Monday, March 10, 2008

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார்

இந்தியாவில் இருந்த வரைக்கும் சினிமாவில் ரொம்ப அதீத ஈடுபாடு கிடையாது. சத்யமில்லோ தேவி பாரடைஸிலோ வூஃபர் அதிர ஹாலிவுட் படங்கள் பார்க்கும் போது "என்னம்மா படமெடுத்திருக்கான்யா"ன்னு கொஞ்சம் ஜிவ்வுன்னு இருக்கும். துப்பாக்கியை எடுத்து நாலு பேரை பொட்டு பொட்டுன்னு போட்டுத் தள்ளிட்டு ஹெலிகாப்டரில் உலகைக் காப்பாற்ற கிளம்பலாமான்னு உள்ளம் துடிக்கும் போது 12ஜி பிதுங்கிக் கொண்டு வந்து தாவைத் தீர்க்கும் . இத்தனைக்கும் அப்போது நான் பார்த்த படங்களெல்லாம் "இன்டிபென்டஸ் டே", "ஜூராஸிக் பார்க்", "ஸ்பீட்" போன்ற கமெர்சியல் மசாலாக்கள் தான். பிஜிஎம் இல்லாமல் நாயகனும் நாயகியும் ஒருவர் கண்ணை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொண்டு உணர்ச்சிகளைப் பரிமாரிக்கொள்ளும் தி சோ கால்ட் "ஆர்ட் மூவிஸ்" பக்கமெல்லாம் மெட்ராஸ் வெய்யிலுக்கு கூட ஒதுங்கினதே இல்லை. ஒரே ஒரு தரம் மட்டும் பிரிட்டிஷ் ஹைகமிஷன் லைப்ரரியில் மெம்பராய் இருந்த போது ஓசிக்கு ஏ.சி தியேட்டரில் படம் போடுகிறார்கள் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். சினிமா தியேட்டர் மாதிரி அங்கு ஈ.ஸியாய் எழுந்தெல்லம் வர முடியாது எல்லாரும் ஒரு மாதிரியாய் பார்ப்பார்கள் (என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்). பட்டினத்தார் மாதிரி நாயகன் நாயகியை மருந்துக் கூட தொட்டுக்கொள்ளாமல் வள வளாவென்று கதா காலட்சேபம் நடத்திக்கொண்டிருந்தான். இந்த இழவுக்கு இண்டர்வெல் வேறு கிடையாது. ஓசி டீக்கு என்ன பேசறான், எதைப் பத்தி பேசறான்னு தெரியாத இந்த கொசுக்கடியை எல்லாம் நம்மால் தாங்க முடியாது என்று பிரிட்டிஷ் ஹைகமிஷன் லைப்ரரி உறவை ரிசைன் பண்ணிவிட்டேன்.

ஆனாலும் பொழுது போகாத போது தப்பித் தவறி ஸ்டார் டீ.வியில் போடும் சில நல்ல படங்களைப் பார்த்திருக்கிறேன். வாழ்வியலில் சில நுண்ணிய உணர்வுகளை மெயின் கதையாக எடுத்துக் கொண்டு களமிறங்கும் தெகிரியத்தைப் பார்த்து மலைத்திருக்கிறேன். நம்மாளுங்களால ஒரு ஐயிட்டம் சாங் இல்லாமல் இந்த மாதிரியெல்லாம் முடியுமா என்று நம்ப மறுத்திருக்கிறேன். ஊரிலிருக்கும் போது கமல் படங்களைத் தவிர்த்து, திரையுலகம் என்பது எனக்கு கேபிள் டீ.வி வகுத்த எல்லை தான். இங்கிலாந்து வந்ததுக்கப்புறம் காய்ஞ்ச மாடு கம்பங்கொலயப் பார்த்த மாதிரி ஊர விட்டு வந்து ஒரே சினிமாவா பார்க்க ஆரம்பித்தோம். வார இறுதியில் தொடர்ந்து பார்க்கும் 5 படங்களில் பெரும்பாலனவை அடுத்த நாளே கதை கேட்டால் "பார்த்துட்டேன்டா என்ன கதைன்னு மறந்து போச்சு.." பெப்பே தான். வெகு சில படங்களே அசை போட வைத்திருக்கின்றன. அபூர்வமாக காதல், ப்ளாக்(இந்தி) போன்ற படங்கள் தாவாக் கட்டைய தடவிக் கொண்டு டாய்லெட்டில் மோட்டுவளையத்தைப் பார்த்துக் கொண்டு உறைய வைத்திருக்கின்றன. "எவ்வளவு நேரமாச்சு உள்ள போய்... இதுக்குத் தான் வாழைப் பழம் அடிக்கடி சாப்பிடுங்கோன்னு சொல்றேன்"ன்னு தங்கமணி சொல்லும் போது "இல்ல அந்தப் படத்துல இந்த சீன்ல.."ன்னு ஆரம்பிக்கும் போதெல்லாம் தங்கமணி "இந்த வெண்டக்காய சின்னச் சின்னதா நறுக்கிண்டே சொல்லுங்கோ"ன்னு சமையலை முடித்துவிடுவார்.

சில சமயம் வெண்டக்காய் போய் எப்போ வெங்காயம் நறுக்க ஆரம்பித்தேன் என்பது கூட தெரியாமல் ஊத்து ஊத்துன்னு ஊத்தியிருக்கிறேன். சினிமா வெண்டக்காயையும் தாண்டி புனிதமாய் போய், என்னம்மோ பத்து படம் எடுத்து அதில் எட்டு சில்வர் ஜூப்ளி போன மாதிரி ஒரு நண்பியிடம் ஃபோனில் நிறைய ப்ளேடு போட்டிருக்கிறேன். பாவம் அவரும் வேறு வழியில்லாமல் பொறுமையாய் கேட்டிருக்கிறார். கொஞ்ச நாளில் நான் ஃபோனை எடுத்தாலோ "இதக் கேளேன்"ன்னு ஆரம்பித்தாலோ "உனக்கு ஒரு தரம் சொன்னா போதாது? திருப்பி திருப்பி சொல்லனுமா துண்ட எடுத்துண்டு குளிக்கப் போன்னு எவ்வளவு நேரமா கத்திண்டு இருக்கேன்? போ..அம்மா வந்து தலைக்கு தேய்ச்சி விடறேன்"ன்னு மெசேஜ் சொல்லிவிட்டு தங்கமணி எஸ்ஸாகி விடுவார். அப்புறம் "நானாவது எஸ்ஸாக முடியுது அய்யோ பாவம் ஃபோன்ல அந்தப் பக்கம் அவங்கள்லாம் என்ன கஷ்டப்படறாங்களோ"ன்னு பேக்கிரவுண்ட் புலம்பல்ஸ் மட்டும் தான் கேட்கும்.

"நானும் ஒரு நாள் படமெடுக்கப் போறேன்"ன்னு ஒரு நாள் குண்டைத் தூக்கி போட்டதற்கு தங்கமணி அடுப்பில் பால் பொங்கினால் குடுக்கும் ரியாக்க்ஷன் கூட குடுக்கவில்லை. பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் சேரப் போகிறேன் அந்த பீஸுக்கு ஒரு யானையும் ரெண்டு தொரட்டியும் வாங்கலாம் என்று ஆழம் பார்த்ததுக்கும் சின்ன நமுட்டு சிரிப்பு மட்டுமே வந்தது. வேறு எதோ ஒரு தர்க்கத்துக்கு நான் சொன்ன "இதெல்லாம் இப்பத் தேவையா.." வாதத்துக்கு மட்டும் "அந்த பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எவ்வளவு" என்று அமைதியாய் கேட்டார்.

இருந்தாலும் நான் நண்பர் வட்டத்தில் பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் சேராமலயே பிலிம் காட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் உஷாராக அதைப் பற்றி ரொம்ப நோண்டி நொங்கெடுக்காதவர்களிடம் மட்டும் தான் பேசுவேன். அவர்களும் "இதெல்லாம் அப்பிடியே வரதுதான்ல"ன்னு எடுத்துக் கொடுபார்கள் . இப்படியே ஃபிலிம் முத்திப் போய் "என்னம்மோ தூக்கமே வரலை..அன்னிக்கு ஒரு படத்தைப் பத்தி சொன்னீங்களே அத திரும்ப சொல்லுங்களேன்...சூப்ப்பரா சொன்னீங்க ரெண்டாவது நிமிஷமே தூக்கம் சொக்கிடிச்சு..ப்ளீஸ்"ன்னு தங்கமணி ஜோ ஜோ பண்ணுவதற்கெல்லாம் நம்ப ஃபிலிம் டெக்னாலஜியை யூஸ் பண்ண ஆரம்பித்தார்.

இப்படி சமையல் காய்கறி நறுக்குவதற்கும், ஜோ ஜோ பண்ணுவதற்கும் யூஸாகிக்கொண்டிருந்த நம்ம ஃபிலிம் டெக்னாலஜி சகாப்தத்தில் அந்த நடிக்கும் வாய்ப்பு புதிய பாதையைத் திருப்பியது.

-தொடரும்

28 comments:

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் டுபுக்கண்ணே :))

ambi said...

முதலில் வாழ்த்துக்கள். :))

அப்படி தப்பி தவறி படமெடுக்கற ஐடியா இருந்தால், கோபிகா குட்டி கூட நடிப்பதாக இருந்தால் (அதாவது என்கூட நடிப்பதாக இருந்தால்) நான் ப்ரீயா நடிச்சு தரேன். :p

Unknown said...

எங்களை வச்சு காமடி.. கீமடி.. பண்ணலையே?

இலவசக்கொத்தனார் said...

//வேறு எதோ ஒரு தர்க்கத்துக்கு நான் சொன்ன "இதெல்லாம் இப்பத் தேவையா.." வாதத்துக்கு மட்டும் "அந்த பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எவ்வளவு" என்று அமைதியாய் கேட்டார்//

என்னாத்த சொல்ல!!! :)))

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தல!!! வழக்கம் போல கலக்குங்க :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.
நான் கூட டைரக்டர் ஆகலாம்ன்னு ஒரு யோசனை இருக்கு.. லொக்கேஷன் பழனிமலை படிக்கட்டு.. ஓக்கேன்னா சொல்லுங்க..

( ஸ்டாரமில்ல= ஸ்டாராமில்ல?)

Anonymous said...

பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் சேரப் போகிறேன் அந்த பீஸுக்கு ஒரு யானையும் ரெண்டு தொரட்டியும் வாங்கலாம் என்று ஆழம் பார்த்ததுக்கும் சின்ன நமுட்டு சிரிப்பு மட்டுமே வந்தது. வேறு எதோ ஒரு தர்க்கத்துக்கு நான் சொன்ன "இதெல்லாம் இப்பத் தேவையா.." வாதத்துக்கு மட்டும் "அந்த பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எவ்வளவு" என்று அமைதியாய் கேட்டார்.
aha thangamaniyellam thelivathan irukanga.hhmm
-isthripotti

rv said...

//என்னம்மோ பத்து படம் எடுத்து அதில் எட்டு சில்வர் ஜூப்ளி போன மாதிரி ஒரு நண்பியிடம் ஃபோனில் நிறைய ப்ளேடு போட்டிருக்கிறேன். பாவம் அவரும் வேறு வழியில்லாமல் பொறுமையாய் கேட்டிருக்கிறார்.//

என்னடா இது நம்மள மாதிரியே இருக்கேனு பாத்தேன்.. சந்தேகமில்ல.. இதே சிண்ட்ரோம் தான்.. நேம்ஸ்ட்ராப்பிங் ரொம்ப முக்கியம். அல்ஜீரியா நாட்டுல 'சமீபத்துல' எடுக்கப்பட்ட ஆர்ட் ஹவுஸ் படத்த பார்த்துட்டு, நம்மூர்லயும் எடுக்கிறான் பாருனு ஆரமிச்சா.. பொழுதெல்லாம் போகும்.

//ஒரு தர்க்கத்துக்கு நான் சொன்ன "இதெல்லாம் இப்பத் தேவையா.." வாதத்துக்கு மட்டும் "அந்த பிலிம் டெக்னாலஜி கோர்ஸ் எவ்வளவு" என்று அமைதியாய் கேட்டார//
:)))

sriram said...

ஹே ராம்
வாழ்த்துக்கள், இந்த வாரம் ஸ்டார் ஆனதில் உன்னை விட எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
இந்த வாரம் தமிழ் மணம் அதிரணும்,
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

இது கலக்கல் போஸ்ட், வழக்கமான காமெடி சரவெடி, நாங்கள் அனுபவித்தது, தமிழ் மணம் readers அனுபவிக்கட்டும், looking for some great posts this week.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்.

யாத்ரீகன் said...

:-)))))))))))) dubuks.. sooper

Anonymous said...

/* "எவ்வளவு நேரமாச்சு உள்ள போய்... இதுக்குத் தான் வாழைப் பழம் அடிக்கடி சாப்பிடுங்கோன்னு சொல்றேன்"ன்னு தங்கமணி சொல்லும் போது "இல்ல அந்தப் படத்துல இந்த சீன்ல.."ன்னு ஆரம்பிக்கும் போதெல்லாம் தங்கமணி "இந்த வெண்டக்காய சின்னச் சின்னதா நறுக்கிண்டே சொல்லுங்கோ"ன்னு சமையலை முடித்துவிடுவார். */ - சேர்த்து பாக்கமுடியாத ரெண்டு விஷயத்தை...சேர்த்துட்டியே...வாத்யாரே...

/*பால் பொங்கினால் குடுக்கும் ரியாக்க்ஷன் கூட குடுக்கவில்லை*/ - வாணாம் வாத்யாரே...சந்தோஷப்படு..... ரியாக்க்ஷன் இருந்தா...உடம்பு தாங்காது...

கலக்கல் ஆரம்பம்.

Ramya Ramani said...

hmm kalakunga dubukku..all the best oru nalla padam edunga...

Sridhar Narayanan said...

நல்லாத்தாங்க பேர் வச்சிருக்கீங்க 'டுபுக்கு'ன்னு. வெண்டைக்காய்க்கும், வெங்காயத்துக்கும் வித்தியாசம் தெரியாம உலக சினிமா பத்தி வியாக்கியானமா? :-))

நல்ல ரசிச்சு சிரிச்சேன் :-)

Sridhar Narayanan said...

நல்லாத்தாங்க பேர் வச்சிருக்கீங்க 'டுபுக்கு'ன்னு. வெண்டைக்காய்க்கும், வெங்காயத்துக்கும் வித்தியாசம் தெரியாம உலக சினிமா பத்தி வியாக்கியானமா? :-))

நல்ல ரசிச்சு சிரிச்சேன் :-)

manjoorraja said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்

HK Arun said...

//Dubukku is one of those slang words in Tamil world which does not have any strict meaning. To me its the clever fool in you. The you here is not really you and the clever needn't be really clever.
"I would not live forever, because we should not live forever, because if we were supposed to live forever, then we would live forever, but we cannot live forever, which is why I would not live forever." -Miss Tension Bama (correction Alabama) 1994//

மிக அருமையாக இருக்கின்றது தமிழ் ஸ்லாங்.

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

சின்னப்பொண்ணு said...

"டுமுக்கு" நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

First, நட்சத்திர வாழ்த்துக்கள்.
இந்தவாரம் நகைச்சுவை வாரம்.

//தங்கமணி அடுப்பில் பால் பொங்கினால் குடுக்கும் ரியாக்க்ஷன் கூட குடுக்கவில்லை//
அது டுபுக்குண்ணே!!!
கனடாவில் நீங்கள் எடுக்கும் பாட்டுக்கு நாங்களும் வருகிறோம்.

காட்டாறு said...

//சில சமயம் வெண்டக்காய் போய் எப்போ வெங்காயம் நறுக்க ஆரம்பித்தேன் என்பது கூட தெரியாமல் ஊத்து ஊத்துன்னு ஊத்தியிருக்கிறேன்.//

வெட்டுனதெல்லாம் சரிதான். தங்கமணியாவது நின்னு கதை கேட்டாங்களா இல்லையா?

Dubukku said...

பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. நாளை உங்களுக்கு தனித் தனியே பதில் போடுகிறேன். இன்று வேலைப் பளுவினால் பதில் போடமுடியவில்லை மன்னிக்கவும்.

Anonymous said...

thangamani reaction superr.great start sir for the star sir,keep going.
nivi.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்மால் தாங்க முடியாது என்று பிரிட்டிஷ் ஹைகமிஷன் லைப்ரரி உறவை ரிசைன் பண்ணிவிட்டேன்//

அண்ணாத்த
அன்னிக்கு ரிசைன் பண்ண பாவம் தான் இன்னிக்கு அதே பிரிட்டிஷ் நாட்டுல கலப்பையைப் புடிச்சிக்கிட்டு உழுதுகிட்டு இருக்கீரு! :-))))

Swamy Srinivasan aka Kittu Mama said...

அடடா நீங்களும் என்ன மாதிரி தான் போல..இந்த சினிமா எடுக்கர ஆர்வம் என்னையும் உலுக்கி எடுத்துண்டு தான் இருக்கு....ஹும்ம்ம்

கதை எல்லாம் நிறைய கை வசம் இருக்கு...பட் எங்க ஆரமிக்கறது யார புடிக்கறதுன்னு நெனச்சா மலப்பா இருக்கு. திடீர்னு நாமளும் மூட்டைய தூக்கிக்கிட்டு தர்போது இருக்கும் அமரிக்காவிலிருந்து கிளம்பலாம் என்று நினைத்தால் தங்கமணி கோவை சரளா அக்கா மாதிரி உடனே செவுத்து மேல ஏரிடரா...இதை எல்லாம் தாண்டியும் மனசுல ஒரு சின்ன அலை, நீ கண்டிப்பா ஒரு படம் எடுப்படான்னு சொல்லிட்டு போகுது...இந்த பாழா போன கேம்கார்டர்லையே எங்கள படம் எடுக்க மாடேங்கரீங்க, நீங்க எங்க போய் படம் எடுத்துன்னு தங்கமணி ரவுசு தாங்க முடியல.

டுபுக்கு மாதிரி ஆட்களும் இதே எண்ணங்களோட திரியர்தால, மனசுக்கு ஆருதலாவும் ஒரு எணர்ஜி டிரிங்க் குடிச்சா மாதிரியும் இருக்கு :-)

உங்க போஸ்ட் மிக மிக அருமை டுபுக்கு. அசத்தாலான் வரிகள்..அசத்தலான காமடி...டுபுக்கு எழுதர்த கேகணுமா...நீங்க எல்லாத் தடையும் ஒடச்சு ஒரு சினிமா எடுக்க வாழ்த்துக்கள் டுபுக்கு....கண்டிப்பா ஹாலிவுட்ல இடம் இல்லனாலும் , கோடம்பாக்கம் காத்துக் கொண்டு இருக்கிறது...

அப்படி வாய்ப்பு கெடச்சா என்னையும் துணை டைரக்டரா சேத்துக்கங்க :-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

//அண்ணாத்த
அன்னிக்கு ரிசைன் பண்ண பாவம் தான் இன்னிக்கு அதே பிரிட்டிஷ் நாட்டுல கலப்பையைப் புடிச்சிக்கிட்டு உழுதுகிட்டு இருக்கீரு! :-))))//

LOL @ kannabiraan's comment

Swamy Srinivasan aka Kittu Mama said...

25 vaaram oda idho ennoda 25aavadhu comment

Unknown said...

டுபுக்கு,

இயக்குனர் ஆசைய வச்சுகிட்டு நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்!

சும்மா படிக்கலாம்னு வந்தேன்.. கிட்டத்தட்ட 10 பதிவுகள் படிச்சு முடிச்சுட்டேன்.

உங்ககிட்டே நிறய சரக்கு இருக்கு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள். (இப்பிடி ஏத்திவிட்டே உடம்பு ரணகளமா இருக்குன்னு புலம்புறது கேக்குது. சத்தமா பொலம்பாதீங்க) :)

Dubukku said...

சென்ஷி - நன்றி சென்ஷியண்ணே !!

அம்பி- கோபிகா நடிக்கிற பட்சத்துல சொல்லியனுப்புறேன்...

டிடிடி - ஹீ அப்பிடியே நம்பிட்டு இருங்க :))

கொத்ஸ் - ஆமா கொத்ஸ்...ஒன்னும் சொல்ல முடியலை...சமயம் பார்த்து தாக்குதல் நடத்துறாங்க

கப்பி பய - வாங்க தல...ரொம்ப நன்றி

கயல்விழி - ஹீ ஹீ பழனிமலை படிக்கட்டு லொக்கேஷனெல்லாம் ஓ.கே..ஆனா இந்த காஸ்டியும்ல காலவாரி விட்டுறமாட்டீங்களே?? :P

இஸ்திரி பொட்டி - ஆமாங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க...:)

இராமநாதன் - அய்யா வாங்க...ஆனா நம்பள்கீ லொக்கல் மூவிஸ் மட்டும் தான் தெரியும். உங்க அளவுக்கு நம்பள்கு கலை ஆர்வம் காட்றான் இல்லை. தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பிரதானம். நீங்க லெவல் காட்டுவீங்க போல இருக்கே :))

ஸ்ரீராம்- வாங்க. உங்களுக்கு என் மேல இருக்கிற நம்பிக்கையை எனக்கே என் மேல இல்லை. மெய்சிலிர்க்க வைக்குது. ஆனா ஒன்னே ஒன்னு இந்த காமெடி மட்டும் கொஞ்சம் ப்ரீயா இருந்தா தான் வருது. இந்த மாதிரி டெய்லி ஒரு போஸ்ட்டுன்னா இயல்பா வரமாட்டேங்குது. ஜாலியா ஃப்ரீயா போஸ்ட் போட்டா தான் எனக்கே திருப்தியா இருக்கு இல்லைன்னா ஏனோ தானோன்னு ஆகிடுது அதுனால முடிஞ்ச வரை முயற்சிக்கிறேன்...காமெடி தவிர கொஞம் வரைட்டி காட்டலாம்னு நினைக்கிறேன் இந்த வாரம் - உங்க எல்லாரோட அனுமதியோட

யாத்திரிகன் - வாங்க ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு

இராமச்சந்திரன் - தல...சில சமயம் ரியாக்க்ஷன் இல்லைன்னா தான் திக்குங்குது...எதாவது சொல்லிட்ட்டா பரவாயில்லை...இல்லைன்னா எங்கேர்ந்து ஆப்பு வரும்ன்னு திகில்லையே செத்துருவான் மனுஷன் :)

ரம்யா - ரொம்ப நன்றி மேடம். படம் எடுக்கிறேன் ஆனா நல்ல படமான்னு நீங்க தான் சொல்லனும்.

ஸ்ரீதர் நாராயனன் - நன்றி. ஹீ ஹீ வியாக்கியானம் பண்ணதற்கு உடம்புலயே ஊறிப்போச்சே என்ன பண்றது :))

மன்சூர் ராசா - மிக்க நன்றி நண்பரே

அருண் - மிக்க நன்றிங்க... அடிக்கடி வாங்க

காசிபாரதி - மிக்க நன்றி மேடம்

சபேஸ் - யூ மீன் கனடாவில் நான் எடுக்கும் பாட்டுக்கு??....இது கூட நல்லா இருக்கே...டைரக்டர்க்கு பிடிச்சிருக்கு...அப்போ அந்த டிக்கெட் மேட்டரெல்லாம்...நீங்க பார்த்துப்பீங்க தானே??

காட்டாறு - அது ஒரு பெரிய சோகக் கதைங்க...தூக்கம் வரலைன்னா நம்மள கதை சொல்லச் சொல்றாங்க...சொன்னா நல்ல தூக்கம் வருதாம்

நிவி - நன்றி மேடம்

கே,.ஆர்.எஸ் - ஆமாங்க..கரெக்ட்டா சொன்னீங்க...

கிட்டு - ஆஹா நீங்களும் நம்மள மாதிரி தானா. எனக்கும் ரொம்ப ஆறுதலா இருக்கு :)) இப்படி நம்க்கிருக்கிற கஷ்டம் அடுத்தவங்களுக்கும் இருக்குன்னு தெரிஞ்சா என்ன ஆறுதலா இருக்குனு தெரியுமா :)))

தஞ்சாவூரான் - அதே அதே...என்னம்மோ சரக்கெல்லாம் வேற இருக்குங்கிறீங்க :)) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

Related Posts