Sunday, February 07, 2010

அஞ்சு பைசா பைத்தியம்

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே அவர் எங்கள் ஊரில் தான் இருந்து வந்தார். மிக கசங்கி, ஏகப்பட்ட கறைகளோடு இரண்டே பட்டன்களோடு சட்டை. கலைந்து தாறுமாறாக இருக்கும் நரைத்த முடி. ஒரு வாரம் சவரம் செய்யாத வெள்ளை குறுந்தாடி. வேஷ்டியிலும் ஏகப்பட்ட காப்பி கறை இருக்கும். கோனலாய் கட்டியிருந்தாலும் முக்காவாசி நேரம் மடித்து தான் கட்டியிருப்பார். அவரோடு இயற்பெயர் தெரியாது, ஆனால் எல்லாரும் அவரை ஊரில் ‘அஞ்சு பைசா பைத்தியம்’ என்று தான் கூப்பிடுவார்கள்.

ரோட்டில் ஒருத்தரை விடமாட்டார். "சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா" கூடவே ரொம்ப நேரம் வருவார்.. தப்பிப்பதற்காக கடைக்குள் ஏதாவது ஏறினாலும் விடமாட்டார். திரும்ப திரும்ப இதையே சொல்லிக் கொண்டிருப்பார். இவரின் தொல்லை தாங்கமுடியாமல் வெளியூர்காரர்கள் எதாவது சில்லரையை குடுத்து அனுப்பிவிடுவார்கள். உள்ளூர்காரர்கள் சட்டையே செய்யமாட்டார்கள். அவரும் சளைக்காமல் அரை மைல் தூரம் வரை கூட வந்து பார்ப்பார். காலேஜ் மாணவர்களை கூட விட மாட்டார். கேட்பது தான் அஞ்சு பைசா கேட்பாரே தவிர எத்தனை பைசா குடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

"டேய் அவர அவாய்ட் பண்ணன்னும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு...வெத்து பேப்பர்ல கையெழுத்து போடறீயான்னு கேளு அந்த ஆள் ஓடி போய்டுவான்"ன்னு ஒரு நண்பன் என்னிடம் சொன்னான். ஒரு வேளை அடித்துவிட்டால்...என்று கொஞ்சம் உள்ளூர பயத்தோட சொல்லிப் பார்த்தேன். ஓடியெல்லாம் போகவில்லை....ஒரு நிமிடம் அஞ்சு பைசா புராணத்தை விட்டுவிட்டு தீர்க்கமாய் என்னைப் பார்த்தார். அப்புறம் எதுவும் பேசாமல் நடந்து போய்விட்டார்.

"அம்பி அவர் கணக்குல பெரிய சூரப்புலி ஏதாவது சந்தேகம்னா கேட்டுகிடலாம்...போஸ்ட் ஆபிஸுல அக்கவுண்ட்லாம் வெச்சிருக்காரு தெரியுமா" என்று சிவா ஸ்டோர்ஸ்காரர் சொல்லுவார்.

"அந்த ஆள் ப்ராடு...பைத்தியமெல்லாம் இல்லை...சும்மா ஊர ஏமாத்திட்டு பைத்தியம் மாதிரி திரியறான். நல்லா இங்கிலீஷ்லாம் பேசுவான் .."

"சே... சே... அந்த ஆள் பாவம்..ரொம்ப பைத்தியம் இல்லாட்டியும்...ஏதோ சித்தபிரமை பிடிச்சு இப்படி அலயறார்...."

இரண்டு விதமாயும் அவரை பற்றி கருத்துகள் ஊரில் நிலவும். மாமாவுடன் செல்லும் போதெல்லாம் அந்த ஆள் தென்பட்டால் மாமா அவருக்கு விஷ் பண்ணுவார்.அவரும் மாமாவிற்கு திரும்பவும் விஷ் பண்ணுவார்.

"யாரோ அவர் கிட்ட வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி ஏமாத்திட்டா அதுனால தான் இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றாளே அப்பிடியா" என்று மாமாவிடம் ஒரு நாள் கேட்டேன்.

" தெரியலை ...நல்ல மனுஷன் பாவம் என்ன கஷ்டமோ இப்படி ஆகிட்டார்..அவரோட சொந்தக்கார்கள் சொத்து விஷயத்துல எமாத்திட்டான்னு சில பேர் சொல்றா...சில பேர் வியாபார நஷ்டத்துனால இப்படி ஆகிட்டார்ன்னு சொல்றா எது உண்மை தெரியலை...ஆனா நல்ல நாலெட்ஜிபிள் மேன்"

ஒரு நாள் ஹெட் போஸ்ட் ஆபிஸிற்கு வேலையாக சென்றிருந்த போது அங்கு அஞ்சு பைசா பைத்தியம் யாருக்கோ பாரம் பூர்த்தி செய்ய உதவி செய்து பைசா வாங்கிக் கொண்டதைப் பார்த்தேன். போஸ்டல் ஆர்டர் எடுக்க பாரம் எங்க இருக்குன்னு அவரிடம் போய் கேட்டேன். உடனே "அஞ்சு பைசா இருக்குமா"ன்னு ஆரம்பித்துவிட்டார்.

அதற்கடுத்த வாரம் மெயின் ரோடுக்கு போன போது மண்டையில் சின்ன கட்டுடன் அஞ்சு பைசா புராணம் பாடிக்கொண்டிருந்தார். பஸ்ஸ்டாண்டில் யாரோ அடித்துவிட்டதால் கட்டு என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். என்னவோ எனக்கு மனதில் ரொம்ப பதிந்துவிட்ட பெர்சனாலிட்டிகளில் ஒருவராய் இந்த அஞ்சு பைசா பைத்தியம் ஆகிவிட்டார்.

அதற்கப்புறம் நான் சென்னைக்கு படிக்க வந்து விட்டேன். அப்புறம் ஊருக்கு லீவுக்கு போன போதெல்லாம் அஞ்சு பைசா பைத்தியத்தைக் காணவில்லை. "யாரு கண்டா இங்க தான் எங்கயாவது சுத்திண்டு இருக்கும்"ன்னு யாருக்கும் தெரியவில்லை. சென்னையில் வேலை கிடைத்து ஒரு முறை லீவுக்கு போயிருந்த போது ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் அஞ்சு பைசா பைத்தியத்தைப் பார்த்தேன். அதே கோலத்தில் தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்த போது கிளம்பிக் கொண்டிருந்த பஸ்ஸில் "நல்லா படிம்மா என்ன" என்று யாரையோ வழி அனுப்பிக் கொண்டிருந்தார்.

எனக்கு ஆர்வம் கொப்பளிக்க அவரை நோக்கி வேகமாய் நடந்தேன். பெயர் தெரியாததினால் அவர் தோளைத் தொட்டு கூப்பிடலாமா என்று குழப்பமாய் இருநது. எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வது என்று தயக்கமாகவும் இருந்தது. சில விநாடிகளில் அவரே என் பக்கம் திரும்பினார்.

"... எப்படி இருக்கீங்க..?"

"..."

"நியாபகம் இருக்கா என்ன..."

"சார் ஒரு அஞ்சு பைசா இருக்குமா...அஞ்சே பைசா தான்...இருக்குமா பாருங்க சார் அஞ்சே பைசா தான் சார்....கொஞ்சம் பாருங்க சார்....."

Monday, February 01, 2010

வெட்டி பந்தா

ஸ்கூல் பருவமும் பந்தா விட்டுக்கொள்வதும் ரசவடை மாதிரி. ஊறிப் போன ஒரு விஷயம். அப்போது க்ரிகெட் வீட்டுக்கு வீடு வாசப்படி. எனக்கு க்ரிக்கெட் விளையாட பிடிக்குமே தவிர பார்ப்பது அவ்வளவாக வராது. நம்ம நியாபக சக்திக்கு பதினோரு பெயரை நியாபகம் வைத்துக் கொள்வதே பெரிய விஷயம் இதில் ஊர்பட்ட டீமில் உள்ள ஆளையெல்லாம் சென்சஸ் எடுக்க முடியாது என்பதால் 'இன்னிக்கு எனக்கு மேத்ஸ் போடனும்டா" என்று சொல்லிவிட்டு டி.டியில் போடும் ‘முஜே பச்சாவ்’ அரத ஹிந்தி படத்தை பார்க்க உட்கார்ந்துவிடுவேன்.

இருந்தாலும் அரட்டை கச்சேரிகளில் கூட்டத்தோட கோவிந்தா போடுவதற்காக, இந்தியா விளையாடும் ஏதாவது ஒன்னு ரெண்டு மேட்ச்சை பார்த்துவிட்டு "சேட்டன் ஷர்மா இருந்தாலும் யார்க்கர் போட்டிருக்கவேண்டாம்டா"ன்னு நம்ம கருத்தையும் ஆவணத்தில் ஏற்றிவிடுவேன். கிங்பெல் மட்டும் ப்ராட்மேன், சோபர்ஸ் கீபர்ஸ்ன்னு ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் பிரித்து மேய்வான். அங்கேயும் " ஆமாமா அவங்களெல்லாம் க்ரேட் ப்ளேயர்ஸ்...சிறந்த திறமைசாலிகள்"ன்னு அதிலும் மேஜர் சுந்தராஜன் மாதிரி நம்ம கருத்தை ஏத்திவிடுவேன். இதற்கடுத்தகட்ட பைத்தியமாய் பையன்கள் விளையாட்டு வீரர்களின் ப்ளோ அப் படங்களை வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ்களில் வரும் வழ வழ பேபர் ப்ளோ அப் மிகப் பிரசித்தம். எங்கவீட்டில் நாங்க வாரமலர் மட்டும் தான் கடன் வாங்கிப் படிப்போம் என்பதால் இந்த ப்ளோஅப் எல்லாம் எட்டாக்கனி.

இந்த காலக் கட்டங்களில் நண்பன் ஒருவன் டென்னிஸை அறிமுகப் படுத்தினான். முதல் மேட்ச்சே விமன்ஸ் டென்னிஸ் செமிஃபைனல்ஸ். ஆகா என்னாமா விளையாடுகிறார்கள்...இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கேன்னு நானும் ஜோதியில் ஐய்க்கியமாகிவிட்டேன். அதிலும் நமக்கு பிடிச்ச ஒரு ஆளை சப்போர்ட் செய்யவேண்டும் என்று மோனிகா செலஸை இஷ்ட தெய்வமாகிக் கொண்டு விட்டேன். எனக்கு என்னவோ ஆண்கள் டென்னிஸ் அவ்வளவு பிடிக்கவில்லை. என்னைச் சொல்லி குற்றமில்லை...வீணாப் போனவர்கள் பெண்கள் மாதிரி அவ்வளவு விறுவிறுப்பாக விளையாடாததால் இருக்கலாம்.

"டேய் மோனிகா செலஸ் படம் கிடைச்சா ஒன்னு லவட்டி குடுடான்னு தெரிவில் சீனாதானா மாமா தவிர எல்லாரிடமும் நாயாய் பேயாய் கெஞ்சி டீல் போட்டு வைத்திருந்தேன். நம்ம யோகம் மோனிகா சிக்கவே இல்லை. "டேய் என்னோட கலெக்க்ஷன்ல கடைசியா இது ரெண்டு தான் இருக்கு வேணும்னா வெச்சிக்கோ ஏதோ புட்பால் ப்ளேயர்ஸ்ன்னு நினைக்கிறேன்"ன்னு கிங்பெல் உப்புக்கு ரெண்டு படத்தை குடுத்தான். மோனிகா வாழ வேண்டிய புக் ஷெல்பில் அரை ட்ராயரை போட்டுக்கொண்டு தொடையில் ரெண்டு கோழியை ஒளித்து வைத்துக் கொண்டது மாதிரி இருக்கும் இந்த காட்டான்களையா மாட்டுவது என்று எனக்கு ஏக வருத்தம். அதை விட கொடுமை அந்த படத்தில் இருப்பது யாரு என்பது கூட தெரியாமல் படத்தை பந்தாவாக மாட்டி வைத்திருந்தது தான்.

அடுத்த வாரம் சீனாதானா மாமா வீட்டிற்கு வந்த போது "சபாஷ் உன்னோட டேஸ்ட நான் ரொம்ப பாராட்டுறேன்...எல்லாரும் க்ரிக்கெட் க்ரிகெட்ன்னு பைத்தியமாய் அலையும் போது நீ வித்தியாசமாய் புட்பால் ரசிகனாய் இருக்க பாரு இது ரொம்ப பிடிச்சிருக்குன்னு " ஒரே பாராட்டு மழை. எங்க அவர் இந்த ஆளப் பத்தி சொல்லுன்னு சொல்லிவிடுவாரோன்னு எனக்கு ஒரே பயம். "ஹீ ஹீ ஆமாம் மாமா எனக்கு புட்பால்னா ரொம்ப ஆசை...நம்மூர்ல சரியான க்ரவுண்டே இல்லை எல்லாம் ஒரே குழியும் குட்டையுமா இருக்கு...கார்ப்பரேஷன்ல சொல்லனும்"ன்னு எதோ சமாளித்து கொண்டிருந்தேன். "ஓய் உம்ம பையனுக்கு நல்ல டேஸ்ட்... மாட்டி வைச்சிருக்கிறது யாரு தெரியுமோ....பீலே!!! லேசுப்பட்ட ஆளில்லை ஓய்....மிகப் பெரிய புட்பால் லெஜென்ட்...ப்ரெசிலியன்"ன்னு மாமாக்கு சினா தானா மாமா பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது தான் இது நாள் வரைக்கும் படம் காட்டி பீலா விட்டுக்கொண்டிருந்தது பீலேன்னு தெரிந்தது.

நான் மாடியிருந்த படத்திலிருந்த அந்த இன்னொரு ஆள் யாருன்னு இன்று வரை தெரியாது. டென்னிஸை அறிமுகப் படுத்திய நண்பன் என் பிறந்த நாளுக்கு மோனிகா செலஸ் ஸ்போர்ட் ஸ்டார் ப்ளோ அப்பை மனவுந்து தர, குட்டைப் பாவாடையை போட்டுக் கொண்டு மார்க்கமாய் இருக்கும் மோனிகா செலஸ் படத்தை நம்ம புக் ஷெல்பில் ஒட்டினால் மாமா ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோன்னு பயம். "டேய் நீ என்ன மோனிகா செலஸ மருமகளாவா ஏத்துக் கொள்ளச் சொல்லப் போற...இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு...புஸ்தகத்த வெச்சு மறைச்சிடுடா"ன்னு கூட இருந்த ஒரு ஐடியா மணி வாரி வழங்கி, மோனிகா புஸ்தகத்தின் பின்னாலிருந்து ரொம்ப நாள் அருள் பாலித்துக் கொண்டிருந்தாள்.

ஜப்பான்காரர்கள் எல்லாரும் ஜூடோவில் பெரிய ஆள், சைனாக்காரர்கள் எல்லாரும் கராத்தேவில் பெரிய ஆள் என்ற உலக கோட்பாடின் படி இந்தியாவில் இருப்பவர்களெல்லாம் கிரிகெட்டில் பிஸ்துன்னு இங்கு இங்கிலாந்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆபிஸில் கட்டிடம் மாறிய புதிதில் ஒரு பெரிய தலையின் செக்ரட்டரி பக்கத்தில் உட்கார்ந்திருந்ததால் சும்மா பேச்சு பழக்கம். "அப்போ நீ பெரிய க்ரிக்கெட் பைத்தியமாய் இருப்பாயே ஒரு மேட்ச் கூட விடாம பார்ப்பியே...ஒருத்தர் விடாம ஜாதகத்த நோட் பண்ணி வைச்சிருப்பியே...எனக்கு க்ரிகெட் சுத்தமா தெரியாது"ன்னு அந்த மகராசியே எடுத்துக் குடுக்க, காசா பணமா..."ஹீ...ஹீ...ஆமா பின்ன....இருக்காதா...உங்களுக்கு வேற க்ரிகெட் தெரியாது....அப்போ எனக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கனும் ... க்ரிகெட்னா எனக்கு உயிரு.... இவ்வளவு ஏன் க்ரிகெட்ன்னு சொன்னாதான் நான் தண்ணியே குடிப்பேன்னா பார்த்துக்கோங்களேன்" ஏகத்துக்கு எடுத்துவிட்டிருந்தேன்.
முன்னொரு நாளில் இங்கே ட்ரெயினில் கபில் தேவை சந்திக்க நேர்ந்தது. எந்த பந்தாவுமில்லாமல் மனுஷன் சகஜமாய் பேசிக் கொண்டு வர...எதுக்கும் இருக்கட்டும்ன்னு அவருடன் நிறைய போட்டோ எடுத்து வைத்திருந்தேன். அதை ஊருக்கு போயிருந்த போது ஊரில் காட்டிய போது "ஐ....இவரா இவர எனக்குத் தெரியுமே...இவர் முன்னாடி பூஸ்ட் விளம்பரத்துக்கு வருவாரே அவர் தானே"ன்னு நான் காட்டிய கூட்டமெல்லாம் எனக்கு மேல் அப்பரசன்டியாய் இருந்தது. கபில் தேவை சந்தித்தது பற்றியும் அம்மணியிடம் அளந்து விட்டிருந்தேன்.


மிக சமீபத்தில் ஆபிஸில் இரண்டு நாள் ஆப்சைட். ஆபிஸ் செலவில் வெளியூரில் தங்கி, நல்ல சாப்பிட்டுவிட்டு, டீலெக்ஸ் ரூம் போட்டு யோசித்து ஆபிஸை முன்னேறுவது எப்படின்னு வொர்க் ஷாப். போவதற்கு முந்தின நாள் நம்ம பெரிய தலை செகரட்டரி வந்து "உனக்கு ஒரு சந்தோஷமான் செய்தி!!... கேட்ட மாத்திரத்தில் நீ துள்ளிக் குதிக்க போற...நம்ம ஆப்சைட் கெஸ்ட் ஸ்பீக்கர் யாருன்னு தெரியுமா....டேவிட் கோவர் !!!! ஆனா இந்த விஷயத்தை யாருட்டயும் சொல்லிடாத இட்ஸ் அ சீக்கிரெட் "ன்னு என் காதில் கிசுகிசுத்துவிட்டு போக, யாரது கோவர்...நம்ம ட்ரேடிங் டெஸ்க் ஹெட்டா? அந்த ஆளா இருக்காதே கெஸ்ட் ஸ்பீக்கர்னா வெளியிலேர்ந்து பிரபலத் தானே கூப்பிடுவாங்கன்னு எனக்கு ஏகக் குழப்பம். "எனக்கு தெரியும் நீ சும்மா என்ன கலாசறதுக்கு நடிக்கிறன்னு...நான் ஸ்பெஷலா உன்னை அந்த ஆள் கூட டின்னர் டேபிளில் போட்டிருக்கேன்...சும்மா என்ஜாய் பண்ணு”ன்னு அம்மணி சொல்லிவிட்டு போய்விட்டார். ஐயைய்யோ அந்த டேபிள்லயேவா...அங்க பெரிய தலைங்க தானே உட்காருவாங்கன்னு உதறலெடுத்து. இதென்ன பெரியா சீக்கிரட்டா இருக்கே இந்த ஆள் யாருன்னு கூகிள் செய்து பார்த்தால்....அன்னார் இங்கிலாந்தின் முன்னாள் பெரிய கேப்டன்னு தகவல்கள் கிடைத்தது. அடப்பாவிங்களா...இன்னுமாடா என்ன நம்புறீங்க...எடுத்துக்குடுக்க கூட அங்க சீனாதானா மாமா இருக்க மாட்டாரேன்னு பரீட்சைக்கு படிப்பது மாதிரி அன்னாரைப் பற்றி படிக்க வேண்டியதாய் போய்விட்டது. "நீங்க தான் இது வரைக்கும் ஒருதரம் கூட நேர்ல பார்காமலேயே தாஜ்மகாலை செங்கல் செங்கலா விவரிச்சி இந்த ஊர்ல நிறைய பேருக்கு வெர்ட்சுவல் டூர் குடுத்திருக்கீங்களே ..உங்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி..."ன்னு தங்கமணி வேறு நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தார்.

ஆப்சட்டில் எங்கள் டேபிளில் எல்லாரும் என்னை பெரிய கிர்க்கெட் பிஸ்துன்னு கோவரிடம் அறிமுகம் செய்து வைக்க....எனக்கு ஏக உதறல். "நான் சென்னைக்கு வந்திருக்கேன்...அங்கே சிதம்பரம் ஸ்டேடியமில் விளையாடி இருக்கிறேன்"ன்னு அவர் சொல்ல..." ஆமாமா போன வருஷம் கூட கபில்தேவ் இங்க வந்திருந்தார்...மீட் பண்ணி ரொம்ப நேரம் பேசினோம்... சிதம்பரம் ஸ்டேடியமிலிருந்து நேரா வந்து லெப்ட்ல திரும்பினா மைலாப்பூர் வரும் அங்க டப்பா செட்டி கடைன்னு ஒன்னு இருக்கு"ன்னு நானும் சம்பந்தா சமபந்தம் இல்லாமல் உளறிக் கொட்டி...ஒருவழியாய் சமாளித்து வந்தேன்.

Sunday, January 24, 2010

தி மேன் ஃப்ரம் எர்த்



பல திரைப்படங்கள் நம்மை பல்வேறு காரணங்களுக்காக பாதிக்கின்றன, நமக்கு அவற்றை பிடித்திருக்கின்றது. நம்மூரில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சதம் அடித்த படங்களும் இருக்கின்றன. ஹாலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எட்டே எட்டு முக்கியமான கதாபாத்திரங்களை ஒரே ஒரு ரூமில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம் தான் தி மேன் ஃப்ரம் எர்த்.

இந்தப் படம் அமெரிக்காவிலேயே குறைவான தியேட்டர்களில் மட்டுமே 2007ல் ரிலீஸ் ஆகியது. பின் டி.வி.டியில் ரிலீஸ் ஆகியது. அதையெல்லாம் தாண்டி இந்த படம் இன்டெர்நெட்டில் ரசிகர்களால் பல்வேறு ஃபைல் ஷேரிங் தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது (முக்கியமாக பிட் டாரெண்ட்டில்). திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி இன்டர்நெட்டில் ஷேர் செய்து இந்த படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவியதற்காக ரசிகர்களுக்கு இந்த படத்தின் ப்ரொடியூசர் நன்றி கூறினார்.

ஹாலிவுட்டின் பிரமாண்டமும், சி.ஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் பிரதானமாய் வைத்து வரும் பெரும்பாலான சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு மத்தியில் வந்திருக்கும் மிக வித்தியாசமான ஒரு படம். பார்த்த பிறகு ஒரு மணிநேரம் பிரம்மை பிடித்த மாதிரி அசை போட வைத்த அற்புதமான படம். ஸ்க்ரீன் ப்ளேயையும் தாண்டி வசனத்தால் பார்பவரை கட்டிப் போட வைத்திருக்கும் படம்.

சில படங்களின் மேலோட்டமான கதை தெரிந்தாலும் அவற்றின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாது. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது என்பதால் கதையை மேலோட்டமாய் சொல்லி இருக்கிறேன். கதையை தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு ப்ரொபசர் ஒருவர் ஊரைக் காலி செய்து கொண்டு வேறு ஊர் போகப் புறப்படுகிறார். அவருக்கு சென்ட் ஆஃப் குடுக்க அவருடன் பணியாற்றிய சக ப்ரொபசர்களும், சில நண்பர்களும் விட்டிற்க்கு வருகின்றனர். "ஏன்யா திடீருன்னு இப்படி சொல்லாம கொள்ளாம ஊர காலி பண்ணிட்டு போற"ன்னு அவர்கள் ஆரம்பிக்க...கொஞ்ச நேரத்துக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார் ப்ரொபசர். அவர்கள் மேலும் காரணத்திற்காக வற்புறுத்த, மெதுவாய் விளையாட்டாய் ஒரு சயன்ஸ் பிக்க்ஷன் கதை சொல்ல ஆரம்பிப்பது போல் ஆரம்பித்து, கடைசியில் தான் பதினாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் கற்காலம், பனிக்காலாத்திற்கெல்லாம் முன் தோன்றிய மனிதன் என்றும், தனக்கு வயோதிகமே கிட்டாமலும் மரணமும் இல்லாமலும் இன்று வரை தொடர்வதாயும், இதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று பத்து வருததிற்க்கு ஒரு தரம் ஊரை மாற்றி விடுவதாயும் சொல்ல கதை சூடு பிடிக்கிறது.

முதலில் விளையாட்டு என்று நம்பி எல்லாரும் சும்மா கிண்டிக் கொடுத்து கேள்விகள் ஆரம்பிக்க, அப்புறம் இது அவர் நம்பிக் கொண்டிருக்கும் மனோவியாதி என்று தியரியை உடைக்க வேண்டுமென்று கேள்விகள் தொடுக்க அதுவே மனித இனத்தின் பல்வேறு நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை ஆட்டுகின்றது. இந்த இடங்களிலெல்லாம் கதை மற்றும் வசன கர்தா ஜெரோம் பிர்க்ஸ்பி பின்னி பெடெலெடுத்திருக்கிறார். கதை நெடுக அவரின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. கதை இந்தியா வரை தொடுகின்றது.

ஒரே ஒரு ரூமில் காமிராவை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மற்றுமே மாற்றி எடுத்தால் அந்த கால சென்னை தூர்தர்ஷன் செவ்வாய் கிழமை நாடகம் என்ற எனது நையாண்டியை உடைதெரிந்து விட்டிருக்கிறது இந்த படம். ஸ்கிரீன் ப்ளேய் மிக சிறப்பாக இருந்தாலும் அதையும் தாண்டி வசனங்கள் நம்மை அப்படியே கட்டிப் போடுகின்றன.

கதை மிக மிக வித்தியாசமான ஒரிஜினாலிட்டி உள்ள கதை. ஒரு ப்யாலஜிஸ்ட், ஒரு ஆந்திரபோலஜிஸ்ட், ஒரு ஹிஸ்டோரியன், ஒரு சைக்கியாரிஸ்ட், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் மற்றும் ஒரு ஸ்டூடென்ட் என்று மிக அழகாய் பாத்திரங்களை செதுக்கி அவர்கள் செய்யும் தர்கத்திற்க்கு சரியான வலூட்டியிருக்கிறார் கதாசிரியர். அவர்கள் கேட்க்கும் கேள்விகளிலும், பதில்களிலும் லாஜிக் இடிபடாமல் ஆத்தென்டிக்காய் வடிவமைத்திருக்கிறார். கதாசிரியரின் தந்தையும் கதாசிரியரும், தந்தையின் காலத்தில் டிஸ்கஸ் செய்த கதைக் களமாம் இது. நடித்த அத்துனை நடிகர்களும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் டைரக்டர் ரிச்சர்ட் ஷெங்மேன்.

துப்பாக்கி, குலுக்கு நடனம் மற்றும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் பார்க்க தயாராய் இருந்தால் - கண்டிப்பாய் பாருங்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட்.

Wednesday, January 13, 2010

ப்ளாக் தத்துவம் தொள்ளாயிரத்து முப்பத்தி சொச்சம்

"நீங்க என்ன பெரிய சுஜாதாவா நீங்க என்ன பெரிய மணிரத்னமா?"ன்னு என்கிட்ட மட்டும் தான் தான் கேட்க முடியும். சுஜாதாகிட்டயோ மணிரத்னம் கிட்டையோ போய் "நீங்க என்ன பெரிய டுபுக்கா?"ன்னு கேட்க முடியுமோ.?? - அதுதான் வாழ்க்கை.
(இல்ல கேட்டுத் தான் பாருங்களேன் :)) )


-ஐடியா மணி சிந்தனையை தூண்டியவர் தானைத் தலைவி பொற்கொடி