Monday, July 24, 2017

மீட் அண்ட் க்ரீட்

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில் இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து சேரும். செக்யூரிட்டி என்ற பேரில் பிச்சைக்காரனை விட கேவலமாய் நடத்துவார்கள். நள்ளிரவுக்கும் மேல் என்பதைப் பாராமல் லவுஞ்சுக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு கட்டத்தில் நிறுத்தி வைத்து லைசென்ஸை எடு, வாயை ஊது, இன்ஸுரன்ஸ் பேப்பரை எடு என்று மிட்நைட் போலீஸ் மாதிரி ஏக கெடுபிடிகள் வேறு. டிக்கட்டைக் காட்டி இது மீட் அண்ட் க்ரீட் டிக்கெட் என்று சொல்லியும் நில்லுங்க....எல்லாம் பார்க்கலாம் என்றார்கள். பொறுமை இழ்ந்து போங்கடா நீங்களும் உங்க க்ரீட்டும் என்று கிளம்ப எத்தனிக்கும் தருணத்தில் தேவ கன்னிகையாய் ஒரு பெண் வந்து டிக்கெட்டை வாங்கிப் பார்த்து விட்டு “இவங்களை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்று தேவகானமாய் பொழிந்து சுயம்வரம் மாதிரி வி.ஐ.பி பாஸை என் கழுத்தில் சூடி இன்னொரு செக்யூரிட்டியை அழைத்து போகச் சொன்ன அந்த தருணம் - ஹாங் ....யார்கிட்ட...ஏ.ஆர்.ஆர் மொத கீப்போர்ட் எங்க எப்போ வாசிச்சார் தெரியுமா... அவர் எந்த ஸ்கூல் தெரியுமா என்ற பார்வை பெருமை எருமையில் ஏறிவிட்டது. பைவ் ஸ்டார் லைட்டிங் எஃபெக்டில் இருட்டின காரிடாரில், கள்ளக் கடத்தலில் டபுள் க்ராஸ் செய்த அல்லக்கையை மூத்திர சந்துக்கு கூட்டிப் போவது போல் நெளிந்து நெளிந்து போனால்...ஒரு லவுஞ்சில் பெரிய க்யூ. மும்பையில் டோக்கன் வாங்கி கக்கூஸுக்கு போகிற கூட்டம் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். எல்லார் கழுத்திலும் சூட்கேஸ் tag மாதிரி வி.ஐ.பி என்று பாஸ் வேறு.

எனக்கு இந்த மாதிரி நீளமான க்யூவைப் பார்த்தாலே வராத சுச்சாவும் வருகிற மாதிரி பிரம்மை தட்டி, முட்ட ஆரம்பித்துவிடும். நெஞ்சடைக்கிற மாதிரி இருந்தாலாவது ஹார்டில துளான்னு பொய் சொல்லலாம் இதுக்கெல்லாம் என்ன சொல்லுவது... க்யூவில் முன்னாடி நின்றவரிடம் “சார் இந்த வி.ஐ.பி...” என்று ஆரம்பித்தேன். “நாங்க மட்டும் என்ன சாம்சோனைட்டா...நாங்களும் வி.ஐ.பி தான்யா” என்று அவருடைய வி.ஐ.பி. பாஸை தொட்டு காட்டி “ஏ.ஆர்.ஆர் மொத கீப்போர்ட் எங்க எப்போ வாசிச்சார் தெரியுமா...” லுக்கை என்னிடமே விட ஆரம்பித்துவிட்டார்.

“மானத்த வாங்காத இப்போ என்ன அவசரம்” என்று தங்கமணி வேறு அங்கேயே வேலைக்கு சேர்ந்த மாதிரி அட்வைஸ். சுச்சா பிரச்சனையை சொன்னால் நாப்பதுக்கு மேல ஆச்சு..எதுக்கும் சுகர் டெஸ்ட் பண்ணிக்கோ என்று அவரோட கச்சேரியை ஆரம்பித்துவிடுவார் என்பதால் மூச்சு விடவில்லை. சை... ஒரு வி.ஐ.பியை எப்படியெல்லாம் ட்ரீட் பண்ணுகிறது உலகம் என்று புலம்பிக் கொண்டே வந்தால் ..ஆங் ரெடி ரெடி ரெடி...நேர போற ஃபோட்டோ எடுக்கற வலது பக்கம் நிக்கிற...ஃபோட்டோ எடுத்துட்டு அப்படியே திரும்பி பார்க்காம கிளம்பற என்று மசானத்துக்கு காரியம் பண்ண வந்த மாதிரி ஒரு செக்யூரிட்டி இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வேளை திரும்பிப் பார்த்தால் ரத்தம் கக்க வைத்துவிடுவார்கள் என்பது மட்டும் புரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இசைப்புயலின் மேலேயே தள்ளிவிட்டார்கள். “தலைவா....எப்படி இருக்கீங்க”ன்னு கையைக் குடுத்து கேட்டேன். “மச்சி முதல்ல நீ போட்டோ எடுத்துட்டு, அப்புறம் பேக்டோர் வழியா வா நாம நிதானமா உட்கார்ந்து பேசுவோம்” என்பது போல் அழகாக புன்னைகத்தார். பாவம் கச்சேரி முடித்து டயர்டாய் இருப்பார்ன்னு நினைத்துக் கொண்டேன். கடைசி பாட்டு வேற தொண்டை கிழியற சுதியில் பாடினார். “ஜீ முன்பே வா பாட்டு போடும் போது என்ன மூட்ல செட் ஆச்சு அந்தப் பாட்டு”ன்னு கேக்கலாம்னு நினைத்தேன் - அது ஏ.ஆர்.ஆரா இல்லை இமானா என்று டவுட்டு வந்து விட்டது. நமக்கு மெம்ரி பற்றி எனக்கு ஏக நம்பிக்கை இருப்பதால் எதுக்கு வம்புன்னு “உங்க பாட்டுன்னா எனக்கு உசிரு” என்று மட்டும் சொல்லி வைத்தேன். கண்ணிமைக்கும் நோடியில் எங்கிருந்தோ ஒரு ப்ளாஷ். நான் கண்ணை மூடிவிட்டேனோ என்று ட்வுட்டு வேறு. ம்ஹூம் முஹூர்த்த நேரம் முடியப் போறது மாப்பிளையக் கூப்பிடுங்கோன்னு யாரோ சொன்ன மாதிரி இன்னொரு செக்யூரிட்டி கூட்டிப் போய் எல்லாருக்கும் வாசல் தான் வழின்னு காட்டிவிட்டார். யோவ் இருய்யா...கூட பொண்டாட்டி வந்தாய்யா, இருக்காளான்னு செக் பண்ணிக்கிறேன்னு மஹூம் ஆசுவாசிக்க கூட அலவ் செய்யவில்லை.

ஸ்ப்பான்னு வெளியே வந்தால் ஃபோன். “ஹலோ டுபுக்கா.... மச்சி ஏ.ஆர்.ஆரப் பார்க்கும் போது எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் வெறியன்னு மறக்காம சொல்லுடா, கண்டிப்பா என் பேரையும் சொல்லுடா அவர்கிட்ட அப்போத் தான்டா எனக்கு ஜென்ம சாபல்யமாகும்”

“என்னடா இப்படி சொல்லிட்ட....மீட் அண்ட் க்ரீட் மச்சி... வி.ஐ.பி பாஸ்டா...லௌஞ்சுல அவர் கூட தான் ட்ரிங்க். உனக்கு அவர் ம்யூசிக்ல என்ன பாட்டு பிடிக்கும்னு சொல்லு நான் உனக்காக அவர எக்ஸ்க்ளூசிவா ரெண்டு வரி பாடச் சொல்லி மொபைல்ல ரெக்கார்ட் பண்ணி எடுத்து வரேன்....”

அவனாவது ஜெனம் சாபல்யம் அடையட்டுமே.

11 comments:

paavai said...

Moothra santhu comparison ellam ungalukkunnu thonum. Following your posts for so many years and they still bring a smile, a chuckle and a loud cackle :)

Anonymous said...

seri, sugar test panniyacha? :-)

Shubha

Rams said...

Super...

Jai said...

Following your posts since 2010. Ungaloda Jolly thirintha kaalam, Cricket post ellam adikadi read pannuven (manapaadam aidichu). At least once in a month I will come here to see if there is any new post (and I will continue :)).

Unga blogs padichu neraya sirichiruken. Thank you for that!

En life la ithu than first comment (Facebookla kooda nan status\comment potathu kedayathu).

Keep writing!

-Jai

Sudesh N said...

Fantastic and Thank you so much. I really loved this article
LIC Merchant is the official website for Life Insurance Agents and Partners of Life Insurance Corporation of India.
LIC Merchant

Unknown said...

I love you ..dubukku..Jus now i.realise that love you so much waiting for our meet lovee yiuu

Anonymous said...

Hi dubukku how ru where r u please send ur mail id how to communicate you by poorana pushkala

Sarahkumar said...

உங்க ப்லோகுக்கு நான் புதுசு அண்ணா. உங்க ஒரு பதிவ கூட படிக்கல ஆன follow பண்ணிட்டேன். Just bcz of ur name டுபுக்கு 🤭

Dubukku said...

ஹாஹா அனானியா வந்து ஐ லவ் யூ சொன்னா யாரோ கலாய்க்கறீங்கன்னு தான் நினைப்பேன்...

Saranya Rajendran -படிக்காமலேயே ஃபாலோவா 🤣🤣🤣....நான் இப்ப பேஸ்புக்குக்கு மாறி அங்க தான் எழுதிட்டு இருக்கேன்...இங்க எழுதறதில்ல...அங்க ஃபாலோ பண்ணுங்க பெட்டர் :)

omabove said...

Railtel ipo gmp grey market premium

Sriram said...

Superb!!

Post a Comment

Related Posts