
இப்படி தெரு மாமிகளுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், கிச்சா புண்ணியத்தில் மேட்ச் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். கிச்சாவுக்கு வடக்குத் தெரு. நான் வடக்குத் தெருவிலும் அன்றாட கிரிக்கெட் விளையாடுவேன் என்பதால் ஒரு நாள் வடக்குத் தெரு Vs சன்னதித் தெரு மேட்ச்சுக்காக நூல் விட்டான். அன்றே சன்னதித் தெரு கிரிக்கெட் போர்ட்டை கூட்டியதில், எங்கள் டீமுக்கு இணையாக சொதப்புவதற்கு வடக்குத் தெரு டீமினால் மட்டும் தான் முடியுமென்றும் நாமும் மேட்சில் ஜெயித்தோம் என்று சொல்ல வேண்டுமென்றால் இதை விட்டால் சான்ஸே இல்லை என்றும் பந்துலு வீராவேசமாக பேசினான். பேசினதோடு இல்லாமல் என்றைக்கும் இல்லாத அதிசயமாக ஓப்பனிங் அக்கவுண்டாக இருபத்தைந்து பைசாவையும் பிச்சாத்து காசு என்று விட்டெறிந்து விட்டான்.
பந்துலுவே காசு குடுத்துவிட்டானே என்று கல்லா மட மடவென நிரம்பிவிட்டது. தெரு கவுன்டி மேட்சுக்கெல்லாம் பந்தயம் "அப்பு" பிராண்ட் ரப்பர் பந்து அல்லது இரண்டு ரூபாய். கிச்சா ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டான் இரண்டு ரூபாய் தான் பந்தயம் என்று. இந்தமாதிரி மேட்சுக்கெல்லாம் எல்லாம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாலு மணிக்குத் தான் முஹூர்த்தம். கிரவுண்டில் மாமிகளும் இல்லாததால் எங்களுக்கு பவுலிங் சரியாக வரவில்லை. வந்த பந்தை எல்லாம் கிச்சா அன்ட் கோ விளாசித் தள்ளியது. பெயரை மட்டும் 'பந்துலு' என்று வைத்துக்கொண்டு வந்த பந்தை எல்லாம் பந்துலு கோட்டைவிட்டான். கன்னுக்குட்டி கணேசன் எலிக்குட்டி மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டே இருந்தானே ஒழிய பந்தைப் பிடிக்கவே இல்லை. இந்தியாவை விட கேவலமாக தோத்துவிட்டு வந்தோம். கிச்சா அண்ட் கோ எங்கள் முன்னாடி பந்தய பணத்தைப் பங்கு பிரித்துக் கொண்டு கடலை மிட்டாய் வாங்கித் தின்றது. அப்புறம் கிச்சாக்கு கடலை மிட்டாய் அரிப்பு எடுக்கும் போதெல்லாம் எங்களை மேட்சுக்கு கூப்பிட ஆரம்பித்தான். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நாங்களும் கடலை மிட்டாய் சாப்பிட ஆரம்பித்தோம். இப்பிடி எங்கள் டீம் உள்ளூரில் பிரபலமாக ஆரம்பித்த போது ஒரு நாள் கல்லிடையிலிருந்து மேட்சுக்கு தூது வந்தது.
இங்கே கல்லிடையைப் பற்றி சொல்லிவிட வேண்டும். கல்லிடை குரங்குகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் எங்களுக்கெல்லாம் ஒரு வால் கம்மி தான். அங்கே சில தெருக்கள் நாலு தேர் ஓடுமளவுக்கு ரொம்ப அகலம். சில தெருக்களில் சைக்கிள் அகலத்தில் தான் ஆட்டோ ஓடவேண்டும். கொல்லைப்புறத்திலிருந்து ஓடி வந்தால் நிற்பதற்குள் எதிர்த்த வீட்டுக்குள் போய் விடுவோம். இப்படி பல்வேறு தரப்பட்ட தெருக்களில் விளையாடி கொரில்லா டிரெயினிங் எல்லாம் எடுத்திருப்பார்கள். கிரிக்கெட்டில் டகால்டி வேலைக்குப் பெயர் போனவர்கள். பாய் கடையில் ரொட்டி சால்னா(பரோட்டா) சாப்பிட்டுவிட்டு சினிமா போவதற்காக கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த கூட்டம் அது. விளையாட ஆரம்பித்தால் ரொட்டி சால்னா வெறி கண்ணில் தெரியும். ஆளுக்கு இத்தனை ரொட்டி என்று கணக்குப் போட்டுத் தான் பந்தயப் பணத்தையே நிர்ணயம் செய்வார்கள்.
எப்படியோ எங்களை மோப்பம் பிடித்து இரண்டு பொடியன்கள் தான் சைக்கிளில் முக்கால் பெடல் போட்டுக் கொண்டு மேட்ச் பேச வந்தார்கள். பசங்களைப் பார்த்ததும் பந்துலுக்கு உற்சாகம் தாளவில்லை. " நான் நோண்டி நோண்டி கேட்டாச்சு ..இவா தான் டீமில் சீனியராம்...பிஸ்கோத்து டீமாகத் தான் இருக்கும்னு நினைக்கறேன்...நாமும் எத்தனை நாள் தான் கடலை மிட்டாய் சாபிடுவது...சக்தி தியேட்டரில் உம்மாச்சிப் படம் போட்டிருக்கான்...எல்லாரும் டீமா சேர்ந்து பார்த்துட்டு வரலாம்"னு இருபது ரூபாய் பந்தயம் பேசிவிட்டான்.
மேட்ச் பெரிய கிரவுண்டில் காலை பதினொன்றுக்கு என்று பேச்சு. காலையில் வெய்யிலில் எல்லாம் எங்கள் வீட்டில் மாமா மேட்சுக்கு விட மாட்டார். அந்தக் காலத்தில் தூக்குச் சட்டியில் புளியோதரை, தயிர் சாதம்மெல்லாம் கட்டிக் கொண்டு வயக்காட்டில் எப்படி கிரிக்கெட் விளையாடினார் என்று சிலாகித்து சொல்லிவிட்டு "கிரிக்கெட்டை விட படிப்பு தான் நமக்கு முக்யம்" என்று மாரல் ஆஃப் த ஸ்டோரி ஒன்று சொல்லிவிட்டு படிக்கப் போகச் சொல்லிவிடுவார். அதனால் நானும் ட்யூஷன் ஸ்பெஷல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி மேட்ச்சுக்குப் போவேன் (நல்லவேளை மாமா ப்ளாக் படிக்க மாட்டார்).
மேட்ச் தினத்தன்று பந்துலுவும் மொட்டை மணியும் திகிலோடு வந்தார்கள். "டேய் மோசம் போய்ட்டோம்டா...மேட்ச் பேச வந்தது தான் பொடிப் பசங்க...இப்ப மேட்சுக்கு எல்லாம் மாக்கான் மாக்கானானா வந்திருக்காங்கடா" என்று ஓலை வாசித்தார்கள். முக்கால் பெடல் போட்டு வந்த பொடியர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே அவுட் சோர்ஸிங் செய்யப்பட்டிருந்தார்கள். கன்னுக்குட்டி பிடிப்பவனையும், அஜீத் ஹிட் படம் குடுக்கற மாதிரி விளையாடும் காட்டான் கணேசனையும் வைத்துக் கொண்டு விளையாடுவதை விட இருபது ரூபாயை தட்டில் வைத்து தட்சிணையாக கொடுத்துவிட்டு வந்துவிடலாம். அவர்களை கிரவுண்டுக்குப் போகச் சொல்லிவிட்டு நாங்களும் அவுட் சோர்ஸிங்கை ஆரம்பித்தோம். கையில் காலில் விழுந்து கிச்சா டீமிலிருந்து நல்லதாக நாலு பேரையும், இன்னும் வேறு ஒரு டீமிலிருந்து நாலு பேரையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு போனோம்.
ரொட்டி சால்னா வெறிக்கு முன்னால் ஏதாவது நிற்க முடியுமா? கல்லிடை காட்டான்கள் பொளந்து கட்டி விட்டான்கள். இருவத்தைந்து ஓவரில் நூற்றி அறுபது ரன்கள் எடுக்கவேண்டும். கிச்சாக்கு டகால்டி வேலையில் நிறைய பரிச்சயம் உண்டு. அவனை ஸ்கோரராகப் போட்டோம். இந்த மாதிரி மேட்சில் பேட்டிங் ஸைட்டிலிருந்து தான் அம்பயர் என்பது வழக்கம். ரொம்ப நடுத்தரம் மாதிரி நடிக்கும் இரண்டு பேர்கள் தான் இருப்பார்கள். க்ளீன் பவுல்ட்டுக்கு மட்டும் தான் அவுட் என்று கொஞ்சம் வெவரமாக உளத்த தெரிந்திருக்கவேண்டும். கிச்சா டீமில் இது மாதிரி ஒருத்தன் உண்டு. என்ன கத்தி அப்பீல் கேட்டாலும் அசைந்தே குடுக்கமாட்டான். விடிய விடிய கதை கேட்டு சித்திக்கு சரத்குமார் சித்தப்பா என்று அசால்டாக வாதாடுவான். அவனையும் அம்பயராகப் போட்டோம். காட்டான் கணேசன் அஜீத் நாக்கைச் சுழட்டி பேசுவது மாதிரி பேட்டை சுழற்றி கொஞ்சம் ரன்கள் குவித்தான். என்னையும் சேர்த்து மற்றவர்களும் சுமாராக விளையாடினோம். கிச்சா ஸ்கோரில் அருமையாக விளையாடினான். காட்டான்களும் நிறைய எக்ஸ்ட்ராஸ் குடுக்க கடைசி ஓவரில் ஒரு விக்கட் மிச்சம் இருக்க...ஒரு எல்.பி.டபிள்யூவிற்கு ஆக்ரோஷமான அப்பீல். எதற்கும் அசையாத நம்ம அம்பயர் ஏதோ நியாபகத்தில் ஒரு விரல் கிருஷ்ணாராவாகி அவுட் என்று நெற்றி வரை கொண்டுவந்து விட்டான். சக்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த "உயரான் ஒருமிக்கான்" (மலையாள கலர்) உந்துதலில் எங்கள் டீம் "நாட் அவுட்" என்று உயிரை விட்டு எதிர் குரல் குடுக்க, அம்பயர் முழித்துக் கொண்டான். என்ன சொல்லப் போகிறான் என்று எல்லாரும் அவனையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க... உச்சா வருது என்பது போல் வைத்துக்க்கொண்டிருந்த விரலுடன் "ஒன் மோர் பால் டு கோ" என்றானே பார்ப்போம். அதற்கப்புறமும் அந்த மேட்சில் ஜெயிக்காமல் இருப்போமா?
"உயரான் ஒருமிக்கான்" படம் போவதற்கு எனக்கு அப்போது அவ்வளவு தில் இல்லை . காட்டான் கணேசன் தலமையில் வானரப் படை போய் வந்தது. நான் டியூஷன் போகும் "அழகர் ராஜன்" சாரும் உயரான் ஒருமிக்கானை காண வந்திருந்தார் என்று மொட்டை மணி சொன்னான். அவரிடம் கேட்க எனக்கு தைரியமில்லாதலால் நானும் அதை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.ஆனால் அந்த அம்பயர் வெறும் ராஜாவிலிருந்து "அம்பயர் ராஜா"வாகி சுற்றுவட்டாரத்தில் மிக பிரபலாமாக ஆகிவிட்டான். எந்த மேட்சானலும் அவனை கூட்டிப் போக சைக்கிளில் ஆள் வரும்.
பி.கு - இந்த சம்பவத்தை நான் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் ஆங்கிலத்தில் பதிந்திருந்தேன். உங்களில் சிலர் படித்திருக்கலாம்.
இந்தத் தொடருக்குப் பொருத்தமான படத்தை எங்கிருந்தோ சுட்டு அனுப்பிவைத்த லண்டன்காரருக்கு நன்றி