ரிலீஸாகி பத்து வருடங்கள் கழித்துப் பார்த்த சலங்கை ஒலியில் "இது கேமிரா ..இது டப்பா" என்று கண்ணாடிப் பையன் காமெடி செய்துகொண்டிருந்த போது, குண்டலம் அணிந்துகொண்டிருக்கும் ஜெயப்பிரதாவையே பார்த்துக் கொண்டிருந்ததால் காமிரா அவுட் ஆஃப் போகஸாகிவிட்டது. பின்னொரு காலக்கட்டத்தில் எப்பவோ ரிலிசான டிக் டிக் டிக்-ல் தலைவர் மாதவியையும் ஸ்வப்பனாவையும் சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்ததைப் பார்த்த போது தான் எனக்கு போட்டோகிராஃபி மேல ஒரு `இது` வந்தது. எனக்கு இருந்த அளவிற்கு எங்க மாமாவிற்கு கலையார்வம் போதாது. மாதவியையும் ஸ்வப்பனாவையும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணங்கள் எல்லாம் காமிரா வாங்க அவருக்கு போதுமானதாக இல்லை. "சித்ரா ஸ்டியோல பத்து ரூபாய் குடுத்தா நிக்க வைச்சு ஜோரா எடுப்பானே" என்று தகித்துக் கொண்டிருந்த கலைத் தணலில் தண்ணியை ஊத்தி விட்டார். எங்க ஊர் சித்ரா ஸ்டுடியோவில் குண்டாவை கவுத்தி வைச்சது மாதிரி இருக்கும் பெரிய லைட்டில் கண்ணைப் பறிக்கிற வெளிச்சத்த்தில், கஞ்சி போட்டு உடம்பை அயர்ன் செய்த்த மாதிரி நிற்கச் சொல்லுவார்கள். "கேமிராவப் பாருங்க"ன்னு எங்கிருந்தோ குரல் வரும். கண்ணுல அடிக்கிற வெளிச்சத்துல கண்ணே திறக்க முடியாது தோராயமாய் ஒரு திசையப் பார்ப்பேன். "அம்பி சோக்கா வந்திருக்காரே" என்று ஓனர் மெச்சிக் கொண்டு, பவுடர் அப்பிய கன்னத்தில் எண்ணெய் ஓரமாய் வழிந்துகொண்டிருக்கும் போட்டோவை கொடுத்து பத்து ரூபாய் கல்லாவில் பார்த்துவிடுவார். போட்டோ எடுப்பதற்கே இந்த பாடு என்றால் கேமிராவாவது கோமியமாவது. "யே கேமிரா தேக்கோ"ன்னு யாராவது ஊரில் இருந்து செழிப்பாய் கேமிராவோடு வந்து ரோல் முடிந்த பிறகு கொடுத்தால், வெறும் பம்மாத்து ப்ளாஷ் போட்டு அடுத்த வீட்டு ஆட்டுக்குட்டியை எடுப்பேன். ஆட்டுக்குட்டியும் கேமிராவில் ரோல் இல்லை என்பது தெரியாமல் ரொம்ப சின்சியராய் போஸ் கொடுக்கும்.
இங்கிலாந்து வந்த புதிதில் பேச்சுலர் நண்பர்களுக்கு பர்ஸில் தெனெவெடுத்து எஸ்.எல்.ஆர் வாங்கலாம் என்று பேச்சு ஆரம்பமாகியது. ஆஹா அது தென்காசியிலிருந்து கடையம் வழியாக போகிற ரூட்டாச்சே, அந்த பஸ்ஸுல அவ்வளவு கூட்டமே வராதே என்று நான் குழம்பி கூர்ந்து கவனித்த போது தான் எஸ்.எல்.ஆர் என்பது கேமிரா சம்பந்தப் பட்ட விஷயம் என்று தெரிய வந்தது. உடனே பாழாய்போன கேமிரா மனசு டிக் டிக் டிக்ன்னு துடித்து " டேய் இந்த எஸ்.எல்.ஆர் டெக்னாலஜி இருக்கே...அதுக்கு முன்னாடி ஜப்பான்ல கே.கே.எஸ்.எல்.ஆர்-ன்னு ஒருத்தர் இருந்தார்.."ன்னு நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். அது டிஜிட்டல் டெக்னாலஜி பிரபலாமாகாத சமயமாகையால் சாதாரண கே.கே.எஸ்.எல்.ஆர் தான் இருந்தது, ஆனால் அதுவே யானை விலை குதிரை விலை. பேச்சுலர் நண்பர்கள் அதுல ஒரு கிலோ போடு இதுல ரெண்டு கிலோ போடுன்னு வாங்கிக் கொண்டிருக்க, நான் பர்ஸுக்கு அடக்கமாய் ஒரு மினோல்டா வாங்கிக்கொண்டேன். அத்தோடு போச்சா... கேமிராவை வைக்க ஒரு பை, அதற்கு ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரி, துடைக்க ஒரு துணி என்று டிக் டிக் டிக் பட்ஜெட் எகிறிவிட்டது. என்னம்மோ பிறந்ததிலிருந்தே கேமிராமேன் மாதிரி முதல் ரெண்டு ரோலை வாங்கி வந்த ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டேன். ரோலை கழுவப் போன போது அவர்கள் கேட்ட தொகையைக் கேட்ட பிறகு தான் "ஒரு வேளை தலைவர் டிக் டிக் டிக்-ல் வெறும் ப்ளாஷ் மட்டும் தான் போட்டு எடுத்திருப்பாரோ" மண்டையில் உறைத்தது. அதற்கப்புறம் ஒரு சாதரண டிஜிட்டல் கேமிரா வாங்கி கொஞ்சம் கட்டுப்படியாயிற்று.
இந்த எஸ்.எல்.ஆர் உரிமையாளர்கள் சங்கம் தொல்லை தாங்க முடியாது. கிட்டார் வைத்திருப்பவர்களுக்கும் எஸ்.எல்.ஆர் வைத்திருப்பவர்களுக்கும் குரங்குத்தனத்தில் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கும். நின்று கொண்டு எடுப்பார்கள், படுத்துக் கொண்டு எடுப்பார்கள், திருப்பதிக்கு நேர்ந்து விட்டது மாதிரி உருண்டு கொண்டு எடுப்பார்கள். நிறைய பேர் கையில் என்னமோ மெட்டல் டிடெக்டர் வைத்திருப்பது போல் கல், மண், மரம், செடி கொடி புழு பூச்சி எல்லாத்தையும் எஸ்.எல்.ஆர் லென்ஸ் வழியாகத் தான் பார்பார்கள். குழந்தைகள் மூக்கு ஒழுகினால் துடைக்க விடமாட்டாகள். ஊரில் ஒரு தாத்தா பாட்டி தேமேன்னு உட்கார முடியாது. அவர்கள் பராக்க பார்ப்பதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு நூறு லைக்காவது பார்த்துவிடுவார்கள். ஜூம் லென்ஸ் வேறு வைத்திருந்தார்களானால் போச்சு. ஜூம் லென்ஸ் வழியாக சந்திர மண்டலத்திலேயே நிலத்தடி கச்சா எண்ணையை கண்டுபிடித்து விடுவார்கள். போதாக் குறைக்கு நாம வேற லூசு மாதிரி "எங்கயோ போயிட்டீங்கண்ணே"ன்னு பார்த்துக்கொண்டிருப்போம். "ஏரோப்பிளேன் மாதிரி இவ்ளோ பட்டன் இருக்கே..இதுல போட்டா பிடிக்க எந்த சுவிச்சண்ணே அமுக்கணும்"ன்னு கேட்டீர்களேயானால் அவர்களுக்கு ஜிவ்வுன்னு எகிறும் பாருங்கள். "ஆக்ச்யுவலி இந்த போகல் லென்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ் பண்ணி ஷட்டர் ஸ்பீட அட்ஜெஸ்ட் பண்ணினா..." என்று ஜார்கன் போட்டு உங்களை ஒரு போட்டோ எடுத்து பிரேம் பண்ணி மாலை போட்டுவிடுவார்கள்.
ஹீ ஹீ...இவ்வளவு பெருமையா இவங்களைப் பத்தி எதுக்கு சொல்றேன்னா...நானும் சமீபத்தில் மீண்டும் பித்து தலைக்கேறி டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் வாங்கி உள்ளேன். மேற்கூறிய குரங்குத் தனங்களின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். அதுல பாருங்க கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த அந்த ரெண்டாவது படத்துல போகல் லெந்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ்......ஹலோ ஹலோ...வெயிட் நெசத்துல எனக்கும் அதப் பத்தி ஒன்னும் தெரியாதுங்கோவ்...
30 comments:
தலைவரே உங்க ஃபோட்டோ பித்து தலைகேறியதால் எங்களுக்கு ஒரு பதிவும் மூன்று நல்ல படங்களும் கிடைத்தன. முதல் படம் அபாரம். முன்னரே உங்களது ஷார்ட் ஃபிலிம் ஒன்றில் உங்கள் குழந்தைகளை பார்த்திருக்கிறேன். அவர்களா இவர்கள்? குழந்தைகள் வேகமாகத்தான் வளர்கிறார்கள்.
ஹை... முதல் வடை எனக்கா?
சரி சரி போகல் லென்த குறைச்சு, DOF-அ கூட்டி, வொயிட் பேலன்ஸ் பண்ணி, ஷட்டர் ஸ்பீட அட்ஜெஸ்ட் பண்ணி என்ன ஒரு சூப்பர் படம் எடுங்க......
சரி, இன்னிக்கு மேட்டரை கவனிப்போமா?
அருகாமை - நோ நோ. அருகில்/ நெருக்கத்தில் போதுமே.
கண்ணம் - கன்னம்
எண்ணை - எண்ணெய்
மேற்கூரிய - அது என்ன ஈட்டித்தலை குரங்கா? மேற்கூறிய
எரோப்ளேனைப் போனால் போகுதுன்னு விடறேன்.
(அந்த முறுக்கு பார்க்க நல்லா இருக்கு. சாப்பிட எப்படி இருந்ததுன்னு கேட்டு உனக்குத் தொந்தரவு தரலை)
SathyaPriyan - மிக்க நன்றி நண்பரே. ஆமாம் அவர்களே தான்...:)) ஆமாம் வளர்ந்துவிட்டார்கள்.
உங்கள ஒரு படம் எடுக்கணுமா...ஆஹா எலி மாட்டிக்கிச்சேய்ய்ய்ய்ய் :))) வாங்க வாங்க
கொத்ஸ் - ஐயா நீரே புலவர் !!!! இதே மாதிரி பதிவுக்கு பதிவு திருத்தி என் தமிழைக் கொஞ்சம் காப்பாற்றவும். அருகாமை - பாடத்துக்கு மிக்க நன்றி. கன்னம் என்னம்மோ சப்கான்ஷியசா இப்படி அடிக்கிறேன் தவறை மாற்றிக்கொள்கிறேன். மற்றவை கம்பீட்டர் மிஸ்டேக்க்க்க் :)))). முறுக்கு சூப்பாரா இருந்தது !! திருத்தியதற்காக அடுத்த தரம் வரும் போது ரெண்டு குடுக்கறேன் ;)
எண்ணெய்யும் கற்றுக் கொண்டேன் நன்றி.
படம் நல்லாத்தான் வந்திருக்கு. கேமிரா கற்று கொள்ள எனை அணுகினால மாதம் நூறு யூரோ மட்டுமே சார்ஜ் எப்படி வசதி
he he நகைச்சுவை..
ஓய்,
கண்ணன் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்கிறார்..முறுக்கும், திராட்சையும் முழிக்கின்றன..நீர் எப்படிப்பட்ட ஆள் என்பது விளங்குகிறது...
பெரும்பாலும் பல பதிவுகளில் கொத்ஸ் செய்யும் வேலையைச் செய்யும் நான் உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது கவனம் அடித்துக் கொண்டு போய் விடுகிறது..
இனிமேல் களத்தில் இறங்குகிறேன்..
கபர்தார் !
அப்புறம் டிஜிட்டல் எஸ்எல்ஆர் கூட இல்லாமல்தான் மினி சினிமா எல்லாம் வந்ததா? :))
It should be Sony alpha DSLR, am I correct?
நீங்கள் கூறிய அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களாக விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் என் மகன் ரிஷி செய்து கொண்டு இருக்கிறான். என்ன எங்களை மட்டும் படம் எடுக்கவே மாட்டான். பணம் கொடுத்ததற்கு தண்டனை போலும்.அந்த கேமிரா வைக்கவே 3500 ரூபாய்க்கு ஒரு பேக் வாங்கினான் பாருங்கள் நிஜமா அரண்டு போய் இருக்கிறேன்.
எனக்கும் எஸ்.எல் ஆர். வாங்க வேண்டும் என்ற ஆசையை தண்ணி ஊத்தி அனைத்து வைத்திருந்தேன், மீண்டும் பத்தவச்சிட்டீங்க.
//எங்க ஊர் சித்ரா ஸ்டுடியோவில்//
அப்ப நீங்க தின்னவேலியா? :-))))
இப்பல்லாம் கல்யாணத்துல போட்டோகிராபர போட்டோவே எடுக்க வுட்றதில்ல...ஆளாளுக்கு கேலக்ஸி,ஐபோனுன்னு வச்சிகிட்டு எங்கள மறிச்சிகிட்டு நிக்கறாங்க...நீங்க சொன்னதெல்லாம் அந்தக்காலம். :) எனிவே..உங்க புகைப்படங்களில் ஒரு கலையார்வம் தெரியுது.க்ளிக்குங்க....
நானும் வாங்கிட்டேன்(ஒரு மாசம் ஆச்சு). படம் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா படத்தை வெளியே போடுறளவுக்கு எல்லாம் தைரியம் இன்னும் வரலைங்க
டேய் இந்த எஸ்.எல்.ஆர் டெக்னாலஜி இருக்கே...அதுக்கு முன்னாடி ஜப்பான்ல கே.கே.எஸ்.எல்.ஆர்-ன்னு ஒருத்தர் இருந்தார்.."ன்னு நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
அம்பை சித்ரா ரவி ஸ்டுடியோக்கள்
தாலுகா ஆபிஸ், ஆர்ச்
கண் முன்னே வந்தன
Looks like you're getting back to your old form Renga. And I think you've never made two posts in such a short duration.
the first foto with (your?) children looks very colorful. what is the make/cost of the digital SLR?
முறுக்கு (கட்டுரை மாதிரியே) அருமை! அப்படியே அடுத்து கொழுக்கட்டையையும் கலை நயத்தோட எடுத்துப் போடுங்க!
சூப்பரேய்!
மேனுவல் மோட்ல எடுங்க!
இதெல்லாம் சரி, என்ன காமிரா ஸார் இது...
Nalla Padam :)
போட்டோ போட்டு போஸ்ட் போட்டுட்டேன்னு சமாதானம் சொல்ல வழி பண்ற மாதிரி இருக்கே ... போட்டோ கூட போஸ்டும் போடணும் ...
எல்லாம் சரி.. அந்த கால்வாசி கால்(கள்) போட்டோவில்.. கீழே நடுநாயகமாக (கடிகார எண் 6ஆம் பொஸிஷன்) இருக்கும் கால் உங்களுடையதா? அந்தக்கால்தான் சுண்டுவிரலில் மிதிபடுகிறது...
எல்.கே - ஆபர் நல்ல படம் எடுக்கிறதுக்குமா? :P
சமுத்ரா - :))
அறிவன் - காலக் காட்டுமய்யா. நீரே தீர்க்கதரிசி. இப்போல்லாம் கிருஷ்ணஜெயந்தின்னா முறுக்கு பட்சணங்கள் தான் நியாபகத்து வருது கிருஷ்ணன் அவுட் ஆப் போகஸாகிடுறார்ன்னு சொல்லத் தான் அப்படி. நீங்க ஒருத்தராவது கண்டுபிடிச்சீங்களே :))
பிழை திருத்தம் - உங்கள் கொட்டு எனக்குத் தேவை
உதய் - இல்லீங்க நான் வாங்கினது Nikon D3200
அமுதா - :))) //என்ன எங்களை மட்டும் படம் எடுக்கவே மாட்டான்// நீங்களே முன்னாடி போய் மறைச்சிக்கிட்டு நின்னாத் தான் உண்டு..குடுத்த காசுக்கு ரெண்டு போட்டோ எடுத்துக்கோங்க போங்க :)))
கும்மாச்சி - ஹீ ஹீ ஏதோ என்னால முடிஞ்சது :))
ஹுஸைனம்மா - ஆமாங்கோவ :))))) நீங்களும் நம்மூர் தானே :))
சேலம் தேவா - அண்ணாச்சி உங்கள காயப் படுத்திட்டேன்னா மன்னிசிடுங்க. சும்மா டமாஸ் தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்..மாப்ளையவே மறைச்சிடறாங்க
இளா - அப்படி போடு..சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க தல
ராம்ஜி - :)) அதே அதே மிக்க நன்றிங்கோவ்
மது - :))) திரும்ப அடிக்கடி எழுதனும்ன்னு முயற்சி செய்யறேன். கொஞ்சம் இல்ல நிறையவே டச் விட்டுப் போச்சு. ஸ்பீடு பிடிக்க கொஞ்சம் டயம் ஆகும் பொறுத்துக்கோங்க
அனானி - மிக்க நன்றி. நான் வாங்கினது Nikon D3200.Cost nearly £600
பொன்ஸ் - மிக்க நன்றிங்கோவ். நீங்க சொன்னீங்கன்னு கொழுக்கட்டை செய்ய சொல்லி இருக்கேன். ரொம்ப டேங்க்ஸ்ங்க
டைனோ- மிக்க நண்றிங்கோவ். சிலது மேனுவல் மோட் தான் :)
Essex சிவா - Its Nikon D3200
பொயட்ரி - மிக்க நன்றி
பாவை - மொபைல்ல பார்த்தீங்களா? இவ்ளோ பெரிசா கூட பதிவும் போட்டிருக்கேன் பார்க்கலையா :)))
இராமச்சந்திரன் - எஸ்ஸூ :))
இராமச்சந்திரன் - எஸ்ஸூ டிடெக்ட்டிவ்யா நீர்:))
After a long silence, suddenly it is 'raining' posts :-) vecha kudumi saracha mottai :-) I was surprised to see two posts in such a short time. Do keep up this frequency ! Nice one in your usual satirical style. good photos. lakshmi
ரொம்ப நாள் கழிச்சு சரி ஃபார்ம்ல எழுதிருக்கீங்க..
வெல்கம் பேக் டுபுக்கு!
உங்க பதிவுகள பல வருஷமா படிச்சிருக்கேன், நொந்து நூலான சமயங்கள்ல உங்க ஆர்கைவ் எல்லாத்தையும் தேடித்தேடி மேஞ்சிருக்கேன் (ஒரு ஆறுதலுக்கு தான்) ஆனா இதுதான் நான் போடுற முதல் கமெண்ட். எனக்கு ரொம்ப பிடிச்ச சமாச்சாரத்த (அதான் Photography) எழுதுனதுனாலயான்னு தெரியல. You have made me laugh, smile and feel light at heart several times. வாழ்த்துக்கள் & நன்றி!!
- ரமணன்
சொல்ல மறந்து விட்டேன்...அந்த ஒற்றைக் கால் கொலுசு படத்திற்கே அழகு!
|| முறுக்கு பட்சணங்கள் தான் நியாபகத்து வருது ||
ஞாபகம்..
பல மக்கள்ஸ் நியாயத்தை, ஞாயம் என்றும் ஞாபகத்தை நியாபகம் என்றும் எழுதவது ஏன்???? #டவுட்டு.
அறம், நினைவு இன்னும் பெட்டர் !!!
Post a Comment