Saturday, March 09, 2013

ஜில்பான்ஸ் - 090313

சமீபத்திய சந்தோஷம்
என்னுடைய முந்தைய பதிவு - மினி ஸ்கர்ட் இது வரை இந்த டுபுக்கு வலைத்தளத்தில் வரலாறு காணாத அளவுக்கு சில பல லட்சங்களில் (சரி சரி...ஆயிரங்களில் :)) ஹிட்டுகளை அள்ளி, அதிக ஹிட் வாங்கிய பதிவுகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ங்கொக்கமக்கா நானும் நாமதேவர் வாமதேவர்ன்னு எவ்வளவோ நொங்கிப் பார்த்திருக்கிறேன்...ம்ஹூம்...சரிபட்டு வராது போல. அடுத்த பதிவு "உள்பாவாடை" ட்ராஃப்டில் இருக்கிறது. சீக்கிரம் எழுதி முடிக்கணும்.

சமீபத்திய ஙே

ஆபிஸில் ஒரு வெள்ளைக்கார நண்பர் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒருதரம் டெக்னிகல் டவுட்டுக்காக மொபைலில் ஜோதா அக்பர் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மொபைல் ஸ்க்ரீனை எட்டிப் பார்த்து அன்றிலிருந்து ஐஸ்வர்யா ராய் ரசிகராகிவிட்டார். அடிக்கடி பார்க்கும் போதெல்லாம் என்னிடம் ஐஸ்வர்யா எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பார். நானும் "நேத்து கூட பேசினேன்; உன்னப் பத்தி சொல்ல மறந்துட்டேன் அடுத்த தரம் நியாபகம் வைச்சிக்கறேன்" என்று தேற்றுவேன்.(இப்போதெல்லாம் காலையில் மொபைலில் பேஸ்புக்கை திறந்த்தால் "குட்மார்னிங்லு, ஈரோஜு ஏமி ஸ்பெஷல்" என்று மதுரமாய் ஒரு ஃபோட்டோவுடன் சமந்தா கேட்கிறார். நானும் "அந்த ஸ்பெஷலே நீங்க தாங்க"ன்னு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மங்களகரமாய் நாளை ஆரம்பிக்கிறேன் என்பது தேவையில்லாத விஷயம்).
போன வாரம் ஒரு சேஞ்சுக்கு படம் பார்ப்பதை விட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். இளையராஜா "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாட்டில் வயலினை இழைய விட்டுக் கொண்டிருந்தார். வெள்ளைக்கார நண்பர் நேராக வந்து ஹெட்போனை வாங்கி பாட்டைக் கேட்க ஆரம்பித்து விட்டார். இது சூப்பர் ஹிட் பாட்டு, நம்ம மொட்டை மீசிக் என்று நானும் பாட்டின் பெருமைகளை எடுத்து விட, "எல்லாஞ் சரி, பாட்டு வரிகளுக்கு என்ன அர்த்தம்" என்று சீரியஸாய் கேட்க, ஸ்ப்ப்பா பாட்டுக்கு அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சேன் பாருங்க. அப்புறம் "தம்பி ஐஸ்வர்யா ராய் புள்ள குட்டி பெத்து செட்டிலாகிட்டாங்க புதுசா அனுஷ்கா ஷர்மான்னு ஒரு அம்மணி இருக்காங்கன்னு..."ன்னு அவரை அனுப்பி வைத்தேன்.ம்ம்ம்ம் ரொம்ப நோண்டினா தான் சில சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் எவ்வளவு வெவரமா இருக்குன்னு புரியுது.


சமீபத்திய திரைப்படம்

இது சமீபத்தில் வந்த படமல்ல. ஆனால் திரும்ப ஒருமுறைப் பார்த்து அசந்த படம். "பூ". என்னளவில் ஒரு மிகத் தரமான திரைப்படம். படத்தில் இயக்குனர் சசி & கதாசிரியர் தமிழ்செல்வனின் சிந்தனையும், பல காட்சி அமைப்புகளும் அபாரம். தன் காதலனை இழக்கும் போது கூட அழாத கதாநாயகி கடைசிக் காட்சியில் அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாய் ஓலமிட்டு அழுவது ஒரு கவித்துவமான முடிவு. காதல் என்பது ஒரே ஒருவருடன் ஒரே ஒரு முறை பூக்கும் வெங்காயம், ‘கல்லானாலும் கணவன்’ என்று டாஸ்மார்க் கணவனுக்காக மட்டுமே விரதமிருப்பார் மனைவி போன்ற க்ளீஷேக்கள் நிறைந்த தமிழ் தமிழ்ப் பட கலாசாரத்தில், கல்யாணமான பிறகும் கடமையாற்றிவிட்டு அடிபட்ட காலுடன் கொளுத்தும் வெய்யிலில் காதலனைப்  பார்க்க ஓடி வந்து ஸ்லாகிக்கும் உணர்வு தமிழில் ரொம்ப சொல்லாதது. மச்சான் ஒரு தம்மு இருக்கான்னு பெண்கள் கடன் வாங்கி தம் அடிப்பதைக் காட்டுவதே பெரிய பெண்ணிய சிந்தனை போன்ற கண்றாவிகளுக்கு நடுவில்  பெண்ணிய உணர்வுகளை ரொம்ப முன்னிருத்தி ஆனால் அதே சமயம் அதை காட்சிகளில் ரொம்ப suttleஆக வைத்த பாணி எனக்கு மிக மிகப் பிடித்தது. ஸ்ரீகாந்த் அலட்டாமல் நடித்திருந்தாலும், கதை கதாநாயகியின் களம் என்பதால் பார்வதி மேனன் படம் எங்கும் நடிப்பினால் வியாபித்திருக்கிறார்.அறிமுக கதாநாயகி என்று உணரமுடியாத அளவிற்கு நடிப்பில் கலக்கியிருக்கிறார். தமிழில் இந்த மாதிரி ஒரு அறிமுக நாயகி டாமினேட் செய்வது அபூர்வம்.நெஞ்சிலும் மாரிலும் அடித்து கொண்டு அழும் ஓவர் ட்ராமாட்டைசேஷனுக்கு மத்தியில் இந்த திரைப்படம் சில்லென்று இருந்தது. ஒருவேளை அப்புறம் பார்க்கலாம் என்று இன்னும் பார்க்காமல் வெயிட்டிங் லிஸ்டிலிருந்தால் கண்டிப்பாய் பாருங்கள்.

இது தான்டே சமாதானம்

செய்தியைப் படித்து அரண்டே போய்விட்டேன். மரியா கேரி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் பிரபல பாடகி. நிக்கி மினாஜ் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிரபல பாடகி. இருவரும் அமெரிக்கன் ஐடல் என்ற நிகழ்சிக்கு நடுவராய் இருந்தார்கள். பிரபலம்னாலே ப்ராபளம் தான் என்ற வேத வாக்குப்படி இருவருக்கும் ஈகோ பிரச்சனையில் குழாயடி சண்டையாகிவிட்டது. இந்த குழாயடி சண்டையெல்லாம் பெரிய அதிசயம் இல்லை என்றாலும்,இங்கே ரொம்பவே ரசாபாசமாகி செல்வராகவன் படம் மாதிரி "யேய்...ஸெக்ட்சுப் போட்ருவேன்டி" என்பது வரைக்கும் போய், ரெண்டு நாள் இசை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மட்டுமின்றி வம்புக்கு அலையும் எல்லா ஊடகங்களிலும்  அல்லோலப்பட்டது. நம்மூர் டீ.வியில் நாலு பேர் கேமிரா முன்னாடி உட்கார்ந்து கொண்டு, ஐ.பி.சி என்ன சொல்லுதுன்னா என்று  உட்கார்ந்தமேனிக்கு தீர்ப்பு சொல்லுவது மாதிரி இவர்களும் கலகத்தைக் கலக்கிவிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அவர்கள் இருவரும் "நிறுத்துங்கடா...ரீலு அந்து போச்சு நாங்க இப்போ சமாதானம் ஆயாச்சு" என்று பொசுக்கென்று சமாதானமாகிவிட்டார்கள். ஹலோ டெம்போலாம் வைச்சு கடத்தியிருககிறோம், எங்கள கேட்காம நீங்க எப்படி சமாதானம் ஆகலாம்ன்னு இந்த பக்க தரப்பு நொந்து போயிருந்தபோது "ரொம்ப பிரச்சனையாகிப் போச்சு, அதனால நிக்கி மினாஜ் நடிச்ச மேட்டர் வீடியோ ஒன்னை போட்டு பார்த்து ரெண்டு பேரும் ரொம்பவே சுமூகமாகி விட்டோம்"ன்னு  குடுத்தாங்க பாருங்க ஒரு ஸ்கூப். ஆஹா எனக்கு வேற சில பல எதிரிகள் இருக்காங்களேன்னு பதறிப் போய் படித்தால் அப்புறம் சும்மா ஜோக்குக்கு அப்படிச் சொன்னாங்களாம். அடப் போங்கடே

Tuesday, February 05, 2013

மினி ஸ்கர்ட்

"சே அவள் பக்கத்தில் உட்கார்ந்திருக்க மாட்டேனா" -  நான் என்னையே சபித்துக் கொண்டிருந்தேன். வேலைக்குப் போக அப்படி ஒன்றும் அவசரமில்லை. அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அந்த பாதாள ரயில் கிளம்புவதற்கு நிறைய நேரம் இருந்தது. எப்போதும் விண்டோ சீட் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வருவேன், இன்றும் அப்படித் தான். ஒவ்வொரு சீட்டாய் பார்த்துக் கொண்டே வரும் போது - ஒரு சீட்டில் அவள் மட்டும் இருந்தாள். மிக அழகாய் இருந்தாள். அதவிட மிக அழகாய் ஒரு மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்தாள். கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதவிசாய் அமர்ந்திருந்தாள். ஸ்கர்ட்டின் நடுவில் இருந்த பிளவு அவள் தொடையை பளீரென்று டாலடித்துக் கொண்டிருந்தது. யானை தந்தத்தின் நிறம் அவள் மேனி. அவ்வளவு தான் பார்த்தேன். இத்தனையும் மீறி அனிச்சையாய் அவளுக்கு முந்தின சீட்டில் போய் உட்கார்ந்துவிட்டேன். சே...அவளுக்குப் பக்கத்து சீட் காலியாய் தான் இருந்தது. படெக்கென்று அங்கு உட்கார்ந்திருக்க மாட்டேனா. சொன்னேனே எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அவளுக்கும் என்னைப் போல விண்டோ சீட் பிடிக்கும் போல.

"மே ஐ ஹாவ் யுவர் டிக்கெட் ப்ளீஸ்" என்று டிக்கெட் பரிசோதகர் கேட்ட போது நான் அவளைப் பற்றிய நினைவுகளிலிருந்தேன். சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது. அவர் அவளிடம் டிக்கெட் சரிபார்த்துக் கொண்டிருந்த போது "ட்ரெயின் எத்தனை மணிக்கு ரெட்டிங் போய்ச் சேரும்?" என்று கேட்பது மாதிரி அவளைப் பார்க்க திரும்பினேன். பிரம்மஹத்தி அவளை முக்காலேவாசி மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எனக்கு என்று வந்து சேர்வார்களே. திரும்பி விட்டேன். ஆனாலும் கிடைத்த நூலிழை நேரத்தில் பார்த்ததை மனதில் ஃபோட்டோ எடுத்து விட்டேன். தொடையில்  வைத்திருந்த கையும், செதுக்கினாற் போன்ற காலும் மட்டுமே தெரிந்தது. டார்க் மெருன் கலர் ஸ்கர்ட் அவள் நிறத்தை தூக்கலாக காட்டியது. பாந்தமாய் நெயில் பாலீஷ் போட்டிருந்தாள். அதில் இலை போல் ஏர் பிர்ஷ் டிசைன். அவள் பக்கத்திலிருந்த சீட் காலியாய் தான் இருந்தது. அதில் ஸ்கர்டுக்கு மேட்சிங்காய் ஹாரட்ஸ் ஹாண்ட்பேக் வைத்திருந்தாள்.

மோகன சிலை என்பார்களே அது மாதிரி இருந்தாள். ஆள் பாதி ஆடை பாதி. இன்னும் முகத்தை மட்டும் சரியாய் பார்க்க முடியவில்லை. பேசாமல் இடம் மாறி அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று தோன்றியது. ரொம்ப கூட்டமில்லாமல் ஏகப்பட்ட சீட் காலியாய் இருக்கும் போது அவள் பக்கத்தில் உட்கார்ந்தால் ஏதாவது தப்பாய் நினைத்துக் கொள்வாளோ? எழுந்து யாரையோ எதிர்பார்த்து பார்ப்பது மாதிரி பின்னால் பார்த்தேன். தலையை திருப்பும் போது மீண்டும் அவளைப் பார்த்தேன். முகம் ரொம்பவே அழகாய் இருந்தது. நேர்த்தியாய் ஐபிரோஸை செதுக்கியிருந்தாள். மாசு மருவில்லாத பளீரென்ற முகம். அழகான உதட்டில் உறுத்தாத கலரில் லிப்ஸ்டிக். தோள் வரை பாப் கட்டில் முடி. ஏதோ ஒரு சினிமா நடிகையை நினைவு படுத்தினாள். ரொம்ப ரொம்ப ரொம்பவே அழகாய் இருந்தாள். அவள் ஸ்கர்ட்டும் அந்த பளீரும் எனக்கு கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.

கண்ணை மூடிக்கொண்டு திரும்பவும் அவளை நினைத்துப் பார்த்தேன். திடீரென்று யாரோ சன்னமாய் தொடுவது போலிருந்தது. திரும்பினால் உதட்டில் ஒரு சங்கடமான புன்னகையுடன் அவள் தான். " சாரி தூங்கும் போது எழுப்பிவிட்டேனா... மேலே..." என்று விரலைக் காட்டினாள். என் சீட்டுக்கு மேலே யாரோ வைத்திருந்த ஹோல்டால் பையில் பால்புட்டியிலிருந்து லேசாக பால் ஒழுகிக் கொண்டிருந்தது. பால் ஒழுகி தரையில் தான் சொட்டிக் கொண்டிருந்தது. கவனமாய் இல்லாவிட்டால் என் மேல் விழுந்திருக்கும். அதை சுட்டிக்காட்டத் தான் கூப்பிட்டிருக்கிறாள்.

"ரொம்ப தேங்கஸ்" - கொஞ்சம் கூடுதல் நட்புடன் சொன்னேன். இதை விட்டால் சான்ஸ் கிடைக்காது இதான் சாக்கு என்று படக்கென்று எழுந்து கொண்டேன். என் பையையும் எடுத்துக் கொண்டு நின்று கொண்டே வேறு சீட் தேடுவது மாதிரி பார்வையை விட்டு அவளிடம் வந்து நிறுத்தினேன்.

"இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் இங்க உங்க கிட்ட உட்காரலாமா"

"ஓ யெஸ், நோ இஷ்யூஸ் அட் ஆல்" அவளும் மிக எளிதாய் ஒத்துக் கொண்டாள்.

எனக்குப் படபடப்பாய் இருந்தது. உட்காரும் போது எங்கள் தோள்கள் லேசாய் உரசிக் கொண்டன. அவள் அணிந்திருந்த பெர்ஃப்யூம் மயக்கியது. அவள் கண்களில் சினேகமான ஒரு புன்னகை இருந்தது.

அவளே அறிமுகப்படுத்திக் கொண்டாள் "என் பெயர் நேத்ரா. அட்வர்டைசிங் எக்ஸிக்யூட்டிவாய் இருக்கிறேன்..தற்போது வேலை விஷயமாய் போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்க..?." -

அவளின் தன்மையான பேச்சு எனக்கு ஆறுதலாய் இருந்தது. "என் பெயர் ஸ்வப்னா...நான் சாஃப்ட்வேரில் இருக்கிறேன். ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க ஸ்கர்ட்டும் ஆக்சசரீஸும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க வாங்கினீங்க...? எப்படி கேக்கிறதுன்னு தெரியாம இவ்வளவு நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன்...."

Friday, January 25, 2013

விஸ்வரூபம்

மு.கு - இது முழுக்க முழுக்க பட விமர்சனம் அல்ல. விமர்சனம் ஒரு பகுதி அவ்வளவே. நீங்கள் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்திருப்பீர்களயானால், அதை வைத்து விஸ்வரூபம் படத்தின் சில அடிப்படை கதை கட்டமைப்புகளை  யூகித்திருப்பீர்களேயானால்  இந்தப் பதிவை தாராளமாகப் படிக்கலாம். இல்லை விஸ்வரூபம் - விஷாலா விஜயான்னு கேட்கும் பச்சைக் குழந்தையாக இருந்தால் ப்ளீஸ் அப்படியே அப்பீட்டு, ஏன்னா இந்தப் படம் தமிழ்ப் படம், இதில் கமல் நடித்திருக்கிறார் போன்ற பல ஸ்பாயிலர்கள் இருக்கின்றன.

படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் இந்தப் படத்தின் மீதான தடை பற்றி. படம் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு கமல் ரசிகனாக அல்ல- ஒரு திரைப்பட ரசிகனாய் எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. படம் பார்த்த பிறகு கேட்கவே வேண்டாம். என்னைப் பொருத்தவரை படத்தில் முஸ்லீம்களையோ இஸ்லாமையோ குறை சொல்வது மாதிரி காட்சிகள் எதுவும் இல்லை. படத்தின் டைட்டில் முதல் அரபிக் மொழி மாதிரி டிசைன் செய்திருக்கிறார்களே என்று தோன்றலாம். கதை ஆப்கானிஸ்தானில் ஆரம்பிப்பது மாதிரி இருக்கிறது. ஆப்கானிஸ்தான்காரர்களையெல்லாம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் லுங்கியுடன் அலைவது மாதிரி காட்டமுடியாது அல்லவா அது போன்று தான் படம் நெடுகவே தவிர, எதையும் திணித்ததாய் தோன்றவில்லை. ஆட்சேபம் தெரிவிக்கும் குழுவினரும் நண்பர்களும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் இது உறுதியாகி, இதற்காகவா இவ்வளவு சவுண்டு விட்டோம் என்று நினைக்கத் தோன்றும்.

அமெரிக்காவையும் இன்ன பிற நாடுகளையும், இஸ்லாம், கிறுத்துவம் உட்பட பல மதங்களையும் வறுத்து, துவைத்து தொங்கப் போடும் ஆவணப் படங்களும், திரைப்படங்களும் ஆயிரம் இருக்கின்றன. சொல்வது அவர்கள் படைப்புரிமை, எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் நமதுரிமை என்ற கோட்பாடில் மற்ற நாடுகளில் இதை freedom of experssionஆகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்த freedom of expression- க்கும் ஒரு வரையறுக்கப் படாத ஒரு நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தாண்டும் போது பார்ப்பவர்களுக்கான வயதை நிர்ணயம் செய்வதுடன், சொல்லப்படுவது ஆட்சேபமாய் இருக்கும் பட்சத்தில் அதையும் மட்டுறுத்துவதற்காகத் தான் சென்சார் போர்ட் இருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன் இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய அளவுக்கெல்லாம் காட்சிகளே இல்லை. மாறாக நான் வுட்டாலக்கடி விடுவதாக நீங்கள் நினைத்தாலும் சரி, படத்தைப் பார்த்து எனக்கு சில இஸ்லாமிய பழக்கங்களின் மீது மதிப்புத் தான் வந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர் சிறுமியர் பார்க்கும் காட்சிகளில் அவர்கள் வயதுக்குத் தகாத தொப்புளும் மாரும் தெரிய உடையோடு வெளிப்படையாய் புணரும் காட்சிகளுக்கு இருக்கும் tolerance கூட freedom of expression க்கு இல்லை என்பது மிக வருத்தமான விஷயம். இப்படியே போனால் அப்புறம் தமிழ் திரைக்காவியங்களில் அல்கொய்தாவுக்கு தலைவராக ஐயரை அப்பாயிண்ட் செய்து அக்னிஹோத்ரம் தான் வளர்க்க வேண்டி வரும். எப்படியோ வாரயிறுதியில் பார்க்கலாம் என்று ஆபிஸ் விட்டு வரும் வழியில் முடி வெட்டிக் கொண்டிருந்தவனை, இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் என்று தெரியவந்து புடுங்கினது போதும் என்று அரக்கப் பரக்க முதல் நாளே பார்க்க வைத்த பெருமை இந்த சர்ச்சைக்கே சேரும்.

சரி நம்ம படத்துக்கு வருவோம்.இந்த தடை சர்சை காரணங்களால் ஒரு கமல் ரசிகனாய் படம் எப்படியிருந்தாலும் சூப்பர் என்று தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கமல் ரசிகனாய் எனக்கே ஒவ்வாது. படத்தின் ப்ரொடெக்க்ஷன் வேல்யூ சும்மா அதிரடி. அதாவது செய்த செலவுக்கு கொடுத்திருக்கும் பிரமாண்டம் அருமை, ஹாலிவுட் ரகம். சங்கருக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழுக்கு புதிய உச்சம். ஆஃப்கானிஸ்தான் குகைகளாகட்டும், அடிச்சு தூள் கிளப்பும் சண்டைக் காட்சிகளாகட்டும் அவற்றில் செய்திருக்கும் சி.ஜி.ஐயாகட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒரு டைரக்டராக, ப்ரொடியூசராக கமல் இந்த இடங்களில் ஜொலிக்கிறார்.  படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் படம் படு விறுவிறுப்பாய் போகிறது. கமலின் பெரிய பலவீனமே அவரின் பலவீனம் தெரியாமல் இருப்பது தான். அவரின் வசனங்கள் பல காமெடி தருணங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதாய் நினைத்து எழுதப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு கொஞசம் கடியாக இருந்தது. கம்யூனிகேஷன் என்பது காம்ப்ளிகேட்டடாகத் தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. சொல்ல வந்த விஷயத்தை என்னதான் ஜார்கனெல்லாம் போட்டாலும், தெளிவாகச் சொல்லும் பட்சத்தில் "என்னம்மா சொல்லியிருக்கார்பா  கலக்கிட்டார் இல்ல" என்று சொல்லவைக்கும். "அண்ணன் என்னண்ணே சொல்ல வராரு" என்று பக்கத்திலிருப்பவரை பிராண்ட வைக்காது. படத்தில் பல இடங்களில் சொல்வது புரிந்தாலும் என்ன/எதுக்கு சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருந்தது.

ராக்கெட் லாஞ்சர் ஹெலிகாப்டர் சகிதம் போடும் சண்டைக் காட்சிகள் கலக்கலாய் எடுக்கப் பட்டிருந்தாலும் அவற்றை சுற்றி வரும் திரைக்கதை சில இடங்களில் பலத்த தொய்வுடன் பின்னப் பட்டிருக்கிறது.ஆன்டிரியா படத்தில் எதுக்கு என்றே தெரியவில்லை. ரெண்டு ஹீரோயின் இருந்தா க்ளாமரா இருக்கும்ன்னு நினைச்சுட்டாரோ தலை? பூஜா குமார் நாக்கைச் சுழட்டி சுழட்டி பேசும் NRI ஐயர் தமிழ் சரியான கொடுமை. பல இடங்களில் ப்ரேக் போடுகிறது. இந்த இடங்களில் ஒரு எழுத்தாளராய், டைரக்ட்டராய் கமல் தவறிவிட்டார். இடைவேளைக்கு முன்னால் கொஞ்சம் கொட்டாவி வருகிறது. நல்ல திரைப் பின்னணி இசை என்பது பல இடங்களில் மௌனமாகவே வரும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஓவராகவே மௌனமாக இருந்து பல காட்சிக்குத் தர வேண்டிய டெம்போவை கொடுக்கத் தவறியிருக்கிறது என்று நினைக்கிறேன்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரும்ப உட்கார வைக்கிறது.


எடிட்டிங்கில் கமல் நிறைய மூக்கை நுழைத்திருப்பார் என்பது எனது திண்ணமான எண்ணம். கொஞ்சம் கத்தரி போட்டு டைட்டாக திரைக்கதையை நகர்த்தியிருந்தால் குருதிப் புனலை விட பத்து மடங்கு சூப்பர் ஆக்‌ஷன் படமாய் வந்து பிச்சு உதறியிருக்கும். ஆனால் திரைக்கதை தொய்வினால் அந்த அளவிற்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த குறைகள் எல்லாம் இருந்தாலும் இந்த பிரமாண்டமான, ஹாலிவுட்டுக்கு நிகரான முயற்சிக்கு கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழ் சினிமா வரவேற்க வேண்டிய முயற்சி.

Wednesday, January 16, 2013

ஜில்பான்ஸ் - 160113

சமீபத்திய சினிமா -  நீ தானே என் பொன்வசந்தம். படம் வந்த அடுத்த நாளே போய்ப் பார்த்தேன்.எனக்கு படத்தை விட சமந்தாகிராபி மிகவும் பிடித்தது. சும்மா சொல்லைங்க, படத்துல சமந்தாவின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்லாம் அப்படியே கண்ணுல நிக்குது. வழக்கமாக கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ஸ் ஸ்பெலிஸ்டுகளை கொடுக்க வைக்காமல், ஒரு மாதிரி உடைந்த குரலில் மெட்ராஸ் பொண்ணுங்களின் ஸ்லாங்கில்,அவருடைய சொந்தக் குரலிலேயே பேசவைத்திருந்தது மிகவும் பிடித்திருந்தது.ஆளும் அத்தனை பாந்தம். ஜீவாவும் படத்தில் நடித்திருக்கிறார்ன்னு கேள்விப் பட்டு படத்தை அஃபீஷியலாய் இரண்டாவது முறை பார்த்தால் அட ஆமாம் அவரும் மிக நன்றாக நடித்திருந்தார். க்ளைமாக்ஸ் கொஞ்சம் மேல் சாவனிஸ்டிக்காவே பட்டது. எதற்காக சமந்தாவை மன்னிப்பெல்லாம் கேட்க வைக்கவேண்டும் என்று புரியவே இல்லை.இணையத்திலே இந்தப் படத்தை குப்பை என்று ஒதுக்குபவர்கள் ஒரு கட்சி. ஆஹா படம் சூப்பர்யான்னு கொண்டாடுபவர்கள் ஒரு கட்சி. இந்த இரண்டாவது கட்சியில் இளையாராஜா என்னம்மா இசையமைத்திருக்கார்ன்னு மோன நிலையில் வாதாடும் ஒரு பெரும்பாண்மை வேறு. எனக்கென்னமோ இளையராஜாவின் இசை கொஞ்சம் let downனாகப் பட்டது. இதையெல்லாம் விட மொட்டை எவ்வளவோ சூப்பராய் இசையமைத்திருக்கிறார். ஆனால் எனக்கிருக்கிற டவுட்டு என்னான்ன...இந்த படம் சூப்பர் கட்சில ஏன் சார் எல்லாம் ஓவர் பெரிசுங்களாகவே இருக்காங்க? (நல்லா கவனிங்க நான் படம் சூப்பர்ன்னு சொல்லவே இல்லை;) )

மேலே சொன்ன படத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் Life of Pi பார்த்தேன். ரொம்பவே பிடித்திருந்தது. அதுவும் உட்பொருள் வேறு எனக்கு மிக மிக பிடித்த ஒரு விஷயம் - கடவுள். (அது பற்றி இன்னொரு நாள் - ஆனால் அது பற்றி எழுதுவதை விட, எந்த எமோஷனோ செண்டிமெண்ட்டோ இல்லாத நியூட்ரல் நபர்களிடம் நேரில் விவாதிப்பதே எனது விருப்பம்). படத்தை நான் இன்னமும் முழுதாக உள்வாங்கவில்லை என்ற உணர்வே இருக்கிறது. அதனாலேயே படத்தை இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்று விருப்பம். செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்றில்லாமல் கடல், புயல, கடல் வாழ் உயிரினங்கள் என்று பலவற்றையும் அருகில் இருந்து உணர வைத்த சினிமேட்டோகிராஃபிக்கு ஒரு சபாஷ். இந்த மாதிரி உணர்வு சினிமாவில் கிடைப்பது அபூர்வம். நேரில் அனுபவித்தால் கூட இந்த உணர்வை பெற்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை. 3D-யில் நான் ரொம்ப ரசித்த சமீபத்திய படம் இது. சான்ஸ் கிடைத்தால் 3D-யில் பெரிய ஸ்க்ரீன் உள்ள தியேட்டரில் பாருங்கள்.

மேலே சொன்னதையே இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம் என்றிருந்த போதுதான் ரொம்ப நாளாய் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்த ஆரண்யகாண்டம் பார்த்தேன். ஆஹா என்னன்னு சொல்ல...பின்னிப் பெடெலெடுத்திருக்கிறார் இயக்குனர்.தமிழில் இதான் முதல் neo noir என்கிறார்கள். அட இதுக்கு முன்னாடி வந்ததில்லையா? வழக்கமான ஜாம்பவான்களுக்கிடையில் காளையானாய் நடித்திருக்கும் குரு சோமசுந்தரமும், கொடுக்காபுளியாய் நடித்திருக்கும் மாஸ்டர் வசந்தும் சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.தமிழில் இந்த மாதிரி ஒரு அருமையான நடிப்பை ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன்.ரத்தத்தைப் பார்த்து அருவருக்கும் நபர்களுக்கோ,குழந்தைகளுக்கோ  இந்தப் படம் உகந்ததல்ல.

நல்ல அருமையான பாதாம் அல்வாவும் தூள் பக்கோடாவும் சாப்பிட்டு விட்டு சுவையை அசை போட்டுக்கொண்டிருக்கும் போது அழுகின வேர்கடலை பல்லுக்கிடையில் சிக்கினால் எப்படி இருக்கும். அப்படித் தான் Life of Piபார்த்து விட்டு நான் பார்த்துத் தொலைத்த படம் அலெக்ஸ் பாண்டியன். ஸப்ப்பா...மரண கடிடா சாமி. முதல் சீனில் சந்தானபாரதி வருகிறார். அப்புறம் ஆள் அப்பீட், எதுக்கு வந்தார்ன்னே தெரியலை. அப்புறம் 20நிமிஷத்திற்கு ஒரு முறை புதுசு புதுசாய் வில்லன்களும் நடிகைகளும் அறிமுகம் ஆகிறார்கள். அடுத்த படத்துல நீங்க கண்டிப்பா இருக்கீங்கன்னு டைரக்ட்டர் ஏகப்பட்ட நபர்களிடம் வாக்குறுதி குடுத்திருந்தாரா தெரியவில்லை. படத்த சீக்கிரம் முடிங்கப்பா, கார் பார்க்கிங் காசாவது மிச்சமாகும் என்று என்னை நினைக்க வைத்த ரெக்கார்ட் படம் இது. ரொம்ப நாளாய் பழிவாங்க நினைத்திருந்த நண்பர் ஒருவருக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். கார்த்தி டான்ஸ் ஆடும் போதும், ஓடி வரும் போதும் "சார் டெய்லி வூட்டுல டிபன் - பொங்கலும் பூரி செட்டுமா"ன்னு கேட்கத் தோன்றுகிறது, தொப்பை தொப்பை.

சமீபத்திய வாசிப்பு - உள்ளூர் லைப்ரரியில் சமீபத்தில் மாட்டிய புத்தகம் நிலா எழுதிய "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" நாவல். பின் பக்க அட்டையில் கதை அறிமுகத்தை படித்து எடுத்ததில் ஏமாற்றவில்லை. கொஞ்சம் ஒட்டாத ஒரு சந்தர்ப்பத்தில் கதையின் நாட்டை வைத்திருந்தாலும், துள்ளலான நடையும் சொன்ன விதமும் கதையை அருமையாய் நகர்த்திச் செல்கின்றன.

இந்த வார கேள்வி- ரயில்வே ட்ராக்கில் எதற்காக இவ்வளவு சரளைக் கற்களை போட்டு வைத்திருக்கிறார்கள்? - எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி. உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். எல்லா நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருக்கிறது. கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் அட இவ்வளவு இருக்கிறதா என்று தெரிய வந்தது. என்ன தான் திடமான மண்ணில் தண்டவாளங்களைப் போட்டிருந்தாலும் ரயில் போக வர காலக்கட்டத்தில் ஸ்லீப்பர் கட்டைகள் அழுந்த அழுந்த தண்டவாளத்திற்க்கு கீழே பள்ளம் விழுந்து விடுமாம். ஆனால் இந்த சரளைக் கற்கள் லூஸாய் போட்டிருப்பதனால் அந்த மாதிரி நிகழாதாம். தண்டவாளங்களின் கீழே பள்ளம் வராமலும், ரயில் தண்டவாளங்களில் ஸ்மூத்தாய் பயணிப்பதற்கு இவை மிக உதவியாய் இருக்கின்றன. ஆனால் இதை விட முக்கியமான இன்னொரு உபயோகம் இந்த சரளைக் கற்கள் மழைத் தண்ணீரை கீழே மண்ணுக்கு ட்ரயின் செய்து தண்டவாளங்களில் ஈரப் பதம் தாக்காமல் காக்கின்றன. மண் ஈரப் பதத்தை நீண்ட காலம் வைத்திருக்கும். பழைய காலத்தில் சில இடங்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மரத்தில் வேறு இருந்ததைப் பார்த்திருக்கலாம். அத்தோடு இவை தண்டவாளங்களின் உயரத்தை ஈஸியாய் கூட்டிக் குறைக்கவும் உபயோகப் படுகின்றன. அடிக்கடி மாற்றுவதற்கும், திரும்ப ரொப்புவதற்க்கும் ஏதுவாய் வேறு இருக்கும்.