Friday, June 14, 2013

சுசி

ஊருக்குப் போனால் அம்மா கையால் சின்ன வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் ஒரு கட்டு கட்டிவிட்டு அடிக்கிற வெய்யிலில் தலைகாணியப் போட்டு சாய்ந்தால் அஹம் பிரம்மாஸ்மி அப்படியே அடானா ராகத்தில் அடைபடும். ஆனால் ரொம்ப நிலைக்காது. நாலு மணி நேரம் இரண்டு நிமிஷமாய் ஓடி சாயங்கால காப்பிக்கு எழுப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அன்றும் அப்படித் தான்.

டேய் எழுந்திருடா...ஊருக்கு வர்றதே கொஞ்ச நாள், அதுல பாதி தூங்கியே கழியறது. எழுந்திருடான்னா...யாரு வந்திருக்கா பாரு....சுசிடா

சுசி முன்னாள் முறைப் பெண் அல்ல, என்னுடய அம்மாவுடைய சித்தி பையன். சின்ன வயதில் மழலையில் சுந்தரத்தை அப்படி சுருக்கி கூப்பிட்டு சிக்குன்னு இருக்கிறது என்று எல்லாரும் அப்படியே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேலை அந்த வேலை என்று பார்த்துவிட்டு இப்போது கொஞ்ச வருடங்களாக ஏதோ க்ளியரிங் அண்ட் பார்வேர்டிங்கில் ப்ரோகரேஜ் பிஸினெஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்ல துடியான மனிதர். மும்பையில் கொஞ்ச நாள் இருந்ததால் ஹிந்தி தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள டிவி ஹிந்தி பட ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பார். இன்னமும் பிரம்மச்சாரி. பாவம் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. கொண்டார் கொடுத்தார் மாதிரி என்னமோ லண்டன் ராயல் வம்சாவளியில் மிகுந்த ஆர்வம் அவருக்கு.

டேய் என்னடா குயினோட புது நாட்டுப்பெண் எப்பிடி இருக்கா. என்னதான் சொல்லு டயானாவோட க்ரேஸ் இல்லை.

ஆமாமா உங்களுக்குத் தான் எவ்வளவு கவலை என்றாலும் விடமாட்டார். சின்னவன் ஹாரிக்கு எப்போ பார்க்கறாளாம் என்று நச்சரிப்பார்.

ஏன் மாமா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. உங்களுக்கே இன்னும் பார்த்து முடியலை ஜாதகத்த வேணா தாங்கோ ராயல் பேமிலில எதாவது வரன் இருக்கான்னு பார்க்கச் சொல்றேன் என்று நக்கலடித்தால் அவரும் சேர்ந்து சிரிப்பார். கல்யாண விஷயத்தில் அவருக்கு சுயபச்சாதபமே கிடையாது. அனுஷ்கா வேண்டாண்டா.. வாட்ட சாட்டமா இருக்கா போட்டோக்கு போஸ் குடுக்கக் கூட என்னால தூக்க முடியாது, அதான் இப்போல்லாம் சில்லுவண்டா வர்றாளே அதுல யாரையும் பாரேன் என்பார். எப்போதாவது தான் தண்ணியடிப்பார் என்றாலும் சின்னச் சின்னதாய் வரும் லிக்கர் சாம்பிள் பாட்டில்கள் சேர்ப்பதில் அலாதியான ஆர்வம். அதிலும் பேன்ஸியாய் இருந்தால் போதும் ரொம்பவே குஷியாகி விடுவார். எல்லாவற்றையும் ஷோகேஸில் தான் வைத்திருக்கார் ஒன்றைக் கூட திறந்து குடித்ததில்லை. சும்மா வைச்சு பூஜை செய்யறதுக்கு எதுக்கு உங்களுக்கு, அதான் இந்த முறை கொண்டு வரவில்லை என்று விளையாடினால் "என்னவோ பண்ணிட்டுப் போறேன் எதுக்கு உனக்கு இந்த நொர்நாட்டியம்?" என்று முகம் வாடி விடும்.

காலேஜ் அட்மிஷன் முதல் லிஸ்டில் என் பெயர் இல்லையென்றதும், காலேஜ் செக்ரட்ரியோட பி.ஏ என் ப்ரெண்டு தான் வா பார்க்கலாம் என்று உரிமையோடு கூட்டிக் கொண்டு போய்விட்டார். ரெண்டாவது லிஸ்டில் என் பெயர் இருக்கு என்று சொல்லியும் ரெண்டாவது லிஸ்ட் மெதுவா வரட்டும், இன்னிக்கு நல்ல நாள் எதுக்கும் இன்னிக்கே பீஸைக் கட்டிவிடுகிறோம் என்று அடம் பிடித்து என்னை சேர்த்துவிட்டு வந்த பிடிவாதம் இப்பவும் டெக்னாலஜி விஷயத்தில் வெளிப்படும். இமெயில் கம்ப்யூட்டரெல்லாம் வேப்பங்காய்.

மேட்டர் ஒன்னுமேயில்லை மாமா, இங்க பாருங்கோ இங்க க்ளிக் பண்ணி இங்க தட்டினா போய்டும்.ஏல்கேஜி பசங்களுக்கு சொல்லித்தராங்க. மூக்கு ஒழுகிண்டு இருக்கிற அரைக்கால் டிக்கெட்லாம் கம்ப்யூட்டர்ல கேம்ஸ் என்னம்மா விளையாடறாங்க தெரியுமா. நீங்க அந்த கால எம்.ஏ வேற, உங்களுக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்றாலும் கம்ப்யுட்டர் பக்கமே வரமாட்டார்.

எனக்கு இமெயில் அடிக்க ஜெராக்ஸ் கடை அனந்தலெக்ஷ்மி இருக்காடா. மேட்டர சொன்னாப் போதும் ரெண்டே நிமிஷத்தில தடதடன்னு தட்டி அனுப்பிடறா. அன்னிக்கு அரைமணிக்குள்ள க்ளையண்ட் அடிச்ச ரிப்ளையயும் கொண்டு வந்து தோ பாருங்கோ சார்ன்னு கைல குடுத்துட்டா.

அகால வேளைல அவசரமா மெயில் அடிக்கனும்ன்னா அனந்தலெக்ஷ்மி வீட்டுக் கதவத் தட்டுவேளா? அவ புருஷன் தட தடன்னு தட்டிட மாட்டானா?

டேய் இந்த இமெயில்லாம் இப்போத் தான், முன்னாடியெல்லாம் எட்டணா போஸ்ட் கார்ட் தான். அடேயப்பா இதுக்கு லேப்டாப்பென்ன, கையாலயே தட்றதுக்கு மெஷினென்ன...கேட்டா ஒரு லட்சம்ங்கிறான், ஒன்றரை லட்சம்ங்கிறான். வாங்கிட்டு ஓரமா உட்கார்ந்து நடிகையப் பார்த்துண்டு இருக்கான்.

இப்பவும் இருக்கே போஸ்ட் கார்ட், யூஸ் பண்ண வேண்டியதுதானே. எதுக்கு ஜெராக்ஸ் கடை அனந்தலெக்ஷ்மி?

போதும்டா வயசுக்கு ஒரு மட்டு மரியாதை கிடையாதா? அவன் உனக்கு மாமா, இன்னமும் என்ன சுசி வேண்டியிருக்கு. சுசி நீ இவன் வாயப் பிடுங்காத, இந்தக் கால பிள்ளைகளுக்கு எல்லாமே தங்களுக்குத் தான் தெரியும்ங்கிற நினைப்பு.... அதான் டீ.வில பளிச்சுன்னு காட்றானே எத்தனை பேர் ஏமாந்திருக்கா. துபாய்லேர்ந்து இமெயில்லயே காதலிச்சு இமெயில்லயே கட்டைல போய், கல்யாணம் பண்ணிக்க வந்தானே...என்னாச்சு எல்லாத்தையும் பிடுங்கிண்டு விட்டா, ஒரே சமயத்துல எட்டு பேர காதலிச்சு ஏமாத்தி இருக்கா...- இமெயில்லயே, போலிஸ் என்ன பண்ணும்? கேட்டா எல்லாமே இமெயில் கீமெயில் தான். விட்டா கம்ப்யூட்டர்ல பிரசவமே பார்ப்பா போல இருக்கு

பார்த்தாளே..ஷங்கரோட படத்துல நண்பன், டீவில போட்டானே, அக்கா எல்லாத்தையும் மறந்துடுவா, சம்சாரி. அதில்லைடா இதெல்லாம் பைசாக்கு பிரோஜனம் இல்லை. நாங்க பார்க்காததா, எவ்வளவு நாளா எக்ஸைஸ்ல லைசன்ஸுக்கு நாயா பேயா அல்லாடறேன், பி.வி.வெங்கடரமணன் ஒரு கையெழுத்து போட்டா போதும் உடனே சாங்கஷன் ஆகிடும். அவரப் பார்க்க முடியறதா? எல்லா பார்மாலிட்டியும் முடிச்சாச்சு. அங்கயும் இமெயில் இருக்கே யார் யூஸ் பண்றா? அனந்தலெக்ஷ்மி அனுபிச்சா...ஆளே இல்லைன்னு திரும்ப வந்துடுத்தாம். நீங்க நேர்ல போங்கோ சார்ன்னுட்டா. போனா அந்த பாரம் தப்பு  இந்த பாரம் கோணல், அவன் அட்டெஸ்ட் பண்ணனும் இவன் கிட்டெஸ்ட் பண்ணனும், ஆபிஸர கவனிக்கணும், ப்யூனுக்கு சலாம் போடணும். உட்கார்ந்து கம்ப்யூட்டர்ல மூனு சீட்டு விளையாடறான். போங்கடான்னு வந்துட்டேன். ப்ரோக்கரேஜ் போறும்பா எனக்கு.

அது அப்படியில்லை சுசி, அந்த ஜெராக்ஸ் சுந்தரி இமெயில் அட்ரெஸ் தப்பா அடிச்சிருப்பா

என்னடா இது சுந்தரி கிந்திரின்னு அசிங்கமா பேசிண்டு, சுசி இந்தப் பேச்சு போதும் நிப்பாட்டுங்கோ. சுசி, நீ செண்ட் பாட்டில வாங்கிக்கோ, ரொம்ப சின்னதா கொண்டு வந்திருக்கான் பெருசா கேட்கப்பிடாதோ இது உன் அக்குளுக்கே காணாதே.

செண்ட் பாட்டிலா...நான் எங்க...ஓ ஆமா ஆமா நான தான் கேட்டேன். ஒரே வெய்யிலா இருக்கே அதான் சின்னதா கேட்டேன். டேய் மாமாக்கு கொண்டுவந்திருக்கியா. எடு பார்போம் இதென்ன ஜேக் டேனியல் செண்டா...

அதற்கப்புறம் சுசியை இமெயிலுக்குள் இழுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. என் முயற்சியில் ஒரு சுயநலம் இருந்தது. ஆனால் மனிதர் சிக்கவே இல்லை, மூன்று மாதங்கள் முன் வரை. அதுவும் ஒரே நாளில்.

மாமா நீங்க நேரா எக்ஸைக்கு போய் கலக்க்ஷன் டிப்பார்ட்மெண்ட்ல சந்திரசேகர்ன்னு ஒருத்தர் இருப்பார் பாருங்கோ. ரெவன்யு இண்டெலிஜன்ஸ்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி தான் மாத்தலாகி வந்திருக்கார் சீனியர் ரேங்க். நான் எல்லாம் பேசியாச்சு. bonafideலாம் எடுத்துண்டு போங்கோ. ட்ரேடிங் ஹிஸ்டரியையும் எடுத்துண்டு போங்கோ மத்ததெல்லாம் அவர் பார்த்துப்பார்.

குறி வைத்து அடித்த காரம் போர்ட்டு மாதிரி விழுந்தது.

டேய் சந்திரசேகர் ரொம்ப தங்கமான மனுஷன்டா என்ன செல்வாக்கு தெரியுமா. மூனே வாரத்துல டக்குன்னு பேப்பர்லாம் மூவ் ஆகறது. உன்னப் பத்தி பெருமையா சொன்னார். ஆன்லைன்ல தான் பழக்கமாமே. பார்த்ததே இல்லையாமே. ஊரப் பத்திலாம் எழுதறன்னு சொன்னார். நீ சொல்லவே இல்லியே. என்னமோ ஒருத்தருக்கொருத்தர் கமெண்ட்லாம் பண்ணிப்பேள் ஓட்டு போடுவேள்ன்லாம் சொன்னார், எனக்குப் புரியலை. ஆனா கத்துக்கனும். எல்லாம் சொல்லித் தா. ரொம்ப தாங்க்ஸ்டா.

சே சே என்ன மாமா இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்லிண்டு. எவ்வளவு செஞ்சிருக்கேள் எனக்கு

கெட்டிக்காரன் டா. நிமிஷமா சாதிச்சுட்டியே. இந்த ஊருக்கு மாத்தலாகி வர்றேன்னு ஏதோ போட்டாராம் நீ தான் ஆன்லைன்லயே அவ்வளவு உதவியும் செஞ்சியாம். இப்படித் தான் இருக்கணும். அப்புறம் அடுத்த தரம் நீ வரும் போது ஒரு நல்ல லேப்டாப் ஒன்னு வாங்கிண்டு வா. அப்பிடியே நல்ல இமெயிலும் ஒன்னு செட்டப் பண்ணனும், என்ன செலவானாலும் பரவாயில்ல

".............."

என் முயற்சியில் ஒரு சுயநலம் இருந்தது. எனக்கும் கூடுதலா ஒரு லைக்கும் கமெண்ட்டும், வோட்டும் தேறும் :)

28 comments:

Anonymous said...

//என் முயற்சியில் ஒரு சுயநலம் இருந்தது. எனக்கும் கூடுதலா ஒரு லைக்கும் கமெண்ட்டும், வோட்டும் தேறும் :)//
LOL

Anonymous said...

good post

middleclassmadhavi said...

கூடுதலா ஒரு லைக்கும் கமெண்ட்டும், வோட்டும் தேறும் - athaRku ivvaLavu kashthappada vEndiyirukku!! :-)) nice reading!

sasikalasugavanam said...

Super!!eppavum pola thaniya vizhunndhu vizhundhu siruchu paithiyam madhiri (mathavanga engalai) paaka vechuteenga !!! Very very humourous!,, sasisuga203@yahoo.co.in

கார்க்கிபவா said...

:))))))))))))))))))))))))

தல தலதான்

Anonymous said...

sozhiyan kudumi summa adumaa .. like and comment kaga epperpatta uzhaippu ... lol. You could bring that Susi character to life. Paavai

ஒன்னும் தெரியாதவன் said...

எனக்கு என்னமோ உம்மை பார்த்தல் ஒரு சகுனி டச் தெரியுது தல

Anonymous said...

சுசிyummmm :) as fun as always!

Subhashini said...

Super Post Thalai

Anonymous said...

super Renga!! Especially the dialogues..

Prabhu

Anonymous said...

Oru latcham kuduthu laptop vaangi athula nadigai padam paakraan.....chance eh illa ..

deepa

Anonymous said...

romba sumaar..with that blocks its you should gives us pound to read..

Anonymous said...

sumar dan indha post. sorry. we expected some good climax. {susi getting married(?????!!!)to some software lady or so}

Nat Sriram said...

பொறி..மெயின் மேட்டர் விட இந்த சைடு பன்சஸ் (அக்குளுக்கே போறாதே) இன்னபிற எல்லாம் ஏ ஒன் :)))

கார்த்திக் said...

அருமை தல :)

Anonymous said...

Why cant u make all these blogs as a book and publish it? Ur way of writing is remarkable.
Ivlavu hasyama eluthrathu romba kashtam...Ithellam puthagama vantha....thiruppi thiruppi eduthu vasikarathuku easy a irukum. Also if it comes in a book format, my dad who likes reading but not in labtop can read it and enjoy. Whenever i read ur blog, u remind me of Sujatha's "Srirangathu thevathaigal".

Ranjini

Anonymous said...

boss, eik technical comment - "chrome book" superaa irukku ... super cheap too ... good for just email and blog and FB comments! :) Google documents are fabulous ... I like the whole package of this chrome book idea ... aapka sasikarKaL may like it! :)

ram_mark20 said...

வணக்கம் டுபுக்கு....நான் முன்பு 'டெல்லியிலிருந்து ராமகிருஷ்ணநாக 'உங்கள் பதிவுகளை படித்து, commentugal எழுதி பின்பு 'சென்னையிலிருந்து ராமகிருஷ்ணனாகி தற்போது 'பெங்களூரிலிருந்து ராமகிருஷ்ணன்' ஆகிருக்கேன் ....கிட்டத்தட்ட 6-7 ஆண்டு காலமாக உங்களுடய படைப்புகளை படிக்காத பாவி ஆகிவிட்டேன் !!!....நிறய நாட்கள் கழித்து உங்களுடய வலைப்பதிவில் எழுதிகிறேன்....ரொம்ப சந்தோஷமா இருக்கு....ஆத்துல எல்லாரும் சௌக்யமா தானே இருக்கா ? ......கடந்த 6 ஆண்டுகளில் ஒரு 6-7 தடவை லண்டன் வந்தேன்...ஆனால் உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை....மறுபடியும் கூடிய சீக்ரம் லண்டன் வருவேன் என்று நினைக்கிறேன்...இம்முறை கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்கிறேன்....

உங்களுடய 'மினி ஸ்கர்ட்' மற்றும் 'சுசி' பாதிப்பை படித்தேன் ...நன்றாக இருந்தது....உங்களுடய எழுதும் பாணி அப்படியே அழகு குராயாமல் இருக்கு........ஆனால் இதுவரை 'ஜோள்ளிதிரிந்த காலம்' ஈடாக எதுவும் இல்லை....6 ஆண்டுகள் முன்பு அதை டெல்லியிருந்தப்போ படிதத்து இன்னமும் நெஞ்சில் பூத்து இருக்கிறது.....அதிலும் உங்கள் மனைவியின் 'யோவ் புருஷா...எவ்வளோ விஷயம் அமுக்கல்ஸ்' கமெண்ட் இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சை புன்னகைக்க வைக்கிறது....உங்களுடய அடுத்த ஜோள்ஸ் படிக்க காத்திருக்கிறேன் ......

.......'பெங்களூர் ராமகிருஷ்ணன்'

gayathri said...

You have such a skill of expressing very normal things in the most hilarious way. Ur posts are instant relaxers. :) :)

Unknown said...

Good post as always in your usual style. Running out of superlatives to appreciate your writing Mr. D. I have come here and checked every single day in the past month to see if you have posted anything new. 2 months is a long time. Please post soon (miratum tone !) Lakshmi

Anonymous said...

Anbulla dubukku
2 maasam ayiduchu,
Innoru post please?
Natpudan,
Vikram Balaji

Kavitha said...
This comment has been removed by the author.
Kavitha said...

Laptop vaangi, mail-leye anuppalame? Appurama email setup panna oru bill pottu collection kooda pannalam :)

Unknown said...

டுபுக்காரே நியாயமா நியாயமா ? நீங்க இங்க எழுதி மூணு மாசத்துக்கு மேலே ஆச்சுன்னு பிரக்ஞை இருக்கா இல்லையா ? என்ன ஒரு பொறுபில்லாத்தனம் ! நான் தினமும் இங்கு வந்து அட்டென்டன்ஸ் போட்டு போயிண்டிருக்கேன், போஸ்டைத்தான் காணோம். எனக்கு கை கால் எல்லாம் விலுக் விலுக்குன்னு இழுத்துக்கொண்டிருப்பதால் இதை தந்தி போல் பாவித்து, உடனடியாக பதிவு போடவும்.
லக்ஷ்மி

Dubukku said...

சபையோரும் பெரியோரும் என்னுடைய பொறுப்பில்லாத்தனத்திற்கு என்னை மன்னிக்கனும். நடுவில் கொஞ்சம் நிறையவே வேலைகள் வந்துவிட்டன. சீக்கிரம் (அடுத்த ரெண்டு நாட்களுக்குள்) அடுத்த போஸ்ட் போடுகிறேன். கொஞ்சம் தயவு செய்ய வேண்டுகிறேன்.

Dubukku said...

Anon1 & Anony2 - மிக்க நன்றி

மிடில்க்ளாஸ்மாதவி - அத சொல்லுங்க. மிக்க நன்றி :)

சசிகலா - மிக்க நன்றிங்க உங்க ஊக்கமான கமெண்டிற்கு

கார்கி - அஹம் அஹம் ...:))) நன்றி தல (நக்கல் விடற மாதிரியே தோனுதே எனக்கு....ஏன்? :))) )

பாவை - மிக்க நன்றிங்க. நிறைய பேர் நிஜ லைஃப்ல impactfulaa இருக்காங்க இல்ல :)

iliyas - இதுல சந்தேகம் வேறயா உங்களுக்கு ;)

Kookaburra - thank you :)

Dubukku said...

Subhashini - thank you mam

Prabhu - நன்றி நண்பரே

தீபா - :) நன்றி

அனானி - ஹலோ சுமார் இல்ல கேவலமா இருக்குன்னு கூட சொல்லிக்கோங்க ஆட்சேபனையே இல்ல ...ஆனா அதுக்காக பவுண்ட்லாம் குடுக்க முடியாது :))) நல்லாத்தேன் போடுறீங்க பிட்ட பவுண்ட் தேத்த :))

அனானி - சுசி இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலையே :)))

நட்ராஜ் - மிக்க நன்றி ஹை

கார்த்திக் - நன்றி தல

ரஞ்சனி - ஆமா நீங்க நர்மதா கிட்ட சமீபத்துல பேசினீங்களா என்ன ? கைக் காச போட்டு புக்கு போடற அளவுக்கு இன்னும் வளரலங்க நான் :)) ஆனா உங்க அன்பு எனக்கு புரியுது. மிக்க நன்றி. ஹலோ பப்ளிஷர்ஸ் கேக்குதா ....இந்த சமுதாயத்திற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க :P

Dubukku said...

Kookaburra - ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். நானும் ஒன்னு வாங்கலாமானு யோசனை. பார்ப்போம். மிக்க நன்றி பார் தி ரெக்கமெண்டு :)

ராமகிருஷ்ணன் - ஆஹா வாங்க சார். என்னாது 6-7 தடவை லண்டன் வந்தீங்களா...அடுத்த தரம் கண்டிப்பா சொல்லுங்க சந்திப்போம். ஜொள்ஸ் - :))) ம்ம்ம்ம் அதுக்கு குறைச்சலில்லை பார்ப்போம் :)) ரொம்ப சந்தோஷம் நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கமெண்ட் பார்த்தது.

காயத்ரி - மிக்க நன்றிங்கோவ் உங்க ஊக்கமான கமெண்டிற்கு

விக்ரம் பாலாஜி - ஸ்டாட்டிஸ்ல அடிக்கிறீங்க :) நீண்ட இடைவேளைக்கு மன்னிப்பு கோருகிறேன். பாருங்க அடுத்த பதிவு போட்டாச்சு

பொயட்ரீ - :))) இந்த ஐடியா நல்லாயிருக்கே :))

லஷ்மி - தயவு செய்து மன்னித்துவிடுங்கள். ஆமாம் கொஞ்சம் நீண்ட இடைவெளியாகிவிட்டது. இருந்தாலும் இந்த பேஸ் ஹிட் கவுண்டை குறையாமல் பார்த்துக் கொண்டதற்கு நிறைய கடமைப்பட்டுள்ளேன் உங்களை மாதிரி நண்பர்களுக்கு.

என்னை எழுப்பி விட்டதற்கு உங்களுக்கும் விக்ரம் பாலாஜிக்கும் மிக்க நன்றி

Post a Comment

Related Posts