Sunday, September 02, 2012

மயிருலு

மு.கு - மஞ்சள்,நாதஸ்வரம்,பசுமாடு போன்ற மங்களகரமான நம்பிக்கையுடைவர்களுக்கு இந்தப் பதிவு உகந்ததல்லாததாக இருக்கலாம்.

தமிழ் மரபும், மொழி வழங்கும் சமூகத்தின் அணுகுமுறையும் என்னை பல சந்தர்பங்களில் ஆச்சரியத்திலும் சங்கடத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கின்றன. கணிணி, நிரலி போன்ற பாமரர்கள் அதிகம் புழங்காத மெத்தப் படித்த வட்ட வார்த்தைகளின் பிரயோகம் "எப்படீங்க இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க" என்று ஆச்சரியக் குறியில் முடிந்து சுமூகமாய் இருந்திருக்கின்றன. அவை குடுத்த அகந்தையில், ஆர்ப்பரிய ஆர்வத்துடன் காப்பிக்கு "கொட்டை வடி நீர்" என்பதை பிரயோகப் படுத்த ரொம்ப நாளாய் ஆசை. "இந்த கொட்டை வடி நீர்..இருக்குல்லா"ன்னு பாண்டிய நாட்டு அண்ணாச்சி பெட்டிக் கடையில் முயற்சி செய்ததில் "அந்த மூத்திர சந்தில மூனாவது கடைடே, நாலு மணிக்கு வருவாரு, சூரணம் குடுப்பாரு டக்குன்னு கேட்டுரும்லா"ன்னு இலவச மருத்துவ ஆலோசனையில் முடிந்தது. காப்பியே குடிப்பதில்லை இப்போதெல்லாம். தமிழ்ப் பெயரும் ஒரு காரணம். நல்லவேளை தேநீர் எவ்வளவோ தேவலாம்.

நிற்க, நான் சுத்தத் தமிழுக்கு எதிரியல்ல. இந்த பதிவு சுத்தத் தமிழை பேச்சு வழக்கிலும் கடைபிடிப்பவர்களை நையாண்டி செய்யவும் அல்ல. நானும் தமிழை தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு பல வார்த்தைகளுக்கு சொற்கள் அறியா பெரும்பாண்மையை சேர்ந்தவன் தான் வெட்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ஆனாலும் சில பெயர்களை பெயர்களாகவே விட்டுவிடலாமோ எனும் சந்தேகக் கட்சியை சேர்ந்தவன். நமக்கு சாலைகளையும் ஊர்ப் பெயர்களையும் மாற்றவே நேரம் போதவில்லை. "மரியாதைக்குரிய ஐயா, கணிணி தவறாக உங்கள் பெட்டியை மும்பைக்கு அனுப்புவதற்கு பதிலாக பம்பாய் செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டது தவறுக்கு வருந்துகிறோம்..அதுவரைக்கும் இத்துடன் இணைத்திருக்கும் காலணா கழிவுச் சீட்டை உபயோகப் படுத்தி கடையில் சென்று உள்ளாடை வாங்கி அணிந்து கொள்ளவும்" போன்ற குழப்பங்கள் பெரும்பாலும் "ங்கொய்யால..எங்க வந்து யார்கிட்ட.." என்று ஆரம்பித்து சுந்தரத் தமிழிலேயே தீர்ப்பாகியிருக்கின்றன.

ரொம்ப விலகிப் போகிறேன், உட்கருத்துக்கு வருகிறேன்.கேசம் என்றும் ரோமம் என்றும் முடி என்றும் பலவிதமான குறியீட்டு சொற்களை உடைய "மயிரு" என்ற வார்த்தைக்கு மட்டும் ஏனோ வழக்குத் தமிழில் இருக்கும் ஓரவஞ்சனை எனக்கு சுத்தமாய் புரியவில்லை. இளம்பிராயத்தில் சுத்த தமிழில் பேசுவதாய் நினைத்துக் கொண்டு "மயிரு வெட்ட போகவேண்டும்" என்று ஒரு முறை மாமாவிடம் சொன்னேன். "இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேச யார் சொல்லிக்குடுத்தா" என்று மாமாவின் முறைப்பில் போய் நின்றது."மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று ஐயன் வள்ளுவன் தான் என்றால் "வேண்டாததெல்லாம் கத்துக்கோ...எங்க 144 குறளையும் சொல்லு பார்ப்போம்..அதிகப் பிரசங்கி"ன்னு மண்டையில் கொட்டு விழுந்திருக்கலாம்.பெண்ணின் நடத்தையை சந்தேகிக்கும் வார்த்தைகளைக் கூட அவ்வப்போது அனுமதித்தாலும், மயிரு என்ற வார்த்தைக்கு மட்டும் இன்றளவும் திரைபடங்களில் தணிக்கை குழு "உய்ங்ங்" என்று மணியடித்து மழுங்கடிக்கிறார்கள். எனக்கு என்னவோ போடா முண்டம் என்ற பிரயோகத்திற்கும் இதற்க்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கிராமுக்கு இரண்டாயிரத்தி சொச்சத்தில் விற்கும் தங்கத்தை பஸ்பமாக்கி டப்பாவில் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு தரும் பேருந்து நிலைய லேகிய விற்பன்னர் மட்டும் "சாப்பிட்டா தேகம் மின்னும், மயிரு வளரும்" என்று திருத்தமாய் சொல்கிறார். "வளர வேண்டிய இடத்தில வளராமல் வேண்டாத இடத்திலலெல்லாம் எப்போ மசுரு வளர்றதோ அப்போ வயசாக ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம்" என்று சீனாதானா மாமா வட்டதில் மயிரு மருவி மசுரு என்று தத்துவார்த்தமாய் வழங்கப்படும். மற்றபடி முக்கால் வாசி சமூகத்தில் மயிரு இன்னமும் பேட் வேர்ட் தான். "மசுரைக் கட்டி மலையை இழுப்போம் வந்தா மலை போனா...டேஷ்" என்று பல இடங்களில் டேஷாக வழங்கப் பட்டு வருகிறது. பத்து வாக்கியத்திற்கு ஒரு வாக்கியம் "வாட் த...ஃப%%^&" என்று கூவும் நவநாகரீக பேட் கேர்ல்ஸ் கூட இப்போதெல்லாம் "என்ன ஹேருக்குடா லேட்டா வர" என்று மொழி வதை செய்கிறார்கள். இவ்ளோ ஓரவஞ்சனையா...அப்புறம் மண்டையில எப்படி வளரும்ங்கிறேன்.

நானறிந்த ஆந்திர மணவாடுக்கள் மட்டும் இன்றளவும் இந்த வார்த்தையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் "போடா மயிருலு" என்று கூச்சமேயில்லாமல் முழங்குகிறார்கள். காரணம் இல்லாமலா அங்கு முடிவளம் மிகுதியாய் இருக்கிறது.விதை ஒன்று விதைத்தால் சுரையா முளைக்கும்?

ஏன் இந்த வார்த்தைக்கு மட்டும் இவ்வளவு தடா?

16 comments:

ஹேமா (HVL) said...

:))நல்ல அலசல்

இலவசக்கொத்தனார் said...

ஆலோசணை முயற்சித்து பெரும்பாண்மை ஐய்யன் விற்பண்ணர் - மயிரு பற்றிய @BloggerDubukku பதிவில் நான் கண்ட படுத்தல்கள்!

நான் போட்ட ட்விட்டு.

buspass said...

:) ஆராய்ச்சியெல்லாம் இருக்கட்டும்... நாலு மணிக்கு போனீகளா? அண்ணாச்சி வந்தாரா? சூரணம் கொடுத்தாரா?

எல் கே said...

அட பதிவெல்லாம் போட்டிருக்கீர்

Madhu Ramanujam said...

எப்படிங்க இதெல்லாம்? அதுவா வர்றதுதான் இல்ல?

Anonymous said...

குருநாதா!!! கலக்கிப்புட்டீரு!! முழுக்க முழுக்க உண்மை. பல வார்த்தைகள் இப்படித்தேன் புழங்கிக்கிட்ருக்கு. கொட்டை வடிநீர்!!! ஹாஹா அருமை!! நாற்றம் கூட அப்படித்தானே

Anonymous said...

டுபுக்காரே வணக்கம், தங்கள் பதிவனைத்தையும் படித்து, மறுபடி படித்து, பின் மீண்டும் படித்து, புதுசுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன், மகிழ்ச்சி, நல்வரவு. பதிவைப் பற்றிய க்ருத்து எனக்கும் உண்டு. தமிழை வளர்க்கிறேன், தமிழ் படுத்துகிறேன் என்று தமிழைப் படுத்துவது தான் மிச்சம். கொட்டை வடி நீர் பற்றி சில வருடங்கள் முன்பு ஒரு பதிவை எழுதி 'அட போங்கடா' என்று பதியாமல் விட்டிருக்கிறேன். இது போன்ற அபத்தங்கள் இன்னும் நிறைய உண்டு. சுட்டி (மெளஸ்), குழம்பி (காப்பி) போன்ற களஞ்சியங்கள். வேறே வேலையில்லை எனலாம் போலிருக்கும்.

ரொம்ப கேப் வுடாதீர்கள், மண்டை காயும்போது நம் தமிழ் பதிவைப் படித்தால் அதுவும் நகைச்சுவை பதிவுகள் தரும் ஸ்ட்ரெஸ்-ஃப்ரீ அனுபவமே அலாதி.

நேரமிருந்தால் http://ramdaus.wordpress.com கு வாருங்கள். பெருமையடைவேன்.

Paavai said...

புது பாஷையை கத்துகரதுக்கு சமமா ஆய்டும் இந்த ரீதியில் புது வார்த்தை கண்டு பிடிச்சா. நிஜமாவே தெலுங்குல மயிருலுன்னு இருக்கா என்ன?

ILA (a) இளா said...

நாங்க அதையே கொஞ்சம் மாத்தி “என்ன M க்கு அப்படின்னு சொன்னே” அப்படின்னு கேட்டுருவோம்

Anonymous said...

naamale deepavali, pongalukku mattum than post poduvom, ivaru link vera kudukka sollraru:(

Kavitha said...

:)

Dubukku said...

ஹேமா - மிக்க நன்றி. தலைப்ப வேற வைச்சிட்டோமே ஒரு வேளை பெண்கள் முகம் சுளிப்பார்களோ என்று நினைத்தேன். நீங்க முதல் கமெண்ட் போட்டு வயத்துல பால வார்த்தீங்க :)

கொத்ஸ் - மிக்க நன்றி தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு

பஸ்பாஸ் - அண்ணே!!!!!!!!! எப்படி இருக்கீங்க...ரொம்ப நாளாச்சு உங்க சவுண்டு கேட்டு..நலமா..!!!!

எல்.கே - ஹா ஹா எல்லாம் காலக் கொடுமை தான் (உங்களுக்கு)

வலைஞன் - நன்றி நண்பரே கட்டாயம் என் பதிவை இணைக்கிறேன்

மது - போங்க சார்...வெட்கமா இருக்கு

அக்னிபாய் - மிக்க நன்றி அண்ணாச்சி. நாற்றம் இன்னும் கொடுமை நறுமணம் என்பது இப்போ அர்தமே நேர் எதிரா இருக்கு :))

ராமதாஸ் - மிக்க நன்றி உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும். கட்டாயம் உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்.

பாவை - நிஜமா தெலுங்குல இல்லைங்க :))) அது சும்மா எல்லாத்துக்கும் முடிவுல லு போட்டு பேசற மாதிரி முதல்ல நாங்க அவங்க கிட்ட ஆரம்பிச்சோம் அவங்களும் அப்படியே கப்புன்னு பிடிச்சிக்கிட்டாங்க

இளா - நீங்க ரெம்ம்ப நல்லவய்ங்க போல நீங்கள்லாம் எதுக்கு எம் போடறீங்க?

அனானி - ஹா ஹா உங்க கமெண்ட ரொம்பவே ரசிச்சே :)) டைமிங்கா என்ன கலாசி இருக்கீங்க

பொயட்ரீ - :))

அமுதா கிருஷ்ணா said...

இலங்கை தமிழ் அன்பர்கள் இந்த சொல்லை இன்றளவும் உபயோகப் படுத்துகிறார்கள்.

Sh... said...

இது இருக்கட்டும், கும்கி என்ற செந்தமிழ் வார்த்தைக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க!

Anonymous said...

Wow Dubukku,
Great analysis!!
nalla sirikkavum vaithathu!!
Anbudan,
Vikram Balaji

Saraswathi said...

Hahaha idhu pathiellama yosikareenga
Enna oru analysis
PhD ungaluku thaan indhaanga

Post a Comment

Related Posts