Tuesday, August 23, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...2

For previous Parts -- >Part 1

கிட்டப்பா...சற்றே குள்ளம். சற்று சிவப்பான தேகம். ஒல்லியுமில்லாமல் குண்டுமில்லாமல் உடல்வாகு. குரல் தான் கொஞசம் உடைந்து பெண்மை கலந்திருக்கும். காலேஜில் முதன் முதலில் அவனைப் பார்த்த போது பரம சாது என்று தான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் பிடிவாதம். எல்லோருக்கும் தான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்றால் இவனுக்குத் தான் பிடித்த முயலுக்கு மட்டும் தான் நாலு கால். சில சமயம் அவன் வாதம் செய்ய ஆரம்பித்தாலே போதும் பையன்கள் பிடித்து அமுக்கி உட்காரவைத்துவிடுவார்கள். ஆனாலும் ஆபத்தானவன் அல்ல. "ஜீன்ஸ்" படத்தில் ப்ரஷாந்த் ரோலில் நடிப்பதை விட லெக்ஷ்மீ காரெக்டரில் நடித்தால் ஐஷ்வர்யாராயுடன் இன்னும் கொஞ்சம் அன்யோன்யமாக நடிக்கலாமே என்று நினைக்கும் அல்ப சந்தோஷி.

இங்கே எங்கள் கல்லூரியைப் பற்றி சொல்லிவிட வேண்டும். ஆரம்பித்த காலத்திலிருந்து பெண்கள் வாடையே மருந்த்துக்குக் கூடப் படாத பாரம்பரியம் வாய்ந்த பிரம்மச்சாரி ஆண்கள் கல்லூரி. எனக்குப் பெண்கள் வாடையே பிடிக்காதென்று (?!) எப்பிடியோ தெரிந்து கொண்டு நாங்கள் சேர்ந்த வருஷத்திலிருந்து பெண்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இரண்டாம் வருடம் மூன்றாவது வருடமெல்லாம் ஆண்கள் மட்டும் தான் . எங்கள் க்ளாஸில் மட்டும் பெண்கள். சீனியர்கள் எல்லாரும் உரிமையோடு க்ளாசுக்கு வந்து அக்கறையாகப் பேசுவார்கள்.
"டேய் ஒழுங்கா படிக்கனும். அப்போ தான் முன்னேற முடியும் என்ன டவுட் இருந்தாலும் வந்து கேளு. நோட்ஸ் குடுக்கறேன்...பார்த்துப் படிச்சுக்கோ என்ன...ஆமா அந்த பச்சை கலர் பேர் என்ன..?

கிட்டப்பாவும் ஒழுங்காய் தான் இருந்தான் எங்களை மாதிரி முதல் கொஞ்ச நாள். பெண்கள் பக்கமே திரும்ப மாட்டான். அப்புறம் மெதுவாக தலையெடுக்க ஆரம்பித்தான். க்ளாசுக்கு ப்ரொபசர் வருவதற்கு லேட்டானால் சும்மா இருக்கமாட்டான். குடுகுடுவென ஓடிப்போய் என்ன ஏதென்று விபரம் கேட்டு வருவான். பொறுப்பாக காத்திருக்கும் ஜிகிடிகளுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்லுவான். முதலில் சமூக சேவைதான் செய்கிறான் என்று நினைத்தோம். ஆனால் நாளுக்கு நாள் சேவைகள் அதிகமாகி பாரத ரத்னா வாங்குமளவுக்கு முன்னேறியது. ஒழுங்காக நோட்ஸ் எடுத்து, அவதிப் படும் அம்மணிகளுக்கு குடுத்து உதவுவது, ஜெராக்ஸ் காப்பி எடுப்பது...ப்ரொபஸர் வராவிட்டாலும் வேறுயாரையாவது கூட்டி வந்து க்ளாஸ் எடுக்கச் சொல்லி நல்ல பிள்ளையாக நடிப்பது இன்ன பிற என்று நடமாடும் சேவா சங்கமாக மாறினான். கேட்டால் "சின்னத் தம்பி" பிரபு மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி முழிப்பான். வட்டாரத்தில் ஜிகிடி வாடை அடித்தால் போதும்...உடைந்த குரலில் அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுவான்.

அப்புறம் பையன்கள் வேறுமாதிரி விளையாட ஆரம்பித்தார்கள்.
"என்ன கிட்டப்பா..இன்னிக்கு உங்காளு பயங்கர இம்ப்ரெஸ் போல அசத்திட்ட போ!" - சும்மா தூண்டில் போட்டா விக்கோ வஜுர்தந்தி க்ரீம் மணப்பெண் போல் ரொம்பவும் வெட்கப்படுவான். பையன்களுக்கு சந்தேகம் வலுத்தது.

"பையன் ப்ளாட்டுடா... ஆனா யாருன்னு தான் தெரியல யாராவது ஒருத்தருக்கு சேவை செஞ்சா பரவால்ல கண்டுபிடிச்சுடலாம் ஆனா இவன் எல்லாரையும் மேய்கிறானே...அடிக்கடி டைம் கேட்பானே அவளா இருக்குமோ " - பையன்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். கிட்டப்பா திறமையாக விளையாடினான். கண்டுபிடிக்கமுடியவிலை.

அப்போது தான் கல்லூரியில் எலெக்க்ஷன் வந்தது. சேர்மன், செகரட்டரி, கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுப்பதற்கான எலெக்ஷன். இது போக யாரையாவது க்ளாஸ் ரெப்பாக போடுவார்கள். பொதுவாக ஹாஸ்டல் பையன் யாரவது தான் பெயர் கொடுப்பார்கள். எங்கள் வகுப்பிலும் ஒரு நண்பனின் பெயரைக் குடுத்திருந்தார்கள். ஆனால் மரத்தடி மீட்டிங்கில் சதித்திட்டம் தீட்டி கிட்டப்பாவையும் கோதவாவில் இறக்கத் தீர்மானித்தார்கள். இதற்காக ஸ்பெஷல் ஸ்டியரிங் கமிட்டி வேறு உருவானது.

"கிட்டப்பா...நீ நில்லுடா..உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல...நீ தான்டா இதுக்கு சரியான ஆள்..."

"டேய் கேர்ல்ஸ் சப்போர்ட் புல்லா உனக்குத் தான்...நீ தான் எலெக்க்ஷனில் நிக்கனும்டா...உனக்காக உயிரையே குடுப்பேன்டா"

"டேய் நீ எலக்க்ஷன்ல நிக்கலயேன்னு உங்காளுக்கு வருத்தம்டா...அவ கண்னுல சோகம் தெரியுதுடா..இதுக்காவாவது நீ நிக்கனும்டா..."

ம்ஹூம்....கிட்டப்பா மசியவே இல்லை. அடுத்த நாள் "வோட் ஃபார் " என்று அவன் பெயரை எல்லா ஜிகிடிகளின் டெஸ்கிலும் எழுதி வைத்தார்கள்...

"கிட்டப்பா நீங்க எலெக்க்ஷனில் நிக்கீறீங்களா..?" - ஒரு ஜிகிடி வாய்விட்டு வாஞ்சையோடு கேட்டுவிட்டது.

அவ்வளவு தான் கிட்டப்பாவிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் முழித்துக் கொண்டுவிட்டது. அரைகுறையாக முழித்துக் கொண்டிருந்தவனை ஸ்டியரிங் கமிட்டி வேப்பிலை அடித்து ஒரு வழியாக சம்மதிக்க வைத்தது. கெடு நேரத்துக்கு முன்னாடி நல்லவர்கள் படை சூழ சென்று பெயரையும் குடுத்தான்.

இரண்டு பேர் க்ளாஸ் ரெப்புக்கு பெயர் குடுத்திருந்ததால் அதற்கும் எலெக்ஷன் என்று ஆபிஸில் முடிவு செய்தார்கள்.

"டேய் ஏண்டா இப்பிடி காலெஜ் மானதத வாங்குறீங்க? க்ளாஸ் ரெப் போஸ்டெயெல்லாம் ஏன்டா எலெக்க்ஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க வெட்கமாயில்ல உங்களுக்கு? தூ...?" சீனியர்களெல்லாம் தேடி வந்து வாழ்த்திவிட்டு போனார்கள். கெடு முடிந்துவிட்டதால் யாரும் வாபஸ் பெற முடியாத நிலை.

மொத்த காலேஜும் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தது. ஆனாலும் நாங்கள் அடங்கவில்லை. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஸ்டியரிங் கமிட்டி பொறுப்பெடுத்துக் கொண்டு வேலை செய்தது.

க்ளாஸ் இரண்டாக பிரிந்தது. கிட்டப்பாவிற்கு ஓட்டு கேட்பதாக சொல்லிக் கொண்டு கடலை போட்ட பார்டிகளில் அடியேனும் உண்டு. கிட்டப்பாவின் தேர்தல் விளம்பரங்கள் சேர்மன் போஸ்ட் விளம்பரங்களைத் தூக்கி சாப்பிட்டது.

"டேய் உங்க கொசுக்கடி தாங்க முடியலைடா..க்ளாஸ் ரெப் போஸ்டுக்கெல்லாம் ஒரு எலெக்ஷன் இந்த அலம்பல் ..இதெல்லாம் ரொம்ப ஓவர்டா " - சீனியர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.

கிட்டப்பாவின் சேவைகள் பாரத ரத்னாவிலிந்து நோபல் லெவலுக்கு தாவின. யாருமில்லா சமயம், சட்டையில் எலியைப் பிடித்து விட்ட மாதிரி நெளிந்து கொண்டே ஜிகிடிகளிடம் கடலை போடுவான்.

"டேய் இது உனக்கே நியாமாக இருக்கா? யாருன்னு சொன்னா...அண்ணிய தெரிஞ்சுப்போம்ல்.."

ம்ஹூம்..."பாட்டு கேட்டேன் ஓட்டு கேட்டேன்னு " ரெடியா பதில் வைத்திருப்பான். ஆனால் கடலை மட்டும் வழக்கம் போல மானாவாரியாக சாகுபடி ஆகிக்கொண்டே இருக்கும்.

தேர்தல் நெருங்க நெருங்க எல்லாரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தார்கள். தேர்தல் நடந்து முடிவும் வெளியானது....நல்லவர்கள் புத்தியை காட்டி இருந்தார்கள். கிட்டப்பாவிற்கு மொத்தம் ஏழு வோட்டுக்கள் தான். பெரும் தோல்வி.

கணக்கெடுத்ததில் ஏழுமே ஆண்கள் பக்கதிலிருந்து என்னையும் சேர்த்து. கிட்டப்பாவிடம் ஆறுக்கு மட்டும் கணக்கு சொன்னோம். மீதி ஒன்று அவன் ஆளாகத் தான் இருக்குமென்று ஐய்யோ பாவம் நம்பினான். அவனுக்கு அது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே மிதி வருடங்களிலும் கிட்டப்பா சேவா சமாஜ் தனது சேவைகளைத் தொடர்ந்தது.

--இன்னும் ஜொள்ளுவேன்

2 comments:

கருப்பன் (A) Sundar said...

நமக்குள்ள வச்சுக்குவோம், அந்த ஒரு ஓட்டு நீங்க போட்ட கள்ள ஓட்டு தான?

Anonymous said...

Andha kittappave neengathan

Post a Comment

Related Posts