Monday, September 26, 2011

சினிமாவுக்குப் போன சித்தாளு

ஒரு ஊரில் ஒரு சித்தாளு இருந்தானாம். அவனுக்கு சினிமா பைத்தியமாம். மலை நதி காடு கரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தில அம்சமாய் கையைக் கட்டிக் கொண்டோ, கண்ணாடியைப் போட்டுக் கொண்டோ சோலோ சோலையப்பனாய் ஒரு போட்டோ எடுத்து கையோடு பேஸ்புக் ஃப்ரொபைல் பிக்கசராய் போடும் ஒரு காலக் கட்டாயம் இல்லாத காலத்தில், “எனக்கு நெஞ்சு வலிக்கிறது,குப்புன்னு வியர்க்கிறது,யாரோ கூப்பிடுகிறார்கள் #heartattack" என்று வைகுந்த வேளையிலும் டிவிட்டர் அப்டேட் குடுக்கிற மஹானுபாவர்கள் தோன்றாத ஒரு காலக் கட்டத்திலும் நம்ம சித்தாளு சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறான். சித்தாளுவுக்கும் தெருவில் இருக்கும் அவன் நண்பனுக்கும் சினிமா அலைவரிசை அலாதி. ஸ்கூலில் இருந்து வரும் போது சனிக்கிழமை போஸ்டரைப் பார்த்தால், இருவரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். டீல் டன் அண்ட் டஸ்டட்.

சினிமா பார்க்க சித்தாளு வீட்டில் செய்யும் அஜால் குஜால் வேலைகள் இந்த பதிவின் சாராம்சமில்லை என்பதால், சினிமா யாத்திரையை தொடங்கும் போது சித்தாளு பையில் ஒரு ரூபாய் கிணு கிணுத்துக் கொண்டிருக்கும். 75 பைசாவிற்கு பெஞ்ச் டிக்கட் வாங்கிக் கொண்டு 25 பைசாவிற்கு ஒரு நீள லக்ஸுரி மைசுர் பாகும் வாங்கிக் கொண்டு தூண்கள் எதுவும் மறைக்காத, ஒரு கையை ஊன்றிக் கொண்டு பார்க்க ஏதுவாய் இருக்கும் சின்ன திண்டு முன்னால் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்த நாட்கள் - சித்தாளுவின் எண்ணப் புத்தகத்தில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டவை.
 சித்தாளுவும் நண்பனும் சினிமா பார்க்கும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். சினிமா என்று இறங்கிவிட்டால் இடைவேளையோ சுபமோ போட்டால் தான் சித்தாளுவிற்கும் நண்பனுக்கும் சமூக பிரக்ஞையே வரும்.அதுவரை வாயில் கரையும் மைசூர்பாகு கூட தெரியாத அளவிற்கு சினிமாவை “பே”என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

”யெக்கா திருநாகேஸ்வரம் போய் பாம்புக்கு பால் வைச்சா தோஷம் குறையுமாம்க்கா..கே.ஆர் விஜயா அந்த படத்துல சொன்னாங்கல்லா” “மாப்ள..செத்த காத்தாட பீடி இழுத்துட்டு வந்துடறேன்..இந்த ஒப்ப்பாரி முடிஞ்சு செயமாலினி டான்ஸ் வந்துடிச்சினா விசில் சத்தம் குடுறா நல்லா இருப்ப, காசு அழுததே அதுக்கு தான்” போன்ற சக சித்தாளுக்களின் சம்சாரிப்புகள் எல்லாம் காதில் விழவே செய்யாது. சினிமா பார்க்கும் சுகானுபவத்தில் எந்த குறுக்கீடுகளும் வர இயாலத காலம் அது.

ஆனால் காலக் கிரயத்தில் சித்தாளுவின் சினிமா குணாதியசங்கள் மாறியே போயின. மாட்னி ஷோவில் பீடி வலிக்கப் போகும் சேட்டன்கள் கதவை ஒழுங்காக சாத்தாமல் சூரிய வெளிச்சம் திரையில் விழும் போது கூட ”யோவ் கதவ மூடுய்யா” என்று அநீதியை எதிர்த்து குரல் குடுக்காத சித்தாளு வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான். பகலில் பார்க்கும் படத்திற்கே வீட்டில் உள்ளவர்கள் வெளிச்சம் தெரியாமல் தடுக்கி விழுந்துவிடுவோமோ என்று தவழ்ந்து செல்லும் நிலையில் ராத்திரி படம் போட்டால் கேட்கவே வேண்டாம். படங்களில் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் காட்சிகளில் எங்கேயோ காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒரு பாட்டியிடம் யாரோ பேரம் பேசி வாங்கும் கேட்கவே கேட்காத டயலாக் எல்லாம் கேட்க வேண்டும் என்று அராஜகம் புரிய ஆரம்பித்தான். டயலாக் புரியாவிட்டால் ரீவைண்ட் செய்து, சவுண்டைக் கூட்டி - என்று சித்தாளு செய்யும் களேபரத்தில் இரண்டரை மணி நேர படங்கள் எல்லாம் நாலரை மணி நேர படங்களாய் ஓட ஆரம்பித்தன. “டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” என்று சித்தாளுவின் தங்கமணி அன்பாய் எடுத்து சொல்லியும் அடங்காமல் இரண்டரை  to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி அப்புறம் சித்தாளு வீட்டில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

சித்தாளுவின் வாழ்க்கையில் அன்லிமிட்டட் சினிமா கார்டு வரப்பிரசாதமாய் வர, வழக்கமாய் தியேட்டர் போகும் சனிக்கிழமை ராமசாமியாய் அவதாரமெடுத்தான். பேக் டு பேக் இரண்டு படங்கள் தொடர்ச்சியாய் பார்ப்பது சித்தாளுவின் ரெகுலர் தீர சாகசங்களில் ஒன்று. “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்” - என்று சீன் போடுவது சித்தாளுவிற்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதும் குடும்பத்தோடு போகும் போது படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே காரை பார்க் செய்து, டிக்கெட் கிழிப்பவரை நச்சரித்து முதல் ஆளாய் தியேட்டருக்குள் போவது சித்தாளுவின் தங்கமணிக்கு சுத்தமாய் பிடிக்காது. உள்ளே போய் பத்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கடைசியில் பதினொன்றாவதாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உட்காரும் போது தங்கமணி நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்துவிடுவதற்கு எல்லா முயற்சியும் செய்வார். கேட்டால் படம் பார்ப்பதற்கு பங்கம் வராமல் இருக்க சித்தாளு ஸ்ட்ராடிஜிக்காய் இடம் பிடிக்கிறாராமாம்.


தியேட்டருக்குள் பீடி வலிக்க தடை வந்துவிட்டதால் பீடி தொல்லை இல்லாமல் இருந்தாலும் சித்தாளுவிற்கு சற்றும் பிடிக்காத வேறு பல தொல்லைகள் உண்டு. லேட்டாய் வருவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீனைப் பார்க்காமல் படம் ஆரம்பிச்சாச்சா என்று கேட்கும் லேட் மஹாதேவன்கள், கூட்டி வரும் கேர்ல் பிரண்டுக்கு ஏகத்துக்கு பப்ளிக்காய் லவ்வைக் காட்டி எந்தப் படத்தைப் பார்ப்பது என்று சித்தாளுவை குழப்பத்திலாழ்த்தும் முன் சீட் முத்தண்ணாக்கள், தியேட்டர் காரன் லைட்டை அணைத்தாலும் மொபைலில் டெக்ஸ்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று பளீர் என்று முகத்தில் அடிக்கும் மொபல் ஸ்கீரின் வெளிச்சத்தைக் காட்டும் “செல்”வராகவன்கள் என்று இன்றளவிலும் சித்தாளுவிற்கு பல சத்திய சோதனைகள். இருந்தாலும் மனம் தளராத மெகா சீரியல் நாயகி மாதிரி சித்தாளு சினிமா போவது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் குழைந்தகள் ஸ்பெஷல் ஷோவிற்கு ஒரு முறை போய் “எனக்கு லாரா கூட உட்காரணும்” “அங்க போகாத;இந்த மாமா மேல நிக்காத” என்று குழ்ந்தைகளும் அவர்கள் அப்பா அம்மாக்களும் விடும் சவுண்டில், சினிமாவுக்கு போன சித்தாளு சந்தைக்குப் போன சித்தாளு ஆகிவிட்டான். கழுத காசு போனாலும் போகுது இனிமே முழு டிக்கெட் எடுத்து ஜெனெரல் ஷோவுக்குத் தான் குழ்ந்தைகளை கூட்டிப் போவது என்று முடிவாய் இருக்கிறான் சித்தாளு.  ஏன் என்றால் சித்தாளுவிற்கு சினிமா பார்க்கும் போது சத்தமே வரக்கூடாது. முறுக்கு தின்று கொண்டே பார்த்தால் அந்த சத்தத்தில் டயலாக் கேட்காது என்பதனால் சித்தாளு வீட்டில் சினிமா பார்க்கும் போது முறுக்கு,சீடைக்கெல்லாம் தடை. சினிமாவிற்க்கு போகும் போதும் கருக்கு முருக்குன்னு சத்தம் வரும் திண்பண்டங்கள் வாங்க மாட்டார் சித்தாளு. அதற்காக சித்தாளு கொடுமைகாரன் அல்ல.சத்தமே வராத அதிரசம், லட்டு, ஜாங்கிரி போன்றவை ஓக்கே.

“போய்யா போ...இனிமே உங்க கூட நாங்க படமே வரதா இல்லை” என்று வீட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றியும் சித்தாளு செய்யும் அலம்பல்கள் குறைந்த பாடில்லை. ஏன்னா பாருங்க “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்”

31 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்! கொஞ்சம் சரி பார்க்கக் கூடாதா? நம்ம ஊர் பேரை நாசம் பண்ணிடுவ போல இருக்கே.

Porkodi (பொற்கொடி) said...

ஹையா நான் தான் போணி.. இதை தான் தானமா குடுத்த மாட்டை பல்லை பிடிச்சு பாக்குறதுன்னு என் பாட்டி சொல்லுவாங்க.. குடுக்கற காசுக்கு தான் ஃபினாயில் கிடைக்கும் என்பதை இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்ட சித்தாளை நினைத்தால் பெருமை பொங்குகிறது. எனக்கு இன்னும் புரிந்த பாடில்லை.

Porkodi (பொற்கொடி) said...

enna panradhu postai padikkum podhu naan thaan boni, adhalal, ipovum naan thaan boni.

Porkodi (பொற்கொடி) said...

கொத்தனாரும் 'சித்தாள்' ஆகிட்டாரு.. தல‌ டுபுக்கு நேரம் எடுத்து ஃப்ரீயா நமக்கெல்லாம் எழுதறதே பெரிய்ய விஷயம்.. அப்புறம் அவர் பாட்டுக்கு பூட்டு போட்டுட போறாரு.. :)

PADMANABAN said...

காலம் மாறினாலும், சித்தாளு தியேட்டரிலும் வீட்டிலும் செய்யும் அலப்பறை அட்டகாசம் மாறவில்லை ... செய மாலினி , கே. ஆர். விஜயா..... அந்த கற்பனையிலும் கரையா மைசூர் பாக்கு ..வலிக்கும் பீடி ...... இப்படி கொட்டாய்குள்ளேயே கூட்டிட்டு போய்ட்டிங்க ......

Sh... said...

சூப்பர். ரொம்ப நாள் கழிச்சு...

sriram said...

கலக்கல் தல..
சித்தாளு படம் எடுத்த கதையைச் சொன்னா இன்னும் சோக்கா இருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Subhashini said...

Hi Hi Sithaalu padam nadicha kathai innum vera yethavathu irukkaa... super thalai.......
anbudan
Subha

சேலம் தேவா said...

தல..லைட்டா உங்க வாழ்க்கை வரலாறா..?! :)

ILA (a) இளா said...

ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடுவால நடுவால சில மேகனைகளும் வந்துடறாங்க :)

bandhu said...

//ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடுவால நடுவால சில மேகனைகளும் வந்துடறாங்க :)//
ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிவிட்டீர்கள் போல இருக்கிறது.. மேனகை, மேகனை என்று ஆகிவிட்டாளே!

munimma said...

enakku therinchu, rendu paer intha levelku cp-ya irukkaanga. onnu nee, innonu bbthots.

R. Jagannathan said...

இந்த அலம்பல் பண்ணுபவர்களை எங்கள் ஊர் தியேட்டர்களிலும் பார்த்திருக்கிறேன்! நாங்கள் அப்பவுடன் சினிமாவுக்குப் போனால் முதல் ரீல் முடிந்து சிறு இடைவேளை விட்டிருக்கும். படம் ஆரம்பிக்கவில்லையென்று சந்தோஷமாக இருந்தால் திடீரென்று இரண்டாம் ரீல் ஆரம்பித்து ஒன்றும் புரியாது! சமயத்தில் படமே அன்று மாற்றியிருப்பார்கள். சின்ன வயசு சினிமா சந்தோஷம். - ஜெ.

Deekshanya said...

typical dubukku post..happy to see your new post!
ROTFL at many places:)//வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான்// hee hee
Loved this one as well//டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” //


Class!
Cheers
Deeksh

Porkodi said...

@Deekshanya: ipolam blog panradhu illaiya? India or US these days? please get back to regular blogging about your kutti, job, anything.. (adha yaaru solradhu nu ehdir kelvi kekkapdaadhu!)

தக்குடு said...

இப்படி தவம் மாதிரி படம் பார்த்து வளர்ரதால தான் நம்ப சித்தாளு கூடிய சீக்கரம் எல்லாரும் ரசிச்சு பார்க்கபோர ஜனரஞ்ஜகமான ஒரு சினிமாவை படம் புடிச்சி பெரிரிரிரிய்ய கொத்தனார் ஆகப் போறார்.

குறிப்பு - அந்த 'செயமாலினி மேட்டர்'ல தான் உங்க எண்ட்ரீ சும்மா சொலிக்குது அண்ணாச்சி....

Arun Prakash said...

டுபுக்கு returns!
தங்களது அஜால் குஜால் அலும்புகள் அருமை. இதை போல் இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறோம், தலைவரே.

mc said...

//இரண்டரை to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி //
Super Dubukku. Sirichu sirichu kaNla thanni vandhuduchu.

Anonymous said...

சித்தாளு Lord of the Rings ஓட பெரிய்ய்ய்ய ரசிகர்-னு தெரியும். ஒட்டி ஒட்டி பாத்தாலே ஒவ்வொரு பார்ட்டும் 4 மணி நேரம் ஆகும். இத பாக்க எத்தன நாள் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?

கைப்புள்ள said...

சித்தாளு டைட்டில் தான் கொஞ்சம் ஒதக்குது. இது எழுதுனது நிச்சயமா பெரியாளு தான் :)

Kanimozhi said...

"சித்தாடை கட்டிக்கிட்டு" மெட்டில் பாடவும்!

"சித்தாள கூட்டிகிட்டு
சுவத்தோரம் சாஞ்சிகிட்டு
குத்தாத குத்தெல்லாம்
குத்துனாரம் கொத்தனாரு"

- கவிஞர் கனிமொழி

Narmadha said...

Thala....what is this....2 vaaram aachu....pudhu post poda vendaama? idhukkellaama reminder kudukkara varaikkum wait pannaradhu?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super post... found out who that "chithaalu" in the beginning itself...still enjoyed it all..:)

Anonymous said...

haha great post! could see both me, and my husband in sithalu. Hubby likes to rewind if he missed even 1 sec, watches all the credits pausing to read all names! I like total darkness, no popcorn allowed, hubby esp annoys with a bunch of mail, and a letter opener - 'sarak sarak' noise during movies!

இராமச்சந்திரன் said...

என்ன சித்தாளு போன சினிமா...இன்னும் முடியவே இல்லியா? அடுத்த போஸ்ட்டை காணோம்..?

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

nalla pakirvu

Dubukku said...

இலவசம் - ராத்திரி ரெண்டு மணிக்கு முழிச்சி...யோவ் நீரு முதல்ல என் ஊரே இல்லை பக்கத்து ஊர் அது நியாபகம் இருக்கட்டும். உங்க ஊர் பெயர நான் கெடுக்கவே வேண்டாம்..(ஏற்கனவே அதுவே -ஹீ -ஹி)

பொற்கொடி - :)) என்னங்க பண்றது பட்டு தெரிஞ்சிக்க வேண்டி இருக்கே :))
பாருங்க இந்த கொத்ஸ் வர வர வாத்தி மாதிரி ரொம்பத் தான் மிரட்டுறாரு


பத்மநாபன் - நீங்களும் கொட்டாய்க்கு போயிருக்கீங்களா...செம்ம எக்ஸ்பீரியன்ஸ் இல்ல அது

ஷ் - மிக்க நன்றி -ஹை மேடம்

ஸ்ரீராம் - மிக்க நன்றி ஹை. இண்டர்நேஷனல் ஹீரோ நீங்க நடிச்ச கதைய சொல்லலாமே :))

சுபாஷினி - என்னங்க நீங்க நம்ம ஸ்ரீராம் இண்டர்நேஷனல் ஹீரோ இருக்காரே அவர விட்டுட்டீங்களே


சேலம் தேவா - என்னாது லைட்டாவா....அண்ணாச்சி புல்லாவே :))))))


இளா - அட இது எந்த தியேட்டர்ல. சொன்னா நாங்களும் பார்ப்போம்ல :))))



பந்து - :))))))


முனிம்மா - ஓ அவரும் இப்படி தானா :))


ஜகன்னாதன் - ஆமாம் எங்க ஊர்ல அன்பே வா படம் ரீல் மட்டும் படம் ஓடும் போது சும்மா அடிக்கடி
அறுந்துவிடும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

தீக்‌ஷன்யா - -ஹி ஹீ சாரி கொஞ்ச நாள் நீங்களும் பாதிக்கப்பட்டிருகீங்கன்னு எனக்குத் தெரியும் :)))


பொற்கொடி - ஷீ இஸ் இன் யு.கே யா :))))


தக்குடு - -ஹூம்ம்ம்ம்ம் நீ வேற வயத்தெரிச்சல கிளப்பாத அந்த ஒரு நாள் என்னிக்கு வரப்போதோ :)))


அருண் - மிக்க நன்றி தலைவரே. நிறைய எழுதனும்ன்னு நினைக்கும் போது எதாவது ஒன்னு வந்துடுது. கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன்.

Dubukku said...

எம்சி - மிக்க நன்றி -ஹை

அனானி - அட கரீக்ட்டா பாயிண்ட பிடிச்சிய்யா....சூப்பர். ஒரு நாள் முழுசும் ஓடின நிகழ்வெல்லாமும் உண்டு :))))


கைப்புள்ள - அட நீங்க ஏத்தி விடாதீக :)) என்னிக்கும் சித்தாளு தான் :))

கனிமொழி - அடடா இன்னா கவிதெ கவிதெ...கலக்கிட்டீங்க போங்க


நர்மதா - மன்னிக்கவும். கொஞ்சம் அப்பிடி இப்படின்னு நிறைய வேலை வந்திடுச்சு நடுவுல சாரி :)

அப்பாவி - மிக்க நன்றி :))) நீங்க கண்டுபிடிக்கலைன்னா தான் ஆச்சரியம்

ஸ்ரீலதா - ஓ லெட்டர் ஓப்பனர் :))))) நான் படம் பார்க்கும் போது என்னால இத கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல.


இராமசந்திரன் - இதோ போட்டாச்சே...சாரி கொஞ்சம் டிலே ஆகிடிச்சு :)

கிருபாகரன் - மிக்க நன்றி நண்பரே

BAZYLI said...

super story... ha ha ha.. - Latest cinema gallery

Thoduvanam said...

சித்த நேரம் சித்தாளு கூட செம திரில்லு போங்க.இதுவே நீங்க பெரிய ஆளைப் பத்தி பெத்த நேரம் எழுதினா எப்பிடி இருக்குமின்னு...

Gurgaonflowerplaza said...

The contents are really good…
Gurgaonflowerplaza.com

Post a Comment

Related Posts