Friday, June 04, 2004

பெத்த மனம்.

for picture version of this post Part 1 Part 2

விசிஷ்டாவிற்கு பிறந்தநாள். விசிஷ்டா வர்ஷாவின் முதல் நண்பன். என்ன வாங்கலாம் என்று ஒரே மணடைக் குடைச்சல். சின்னக் குழந்தை மாதிரி கடையில் இருந்த எல்லா விளையாட்டு பொருட்களையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பேசாமல் வர்ஷாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வந்தால் அவளுக்கும் ஒன்று அதே மாதிரி வாங்கவேண்டும். எதுக்கு இப்போ தண்டச் செலவு. இப்போதான் பிறந்தநாள் கழிந்து ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் பரிசாக வந்திருக்கு.ஏற்கனவே வீட்டில் இருக்கும் பார்பி பொம்மைகள், கரடிப் பொம்மைகள்,அவைகளை என் மகள் சொகுசாக வைத்துக் கொண்டு ஊர்வலம் வர ஒரு தள்ளுவண்டி, பிறந்தநாளுக்கு வாங்கிக் குடுத்த சைக்கிள், சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து கொண்டுவர இன்னொரு பொம்மை...இது போக ஏற்கனவே இருக்கும் சப்பு சவரு...எவ்வளவு பொம்மைகள்? போறாதா? வீட்டில் வைப்பதற்கே இடமில்லை. நான் சின்னப் பையனாக இருந்த போது இவற்றில் காலில் பாதியைக்கூட கண்ணால் பார்த்தது இல்லை. விளையாட இவ்வளவு போதாதா...எல்லாவற்றிக்கும் கொடுத்த விலையைக் கூட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றும். பைசா என்ன மரத்திலா காய்க்கிறது? ரொம்ப வாங்கிக் குடுத்து குழந்தையைக் கெடுக்கக் கூடாது.

நாலு வயது பையனுக்கு என்ன வாங்கிக் குடுக்கலாம்? ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டிகள் கவனத்தைக் கவர்ந்தன. ரிமோட் கன்ட்ரோல் கார். நான் சின்னப் பையனாக இருந்தபோது இதை யாராவது வைத்திருந்தால் அதைப் பார்க்கவே அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மிக நன்றாக இருந்தது. போட்டி போடுவதற்கு ரெண்டு கார் இருந்த்து. சரி வாங்குவோம் என்று முடிவுசெய்தேன். வர்ஷாவுக்கும் வாங்கிக் குடுத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவாள்.நாம் தான் அனுபவிக்கவில்லை அவளாவது விளையாடட்டுமே. பைசாவாவது நாளைக்கு சம்பாதித்துக் கொள்ளலாம் இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடப் போகிறாள்? அதே விலைதான். கூட ஐந்து பவுண்டுனாலும் விலை அதிகமென்று யோசிக்கலாம். போனால் போகிறது "இன்னொன்னு குடுப்பா". வெளியில் வந்த பிறகு தான் பார்த்தேன். பாட்டரி தனியாக வாங்கவேண்டுமாம். போட்டிருந்த பேட்டரி எண்ணிக்கையைப் பார்த்தால் ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்யலாம் போல. பேட்டரி விலையோ பகீரென்றது. திரும்பவும் கூட கொஞ்சம் செலவு. பேசாமல் வந்திருக்கலாமோ?

"என்க்காகாகா அப்ப்ப்ப்ப்பா...தேங்க்க்க்க்யூயூப்பா..." கணகள் விரிய குழந்தை கட்டிக் கொண்ட போது எனக்கே யாரோ வாங்கிக் குடுத்தமாதிரி சந்தோஷமாக இருந்த்து. உடனே பிரித்து விளையாட ஆரம்பிச்சாச்சு. ஒரு கார் நன்றாக ஓடியது. இன்னொன்று தண்டம். செத்தவன் கையில் வெத்தலபாக்கு குடுத்த மாதிரி என்னுடைய பைசா அருமை தெரியாமல்...தண்டத்துக்கு ஊர்ந்தது. பத்து நிமிஷம் தான் வர்ஷா கவனம் பார்பிக்கு போய்விட்டது.

"அடச் சே...இதுக்கு இவ்வளவு தண்டம் அழுதிருக்கவேண்டாம்...பேசாம வரமாட்டேனோ...என் புத்தி இருக்கே..."

"அவளுக்கு கார்லலாம் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பது தெரியாதா உங்களுக்கு.அவளுக்குப் பிடித்ததாக எதாவது வாங்கி வரக் கூடாதா?" - உம்மாச்சிக்கு பதிலாக எனக்குத் தூபம் காட்டினார் அருமை மனைவி.

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ...இத திருப்பி குடுத்துட்டு வந்திடறேன். வெறும் தண்டம். வர்ஷா க்கு அதுக்கு பதிலாக ஒரு ஒன்றரை அனா பொம்மை வாங்கிக் குடுத்திடலாம்"

தேவா இருந்திருந்தால் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே..." என்று பி.ஜி.,எம். குடுத்திருப்பார்.அவ்வளவு வேகமாக நடந்தேன்.

"நீங்கள் இரண்டு வாங்கியதால் விலையில் சலுகை தரப்பட்டது. இப்போது இதை திருப்பிக் குடுத்தால் அந்தச் சலுகை கிடைக்காது..பரவாயில்லையா?"

"பரவாயில்லை"

"ஏன் வாங்கின இன்னொரு காருக்கும் உண்டான சலுகையை வீணாக்குகிறீர்கள்...அதற்குப் பதிலாக வேறு பொம்மை வாங்கலாமே " - விட்டால் எனக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்துவிடுவாள் போல. அவ்வளவு சாமர்த்தியத்துடன் பேசினாள். இவள் தொல்லையைச் சமாளிக்க சும்மா ஒரு தரம் கடையைச் சுற்றி வந்து எதுவும் பிடிக்கலை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.

எல்லாப் பொம்மைகளையும் நகைக் கடையில் பார்ப்பது போல் தள்ளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சரி இனிமே சமாளித்துவிடலாம் என்று திரும்பின போது அது கண்ணில் பட்டது. அழகான எலக்ட்ரானிக் கிடார். வர்ஷா ரொம்ப நாளாக டி.வி.யில் பார்த்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். மிக நன்றாக் இருந்தது. வாங்கிவிடலாம், சலுகையும் வீணாகப் போகாது, குழந்தையும் மிகவும் சந்தோஷப் படுவாள். விலையைப் பார்த்தேன். முந்தின காரைவிட ஐந்து பவுண்டுகள் கூட. போனால் போகிறது.

வர்ஷாவிடம் காண்பிக்க ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு விரைந்தேன்.

வர்ஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். கிடாரைத் தொடாமல் சந்தோஷத்தில் எனக்கும் அவள் அம்மாவிற்கும் முத்தமாரிப் பொழிந்தாள். நன்றி சொல்லி மாளவில்லை.

இரண்டு நாட்கள் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மூன்றாம் நாள் டி.வி.யில் அந்த விளம்பரம் வந்த போது கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தாள்.

"டாடி நீங்க வாங்கிக் குடுத்த கிடார்"

"ஆமாண்டா செல்லம்.."

"டாடி அதுகூட வெச்சிண்டிருக்கிற மைக் செட்டும் வேணும் டாடி..."

"வாங்கித் தந்துட்டாப் போச்சு..உனக்கில்லாமலயா..."

2 comments:

Anonymous said...

You are an excellent APPA (Daddy).

Lakshmi Narasimhan said...

தற்செயலாக உங்கள் வலைப்பதிவை காண நேர்ந்தது. நான் வேலை செய்யும் ஆபீசில் யாருக்கும் தமிழ் தெரியாது என்ற அதிர்ஷ்டமான தருணத்தையும் பெஞ்ச் டேஸ் என்று அன்போடு அழைக்கபடுகின்ற பிஸியான ஆபீஸ் வேலையையும் செய்துகொண்டு உங்களுடைய எல்லாப்பதிவையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். ச்வாரைச்யமாகவும் நகைசுவயுடனும் இருகின்றது. மேலும் தொடரவும். எங்களுக்கும் ஆபீஸ்ல பொழுது போக வேண்டாமா. வாழ்த்துக்கள்!!!

Post a Comment

Related Posts