Tuesday, November 05, 2013

தீபாவளி

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. ஆறு மாதம் கழித்து ஊருக்குப் போகப் போகிறோம் என்பதை விட, எம்.எஸ்.ஸியை பாதியில் விட்டுவிட்டு வந்த  இரண்டுவருடங்கள் படித்த கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிகிறதே என்பதை விட, அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பஸ்ஸில் தீபாவளிக்கு ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணமே முன்னோங்கி நிறைந்திருந்தது. காம்பஸ் இண்டர்வியூக்களுக்குத் தயாராக வேண்டுமே, வேலை கிடைக்குமா என்ற மனக் கிலேசங்களை எல்லாம் தீபாவளி சற்று ஓரம் தள்ளிவிட்டிருந்தது. பஸ் ரிசர்வேஷன் திறந்த முதல் நாளே பாரிஸ் கார்னரில் க்யூவில் காத்திருந்து வாங்கிய டிக்கெட் பத்திரமாய் பர்ஸில் இருந்தது. இரண்டே மணிநேரம் தான் எல்லா டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. தாமிரபரணித் தென்றல் பஸ் அப்படி. கப்பல் மாதிரி சொகுசாய் மிதந்து போய் காலை ஆறு மணிக்கெல்லாம் திருநெல்வேலி வந்துவிடும்.

அப்போதெல்லாம் என்.ஐ.ஐ.டியில் இரண்டு வருட படிப்பு முடியும் போது ஒரு ப்ராஜெக்ட் செய்து அதன் தீஸிஸ் சமர்பிக்கவேண்டும். அத்தோடு யாரோ மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு வந்துவிடக் கூடாது என்று அது சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிகல் இண்டர்வியூவும் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். என்னுடன் படித்த நண்பனும் நானும் காத்திருந்தோம்.  நண்பன் அப்போது டி.டி.பி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தான்.  நான் மட்டுமே வெட்டி ஆபிஸர். "நான் ஆபிஸில் பாதி நாள் தான் லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு அதுனால நான் முதல்ல முடிச்சிடறேனே, ஆபிஸுக்கு சீக்கிரம் போக வசதியாய் இருக்கும்" என்று நண்பன் முன்னமே சொல்லி வைத்திருந்தான்.


அன்றைக்கு எங்களுக்கு வாய்த்திருந்த எக்ஸாமினர் ரொம்ப டெக்னிக்கல் என்று கேள்விப் பட்டிருந்தோம். அது எப்படி செஞ்சே இது எப்படி எழுதின என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைவார் என்று கேள்விப் பட்டிருந்ததால்
 மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சோதித்துக் கொண்டிருந்தோம். மணி பத்தரை -  ஆளை இன்னும் காணவில்லை. பதினொன்று ஆகி பதினொன்றரை ஆன போது நண்பனுக்கு முகம் வெளிறி விட்டது. "டேய் நான் இன்னிக்கு கண்டிப்பா போயே ஆகனும்டா இல்லைன்னா வேலை போயிடும்டா...நான் என்னோட அப்பாயிண்ட்மெண்டை இன்னொரு நாளைக்கு மாத்திக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.  எனக்கு இதை முடித்து விட்டு ஊருக்குப் போனால் இரண்டு வாரம் இருந்துவிட்டு வருவதாய் ப்ளான். பின்னாலிருந்து கணக்கு போட்டு நாலு மணிக்கு முடிந்தால் கூட போதும் என்று காக்க ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டு மணிக்கு ஆய்வாளர் அவசர அவசரமாய் அவரது கேபினுக்கு ஏதோ ஃபைலும் கையுமாய் வந்தார். கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தவருக்கு, என் கையிலிருந்த ப்ராஜெக்ட் பைலை பார்த்ததும் தான் என்னுடைய அப்பாயிண்ட்மெண்டே நியாபகத்துக்கு வந்தது. "ஓ மை காட், ஐ ஆம் டோட்டலி சாரி, இன்றைக்கு ஒரு மிக முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் மறந்தே விட்டேன், இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் முடிந்துவிடும், காத்திருக்கிறாயா.?" என்று கேட்டார். வேகமாய் தலையை ஆட்டினேன்.

மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ரிப்போர்ட்டை புரட்ட ஆரம்பித்தேன். அவர் திரும்ப வருவதற்கு மணி இரண்டாகிவிட்டது. "வெரி வெரி சாரி, மீட்டிங் முடிய ரொம்ப லேட்டாகிவிட்டது. நீ சாப்பிட்டாயா " என்று கேட்க, என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "நீ போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடு நானும் சாப்பிட்டு அரை மணியில் ரெடியாகிவிடுகிறேன் முடித்துவிடலாம்" என்று தீர்பெழுதிவிட்டார். போச்சு... பெட்டியை வேறு எடுத்து வரவில்லையே வீட்டுக்குப் போய்விட்டு 11A பிடித்து பாரிஸ் கார்னர் போவதற்குள் தாவு தீர்ந்துவிடுமே என்று கவலையாகிவிட்டது. சும்மா கீழே போய் ஒரு டீ குடித்துவிட்டு பத்து நிமிஷத்தில் வந்துவிட்டேன். உள்ளே ஆய்வாளர் காரியரை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வந்ததை கண்ணாடி கதவு வழியாக நிமிர்ந்து பார்த்து உள்ளே என்னை அழைத்த போது மணி இரண்டு ஐம்பது. சாப்பிட்ட சாம்பார் மணக்க மணக்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தவர், சம்பிரதாயமாக சாப்பிடவில்லையா என்று கேட்டார். பசி காதடைத்து இல்லை பரவாயில்ல நீங்க கேட்டதே வயிறு நிறைந்து விட்டது என்ற ரீதிக்கு ஏதோ உளறினேன். அப்புறம் நேராக டெனிக்கல் கேள்விகளுக்குப் போய்விட்டார். மொத்தம் பத்து கேள்விகள் தான் கேட்டிருப்பார். திடீரென்று நிமிர்ந்து உன்னுடைய எல்லா மார்க் சர்டிபிகேட்ஸும் கொண்டு வந்திருக்கிறாயா என்று கேட்டார். நல்லவேளையாக முழு ஜாதகத்தையும் ஃபைலில் வைத்திருந்ததால் தலையாட்டினேன். காலேஜு நாட்களுக்கு நேர் எதிராய் இங்கே எல்லா செமஸ்டரிலும் மார்க்குகள் முத்து முத்தாய் தொன்னூறுக்குக் குறையாமல் வேறு வாங்கியிருந்தேன்

ஒரு வெள்ளைத் தாளைக் குடுத்து தொன்னூறுகளில் மிகவும் பிரசித்தமான லின்க்ட் லிஸ்ட் டிசிஷன் ட்ரீ அல்காரிதத்தை சி++ல் எழுதச் சொன்னார். மட மடவென்று எழுதினேன். உற்றுப் பார்ததவர், இண்டர்வியூ மாதிரி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த அரை மணியில் எழுந்து போனவர், பத்து நிமிடத்தில் திரும்ப வந்து என்னை இன்னொரு அறைக்கு கூட்டிப் போனார். அங்கே இன்னும் இரண்டு ஆய்வாளகள் உட்கார்ந்திருக்க, என்னை நடுவில் ஒரு சீட்டில் உட்காரச்சொன்ன தொனியிலேயே எனக்கு அது காம்பஸ் இண்டர்வியூ என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை பயம் படபடப்பெல்லாம் காத்திருக்கும் போது தான் வரும், அவர்கள் எனக்கு பயப்பட, பட படக்க சந்தர்ப்பமே அளிக்கவில்லை. பிட்டத்தை நாற்காலில் சாய்ப்பதற்குள்ளாகவே கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஒரு கணக்கு குடுத்து அதை c++ ப்ரோக்ராமில்  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே முன்னால் எழுதிய ப்ரோக்ராமை சரி பார்க்க ஆரம்பித்தார்கள். மார்க் ஷீட்டில் வேறு ஒரு தட்டி ஏதோ சங்கேதம் காண்பித்தார். நான் ப்ரோக்ராம் எழுதிக் குடுக்கஅதை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு என்னையே திருத்தச் சொன்னார்கள். சும்மா ரெண்டு மூனு சிண்டெக்ஸ் தவறுகளை மட்டும் பென்சிலால் சுழித்து திரும்ப நீட்டினேன். கம்ப்யூட்டரில் ஏத்தியிருந்தால் முஹே பச்சாவ் முஜே பச்சாவ் என்று கதறியிருக்கும். இரண்டு கம்பெனி பெயர்களை சொல்லி எந்த மாதிரி வாய்ப்பை எடுத்துக்கொள்வாய் என்று கேட்டபோது அர்விந்த் சாமி மாதிரி நான் ரோசாவைத் தான் கட்டிப்பேன் என்று பதில் சொன்னேன். ஏன் என்று கேட்ட போது ஏன்னா எனக்கு ரோசாவத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்பதையும் பதவிசாய் டாண்ணு சொல்லிவிட்டேன்.


சிரித்துக் கொண்டே சரி எதுக்கும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு இங்க வந்துடுன்னு சொன்ன போது எனக்குப் பகீரென்றது. இன்னும் ஒரு மணிநேரத்துல நான் தாமிரபரணித் தென்றல்ல திருநெல்வேலி போறேன் சார்னு டிக்கட்டை காண்பித்த போது ஒருவர் என் தோளை அணைத்து ரூமை விட்டு வெளியே கூட்டிக் கொண்டுவந்து ராசா உனக்கு வேலை கிடைச்சாச்சு பொண்ணு வேற யாருமில்ல உனக்குப் பிடிச்ச ரோசாவே தான் என்ற போதும் கூட விஷயத்தை உணராமல், சார் நாளக்கழிச்சு தீபாவளி சார்,  இதோ போய்ட்டு இப்படிங்கிறதுக்குள்ள வந்துடறேன், ரோசா அதுவரைக்கும் காத்திருக்க மாட்டாளா என்று தான் கேட்டேன். யோவ் என்னைய்யா பேசற நாளைக்கு காலைல நீ வேலைக்கு சேர்ற சந்தோஷப் படுய்யா என்று அவர் ஒரு அதட்டு போட்ட போது தான் எனக்கு விஷயம் உரைக்க ஆரம்பித்தது.

அப்புறம் அரக்க பரக்க பாரிஸ் கார்னர் போய் கஷ்டப்பட்டு வாங்கிய டிக்கெட்டை விற்க நாய் படாத பாடு பட்டதும், கண்டக்டர் அந்த டிக்கெட்டை ஆட்டையைப் போட பார்த்ததும் அப்புறம் வேறு ஒரு தெகிரியமான அம்மணி நீ குடு ராசா நான் கண்டெக்டர பார்த்துக்கிறேன்னு வாங்கிக் கொண்டதும், ஒன்பது மணிக்கு மேல் எஸ்.டி.டி சார்ஜ் கம்மியானதும் ஊருக்கு ஃபோன் போட்டு தீபாவளிக்கு வரவில்லை என்று தகவல் சொன்னதும், அவர்கள் ஏமாற்றமானதும் அப்புறம் வேலை கிடைச்சாச்சு என்று சொன்னதும் அவர்கள் சந்தோஷப்பட்டதும், நான் ரோசாவோடு தீபாவளி கொண்டாடியதும் படம் முடிந்து டைட்டில் கார்டு போடும் போது சைட்டுல குட்டியாய் ஓட வேண்டிய சீன்கள்.

மெசேஜ் என்னான்னா....ஆயிரம் தீபாவளி வரலாம் ஆனால் எனக்கு அந்த தீபாவளி தான் பொங்கல் அதாவது சர்கரைப் பொங்கல் !!!

12 comments:

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்.தீவாளிக்கு பொங்கலா.

K Sivaranjini said...

Linked list decision tree a....sollatheenga....enaku ippovey vayithukulla orey pattampoochiya parakuthu.....Intha program matum final practicals la vanthirakoodathunu oorla irukara ella sami kittayum venditu povom....
Enaku oru doubt.....neenga M.Sc. NIIT la padichengala...or M.Sc a pathila discontinue panitu GNIIT padichengala...????? (NIIT la M.Sc. lam unda enna???)....Neenga solra kala kattatha partha ungaluku ennado sithappa vayasu irukum pola...... Annan la thappa nenachiten.....

சுசி said...

ஓ...முதல் முறையாய் வேலைக்கு சேர்ந்த தலைதீபாவளியா ! ரோசாவ கட்டின ராசா வாழ்க !

Deekshanya said...

chancey illa bro. pinnitinga, made me nostalgic about my first interview and project viva as well. loved reading the post. write more...

anbudan
Deekshanya

Unknown said...

Super! Almost every IT professional come across this situation

Sara Suresh said...

// ஒன்பது மணிக்கு மேல் எஸ்.டி.டி சார்ஜ் கம்மியானதும் //
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பது மறந்தே போய்விட்டது...........

Anonymous said...

SuperO Super dubukku. Romba suspenseful aa kondu poyi, superaa mudichiteenga.

Bingo said...

//11A bus to paris
STD after 9
Visiting house for diwali
//

Very nostalgic

Nat Sriram said...

அட்டகாசம்ய்யா :D

butterfly Surya said...

எப்போதும் நகைச்சுவையில் ஒரு துள்ளல். எழுத்தில் ஒரு அள்ளல். அட்டகாசம்.

Dubukku said...

அமுதா - ஆமாங்க எனக்கு அந்த தீபாவளி அப்படித்தான் :)))

சிவரஞ்சனி - ஹா ஹா இல்லீங்க...நான் எம்.எஸ்.ஸிய காலேஜ்ல டிஸ்கண்டினியூ செய்துவிட்டு NIIT-ல GNIIT படிச்சேன் :)) சித்தப்பாவா...அவ்வ்வ்வ்வ்வ் ஏங்க ஏங்க ஏங்க...?

தானைத் தலைவி - :)) ஆமாங்க மொத ஸ்பெஷல் தீபாவளி. நன்றிங்கோவ்

தீக்‌ஷன்யா - மிக்க நன்றி மேடம் :)

ஷீபா - உண்மை தான் ஐ.டில வேலைப் பார்க்கும் எல்லோருக்குமே பெரும்பாலும் நடந்திருக்கக் கூடும். மிக்க நன்றி

சாரா - ஆமாங்க...அப்போல்லாம் எஸ்.டி.டி பூத்ல கூட்டம் வேறு அள்ளும்

அனானி - மிக்க நன்றிங்கோவ்....பெயர் போடலாமே (சும்மா டம்மி பெயராவது :) )

பிங்கோ - :))) ஆமாங்க மிக்க நன்றி

நட்ராஜ் - மிக்க நன்றிங்கோவ்

சூர்யா - வாங்க சாரே ரொம்ப நாளாச்சு உங்களப் பார்த்து. நலமா. மிக்க நன்றிங்கோவ் உங்க பாராட்டுக்கு.

Anonymous said...

Enjoyed reading

Post a Comment

Related Posts