Wednesday, January 16, 2013

ஜில்பான்ஸ் - 160113

சமீபத்திய சினிமா -  நீ தானே என் பொன்வசந்தம். படம் வந்த அடுத்த நாளே போய்ப் பார்த்தேன்.எனக்கு படத்தை விட சமந்தாகிராபி மிகவும் பிடித்தது. சும்மா சொல்லைங்க, படத்துல சமந்தாவின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்லாம் அப்படியே கண்ணுல நிக்குது. வழக்கமாக கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ஸ் ஸ்பெலிஸ்டுகளை கொடுக்க வைக்காமல், ஒரு மாதிரி உடைந்த குரலில் மெட்ராஸ் பொண்ணுங்களின் ஸ்லாங்கில்,அவருடைய சொந்தக் குரலிலேயே பேசவைத்திருந்தது மிகவும் பிடித்திருந்தது.ஆளும் அத்தனை பாந்தம். ஜீவாவும் படத்தில் நடித்திருக்கிறார்ன்னு கேள்விப் பட்டு படத்தை அஃபீஷியலாய் இரண்டாவது முறை பார்த்தால் அட ஆமாம் அவரும் மிக நன்றாக நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் கொஞ்சம் மேல் சாவனிஸ்டிக்காவே பட்டது. எதற்காக சமந்தாவை மன்னிப்பெல்லாம் கேட்க வைக்கவேண்டும் என்று புரியவே இல்லை.இணையத்திலே இந்தப் படத்தை குப்பை என்று ஒதுக்குபவர்கள் ஒரு கட்சி. ஆஹா படம் சூப்பர்யான்னு கொண்டாடுபவர்கள் ஒரு கட்சி. இந்த இரண்டாவது கட்சியில் இளையாராஜா என்னம்மா இசையமைத்திருக்கார்ன்னு மோன நிலையில் வாதாடும் ஒரு பெரும்பாண்மை வேறு. எனக்கென்னமோ இளையராஜாவின் இசை கொஞ்சம் let downனாகப் பட்டது. இதையெல்லாம் விட மொட்டை எவ்வளவோ சூப்பராய் இசையமைத்திருக்கிறார். ஆனால் எனக்கிருக்கிற டவுட்டு என்னான்ன...இந்த படம் சூப்பர் கட்சில ஏன் சார் எல்லாம் ஓவர் பெரிசுங்களாகவே இருக்காங்க? (நல்லா கவனிங்க நான் படம் சூப்பர்ன்னு சொல்லவே இல்லை;) )

மேலே சொன்ன படத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் Life of Pi பார்த்தேன். ரொம்பவே பிடித்திருந்தது. அதுவும் உட்பொருள் வேறு எனக்கு மிக மிக பிடித்த ஒரு விஷயம் - கடவுள். (அது பற்றி இன்னொரு நாள் - ஆனால் அது பற்றி எழுதுவதை விட, எந்த எமோஷனோ செண்டிமெண்ட்டோ இல்லாத நியூட்ரல் நபர்களிடம் நேரில் விவாதிப்பதே எனது விருப்பம்). படத்தை நான் இன்னமும் முழுதாக உள்வாங்கவில்லை என்ற உணர்வே இருக்கிறது. அதனாலேயே படத்தை இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்று விருப்பம். செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்றில்லாமல் கடல், புயல, கடல் வாழ் உயிரினங்கள் என்று பலவற்றையும் அருகில் இருந்து உணர வைத்த சினிமேட்டோகிராஃபிக்கு ஒரு சபாஷ். இந்த மாதிரி உணர்வு சினிமாவில் கிடைப்பது அபூர்வம். நேரில் அனுபவித்தால் கூட இந்த உணர்வை பெற்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை. 3D-யில் நான் ரொம்ப ரசித்த சமீபத்திய படம் இது. சான்ஸ் கிடைத்தால் 3D-யில் பெரிய ஸ்க்ரீன் உள்ள தியேட்டரில் பாருங்கள்.

மேலே சொன்னதையே இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் ரொம்ப நாளாய் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்த ஆரண்யகாண்டம் பார்த்தேன். ஆஹா என்னன்னு சொல்ல...பின்னிப் பெடெலெடுத்திருக்கிறார் இயக்குனர்.தமிழில் இதான் முதல் neo noir என்கிறார்கள். அட இதுக்கு முன்னாடி வந்ததில்லையா? வழக்கமான ஜாம்பவான்களுக்கிடையில் காளையானாய் நடித்திருக்கும் குரு சோமசுந்தரமும், கொடுக்காபுளியாய் நடித்திருக்கும் மாஸ்டர் வசந்தும் சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.தமிழில் இந்த மாதிரி ஒரு அருமையான நடிப்பை ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன்.ரத்தத்தைப் பார்த்து அருவருக்கும் நபர்களுக்கோ,குழந்தைகளுக்கோ  இந்தப் படம் உகந்ததல்ல.

நல்ல அருமையான பாதாம் அல்வாவும் தூள் பக்கோடாவும் சாப்பிட்டு விட்டு சுவையை அசை போட்டுக்கொண்டிருக்கும் போது அழுகின வேர்கடலை பல்லுக்கிடையில் சிக்கினால் எப்படி இருக்கும். அப்படித் தான் Life of Piபார்த்து விட்டு நான் பார்த்துத் தொலைத்த படம் அலெக்ஸ் பாண்டியன். ஸப்ப்பா...மரண கடிடா சாமி. முதல் சீனில் சந்தானபாரதி வருகிறார். அப்புறம் ஆள் அப்பீட், எதுக்கு வந்தார்ன்னே தெரியலை. அப்புறம் 20நிமிஷத்திற்கு ஒரு முறை புதுசு புதுசாய் வில்லன்களும் நடிகைகளும் அறிமுகம் ஆகிறார்கள். அடுத்த படத்துல நீங்க கண்டிப்பா இருக்கீங்கன்னு டைரக்ட்டர் ஏகப்பட்ட நபர்களிடம் வாக்குறுதி குடுத்திருந்தாரா தெரியவில்லை. படத்த சீக்கிரம் முடிங்கப்பா, கார் பார்க்கிங் காசாவது மிச்சமாகும் என்று என்னை நினைக்க வைத்த ரெக்கார்ட் படம் இது. ரொம்ப நாளாய் பழிவாங்க நினைத்திருந்த நண்பர் ஒருவருக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். கார்த்தி டான்ஸ் ஆடும் போதும், ஓடி வரும் போதும் "சார் டெய்லி வூட்டுல டிபன் - பொங்கலும் பூரி செட்டுமா"ன்னு கேட்கத் தோன்றுகிறது, தொப்பை தொப்பை.

சமீபத்திய வாசிப்பு - உள்ளூர் லைப்ரரியில் சமீபத்தில் மாட்டிய புத்தகம் நிலா எழுதிய "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" நாவல். பின் பக்க அட்டையில் கதை அறிமுகத்தை படித்து எடுத்ததில் ஏமாற்றவில்லை. கொஞ்சம் ஒட்டாத ஒரு சந்தர்ப்பத்தில் கதையின் நாட்டை வைத்திருந்தாலும், துள்ளலான நடையும் சொன்ன விதமும் கதையை அருமையாய் நகர்த்திச் செல்கின்றன.

இந்த வார கேள்வி- ரயில்வே ட்ராக்கில் எதற்காக இவ்வளவு சரளைக் கற்களை போட்டு வைத்திருக்கிறார்கள்? - எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி. உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். எல்லா நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது. கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் அட இவ்வளவு இருக்கிறதா என்று தெரிய வந்தது. என்ன தான் திடமான மண்ணில் தண்டவாளங்களைப் போட்டிருந்தாலும் ரயில் போக வர காலக்கட்டத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் அழுந்த அழுந்த தண்டவாளத்திற்க்கு கீழே பள்ளம் விழுந்து விடுமாம். ஆனால் இந்த சரளைக் கற்கள் லூஸாய் போட்டிருப்பதனால் அந்த மாதிரி நிகழாதாம். தண்டவாளங்களின் கீழே பள்ளம் வராமலும், ரயில் தண்டவாளங்களில் ஸ்மூத்தாய் பயணிப்பதற்கு இவை மிக உதவியாய் இருக்கின்றன. ஆனால் இதை விட முக்கியமான இன்னொரு உபயோகம் இந்த சரளைக் கற்கள் மழைத் தண்ணீரை கீழே மண்ணுக்கு ட்ரயின் செய்து தண்டவாளங்களில் ஈரப் பதம் தாக்காமல் காக்கின்றன. மண் ஈரப் பதத்தை நீண்ட காலம் வைத்திருக்கும். பழைய காலத்தில் சில இடங்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மரத்தில் வேறு இருந்ததைப் பார்த்திருக்கலாம். அத்தோடு இவை தண்டவாளங்களின் உயரத்தை ஈஸியாய் கூட்டிக் குறைக்கவும் உபயோகப் படுகின்றன. அடிக்கடி மாற்றுவதற்கும், திரும்ப ரொப்புவதற்க்கும் ஏதுவாய் வேறு இருக்கும்.

14 comments:

Unknown said...

நல்லா கவனிங்க நான் படம் சூப்பர்னு சொல்லவே இல்ல!!! ஹா ஹா ஹா. அருமை சார்.

பினாத்தல் சுரேஷ் said...

Life of Pi - ஐ இவ்வளவு சிலாகிக்கிறீர்களே.. அது ஒரு மேலோட்டமான (ஒருவேளை ஆழ்ந்த சிந்தனை இருந்துவிடுமோ என்று நினைக்கத்தூண்டும்) படம் என்பது எ தா அ. 3டி நல்லாருக்கு, கதை சுவாரஸ்யமா போகுது.. நோ இஷ்யூஸ் தேர். ஆனா பாண்டிச்சேரி படேலின் அரைகுறைப் பாத்திரம் காமெடி டைம். புலியோடு கடலில் இருக்கும் அட்வெஞ்சரா, பையின் கடவுள் தேடல்களான்னு யோசிச்சு ரெண்டுக்கும் பங்கு வச்சிருக்காங்க. ரெண்டு பங்கான்னு யோசிச்சு, ரெண்டையும் கனெக்ட் பண்றாப்பல அங்கங்கே கொஞ்சம் வசனம் தூவி இருக்காங்க. இந்த ஜிம்மிக்லே நீங்களும் மயங்கிட்டீங்களேன்னுதான் வருத்தம்.

அப்புறம், லாஸ்ட்லைனை கல்லிடைக்காரன் வந்து பாக்கறதுக்குள்ள ஏதுவாய் இருக்கும்னு மாத்திருங்க.

அமுதா கிருஷ்ணா said...

நானும் கவனித்தேன் பதிவுகளில் நீ தானே என் பொன் வசந்தம் என்னை மாதிரி வயசானவுங்களுக்கு தான் பிடித்தது.என் பசங்களுக்கு பிடிக்கவேயில்லை.சமந்தா சமத்தா நடிச்சுருக்கு. எனக்கு விண்ணை தாண்டி வருவாயா பிடிக்காது.என் பசங்களுக்கு ரொம்ப பிடித்தது.

Anonymous said...

சமந்தாவை நான் ஈ படத்துல பாத்தப்பவே புடிச்சிப் போச்சு :) அதுல கட்டம் கட்டமா சுடிதார் ஒன்னு போட்டுக்கிட்டு வரும் போது.. ஆகா!

ஆனாலும் நீ.எ.பொ.வ பாக்க பயந்தான். உ.தொகள்ள முதன்முறையா வரும் போது பாத்துக்கலாம்.

நீ.எ.பொ.வசந்தத்துக்கு ஒங்க விமர்சனமும் அமாஸ் அம்மா விமர்சனமும் ஒரே மாதிரி இருக்கு. நியாயமாவும் இருக்கு.

லைஃப் ஆஃப் பை இன்னும் பாக்கல. பாக்கனும். ஒரிஜினல் டிவிடி வந்துருச்சுன்னா வீட்லயே பாத்துறலாம்.

அலெக்ஸ் பாண்டியனா? ஒங்களுக்கெல்லாம் துணிச்சல் சாஸ்த்தி. ரொம்ப சாஸ்த்தி. :)

sriram said...

யாராவது Ghost Writer வச்சி எழுதுனீங்களா? Usual டுபுக்கார் மிஸ்ஸிங்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Prem S said...

சமந்தாவின் பள்ளிபருவ காட்சிகளில் முகபாவனை அருமையாக தான் இருந்தது .

Dubukku said...

சிவராமன் - :))) இல்லாட்டி என்னையும் அந்தக் கூட்டத்துல சேர்க்கிறதுக்குன்னு சில பேர் அலைஞ்சிகிட்டு திரியறாய்ங்க ;) நன்றி

பினாத்தலார் - எனக்கு இந்த கதை, ஸ்க்ரீன் ப்ளே எல்லாத்தையும் விட முக்கியமா சினிமாட்டோக்ராஃபியும், சி.ஜி.ஐயும் தான் மிகப் பிடித்தது. இந்த மாதிரி ஒரு சமுத்திரத்திலே வரும் எக்ஸ்பீரியன்ஸ்...அந்தப் புயல், மீன்கள், விலங்குகள் etc etc ...அந்த அனுபவம்...சான்ஸே இல்லீங்க. அதுவும் அந்த ஆரம்ப காட்சிகள் 3டியில் ரொம்பவே ரசித்தேன். இந்த கதை உட்பொருள் மற்றும் நீங்க சொன்ன ஓட்டைகள் எல்லாத்தையும் பார்க்க இன்னொரு தரம் படம் பார்க்கணும்:) ஆமா நீங்க எந்த கடைசி வரிய சொல்றீங்க... ;) நன்றிங்கோவ்

அமுதா - ஆமாங்க :)))) சரி ஏங்க உங்களுக்கெல்லாம் இந்தப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு :P (கோச்சிக்காதீங்க சும்மா டமாசு டமாசு)

ராகவன் - //அதுல கட்டம் கட்டமா சுடிதார் ஒன்னு போட்டுக்கிட்டு வரும் போது// டீட்டெயில்லாம் ரொம்ப கரெக்ட்டா கலக்குறீங்க :))))) லைப் ஆப் பை காட்சி பிரமாண்டங்களுக்கு தியேட்டர் நன்றாக இருக்கும். முடியலைன்னா டி.வி.டி :)
அலெக்ஸ் பாண்டியன் - ஆமாங்க தெரியாத்தனமா போயிட்டேன்

ஸ்ரீராம் - :))) முதல்ல எதாவது எழுத வருதான்னு பார்க்கறேன் அப்புறம் ஒழுங்கா எழுதறதுக்கு ட்ரை பண்ணறேன் :))) அதுவரைக்கும் உங்க ஆசிர்வாதமும் பொறுமையும் வேணும் :)

Prillass s - ஆமாங்க சான்ஸே இல்லை.. ம்ம்ம் படம் இன்னொரு தரம் பார்க்கணும் :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நீ தானே என் பொன் வசந்தம் - என்னை பொறுத்த வரை இளையராஜா ஏமாற்றவில்லை. ஆனா கெளதம் மேனன் இதை "விண்ணை தாண்டி வருவாயா - பார்ட் 2"னு தலைப்பு வெச்சுருந்தா சரியா இருந்துருக்குமோ என்னமோ...:) சமந்தா நிச்சியம் ஸ்கோர் பண்ணிட்டாங்க, ஜீவாவுக்கு அவ்ளோ பொருந்தலை, பட் ஹி டிட் ஹிஸ் பெஸ்ட்

Sh... said...

எனக்கு கூட நீ.எ.பொ. பிடிச்சுது, ஆனா சமந்தா ஜோதிகா-2 வோன்னு தோணுது - கொஞ்சம் ஒவர் ஆக்டிங்க். ஆனா பார்க்க ரொம்ப lovely -ஆ இருக்காங்க. நீங்க பீட்சா, ந.கொ.ப.கா. லாம் இன்னும் பார்க்கலையா?

தக்குடு said...

அண்ணாச்சி, அந்த படத்துல(Life of Pi) பையன் கொட்டு(மிருதங்கம்) அடிச்சுண்டே பரதம் ஆடர பொண்னுக்கு நூலு விடர ஸீன் பாத்தபோது என்னை அறியாமல் தியேட்டர்ல நான் மட்டும் சிரிச்சேன். :)

Dubukku said...

அப்பாவி தங்கமணி - இளையராஜா - நான் சொன்னத படிச்சு பாருங்க ;) ஏங்க ஜீவா பிடிக்கலையா? க்யூட்டா தானே இருந்தான்? நல்லாவும் நடிச்சிருந்த மாதிரி பட்டது எனக்கு :)) ( அதுதான் ஒவ்வொருத்தருடைய டேஸ்ட்டும் வித்தியாசப் படுங்கிறது )

sh... - ஏங்க சமந்தாவ ஜோதிகா 2ன்னு சொல்றதெல்லாம் ஓவர்ங்க :)) //ஆனா பார்க்க ரொம்ப lovely -ஆ இருக்காங்க// --ஆங் வாங்க வழிக்கு :))
பீட்ஸாவும், ந.கொ.ப.கா வும் பார்த்தேன், பிடிச்சுது.

தக்குடு - டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஓவர் குசும்புடா உனக்கு இருடி மாப்பிள்ள:)))))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா காதல் பாட்டு நல்லா இருக்கே டுபுக்கு.
ஜீவாவுக்கு வயசாயிடுத்தோ:)

பீட்சாவும் நகொப காணோம் பார்க்கணும் பார்க்கணும் பார்க்கணும்;)

Madhuram said...

Ennoda Rangamani ungala madhiri dhaan vidama ella padathaiyum papparu, onnu vidradhu illa. Appadi pattavarke, NEP 30 minutes mela thangala. Ennalaiyum paarka mudiyala. We stopped the DVD just after 30 minutes. Engalukku "vada poche" dhaan. Because the DVD is a dollar and the big fat uludhu and keera vada they sell next door is a dollar too. So eppa padam pidikalanaalum we tell vada poche!

Kavitha said...

"நல்ல அருமையான பாதாம் அல்வாவும் தூள் பக்கோடாவும் சாப்பிட்டு விட்டு சுவையை அசை போட்டுக்கொண்டிருக்கும் போது அழுகின வேர்கடலை பல்லுக்கிடையில் சிக்கினால் எப்படி இருக்கும். அப்படித் தான் Life of Piபார்த்து விட்டு நான் பார்த்துத் தொலைத்த படம் அலெக்ஸ் பாண்டியன்" - Wow!

Post a Comment

Related Posts