Tuesday, May 13, 2008

என்ன எழவுடா இது

சரியான எழவுங்க இந்த இழவு. எதச் சொல்றேன்னு தெரிஞ்சுதா...? அதாங்க இந்த இழவப் பத்தி தான். சின்ன வயசாக இருக்கும் போது பாட்டி இறந்த போது தெருவில் ஒரு பையனோட வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்கிளி பிடித்துக்கொண்டிருந்தேன். யாரோ வந்து மேட்டர் என்னான்னு சொல்லாம கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வீட்டுக்கு போய் பார்த்தால் வீட்டில் எல்லாருமாய் பாட்டியை சுத்தி உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஹை இது சினிமாவில் வருவது மாதிரியே இருக்குதேன்னு அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. சிரிப்பு கீற்றாய் உதட்டில் வந்து "கெக்கெ பிக்கே" என்று ஆவதற்க்குள் "டொம்"ன்னு எங்கிருந்தோ ஒரு அடி முதுகில் விழுந்து பிடித்து அமுக்கி உட்கார்த்திவிட்டார்கள். அடி விழுந்த வேகத்தில் கண்ணில் தாரதாரையாக நீர் வந்தது. சும்மனாச்சுக்கும் கூட்டு ஒப்பாரிக்கு ஆதரவு குடுக்க வந்திருந்த தெரு மாமி "இதுக்கு பாட்டின்னா உசிரு...பாட்டியவே சுத்தி சுத்தி வந்திண்டு இருந்தது, பாவம் துக்கம் தாளமாட்டமல் எப்படி அழறது பாரு"ன்னு கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டிருந்த இன்னொரு மாமியிடம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். ஆஹா பத்தாம் நாள் குடுக்கப் போற அதிரசத்துக்கு இப்பவே ஆட்டையப் போடுகிறாரே என்று அப்போது தெரியாமல் போய்விட்டது.

அதற்கப்புறம் தாத்தா சாவு தான். உண்மையிலேயே எங்க தாத்தா எனக்கு ரொம்ப உசிரு எனபதால வருத்தமாக இருந்தது. அந்த வாரம் இருந்த மாதாந்திர பரீட்சைக்கு முதல் நாள் ஆரம்பித்த வருத்தம் பரீட்சை முடியும் வரை நீடித்து என்னால் ஸ்கூலுக்கே போக முடியவில்லை. அப்புறம் புண் பட்ட நெஞ்சை பூந்தி தின்று ஆற்றிக்கொண்டேன். வளர்ந்த கால கட்டத்தில் ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் வீட்டிலிருந்தே போய் வருவார்கள் என்பதால் அதையெல்லாம் பற்றி ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருந்தேன். ஆனாலும் அரும்பு மீசை முளைத்த பருவத்தில் பக்கத்து ஊரிலிருந்த நண்பன் ஒருவன் வீட்டில் துக்கம் ஆகிப்போய்விட்டது. எல்லா நண்பர்களும் அடுத்த நாள் பாடியை எடுக்கும் வரை கூட இருந்து ஹெல்ப் செய்ய்வேண்டும் என்று முடிவு செய்தார்கள். "டேய் எனக்கு அழ வராதுடா எசகு பிசகாய் சிரித்து வைத்துவிடுவேண்டா" என்ற எனது கவலையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு நண்பன் மட்டும் பச்சாதாபப் பட்டு "டேய் இந்த குத்தால துண்டை கழுத்தை சுத்தி போட்டுக்கோ சிரிப்பு வர மாதிரி இருந்தா வாயில துண்டை வைத்து கடிச்சி கண்ணைத் துடைச்சிக்கோ ஒருத்தரும் வித்தியாசமாய் நினைக்கமாட்டார்கள் என்று டிப்ஸ் குடுத்தான். அதிகாலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு துண்டைக் கடித்து ப்ராக்டீஸ் பண்ணிப் கொண்டிருந்தது மாமா கண்ணில் பட்டுவிட்டது. "நான் எலி தான் இத்தன நாளா துண்டை கடிச்சு நாசம் பண்றதுன்னு நினைச்சுண்டு இருந்தேன் நீதானா...ஏண்டா அதயேன்டா கடிக்கிற ஆறுமுகா டெக்ஸ்டைல்ஸ்ல காலணா குறைக்க மாட்டேன்னுட்டான்.துண்டு விக்கிற விலைக்கு கடிச்சு நாசம் பண்ணிண்டு...நல்ல வயித்துக்கு நிறைவா சப்பிடறது தானே"என்று மாமா புலம்பலில் எலிப் பழியையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக குத்தால துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு ராஜ் கிரண் மாரிலும் மூஞ்சியிலும் சாம்பலை அடித்துக் கொண்டு அழும் காட்சிகளை எல்லாம் ரிவைஸ் செய்து கொண்டு போனால் அங்கு எல்லாரும் குஜால்சாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். "டேய் இதென்ன இழவு வீடா இல்ல கல்யாண வீடா எல்லாரும் சிரிசிக்கிட்டு டீ குடிச்சிக்கிட்டு இருக்கீங்க"ன்னு நண்பனிடம் கேட்க..."டேய் தாத்தாக்கு தொன்னூறு வயசுடா ..கல்யாண சாவு..அதுக்கெல்லாம் இப்படி தான்ன்னு விளக்கினான். சே குத்தால துண்டை வைத்தே ராஜ்கிரன் அளவுக்கு சீன் போடலாம்ன்னு நினைச்சது வீணாப் போச்சேன்னு எனக்கு ஆதங்கமாகிவிட்டது. அதற்க்கு மேலும் நான் மட்டும் அழுது புரண்டால் அவங்க தாத்தா மேல் எல்லாருக்கும் சந்தேகமாகிவிடும் என்பதால் குத்தால துண்டு ஐடியா குடுத்த மூதேவியின் மண்டையில் நங்கென்று குட்டிவிட்டு குடுத்த டீயும் போண்டாவும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

ஊரில்லெல்லாம் தெருவில் யார் வீட்டிலாவது துக்கமாகிவிட்டால் பத்தாம் நாள் தெருவில் எல்லார் வீட்டுக்கும் பெரிய முறுக்கு அல்லது தேன்குழலுடன் ஒரு ஸ்வீட்டும் பட்சணம் குடுப்பார்கள். அதனாலேயே சேதி தெரிநத நாளிலிருந்தே கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிடும். தெரிந்த பையன் வீட்டில் துக்கம் என்றால் "யுவர் க்ராண்ட் டாட் வாஸ் அ கிரேட் மேன்" போன்ற ஆங்கிலப் பட வசனங்கள் பேசாமலே முறுக்கு ஒரு விள்ளலும், உதிர்ந்த பூந்தி ஒரு கைப்பிடியும் கூடுதலாக கிடைக்கும். இந்த மாதிரி துக்கத்துக்கு போடும் லட்டுவில் மட்டும் முந்திரி பருப்பு போடமாட்டார்கள் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரத்தை பேசிக் கொண்டே துக்கத்தை ஆற்றிக் கொள்வோம்.

இதே மாதிரி வயதான பெரிசுங்க போயிருந்தால் கல்யாண சாவு என்று பதிமூன்றாம் நாள் புது ட்ரெஸ் வேறு உண்டு. எங்க தாத்தா இறந்த போது அவர் நியாபகார்த்தமாக பாக்கி பாண்ட் தைத்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் பெரிய குடும்பம், பேரன் பேத்திகள் எண்ணிக்கை ஜாஸ்தி என்பதால் பெரியவர்களே திருநெல்வேலிக்குப் போய் எல்லாரும்க்கும் சேர்த்து ஒரு துணி பண்டிலை வாங்கி வந்து விட்டார்கள். நாங்களெல்லாம் டி.வி.எஸ். பாக்டரியில் வேலை பார்பது மாதிரி யூனிபார்மாக ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு இரண்டு நாள் உலாத்தினோம். அந்த தரம் பாக்கி பாண்ட் குடுப்பினை இல்லை.

இங்கே இங்கிலாந்து வந்ததுக்கப்புறம் யாராவது தெரிந்த வெள்ளைக்காரன் மண்டையப் போட்டுட்டான்னா என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கக் கூடாது என்று விபரங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். யாராவது பூட்டுக்கிட்டாங்கன்னா இங்கே இன்ன தேதியில் இந்த நேரத்தில் துக்கம் அனுசரிக்கிறோம்ன்னு இன்விடேஷன் வருமாம். அன்னிக்கு கருப்பு கலரில் கோட் சூட் போட்டுக் கொண்டு போய் "யுவர் க்ராண்ட் டாட் வாஸ் எ க்ரேட் மேன்"ன்னு சொல்லவேண்டும். (டிக்கெட் வாங்கிய பார்ட்டி க்ராண்ட் டாடாக இல்லாமல் வேறையாக இருந்தால் அவரை க்ராண்ட் டாட்டுக்குப் பதிலாக போட்டுக்கொள்ளவேண்டும்). காபி டிபன் எல்லாம் ஏற்பாடு செய்திருப்பார்கள் அதை சாப்பிட்டு விட்டு சொல்லிக்காமல் கொள்ளிக்காமல் வந்துவிடவேண்டும். இந்த விபரங்களைச் சொன்ன வெள்ளைக்காரார் உங்க ஊரில் எப்படி என்று கேட்டார். எங்க ஊரில் நீங்கள் சொன்ன இத்தனையும் நாங்கள் கல்யாணங்களில் செய்வோம் என்று சொல்லிவைத்தேன்.

34 comments:

ambi said...

நான் தான் இன்னிக்கு பஷ்ட்டு. கொத்ஸ் அண்ணாச்சிக்கு மூக்குல வேர்க்கலையா இன்னும்? :p

//நாங்களெல்லாம் டி.வி.எஸ். பாக்டரியில் வேலை பார்பது மாதிரி யூனிபார்மாக ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு இரண்டு நாள் உலாத்தினோம்.//

ஹிஹி, எங்களுக்கு எல்லாம் சட்டை டவுசர் தான் உங்களுக்கு மட்டும் பேண்டா? :p

ambi said...

மே 13 - ஒன்பதாம் ஆண்டு கல்யாண நாளும் அதுவுமா இப்படி எழவு பதிவு பதிந்ததுக்கு எதுவும் ப்ரத்யேக காரணம் உண்டா?னு மன்னி கிட்ட மெயிலி (பத்த வெச்சுனு ஏன் படிக்கறீங்க?) தெரிந்து கொள்(ல்)கிறேன். :))

நாராயண! நாராயண! ஒன்னும் இல்ல, குல தெய்வத்தை கூப்பிட்டேன். :p

மெளலி (மதுரையம்பதி) said...

//பத்தாம் நாள் தெருவில் எல்லார் வீட்டுக்கும் பெரிய முறுக்கு அல்லது //

ஒரு சின்ன திருத்தம் இது 10ஆம் நாள் அல்ல, 9ஆம் நாள் :-)

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
Munimma said...

w.r.t?? ipdi mottaiya saavu melam adicha naanga enna nenaichukirathu?

nalla(?) naalum athuvuma ipdi ezhuthareenga, enna aachu? tinna? forgot gifta?

PS: I was going to send an email to wish you, but I can't find your email. So can you do so and I will reply back? :-)

கால்கரி சிவா said...

இப்போ எந்த சாவுக்கு போனாலும் இந்த இழவு பதிவு ஞாபத்திற்கு வந்து சிரித்துவிட போகிறேன்

Bart said...

"அப்புறம் புண் பட்ட நெஞ்சை பூந்தி தின்று ஆற்றிக்கொண்டேன்.". அற்புதம், அற்புதம்... பூந்தி...

Krishnan said...

Hilarious !

Anonymous said...

My hearty Wishes to You and Thangamani...
- Raji
unga bloga padichuttu officela thaniya loose mathiri sirikura gumballa naanum oruthi...

Vg said...

"வெள்ளைக்காரார் உங்க ஊரில் எப்படி என்று கேட்டார். எங்க ஊரில் நீங்கள் சொன்ன இத்தனையும் நாங்கள் கல்யாணங்களில் செய்வோம் என்று சொல்லிவைத்தேன்." That was a awesome punch.. :)
Loved it.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வெள்ளைக்காரார் உங்க ஊரில் எப்படி என்று கேட்டார். எங்க ஊரில் நீங்கள் சொன்ன இத்தனையும் நாங்கள் கல்யாணங்களில் செய்வோம் என்று சொல்லிவைத்தேன்." இப்படி தப்புத்தப்பா சொல்லித்தான் இந்தியாவின் கலாசாரத்தை காப்பாற்றியாகிறதா.. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்கப்பா...

Anonymous said...

angeyum sollama kollama thaan poganuma??? oru similarity irukku

best wishes to your wife and you on this anniversary

Unknown said...

யோவ்..டுபுகாரே எல்லாரும் சேர்ந்து ரெண்டு தட்டு சாரி திட்டினாதான் உங்களுக்கு interesting பதிவை போட தெரியுமா?? இது தெரிஞ்சுருந்தா வார வாரம் உங்கள பெண்டு பெடல எடுதிருப்போம்ல.. இந்த வாரம் சும்மா பிச்சு ஒதரிட்டேள் போங்கோ.. சிரிச்சி சிரிச்சி பரால்கான் (அதான் ஓய் வயத வலிச்சா நிவாரணம் குடுக்குற மாத்திரை) சாபிட்ற அளவுக்கு போயாச்சு உம்ம இந்த வார பதிவு. சூபரப்பு . இத அப்படியே கெட்டியா புடிச்சுண்டு வர வருஷ்துக்கேல்லாம் எங்கள சிரிப்பு மழைல குளிபாட்டுங்கோ. இந்தாரும் புடிங்க கீதா மேடம் குடுத்த பட்டத .. நீர் உண்மையான நகைச்சுவை சக்கரவர்த்தி தான் ஓய்..(திரும்பி வால் தனம் பண்ணினா பட்டத புடிங்கிடுவேனாக்கும் ) :-) ... ஒரு இனிமையான பதிவு ரொம்ப நாளைக்கு அப்பறம்.. அதுதான் டுபுக்க் டச் (என் உளமார்ந்த திருமண நாள் வாழுத்துக்கள்)

Anonymous said...

Belated wishes on this spl occassion, my hearty congratulations to u and ur thangamani

ur gr8 fan

Anonymous said...

டுபுக்கு அண்ணே!

விடலை பருவத்தில் ஆண் பசங்களுக்கு எதுவுமே சீரியஸ் கிடையாது. இப்படித்தான் என் நண்பர் கூட்டத்தில் சங்கர் என்பவனிடம் அவன் வீட்டை பற்றி discussion நடந்தபோது ' எங்க வீடு ரொம்ப பெரிசுடா! கூடம் மட்டுமே எங்க தாத்தா செத்தாருன்னா நடுக்கூடத்திலே bodyய வச்சு சும்மா நூறு பேரு மாரடிச்சுகிட்டு அழலாம்னா பாத்துக்கோயேன்'என்று அவன் சொன்னபோது எல்லோரும் 'கெக்க பிக்கே' என்று சிரித்தபோது சற்று தயக்கத்துடன் அவர்களோடு சிரித்ததும், 'என்னடா பாபு உங்க சித்திக்கு ஆபரேஷனாமே! என்னமோ கர்பப்பையை எடுத்துட்டாங்களாமே' என்று ரமேஷ் கேட்டபோது அவன் கொஞ்சம் embarassmentடுடன் 'ஆமாம்' என்று சொல்ல இன்னொருத்தன், 'ஏண்டா ரமேஷ் உனக்கு பேச வேற subject கிடைக்கலயா. ஏன்! அந்த பைக்கு பிடி போட்டு குடுத்தா எடுத்துகிட்டு தண்ணித்துறை மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கிகிட்டு வரலாம்னு பாக்கறயா' என்று இன்னொருத்தன் சொல்ல மற்றவர்களுடன் சேர்ந்து பாபுவும் சிரித்ததும் நினைவுக்கு வருகிறது. இப்போது நினைத்தால் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறோம் என்று வருத்தமாக இருக்கிறது. 'அறியாத வயசு' என்று அதற்காகத்தான் சொன்னார்களா!!

Deekshanya said...

செம போஸ்ட் brother! கல்யாண நாள் வாழ்த்துக்கள்!! பூரிக்கட்டையும் நீங்களும் போல, உங்கள் தங்கமணியும் பொறுமையும் போல, நீங்களும் அண்ணியும் என்றென்றும் அன்போடு இனைந்து வாழ,இந்த தங்கையின் வாழ்த்துக்கள்!!

coming to the post,yet another humourous feather to your Blog-cap!

//அடி விழுந்த வேகத்தில் கண்ணில் தாரதாரையாக நீர் வந்தது.// ஹிஹிஹி.. சூப்பர்!

****//அதற்க்கு மேலும் நான் மட்டும் அழுது புரண்டால் அவங்க தாத்தா மேல் எல்லாருக்கும் சந்தேகமாகிவிடும் என்பதால் குத்தால துண்டு ஐடியா குடுத்த மூதேவியின் மண்டையில் நங்கென்று குட்டிவிட்டு குடுத்த டீயும் போண்டாவும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.// என்ன நடந்தாலும் நம்ம வேலையில கவனமா இருக்கனும்னு உங்ககிட்ட இருந்துதான் brother கத்துக்கனும்!

//"யுவர் க்ராண்ட் டாட் வாஸ் அ கிரேட் மேன்" போன்ற ஆங்கிலப் பட வசனங்கள் //ROTFL

//எல்லாரும்க்கும் சேர்த்து ஒரு துணி பண்டிலை வாங்கி வந்து விட்டார்கள்.// உங்க வீட்லயுமா?? இது தொன்றுதொட்டு எங்க வீட்ல மட்டும் நடக்குதுன்னுல்ல நான் நினைச்சிட்டு இருந்தேன்!! இப்போ எல்லாம் twins தவிர மத்த பிள்ளைகள் எங்க ஒரே மாதிரி உடுத்திக்கிறாங்க? rare sight!

//காபி டிபன் எல்லாம் ஏற்பாடு செய்திருப்பார்கள் அதை சாப்பிட்டு விட்டு சொல்லிக்காமல் கொள்ளிக்காமல் வந்துவிடவேண்டும்.// please see **** again!!

On the whole a nice post! keep rocking!!
Cheers,
Deeksh

கிருஷ்ணா said...

Anna Super. pls write atleast 2 blogs per week.

ரசிகன் said...

இந்த விசயத்தை இப்படிக்கூட சொல்ல முடியுமா? :))))))))))

கலக்கல்:)

ரசிகன் said...

//"டேய் எனக்கு அழ வராதுடா எசகு பிசகாய் சிரித்து வைத்துவிடுவேண்டா" //

சேம் பிளட்:)))))

Anonymous said...

டுபுக்கு

உம்ம பேரை மாத்தவேண்டிய வேளை வந்துட்டுதுன்னு நினைக்கிறேன். இழவு வீட்டிலே எப்படா போண்டா, டீ, லட்டு இவைகளுக்காக கழுகு போல காத்திருந்ததனால 'இழவு காத்த கழுகு'ன்னு மாத்திடலாமா...

ஸ்ரீதர்

Ramya Ramani said...

//"யுவர் க்ராண்ட் டாட் வாஸ் அ கிரேட் மேன்" போன்ற ஆங்கிலப் பட வசனங்கள் //ROTFL :)

அட அட டுபுக்கு பாக் வித் பஞ்! டுபுக்கு அண்ணா & மண்ணி, இனிய திருமண நாள் வாழ்துக்கள்!

Syam said...

ROTFL...as usual dubukku's touch...:-)

belated wishes....and many more happy(???!!!) returns....

Anonymous said...

MANY MANY HAPPY RETURNS OF YOUR WEDDING DAY .appuram kannula thanni vara allavukku sirikka vaitha ungalukku.hats off.great great post.YOU ARE SIMPLY SUPERB.IDHU MADHIRI UNGAALLAL MATTUME MUDIYUM.
NIVI.

Anonymous said...

Vanakkam Thalaiva
Idhe madhri anubavam enakum nadandhu iruku,ungal padhivu padithavudan ennoda kavalai ellam pochu.i am in dubai now

Guru

Kathirvel said...

Hello,

I could not find your email id. Hence I am using this route for a query which can best be answered by an local expert like you.

I am planning a trip with family(11members) to tirunelveli. Agenda is like this...visit Manimuttar, papanasam, banatheertham falls. Also cover sivasailam temple.

Day 2 Nellayappar, Krishnapuram, Cheranmadevi temples...(Any other suggestions)

Day 3 Kanyakumari...

Any suggestions...are we missing some thing important.

I have gone with my friends in bikes upto manjolai, kakachi, upper kodaiyar...but with family and kids that is ruled out.

I read about Gadanadhi...how interesting is the place...

Kathir
kathir1000@yahoo.co.in

பரிசல்காரன் said...

என்ன டுபுக்கு சார் இது.. இவ்ளோ நல்லா எழுதற நீங்க மாசத்துக்கு ஒண்ணு, ரெண்டு மட்டும் எழுதுனா இந்த தமிழ் மக்களை யார் காப்பாத்தறது? ப்ளீஸ், நிறைய எழுதுங்க!

Anonymous said...

hi. muthalla vaalthukal.nice post. last line.dubukku pinnitinga.sorry inimethen meethi post padikanum.
-isthripotti

Dubukku said...

அம்பி - அந்தாளுக்கு என்னம்மோ இந்த தரம் கண்ணுதெரியலை போல இருக்கு. வேற போஸ்ட் போட்டா சொல்லியனுப்புன்னு முந்தின போஸ்ட்ல கமெண்டியிருக்கிறார். கொத்ஸ்க்கு வயசாயிடிச்சா?

ஆனாலும் பத்த வைக்கிறதுல பில் கேட்ஸ்டா நீ...

மதுரையம்பதி - ஓ இப்போ மாத்திட்டாங்களா...:)) நான் தனியாள் இல்லைன்னு சொல்றீங்க...நீங்களும் நம்ம கட்சி தான்னு நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது :))

முனிம்மா - நான் ஒன்னுமே சொல்லலை. இதில் எந்த அர்த்தமும் இல்லை :))

கால்கரி சிவா - வாங்கண்ணே ...ஹீ ஹீ பின்விளைவுக்கு நான் பொறுப்பல்ல

ஆமாங்க பூந்தி இந்த லட்டு செய்வாங்களே அதே தான் :))) நீங்க மெய் சிலிர்க்கிறதப் பார்த்தாலே உங்களுக்கு பூந்தின்னா ரொம்ப பிடிக்கும்ன்னு தெரியுது :)))

கிருஷ்ணன் - மிக்க நன்றி ஹை


ராஜி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. எனக்கு மத்தவங்க வாழ்த்து சொல்லும் போது ரொம்ப வெட்கமா இருக்கு நாம ஒருத்தருக்குமே நியாபகம் வைச்சுக்கரதே இல்லையேன்னு ... உங்க பாராட்டுக்கும் ரொம்ப டேங்க்ஸ்.

விஜி - எனக்கு டக்குன்னு அதான் மனசுல பட்டுச்சு...:)) நன்றி

கிருத்திகா - என்ன டென்ஷனாகிட்டீங்க போல...சும்மா டமாசு டமாசு...இனிமே பார்த்து நடத்துக்கிறேன் மேடம்..

பாவை - ஆமாங்க கல்யான ஜோடியை கையில பிடிக்க முடியாது. :)) உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. இங்க எல்லாருடைய வாழ்த்தையும் பார்த்து எனக்கு ஒரே ஃபீலிங்க்ஸாகிடிச்சு

ராமச்சந்திரன் - ஹப்பாடா உங்க வாயிலேர்ந்து பாராட்டு வந்தப்புறம் தான் நிம்மதியாயிருக்குன்னு சொல்றதா..இல்லை அடுத்த பதிவ பார்த்துட்டு என்ன சொல்லப்போறீங்கன்னு பயமாயிருக்குன்னு சொல்றதா :))) உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

அனானி - உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. பெயர போடலாம்ல...யாருன்னு தெரிஞ்சிப்போம்ல :) ரொம்ப டச்சிங்கா இருக்கு இங்க எல்லாருடைஅய வாழ்த்தையும் பார்க்கிறதுக்கு

அனானி - ரொம்ப சரியா சொன்னீங்கண்ணே..நீங்க சொன்ன டயலாக்ஸ் ரொம்ப எதார்த்தமா இருந்தது. சில சமயம் வேற நேரத்தில் யோச்சிச்சா நமக்கே ரொம்ப கேவலமா இருக்கும். ரொம்ப நன்றி பகிர்ந்திக்கிட்டதுக்கு

Dubukku said...

தீக்க்ஷண்யா - தங்கச்சி உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி...வாங்க ரொம்ப நாளாச்சு உங்களைப் இந்தப் பக்கம் பார்த்து. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

ரசிகன் - மிக்க நன்றி தல...உங்க பாராட்டுக்கு, நீங்களும் நம்ப ரத்தமா :)) (அனா அதெல்லாம் சின்ன வயசுல)

ஸ்ரீதர் - ஹீ ஹீ நக்கலு....பேரு நல்லா தான் இருக்கு ஆனாலும் டுபுக்கு மாதிரி ஸ்டையிலா இல்லையே :)))))))


ரம்யா - மிக்க நன்றி மேடம் உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

ஸ்யாம் - மிக்க நன்றி தல

நிவி - வாங்க மேடம். ரொம்ப டேங்கஸ் உங்க பாராட்டு மழைக்கு...(ஆனா இதுக்கெல்லாம் எனக்கு தகுதி இருக்கா ...அதெல்லாம் வேற விஷயம் :)) ))

குரு - வாங்க தல. உங்க கவலை போனது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி

கதிர் - அப்போ உட்லண்ட்ஸ்ல இந்த கணக்க தீர்த்துக்கலாம்ங்கிறீங்க :))

பரிசல்காரன் - வாங்க சார். அட நான் சின்னப் பையன்ங்க...ஆனால் கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்ச்சிக்கிறேங்க. மிக்க நன்றி உங்கள் ஊக்கத்துக்கு

பஸ்பாஸ் - என்ன தல இப்படி ஸ்மைலியோட எஸ்ஸானா எப்படி...எப்படி இருக்கீங்க...போன் பண்ணனும்ன்னு நினைப்பேன்...சீக்கிரம் பண்றேன்

இஸ்திரிபொட்டி - வாழ்த்துக்கு மிக்க நன்றி. ஹீ ஹீ நீங்களும் இதே கமெண்ட இதுக்கு முன்னாடி ஒருதரம் போட்டுட்டீங்க :))

அபி அப்பா said...

வாவ், எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வலையுலக ஔவை சொன்னா சரியாத்தானே இருக்கும்!!!சூப்பர் போங்கோ:-))

தமிழினி..... said...

தேர்தல் நேரத்துல ப.சிதம்பரம் tragic comedy,tragic comedy னு வாய்க்கு வாய் சொல்லுவாரு...அதுக்கு என்னே அர்த்தம் னு இப்போ தான் எனக்கு புரியுது.... :))

மங்களூர் சிவா said...

/
ரசிகன் said...

இந்த விசயத்தை இப்படிக்கூட சொல்ல முடியுமா? :))))))))))
/

repeatey

ஜி said...

:)) Dubukku touch... nice one

Subramanian Vallinayagam said...

hi dubukku,

ROTFL...as usual dubukku's touch...:-)



// அப்புறம் புண் பட்ட நெஞ்சை பூந்தி தின்று ஆற்றிக்கொண்டேன்.

// மாமா புலம்பலில் எலிப் பழியையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாகிவிட்டது.

// ராஜ் கிரண் மாரிலும் மூஞ்சியிலும் சாம்பலை அடித்துக் கொண்டு அழும் காட்சிகளை எல்லாம் ரிவைஸ் செய்து கொண்டு போனால் ...


// "யுவர் க்ராண்ட் டாட் வாஸ் அ கிரேட் மேன்" போன்ற ஆங்கிலப் பட வசனங்கள் பேசாமலே முறுக்கு ஒரு விள்ளலும், உதிர்ந்த பூந்தி ஒரு கைப்பிடியும் கூடுதலாக கிடைக்கும்.


// நாங்களெல்லாம் டி.வி.எஸ். பாக்டரியில் வேலை பார்பது மாதிரி யூனிபார்மாக ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு

Post a Comment

Related Posts