Wednesday, January 26, 2011

ஜில்பான்ஸ் - 260110

இந்த வார சினிமா
ஒரு சில படங்கள் கலை நோக்குடன் எடுக்கப்பட்டிருக்கும். டி.வி.டி அட்டைப் படத்திலோ இல்லை போஸ்டரிலோ குண்ஸாய் பார்க்காமல் ஒருவர் மட்டும் அம்மணகுன்ஸாய் கேமிராவை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தால் படம் மேற்படி உண்மையான கலைப் படம் என்று எனது டிக்க்ஷன்ரியில் பிரிவு படுத்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த "Ten Canoes" படத்திற்கு கலை ரேட்டிங் குடுத்து பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். இந்த மாதிரி கலைப் படங்கள் ரொம்பவே மெதுவாகத் தான் போகும். பல் தேய்த்து கொப்பளிப்பதை முழுதாய் காண்பித்துவிட்டு அதற்கப்புறம் நாக்கை வழிப்பதையும் பொறுமையாக காண்பிப்பார்கள். அதனாலேயே இந்தப் படத்தில் வேகம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த மைன்ட்செட்டுக்கே படம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்லோ. ஏதோ கதை சொல்வார்கள் என்று பார்த்தால் ஒரு மணி நேரமாகியும் கதை வருகிற வழியைக் காணும். படத்தில் வரும் ஆண்கள் எல்லாம் குருவிக் கூடு மாதிரி கொண்டையை வைத்துக் கொண்டு வேறு ஒன்றுமே போடாமல் கூச்ச நாச்சமின்றி படம் நெடுக தழைய தழைய வளைய வருகிறார்கள். அண்ணன் பெண்டாட்டியை ஆட்டையப் போட நினைக்கும் ஒருவனுக்கு கதை சொல்வதாக ஆரம்பித்து ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல. கலைப் பட ரசிகர்களின் பொறுமையையும் ரொம்பவே சோதிக்கிறது. படம் முடிந்தவுடன் இதைச் சொல்ல இவ்வளவு நேரமா என்ற ஆயாசமே எஞ்சுகிறது.

இந்த வார படிப்ஸ்
தீண்டும் இன்பம். வாத்யாரின் லிஸ்டில் படிக்காமல் விட்டு விட்ட ஒரு புஸ்தகம் சமீபத்தில் எங்கள் லைப்ரரியில் சிக்கியது. வாத்யார் சுஜாதா பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ. படித்து முடித்த பின்னும் ஒரு மணிநேரம் புத்தகத்தின் தாக்கம் அகலவே இல்லை. அத்தனை வேகம். வாத்யாரை ஒரு தரம் கூட நேர்ல சந்திக்கலையே என்ற துக்கம் தான் நெஞ்சில் மிஞ்சியது ஹூம்ம்ம். படித்த இன்னொரு புஸ்தகமும் வாத்யார் புஸ்தகம் தான் "பெண் இயந்திரம்". இரு புத்தகங்களுமே பெண்கள் வாழ்வியல் கஷ்டங்களைப் பற்றி என்றாலும் கதை சொல்லும் விதம் இருக்கிறதே வாத்யார் வாத்யார் தான்.

இது மேட்டரு
உலகில் உள்ள கஷடமான தொழில்களில் ஒன்று பல் டாக்டர் தொழில். "பல்லு தேய்கிறதா அப்பீடீன்னா? " என்று கேட்கும் விடியா மூஞ்சிகள் வாடிக்கையாளர் உட்பட எல்லார் வாயிலும் மண்டையை உள்ளே விட்டு பல்லை பிடுங்கும் வேலை ரொம்பவே பரிதாபகரமானது. இதில் ரொம்ப கூர்ந்து நோக்கினால் பாதி நேரம் "ஆ காடுங்க ஆ காட்டுங்க"ன்னு சொல்லி சொல்லியே பாதி பல் டாக்டர்கள் வாய் கோணியபடியே இருக்கும். ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் ஒரு பல் ஆஸ்பத்ரி. இப்படி 'ஆ காட்டுங்க' சொல்லி சொல்லி மாய்ந்து போன ஒரு பெண் பல் டாக்டர் ஆஸ்பத்ரியில் வேலை பார்க்கும் எல்லா பெண் ஊழியர்களுக்கும், நர்ஸுகளுக்கும் லோ கட் க்ளிவேஜ்ன்னு யூனிஃபார்மை படு கவர்ச்சிகரமாய் மாற்றிவிட்டார். அத்தோடு பல் குடையும் இயந்திர ஊசிகள் சத்தம் கேட்காமலிருப்பதற்காக அந்த ஃபிரிகெவென்சியை மட்டும் மட்டுறுத்தும் எம்.பி.3 ப்ளேயர்களையும் பேஷண்ட்டுகளின் காதுகளில் பொருத்தும்படியும் செய்தார்.அப்புறமென்ன வாடிக்கையாளர் கூட்டம் பிய்த்துக் கொண்டு போவதுமில்லாமல் எல்லாரும் வாசலிலிருந்தே வாயைப் பொளந்து கொண்டு வருகிறார்களாம். ரொம்ப பல்லக் காட்டாதீங்க போதும் வேலையாகிவிட்டதுன்னு டாக்டரே பேஷண்டுகளை கட்டாயப் படுத்தி போயிட்டு வாங்கன்னு அனுப்பவேண்டியிருக்கிறதாம். ஜெர்மனிக்கு போகும் போது பல் வலித்தாலும் வலிக்கலாம்ன்னு வீட்டுல ஒரு பிட்ட போட்டு வைச்சிருக்கேன்.

இந்த வார கேள்வி
இங்கே இங்கிலாந்தில் பனி கொட்டோ கொட்டென்று கொட்டியது நியூசில் பார்த்திருப்பீர்கள். அத்தோடு இல்லாமல் இந்த முறை கடும் குளிர். சில இடங்களில் மைனஸ் பதினெட்டு டிகிரி. ஏரி குளம் எல்லாம் பாறாங்கல்லாய் உறைந்து விட்டது. விட்டிற்குள்ளேயே தேங்காய் எண்ணெய் எல்லாம் உறைந்து விட்டது. காரை எல்லாம் கொட்டிய பனிக்கு நடுவில் தேடி தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அப்போது என் மகள் கார் டேங்கில் இருக்கும் பெட்ரோல் உறைந்து விடாதா என்று கேட்டாள். இல்லை அது உறையாமல் இருக்க காரில் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று சந்தேகத்தோடு அடித்து விட்டாலும், பெட்ரோல் டேங்கர் லாரிகள் எப்படி உறையாமல் தடுக்கின்றன என்று சந்தேகம் வலுத்தது. சரி கொஞ்சம் தேடித் தான் பார்ப்போமே என்று கூகிளிட்டதில் பெட்ரோல் மைனஸ் அறுபது டிகிரி வரை உறையாது என்று தெரிய வந்தது. அத்தோடு டீசல் மைனஸ் நாற்பது வரை உறையாமல் இருப்பதற்க்கு அடிட்டிவ்ஸ் சேர்க்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். பாடம் நடத்தும் போது கவனிச்சிருக்கலாம். ஹூம்ம்ம்ம் எனக்கு தெரிந்த கெமிஸ்ட்ரி நாயகனுக்கும் நாயக்கிக்கும் நடுவில் ஒர்க் அவுட் ஆவது மட்டுமே..:)


இந்த வர விளம்பர போஸ்டர்

இந்தோனேஷியாவிலிருந்து ஸ்பைசஸ் இறக்குமதி செய்யும் ஒருவருக்கு இந்தியாவில் நல்ல உள்நாட்டு வியாபார கனெக்க்ஷன்கள் தேவைப் படுகிறது. இங்கே விளம்பரப் படுத்துவதை விட வேறு நல்ல இடங்கள் இருக்கின்றன என்றாலும் இங்கே ப்லாகில் நிறைய ஆச்சரியங்களை சந்தித்திருக்கிறேன் அதனால் தான் மறுப்பேதும் சொல்லாமல் விளம்பரம். Spice-ல் ஆர்வமிருப்பவர்கள் என் தனி மெயிலுக்கு(r_ramn அட் யாஹூ டாட் காம்)  ஒரு ஈமெயில் தட்டினால் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.

27 comments:

Philosophy Prabhakaran said...

தலைவரின் பெண் இயந்திரம் என்ற புத்தகத்தை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி வாங்கியிருக்கிறேன்... இன்னும் படிக்கவில்லை... நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது அருமையாக இருக்கும் போல...

sriram said...

நல்ல ஜில்பான்ஸ் தல, கதை, சினிமா, அறிவியல், விளம்பரம்னு ரவுண்டு கட்டி அடிக்கறீங்க..

இந்த பிலாஸபி மட்டும் இல்லன்னா வடை வாங்கியிருப்பேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

how 0/0???

Porkodi (பொற்கொடி) said...

//படத்தில் வரும் ஆண்கள் எல்லாம் குருவிக் கூடு மாதிரி கொண்டையை வைத்துக் கொண்டு வேறு ஒன்றுமே போடாமல் கூச்ச நாச்சமின்றி படம் நெடுக தழைய தழைய வளைய வருகிறார்கள்//

இப்ப இதை நீங்க எதுக்கு பார்த்தீங்கன்னு தான் எனக்கு புரியலை..

//ஜெர்மனிக்கு போகும் போது பல் வலித்தாலும் வலிக்கலாம்ன்னு வீட்டுல ஒரு பிட்ட போட்டு வைச்சிருக்கேன்.//

பிட் எதுக்கு நிஜமாவே வலி இருக்க தானே போகுது குத்தற குத்துல‌.. :))

தீண்டும் இன்பம்.. இதுக்கும் எனக்கு க்ரெடிட் கிடையாதா? :P சேர்த்து 2 எக்ஸ்ட்ரா பல்வலி ஆர்டர் குடுத்துட்டேன்.

ராம்ஜி_யாஹூ said...

எனக்கு தெரிந்த கெமிஸ்ட்ரி நாயகனுக்கும் நாயக்கிக்கும் நடுவில் ஒர்க் அவுட் ஆவது மட்டுமே..:)

wow

எல் கே said...

/ஜெர்மனிக்கு போகும் போது பல் வலித்தாலும் வலிக்கலாம்ன்னு வீட்டுல ஒரு பிட்ட போட்டு வைச்சிருக்கேன்.//

அப்படியே திரும்பி வந்தவுடன் இன்னொருமுறை போக ரெடியா இருங்க

இதுக்குத்தான் உலகப் படங்கள் பாக்கதீங்கனு சொன்னேன் .கேட்கமாட்டீங்கறீன்களே

விளம்பரம் நல்ல விஷயம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நீங்க சொன்ன ரெண்டு புக்கும் நான் படிச்சதில்ல... எங்க லைப்ரரில தேடறேன்... நன்னிஹை

ஜெர்மனிக்கு போகும் போது பல் வலிச்சா அப்புறம் பல்லு வலி சரி ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லிங்க... எப்படியும் வீட்டுல சாப்பாடு கட் தானே.. ஹா ஹா அஹ

பாருங்க பொண்ணு சந்தேகம் கேட்டு தான் கத்துக்க வேண்டி இருக்கு... ஸ்மார்ட் பொண்ணு... அம்மாவ போலயோ:)))))

Sh... said...

உங்களுக்கு லைப்ரரில தமிழ் புத்தகமெல்லாம் கிடைக்குதா, பொறாமையா இருக்குங்க.

உண்மைய சொல்லுங்க, இது தானே அந்த அறிவுபூர்வமான கேள்வி? (விடமாட்டோமே)

பல சமயங்களில் நம்ம வாய் நமக்கே பிடிக்கமாட்டேங்குது - பல் டாக்டரெல்லாம் ரொம்ப பாவம்.

தக்குடு said...

டுபுக்கு அவர்கள் பனியின் தாக்கத்தாலோ அல்லது பணியின் தாக்கத்தாலோ பனியை பணி என்று டைப்பி இருந்தாலும் பல் டாக்டர் மேட்டரின் மூலம் எல்லாருடைய வாயையும் ஆஆஆஆ!என்று பொளக்க செய்து விடுகிறார். உங்களுக்கு மட்டும் மறத்து போகும் ஊசி போடாமல் பல்லை பிடுங்குமாறு பார்த்துக் கொள்ள அக்கா நடவடிக்கை எடுப்பார்.

@ நாட்டாமை - வழக்கம் போல 'என்றும் அன்புடன்' டைப்பண்ணின கேப்ல பிலாஸபி வடையை கவ்வி இருப்பார்..:P

மனம் திறந்து...(மதி) said...

நீங்க சொல்றதைப் பாத்தா இந்தப் படம் பேரு தான் "canoes", ஆனா எடுத்தவங்க (பாத்த நீங்களும் கூட?!) கேணைங்க போலிருக்கே?

இந்த இரண்டு புத்தகங்களைப் படித்த பிறகாவது வீட்டில் தங்கமணிக்கு ஒழுங்கு மரியாதையா "சின்ன தேங்க்ஸ்" சொல்லி இருந்தீங்கன்னா, இயந்திரமா சுத்தி வரும் அவங்களும் கொஞ்சம் சந்தோஷப் பட்டிருப்பாங்க...உங்களுக்கும் "தின்னும் இன்பம்" நிலைத்திருக்கும்!

ஒரு ஆராய்ச்சி தகவல்: இங்கிலாந்தில் கடந்த இரண்டு மாதங்களில், "severe fracture or dislocation in the lumbar region" காரணமாக எலும்பு முறிவு நிபுணர்களைத் தேடி வந்தவர்கள் முக்கால் வாசிப்பேர் ஜெர்மனியில் பல் வைத்தியம் செய்து கொண்டு திரும்பி வந்தவர்களாம்! இந்த "side effect" ஐப் பற்றி ஜெர்மன் dentist கள் இப்பல்லாம் முன்னாடியே சொல்லிட்டுதான் பேஷண்டு வாயிலே தலைய விடறாங்களாமே!

//பெட்ரோல் மைனஸ் அறுபது டிகிரி வரை உறையாது...// உங்களுக்கென்ன தல அங்க சவுக்கியமா இருக்கீங்க! இங்க இந்தியாவிலே பெட்ரோல் அறுபத்தஞ்சைத் தாண்டிப் போச்சு...ஒவ்வொரு தரம் பெட்ரோல் போடும் போதும் நம்ம purse அப்படியே உறைஞ்சு போவுதில்ல....அவ்வ்வ்வவ்வ்வ்வ்!

அந்த இந்தோனேஷிய ஆசாமி உங்களை ஏன் பிடித்தார் என்று யோசித்தேன்! பிறகு தான் புரிந்தது...உங்கள் வலைப் பூவிலும், பின்னூட்டங்களிலும் "spice" எக்கச் சக்கமா இருக்கே...சரியான மார்கெட்டுக்கு தான் வந்திருக்காரு அவரு!

மனம் திறந்து...(மதி)

அமுதா கிருஷ்ணா said...

பெட்ரோல், டீசல் செய்தி புதுசு.இப்பொழுது எல்லாம் இங்க தெருவிற்கு 3 பல் டாக்டர்கள் வந்தாச்சு.ஜெர்மனிக்கு போய்ட்டு எல்லா பல்லோடும் திரும்ப வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அறிவிலி said...

@மனம் திறந்து...(மதி)

:-)))))))))

///இங்கிலாந்தில் கடந்த இரண்டு மாதங்களில், "severe fracture or dislocation in the lumbar region" காரணமாக எலும்பு முறிவு நிபுணர்களைத் தேடி வந்தவர்கள் முக்கால் வாசிப்பேர் ஜெர்மனியில் பல் வைத்தியம் செய்து கொண்டு திரும்பி வந்தவர்களாம்! இந்த "side effect" ஐப் பற்றி ஜெர்மன் dentist கள் இப்பல்லாம் முன்னாடியே சொல்லிட்டுதான் பேஷண்டு வாயிலே தலைய விடறாங்களாமே!///

மனம் திறந்து...(மதி) said...

@அறிவிலி: மிக்க நன்றி....இந்த அப்பிரசண்டிக்கு உங்கள் பாராட்டு நல்ல பூஸ்டர் டானிக்!

மனம் திறந்து...(மதி) said...

டுபுக்கு தல, நாட்டாமை, கேடியக்கா, கெக்கே பிக்குணி, பாவை, தக்குடு, அறிவிலி மற்றும் கழகக் கண்மணிகாள்!

முக்கியமான அறிவிப்பு:

நீங்கள் எதிர் பார்த்தபடியே(ஊக்குவித்த படின்னு சொல்லணுமா...சரி..சரி...அப்படித்தான் வச்சுப்போமே!) நான் விசா வாங்கிட்டேன்ன்னன்ன்ன்ன்!
என் முதல் பதிவு இதோ [http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html]

வாங்க, கும்மிய ஆரம்பிங்க ஜூட்!

அன்புடன்,
மனம் திறந்து...(மதி.

Subhashini said...

Hi Guys, could not come here for a long time. aani pidunguthal athigamaa pochu...
as usual super post, super kummi... advt. - new part is a good idea Renga... Keep it up.
anbudan
subha

Chitra said...

தகவல் களஞ்சியமாக இருக்குதே... பகிர்வுக்கு நன்றிங்க...

Paavai said...

Dubukku - Type pannittu sairyannu yosippeengala illai yosichutu type pannuveengala - eppadi eppadi edugai monai ellam kaladu katti adareenga ... gunns semma joke :)

Madhi - vandutta pogudhu .. velila nu oru pazha mozhi solvanga andha madiri virumbi azhaikkireenga .. enna seiya .. jokes apart welcome welcome once again

மனம் திறந்து...(மதி) said...

@சுபா: என் அழைப்பிலே உங்க பேரு விட்டுப் போச்சு...மன்னிச்சிடுங்க... நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!
என் முதல் பதிவு இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html

மனம் திறந்து... (மதி) said...

@Paavai: நன்றி!நன்றி! சொல்றதை செய்றீங்க... செய்றதை சொல்றீங்க... உங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு!

பத்மநாபன் said...

கலைப்படம் உங்களை களைப்படைய வைத்த கதையும் ...கலைப்பட இலக்கணமும் ஜோர் ....
ஆங்கில படத்திற்கென்றே தமிழில் ஓரு கோஷ்டி உண்டு ..கலையை பற்றியும் கதையை பற்றியும் கவலை பட மாட்டார்கள் .வசனம் குறைவா இருக்கணும் . பிட்டும் பைட்டும் தாராளமா இருக்கணும் அவ்வளவு தான் .

உங்கள் நூலகம் அருமை ..வாத்தியார் இப்ப இருந்தா அவரது வலைப்பூ நிச்சயம் தேன் சொட்டும் ..நாமெல்லாம் அவரது வலைப்பூவை மொய்க்கலாம் ...

பல் ஆஸ்பத்திரி ஐடியா அருமை .....டாக்டர்ஸ் ''ஆ''க்காட்ட சொல்லி சலிச்சு போய் இந்த முடிவை எடுத்திருப்பாங்க ....

டீசல் பெட்ரோல் நல்ல தகவல் ... கொஞ்சநாள் முன்புவரை லாரி காரர்கள் டாங்க்குக்கு தீப்பந்தம் காட்டினால் தான் வண்டி எடுக்க முடியும்..

நம்மஊரில் பஞ்சமில்லாமல் ஸ்பைஸ் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் ..நிறைய தொடர்புகள் கிட்டும் .....

Anonymous said...

இன்னும் நான் உங்க பழைய பதிவு ட்விட்டர் டயலாக்குக்கே சிரிச்சு முடிக்கலை :) ... அப்படி எப்படி இப்படி எல்லாம் ... கலக்கல் சிந்தனை ... ட்விட்டர்ல கலக்குவீங்க தலைவா :) குறள் ஸ்டைல்ல காமடி போட்டுத்தாக்கிறீங்க.
சரி, நான் மறக்கிறதுக்கு முன்னாடி (எங்க வீட்டு கிங்கரர்கள் இரண்டு எந்திரிச்சு கலகம் ஆரம்பிக்கும் முன்னாடி,) யாருக்கிட்டையாவது கேட்டுத் தெரிஞ்சக்கணும்னு நினைச்ச கேள்வி ஹியர்: ஆமை வடைக்கு ஆமை வடைன்னு ஏன் பேர் வந்துது? இது எனக்கு ஒண்ணாங்க் க்ளாஸ்லருந்து சந்தேகம் பாஸ்! ஆமை வடை சாப்பிடோமோன்னுல்லாம் யோகிச்சிருக்கேன். பருப்பு வடை ஸ்ட்ரைடா புரியுது ... ஆமை வடை பேர் காரண ரூட்டே தெரியலையே இன்னும்!

Arul Kumar P அருள் குமார் P said...

//அண்ணன் பெண்டாட்டியை ஆட்டையப் போட நினைக்கும் ஒருவனுக்கு கதை சொல்வதாக ஆரம்பித்து//

இந்த கன்செப்ட வச்சு இன்னும் கொஞ்ச நாள்ள தமிழ்ல ஒரு கலைப்படம் வந்தாலும் வரும். இப்படி படம் பார்த்து சுடரதுக்குனே நெறைய பேர் சுத்திட்டு இருக்காங்க கோடம்பாக்கத்துல ..... அது சரி ஆம்பளைகள் தான் ஒன்றுமே போடாமல் கூச்ச நாச்சமின்றி வரங்களா இல்ல பொம்பளைகளும் வரங்களா....சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜ்க்கு கேட்டேன்...!

Arul Kumar P அருள் குமார் P said...

தீண்டும் இன்பம்- நான் படிச்சுட்டேனே....! ( ஒரு கல்லூரி பெண் குழந்தை பெத்துக்குட்டு படர கஷ்டத்த பத்தி தானே....). ரொம்ப விறு விருப்பா போகும். குழந்தை தத்து எடுக்கும் /குடுக்கும் பின்னணியும் நன்றாக சொல்லி இருப்பார் . பெற்ற மனதின் தவிப்பையும் ஒரு தாய் போல காட்டி இருப்பார். சுஜாதானா சுஜாதா தான் .

Dubukku said...

பிரபாகரன் - பெண் இயந்திரத்தை விட எனக்கு தீண்டும் இன்பம் ரொம்ப பிடிச்சது. ஆனா இதுவும் நல்லா இருக்கும்.

ஸ்ரீராம் - :)) ஏதோ தல. உங்க என்றும் அன்பு கிடைக்குதே எனக்கு அதுக்கே எத்தன வடை வேணும்னாலும் குடுக்கலாம்.

பொற்கொடி - ஹீ ஹீ இப்போல்லாம் நமக்கு நாமே திட்டம் ஹோல்ட்ல இருக்கு :P
//இப்ப இதை நீங்க எதுக்கு பார்த்தீங்கன்னு தான் எனக்கு புரியலை..// ஆஹா வெவரமாத் தான் கேக்குறீங்க :P படம்ன்னு இருந்தா எல்லாத்தையும் தான் பார்ப்போம்...நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு :P :))))
தீண்டும் இன்பம் - எல்லாரும் கேட்டுங்கோப்பா இவங்க எனக்கு முன்னாடி இந்த புக்க படிச்சாங்க ஆனா நான் இவங்க சொல்லி படிக்கலை :P

ராம்ஜி - :)))

எல்கே - ஹீ ஹீ நல்ல விஷயம் தானே

அப்பாவி - ஜெர்மனி - எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க. ஆமா பொண்ணு அம்மா மாதிரி :))

ஷ் - கண்ணப் போடாதீங்க...முதல்ல எங்க லைப்ரரிக்கு சுத்தி போடனும். இங்க வந்து ஏகப்பட்ட புஸ்தகம் ஓ.சியில படிக்கிறேன் அருமையான புஸ்தகங்கள் கிடைக்குது :))

தக்குடு - ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்டா பிடிச்சடா. அந்த ஊசி மேட்டர் எனக்கு கேக்கவே இல்லை :))

மதி - தேங்க்ஸ் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கேன் :)) உங்க ஆராய்ச்சி மேட்டர் சூப்பர் :)) சொன்னா நம்ப மாட்டீங்க அந்த இந்தோனேஷியா மேட்டருக்கும் ஆட்கள் ஈமெயில் பண்ணியிருக்காங்க. இது தான் எனக்கு ப்Kஆகில் பிடித்த விஷயமே. நானே கொஞ்சம் ஸ்கெப்டிகலா தான் இருந்தேன் பட் எங்க என்ன கிடைக்கும்ன்னு முன் தீர்மானமே வெச்சிகிறதில்லை இப்போலாம் :))

அமுதா - மிக்க நன்றி :) உங்க வாழ்த்து பலிக்கட்டும் :P

அறிவிலி - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சுபாஷினி - நன்றி ஆபிஸர். அந்த விளம்பரத்துக்கு ரெஸ்பான்ஸும் வந்திடுச்சு :))

சித்ரா - மிக்க நன்றி ஹை. ரொம்ப உபயோகமா இருக்கோ? இனிமே அந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காம பார்த்துக்கிறேன் :P

பாவை - ஹீ ஹீ :))) டைப் அடிக்கும் போது வந்தது தான் அந்த வரி

பத்மநாபன் - வாங்க ரசிகமணி. ஒவ்வொரு பகுதிக்கும் கருத்து சொல்லியிருக்கீங்க நன்றி (ரசிகமணின்னு கரெக்ட்டா தான் வைச்சிருக்காங்க உங்களுக்கு). ஸ்பைசஸ் ஆமாங்க ரெஸ்பான்ஸ் வந்துடுத்து :)

kookaburra - மிக்க நன்றிங்க உங்க பாராடுக்கு. உங்க கேள்விக்கு விடை இல்லாமலயா. கண்டிப்பா அடுத்த ஜில்பான்ஸ்ல :))

அருள் குமார் - ஹீ ஹீ ஆமா வந்துடும் :)) பொம்பளைங்களும் தான் ஆனா நீங்க எதிர்பார்க்குற பொம்பளைங்க இல்ல :P தீண்டும் இன்பம் - ஆமாம் அதே கதை தான். செம விறு விறுப்பா எழுதியிருக்கார் வாத்யார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடடே, நம்ம டுபுக்கு!

ட்விட்டர்ல நீர் ஃபாலோ பண்ற சங்கதி பார்த்து, இந்தாளுக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை என்று நொந்து யாரென்று எட்டிப்பார்த்தால், நினைவில் மணி அடித்தது, ‘அடடே, நம்ம டுபுக்கு!’ என்று.

ப்ளாக் போஸ்டிங் எல்லாம் அட்டகாசம் ஓய்! நான் ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்போல, இனிமேலாவது படிக்கறேன்!

Samy said...

Ada freezing points i vidunka dubukku. Anaal chemistry vilakkam nantrai irukku.

TamilTechToday said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

More info visit Here www.elabharathi2020.wordpress.com

Post a Comment

Related Posts