Sunday, November 01, 2015

அயர்ச்சி


வாழ்க்கை வழக்கம் போல் அப்படியும் இப்படியுமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த ஆன்லைன் சமூக வட்டங்களில் அயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பேஸ்புக் எப்போதாவது, ட்விட்டர் அதை விட மோசம், ப்ளாக் ஹூம் சொல்லத் தேவையே இல்லை என்றிருந்தாலும் வாட்ஸப்பில் தான் தொல்லை தாங்க முடியவில்லை. ஒன்னாப்பில் ஒன்றாய் ஒன்னுக்குப் போனோர் சங்கம், அஞ்சே முக்கால் ட்ரெயினில் மூனாவது காரேஜில் நின்று கொண்டே போனோர் சங்கம் என்று ஏதாவது ஒரு க்ரூப் ஆரம்பித்து சேர்த்துவிடுகிறார்கள். மொபைல் டேட்டாவை ஆன் செய்தால் பச்சாவ் பச்சாவ் என்று கதறுகிறது ஒரு நாளைக்கு நானூறு கருத்து மெசேஜ்கள், இருநூறு போட்டோ மீம்கள், நூறு காமெடி வீடியோக்கள், எட்டு கில்மா வீடியோ என்று குறைவில்லாமல் குமிகிறது.  டேட்டா வீணாய் போகவேண்டாமே என்று சமூகக் கடமையாய் எட்டை மட்டும் பார்த்துவிட்டு மற்றவற்றை அப்படியே டிலீட் செய்து கொண்டிருக்கிறேன். தாவு தீர்கிறது.

என்னவோ காலையில் ஆபிஸ் கிளம்புவதற்கு முன்னால் நிறைய நேரம் இருப்பது போல், மீசையில் ஒரு நரை முடி வந்திருக்கிறது. தேடித் தேடி கத்தரியால் கத்தரிப்பதற்குள் கால் மணி காலாவதியாகி விடுகிறது. வயசான பையனுக்குத் தான் எவ்வளவு சோதனைகள். இது போக மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. அமைதியே இல்லாமல் இருந்தது. எதிலும் லயிக்கவில்லை. மனம் ஒருமுகப்படுவது என்பது நடவாத காரியமாய் இருந்தது. ஒரு மணி நேர வேலையை இரண்டு மணி நேரத்திலாவது முடிக்க வேண்டாமா ப்ச்.. ஒரு நாளாயிற்று சில நேரம் இரண்டு நாட்கள். ஆனால் இதற்கெல்லாம் எதிர் மாறாகத் தூக்கம் மட்டும் நன்றாக வந்து கொண்டிருந்தது. வெற்றிவேல் வீரவேல்ன்னு கொட்டக் கொட்ட முழித்து மிட் நைட் மசாலா பாத்ததெல்லாம் போய் எட்டு மணிக்கு டி.வியில் குத்துப் பாட்டு வந்தாலே தூக்கம் சொக்க ஆரம்பித்தது. துடிதுடிப்பாய் இருந்தது போய், தின்னா நடிகைக்கு கல்யாணம் கேன்சலானதே நாலு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. அதற்கப்புறம் தான் அவருக்கு கல்யாணம் நிச்சயமானதே தெரியும். இப்படியே போச்சுன்னா கம்பெனியை ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து தூக்கி விடுவார்கள் என்பதால் ஒரு பானபத்திர ஒனாண்டியிடம் ஆலோசனை கேட்டேன்.

ஓனாண்டி சாஃப்ட்வேர் பக்(Read Bug) பிக்ஸ் பண்ணுவதிலிருந்து பாவாடை நாடா முடிச்சுப் போடுவது வரை எல்லாத்துக்கும் சர்வ ரோக நிவாரணி. அன்றைக்கு செம ஃபார்மில் இருந்தார். கொஞ்சம் யோசித்து விட்டு "உடல் மனம் வாக்கு...இவற்றை வசப்படுத்து" என்று ஆரம்பித்து ஓனாண்டி ஒன்றரை மணி நேரம் ஓட்டிக் கொண்டிருந்தார். தம்பி இதே மஹாபாரதம் சீரியலை நானும் பார்ப்பேன்னு கிருஷ்ணா நம்ம ஃபிரண்டு தான்ன்னு ஒரு அதட்டு போட்டதும் தான் கொஞ்சம் அடங்கினார். இருந்தாலும் அவர் சொன்னாரே என்று யோகா செய்யலாம் என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தேன். மஜாஜ் பார்லர் மாதிரி அரை மணிக்கு இவ்வளவு ஒரு மணிநேரத்திற்கு அவ்வளவு என்று ஆளாளுக்கு கல்லா கட்டிக்கொண்டிருந்தார்கள். சில யோகா படங்கள் மாடிப்படியில் எக்கச்சக்கமாய் விழுந்து எசகுபிசகாய் உடம்பு முறுக்கிக் கொண்டது மாதிரி பார்க்கவே பயமாய் இருந்தது  நல்ல வேளையாக ஒரு பிரபல இந்திய யோகா சாமியார் லண்டனில் பல யோகா மையங்களை நடத்திக் கொண்டு யோகமாய் இருக்கிறார் என்றும் அவர் ப்ரீயாய் சில நாட்கள் நடத்துகிறார் என்றும் தெரியவந்தது. அதிலும்  "அடடே இதோ டாக்டரே வந்துட்டாரே" என்று பழைய தமிழ் படம் மாதிரி ஒரு யோகா மையம் என் ஆபிஸ் அருகிலேயே இருக்கவே, ஆன்லைனில் நோண்டிப் பார்த்து மத்தியானம் ஒன்றிலிருந்து இரண்டு வரை எனக்கு யோகா கற்றுக் கொள்வது தான் வாழ்க்கை இலட்சியம் என்று சேர்ந்துவிட்டேன்.

அந்த நன்னாளில் இடத்தைத் தேடிப் போனால் கள்ளக் கடத்தல் சரக்கைப் பதுக்கி வைக்கும் பிலிடிங்க் மாதிடி செங்குத்தாய் ஆறு அடுக்கில் இருந்தது. வாசலில் பஸ்ஸரை அமுக்குவதிலிருந்தே யோகா பயிற்சி ஆரம்பித்துவிட்டது. "ஹீ இஸ் நாட் இன் டுடே" என்று பதில் வர, ஸ்வாமி யோகா ஆள் இல்லை, ஒரு ஸ்பிரிச்சுவல் சயன்ஸ் என்று விளக்க, 'மூதேவி ஆறாவது மாடிக்கு ஏன்டா நாலாவது மாடி பஸ்ஸர அமுத்துற லிஃப்ட் வேலை செய்யலை மாடிப் படி ஏறியே சாவு ' என்று பதிலுக்கு அன்பாய் வழி சொல்லி ஆறாவது மாடிக்கு வந்தால் பத்துக்குப் பதினாலு ரூமில் போடப்பட்டிருந்த இருபது சேரில் ஒரே ஒரு பெண் மட்டும் ஓரமாய் பவ்யமாய் உட்கார்ந்திருந்தார். எங்கேயோ மறைவாக ஊதுபத்தி ஏத்தியிருந்தார்கள். "போன வாரம் பார்த்தப்போ கூட நல்லா சிரிச்சு பேசிட்டிருந்தாரே என்னாச்சி" என்ற சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி அந்தப் பெண் முகத்தில் சலனமே இல்லாமல் இருந்தார். நடு மையமாய் சுவாமிஜியின் புன்சிரிப்போடு ஆசிர்வதிக்கும் படம், சுவற்றில் ஒரு போஸ்டர் மற்றும் வால் கிளாக், ஓரமாய் ஒரு டேபிளில் சி.டி ப்ளேயர் என்று ரூம் பந்தா இல்லாமல் ரொம்ப அடக்கமாய் இருந்தது. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வருவார்கள் என்று புரிந்தது.

ஆரம்பிக்கும் நேரம் நெருங்க நெருங்க எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் வருகிற மாதிரி தெரியவில்லை. கரெக்ட்டாய் ஒரு மணிக்கு அந்தப் பெண் எழுந்து வாட்சைப் பார்த்துக் கொண்டே ஆரம்பிக்கலாமா என்று கதவைச் சாத்தினார். சாப்பிட்டு வந்திருக்கிறீர்களா என்று முதல் கேள்வி. ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாம லேட்டாச்சுன்னா காஸ் ஃபார்ம் ஆகிடும்ன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார் என்று சமாதானம் சொல்லி, இதற்கு முன்னால் நான் யோகா செய்தது இல்லை அதனால் எந்த விவரமும் தெரியாது என்று முதலிலேயே உண்மையை விளம்பினேன்.
கவலை வேண்டாம் இது மன அமைதிக்கான தியானம் மட்டுமே இங்கே உடல் சம்பந்தப்பட்ட யோகா பயிற்சி கிடையாது அது எங்கள் மெயின் செண்டரில் மட்டுமே (பர்சில் ஐநூறு ப்வுண்டும் உடலில் இரண்டு பவுண்டும் குறையும்). இங்கே கூட்டுப் பிரார்த்தனை மாதிரி வாரம் ஒரு நாள் மனதை ஒருமுகப் படுத்தும் தியானம் மட்டுமே. இது போல் லண்டன் சிட்டியில் பல இடங்களில் வெவ்வேறு நாட்களில் நடக்கும் என்று விளக்கமளித்தார். கையை தவம் செய்வது போல் வைத்துக் கொள்ளச் சொல்லி சுவற்றில் பல வண்ணங்கள் குவிகிற மாதிரி இருந்த ஒரு போஸ்டரை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்து விட்டு கண்ணை மூடி தியானம் செய்யச் சொன்னார். சி.டி.யில் தம்புரா லூப்பில் ஓட ஆரம்பித்தது. கண்ணை மூடிக் கொண்டேன். சாப்பாடு போடுவாங்கன்னு ஆன்லைன்ல போடலையே ...என்னத்த வெப்சைட் மெயின்டெயிண் பண்ணுறாங்க போன்ற லௌகீகக் கவலைகளுக்கு அப்புறம் கொஞ்சம் ஒருமுகப் படுவது மாதிரி இருந்தது. இரண்டே பேர் தான் என்பதில் கொஞ்சம் கூச்சம் கலந்த சங்கடம் இருந்தது. மெதுவாய் ஓட்டைக் கண் விட்டு பார்த்தேன் அந்தப் பெண் எதிரே இல்லாமல் என் வரிசையிலேயே அவரும் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார் என்று புரிந்தது. சைட் ஓட்டைக் கண் ஈஸியாய் கண்டுபிடித்துவிடுவார் என்பதால் அதற்கு மேல் முயற்சி செய்யவில்லை. ஒரு முகமாய் நிலைக்க கஷ்டப்பட்டது. அவர் பாப் கட் பண்ணியிருந்தாரா என்று டவுட்டு வந்தது.  அவருக்கு சம்பளம் உண்டா இல்லை பாவம் ஓசி காஜா என்று அவருக்காக மனம் விசனப்பட்டது. அப்படியே மெதுவாய் மத்தியானம் சாப்பிட்ட பொங்கல் மிளகு வாசத்தோடு ஓங்கரிக்க கொஞ்ச நேரத்தில் தியானம் வசப்பட்டது. யாரோ கண்ணைத் திறக்கலாம் என்று சொல்வது மாதிரி இருந்தது. இரண்டாம் முறை சொன்ன போது அவர் தான் என்று புரிந்தது.  தியானம் சல்ல்லுன்னு போய்ட்டு இருக்கும் போது வண்டிய சடக்குன்னு பிரேக் போட முடியாது பாருங்கோன்னு முகத்தை வைத்துக் கொண்டு மெதுவாய் கண்ணத் திறந்தால் அவர் சிடி ப்ளேயரை ஏறக் கட்டிக் கொண்டிருந்தார்.  கதவு திறந்திருந்தது.

அடுத்து எப்போ க்ளாஸ் என்று கேட்டேன். ஆன்லைன்ல அப்டேப் பண்ணுவோம் என்று முடித்துக் கொண்டார். உங்களுக்கு இந்த பயிற்சி பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்று நானும் முடித்துக் கொண்டேன். பதிவை எங்கே ஆரம்பிப்பது என்று மனதில் தெளிவு பிறந்திருந்தது.

16 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை எப்போதும் போல்,
தீபாவளி சிறப்பு பதிவு

Sethupathy said...

Superb !!!

Anonymous said...

Awesome...

Srinivasan, Bangalore

ரெண்டு said...

ஒரு வழியா மனச ஒருமுகப் படுத்திடீங்க .....

Thamira said...

ஒரே நாள்ல தியானத்தை சல்ல்லுனு விட்டீங்கன்னா.. நீங்க பெரிய ஆளுதான் ஓய்!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தியானம் ஈசிதான்!

viswa said...

After long gap,really rocking!

Madhu Ramanujam said...

அருமை! அப்புறம் அண்ணாச்சி...இப்படி தீவாளிக்கு ஒன்னு பொங்கலுக்கு ஒண்ணுனு எழுதாம நெறைய எழுதுங்க. என்னைக் கேட்டால் அந்த "எட்டு வீடியோக்கள்" + "மீசையில் உள்ள நரை" - இது ரெண்டிலும் செலவிடும் நேரத்தை நீங்க இங்க செலவு பண்ணலாம்.

shobana said...

Boss...idhu meditation illa... anga poi ukandhu thoongitu vandrukeenga :)

shobana said...

Boss...idhu meditation illa... anga poi ukandhu thoongitu vandrukeenga :)

chumma said...

what you are going through is called 'mid-life crisis'.

Dubukku said...

ராம்ஜி - நன்றி ஹை தல

சேதுபது - மிக்க நன்றி ஹை

ரெண்டு - ஹி ஹீ அப்பிடின்னு சொல்ல முடியாது :)

ஸ்ரீனிவாசன் - மிக்க நன்றி நன்றி ஹை

ஆதி தாமிரா - ஆமாம் ஓய். ஒரு ஒரு மணி நேரத்துக்கு :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் - ஆஹா நீங்க எக்ஸ்பேர்ட்டா இருப்பீங்க போல :)

Dubukku said...

விஷ்வா - மிக்க நன்றி சாரே

மது - ஹா ஹா ஹா :) :)

ஷோபனா - ஷ்ஷ்..... சத்தமா சொல்லாதீங்க கேட்டுறப் போறாங்க. இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் :)

சும்மா - ஆஹா...இது வேறயா...எல்லாத்துக்கும் வயச இழுங்க :P

க கந்தசாமி said...

welcome back to form

Anonymous said...

ஸ்வாமி.. எனக்கு இஸ்'சு இஸ்'சு என்று கேட்கிறது... உங்களுக்கு கேட்டுச்சா? - buspass

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்னய்யா, தியானம்னு தூங்கிட்டீரா?!?

Post a Comment

Related Posts