பாட்டும் தான்.

No comments:

Post a Comment

Related Posts