"எலே மண்டைன்னா பொடுகில்லாம இருக்க முடியாது, சமையல்ன்னா கடுகில்லாம இருக்கமுடியாது நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துலேர்ந்து சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்துலயும் யாராவது கடுகில்லாம சமைச்சிருக்காங்களான்னா பொறந்து குழந்தை கூட 'இல்லை'ன்னு பத்து லாங்குவேஜ்ல சொல்லும்டா.. என்னடா பர்த்துட்டிடுருக்க...சண்முகம் வண்டிய வூட்டுப் பக்கம் திருப்புலான்னு" விஜயக்குமார் மாதிரி டயலாக்வுட்டு சமாளிச்சு வீட்டுக்குப் போய் பார்த்தா கடுகைத் தவிர இன்னும் இரண்டு மூன்று முக்கியமான பைகளையும் வைத்துவிட்டு வந்திருந்தது தெரிந்தது.
எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்ப பயணத்தை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து வழியிலிருந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நிப்பாட்டும் போது "தயிரை பிரிஜிட்லிருந்து எடுத்து வெளியே வைச்சிருக்கேன் கிளம்பறதுக்கு முன்னாடி நியாபகப் படுத்துங்க"ன்னு தங்கமணி நியாபகப் படுத்தச் சொன்னது நியாபகத்துக்கு வர "மண்டைன்னா மயிரில்லாம இருக்காது சாப்பாடுன்னா தயிரில்லாம இருக்காது"ன்னு மீண்டும் விஜய்குமார் டயலாக் விட்டால் வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் என்பதால் ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.
"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.
சேட்நாவ் புண்யத்தில் பயணம் எந்த குழப்பமோ, சண்டையோ இல்லாமல் சப்பென்றிருந்ததால் குழந்தைகளும் போரடித்து நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஐந்தரை மணி நேரத்துக்கப்புறம் வேல்ஸ் எல்லையை தாண்டி உள்ளே போகும் போது வேல்ஸின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மலையில் அடர்ந்த காட்டுக்கு நடுவே காட்டாறைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது மிக ரம்யமாக இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தார்கள்.
தங்கப் போகும் இடத்தை பார்த்ததும் மனம் குதூகலித்தது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகான மரவீடு. இறங்கி கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அடுத்த நாள் பீச் பீச்சாக சுத்தினோம். இதற்கு முன் ஏப்பிரலில் நண்பர்களோடு ஐல் ஆஃப் வொய்ட் போயிருந்தோம். வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான பயணம் அது. மிக மிக குதூகலமாக காலேஜ் வாழ்கை மாதிரி ஜாலியாக இருந்த பயணம். எனக்கு ஒரு நீண்ட நாளைய ஆசை ஒன்று உண்டு. "தீப் பிடிக்க தீப் பிடிக்க" பாட்டில் ஆர்யா போட்டுக் கொண்டு வருவது மாதிரியான முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் மணலில் ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரவேண்டும் அதை படமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. தங்கமணியிடம் எப்படி கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு எல்லாத்தையும் விளக்கு விளக்கு என்று முன்பே விளக்கியிருந்தேன். கிடைத்த சந்தர்பத்தை கோட்டை விடாமல் காறித் துப்பிவிட்டு ஒருவழியாக சம்மதித்திருந்தார். பீச்சுக்கு போன பிறகு லொக்கேஷன் ஃபைனலைஸ் பண்ணிவிட்டு அம்மணியைத் தேடினால் காணோம். தனது தோழியோடு ஜாலியா செல் போனை வேறு ஆஃப் செய்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பீச்சில் ஒரு நீளமான குட்டைச் சுவர் இருந்தது. நான் அதற்க்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன் நீ லாங் ஷாட்டில் ரெடி சொன்னவுடன் குட்டைச் சுவற்றில் ஏறி குதித்து ஹீரோ மாதிரி ஓடி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். நன்றாகத் தலையை ஆட்டிவிட்டு அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விட்டார்.
இது தெரியாமல் நான் குட்டைச் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்போ ரெடி சொல்வார் அப்போ ரெடி சொல்வார் என்று பார்த்தால்...வழியக் காணும். இதற்குள் நண்பர்கள் என்ற பெயரில் கூட வந்த வானரக் கூட்டம் எடுத்த படம் தான் கீழே.(க்ளிக்கியவரும் பிரபல ப்ளாகர் தான்)
ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.
