Wednesday, August 06, 2014

மொபைல்

முன்பொரு காலத்தில் எங்கள் வீட்டில் ஊதுபத்தி தீர்ந்து போகும். கடைக்குப் போய் வாங்கி வரச் சொல்லி மாமா அனுப்புவார். நானும் கடைக்குப் போய் "கடைக்காரரே ஒரு நல்ல ஊது பத்தி குடுங்க" என்று கேட்பேன். அவரும் "எதுப்பா.." என்று கேட்பார். "அதோ எல்லாத்துக்கும் மேலே இருக்கே டாப் த்ரீ ஊதுபத்தி அத எடுங்க" என்பேன். அவரும் அதை எடுத்து கண்ணில் காட்டிவிட்டு "அம்பி இது பதிமூனு ரூவா, வாங்கிட்டு போனா உங்க மாமா சத்தம் போடுவார், இரு நந்தி டைமண்ட் தர்றேன் அதான் மாமா வாங்குவார், அவ்ளோ தான் சில்லறை தந்திருப்பார்" என்று அதைத் தருவார். வாங்கிப் போய் மாமாவிடம் குடுத்தால் "வெரி குட்" என்று சொல்லிக் கொளுத்துவார். கம்முன்னு நிதானமாக ஏத்தினதே தெரியாமல் அரை மணி நேரம் எரியும். எளிமையான உலகமாய் இருந்தது.

சமீபத்தில் மொபைல் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. ஃபோன் வந்தால் ரிங் அடிக்கவில்லை, அடித்தாலும் தகரத்தில் கீச்சுவது மாதிரி கேட்டது. எட்டை அமுக்கினால் நான்கை காட்டும்.நான்கை அமுக்கினால் நட்சத்திரத்தைக் காட்டும். தெரிந்தவரிடம் காட்டினேன்

புட்டுக்கிச்சு

..ஆங்?

புட்டுக்கிச்சு, ஹோ கயா, வேற ஃபோன் வாங்கிக்கோங்க

வேற ஃபோனா...எதுக்கு... இத ஓவராயில் பண்ண முடியாதா?

பண்ணலாம் இந்த டெக்னாலஜி தெரிஞ்ச ஆள் லோக்கல்ல இருக்க மாட்டான், ஜப்பான்லேர்ந்து ஸ்பெஷலா கூட்டிட்டு வரணும் பரவாயில்லையா? பேசாமா புது ஃபோன் வாங்கிக்கோங்க சார்.

அது தான் ஆரம்பம்.

அப்பா ஆப்பிள் வாங்குப்பா

ம்க்கும் உங்கப்பா காஷ்மீர் ஆப்பிளே விலை கூடன்னு வாங்கமாட்டார் இதுல அமெரிக்க ஆப்பிளா அதெல்லாம் நாப்பதாயிரம் ஆகும்.

எந்த மாதிரி பார்க்கறீங்க, டச்சா இல்ல பட்டன் வைச்சததா? (ஜிப் வைச்சது இருக்கா?)

பேசாமா ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கேன், டச் ஃபோன், சாம்சங்ல சல்லீஸா கிடைக்கும்.

சார் நல்ல கடையா பார்த்து வாங்குங்க.. ஏமாத்திருவாங்க. சாம்சங் லோகோல `ஏ`-க்கு நடுவுல கோடு இல்லாம இருக்கா பாருங்க. கோடு போட்டிருந்தா டுப்ளிகேட். சைனா மேக்

ப்ளூடுத், என்.எஃப்சி, எஸ் பீம், டீ.என்.எல்.எம் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிகோங்க  (டி.எல்.என் கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு போயிட்டார்ன்னு சொன்னாங்களே?)

ஏரோப்ளேன் மோட் இருந்தா சொஸ்தம். ப்ளைட்ல போனா ஆஃப் பண்ணவேண்டாம். ஃபோன திருப்பிக் காட்டிட்டா போதும். அவா ரைட் ரைட்ன்னு போயிடுவா. (முந்தைய ப்ளைட் ஜர்னி எப்போ என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன்....ஆயிரத்து தொள்ளாயிரத்தி தொன்னூத்தி. சொச்ச வருஷத்தில் போனது)

ரெண்டு கேமிரா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி மாதிரி யூஸ் பண்ணிக்கலாம் (பத்து ரூபாய்க்கு அவசரப்பட்டு கையகலக் கண்ணாடி வாங்கிட்டேனே வேஸ்டா)

ட்யூயல் சிம் இருந்தா பெஸ்டு. ரெண்டு ஃபோன்லாம் சுமக்க வேண்டியது இல்லாம ஒரே போன்ல சமாளிக்கலாம் (இதுக்காகவே ரெண்டாவது சிம் வாங்கணும்)

எப்.எம் ரேடியோ இருக்கான்னு பாருங்க. ராத்திரியில் ராஜான்னு ஒரு ப்ரோக்ராம். சுண்டி இழுக்கறான்.

மெமரி எவ்வளவு அதிகமா இருகோ அவ்வளவு அதிகமா பாட்டு, படம் எல்லாம் போட்டு வைச்சுக்கலாம் ( நூத்தம்பது நம்பர் ஸ்டோர் பண்ண முடியுமோ? முடியுமா...இருநூறு? அப்போ நானூறு?)

4G சப்போர்ட் பண்ணுமான்னு செக் பண்ணிக்கோ. (எல்லாத்துக்கும் என்ன பிரயோஜனம்ன்னு கேக்காத லேட்டஸ்ட் டெக்னாலஜி, வாங்கிப் போடு, பின்னாடி உபயோகப்படும்)

ஆப்ஸ்லாம் அங்கயே லோட் பண்ணித் தரச் சொல்லு. ஸ்டார் கேல்க்ஸின்னு ஒன்னு இருக்கு. வான சாஸ்திரம். ஃபோன வானத்தைப் பார்த்து காட்டினா போதும். வீனஸ் எங்க இருக்கு, ப்ளூட்டோ எங்க இருக்கு, சனி எங்க இருக்குன்னு அழகா காட்டும். (சனி அப்போ நாக்குல இல்லையா?)

எல்லாவற்றையும் நோட் பண்ணிக் கொண்டேன்.

"கடைக்காரரே ஒரு நல்ல மொபைல் ஃபோனா குடுங்க" என்று கேட்ட போது எல்லாத்துக்கும் மேலே இருக்கிற ஃபோனை எடுத்துத் தராமல் மேலும் கீழும் பார்த்தார்.

ப்ராண்டட்டா சைனாவா?

சாம்சங்

ஸ்மார்ட் போனா?

ஆமாம் ஆனா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம் ஓரளவுக்கு ஸ்மார்ட் போதும்

இதுல வைபை இருக்கா?

சார் ஸ்மார்ட் ஃபோன்னா வைபை இருக்கும் சார். ப்ளூடூத் இருக்கு, ப்ளூடூத்னா தெரியுமா? இன்னொரு ஃபோனோட பேர் பண்ணிக்கலாம் அப்படியே பாட்டு மத்த ஃபைல்ஸ்லாம்...

தெரியும் சார். நானும் படிச்சிருக்கேன். ப்ளூடூத் தெரியாதா. ப்ளூம்பர்க் தெரியுமா உங்களுக்கு? "SIM" கார்டுல சிம்க்கு எக்ஸ்பான்ஷன் சொல்லுங்க பார்போம்.

சாரி சார். இதுல ஜி.பி.எஸ் கூட இருக்கு சார். இப்போ ஆபர்ல இருக்கு  - பத்தாயிரத்தி இருநூறு.

ஒரிஜினல் தானே சைனா மேக் இல்லையே?

சார் ஒரிஜினல் தான் சார். ஆப்பிளே சைனால தான் சார் மெனுபாக்சர் பண்றாங்க

டப்பாவில் என்னவெல்லாம் போட்டிருக்குன்னு படித்தேன். ப்ளூடூத், எம்.பி.3, ஜி.பி.எஸ், எஃப்.எம்...ஏகப்பட்டது போட்டிருந்தது.

எல்லாம் கரெக்டாக வேலை செய்யுங்களா? டப்பால போட்ருவாங்க ஆனா சில சமயம் அதெல்லாம் இருக்கவே இருக்காது.

சார் இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார். டப்பால போட்டிருக்கிறது எதாவது ஒன்னு குறைஞ்சாலோ இல்ல அது வேலை செய்யலைனாலோ எடுத்துட்டு வாங்க, ரெடியா ரூபாய் வாபஸ் குடுக்கறோம்.

இன்னும் இரண்டு முறை உறுதிபடுத்திக் கொண்டேன். சலித்துக் கொண்டார். நீங்க சொன்னத அப்படியே எழுதித் தாங்க என்றேன். கோபப்பட்டார். மானேஜரைக் கூப்பிடச் சொன்னேன். இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார் க்யாரண்டில கவர் ஆகும் சார் என்று சலித்துக் கொண்டே எழுதிக் கொடுத்தார். டப்பால எழுதியிருக்கறது மட்டும் ஏதாவது இல்லை, அடுத்த நிமிஷம் இங்க இருப்பேன் என்று அழுத்திச் சொன்னேன்.

பில்லை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை எல்லா ஃபோனையும் நோட்டம் விட்டேன்.

அதோ எல்லாத்துக்கும் மேல இருக்கே அந்த ஃபோன எடுங்க.

சார் அது ஹெட்ஃபோன் சார்

ம்ம்ம் சரி..ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க.

சார் இது அல்ரெடி ஆஃபர் ப்ரைஸ் சார். போன வாரம் வாங்கியிருந்தீங்க இரண்டாயிரம் கூட குடுத்திருப்பீங்க. சாருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவர் குடுப்பா

வீட்டுக்கு வந்து கடை விரித்து டப்பாவை வைத்துக் கொண்டு ஒவ்வொண்ணாய் சரி பார்த்தேன். எல்லாம் இருந்தது. யாருகிட்ட...என்று காலரை உயர்த்தி சார்ஜில் போட்டேன்.

ராத்திரி எட்டு மணிக்கு நாராயணன் ஃபோன் பண்ணினார் . பெருமிதமாய் காதில் வைத்தால் நாராயணன் அவரோட வயல் கிணற்றுக்குள் இறங்கி அங்கேர்ந்து பேசுவது மாதிரி இருந்தது.

அவசர அவசரமாய் டப்பாவைப் பார்த்தால் தெளிவாக, சத்தமாக பேச்சு கேட்கும் என்று எங்கயுமே எழுதியிருக்கவில்லை.

8 comments:

bandhu said...

ஏகப்பட்ட சாய்ஸ் இருந்தாலே இந்த தல வேதனை தான்.. எல்லா ஆப்ஷனும் இருந்தாலும்.. இதைவிட வேற வாங்கியிருக்கலாமோன்ற எண்ணம் தோணிகிட்டே இருக்கும்! இந்த விஷயத்துல ஆப்பிள் கில்லாடி. அதிக ஆப்ஷன் குடுத்து கொழப்பறது இல்லை!

ஒன்னும் தெரியாதவன் said...

இதுக்குத்தான் நான் நோக்கியா 1100 க்கு மேல போறது இல்ல, அவசரத்துக்கு தொரத்துற நாய்க்கு கூட எறியலாம் ஒன்னும் ஆகாது, டுபுக்கு டச் தெரியுது டச் போன்ல

அமுதா கிருஷ்ணா said...

என் ஃபோன் Nokia - X2..ஒரு முறை கிச்சனில் ஃபோன் பேசிட்டு அப்படியே வச்சுட்டேன். குக்கரிலிரிந்து வெயிட்டை எடுக்கும் போது கை தவறி ஃபோனில் மேல் விழுந்து க்ளாசில் ஒரு கீறல். இருக்கட்டுமே.பேசினா நல்லா கேக்குது,நான் பேசுறதும் அவுங்களுக்கு கேக்குது,Nokia-வில் வேலை பார்க்கும் என் மகன் 20% discount-ல் நல்லதா ஒரு ஃபோன் வாங்கி தரேன்னு ஒத்தைக்காலில் நின்றான்.நான் ஒத்துக்கலையே.என்ன அவன் இருக்கும் போது ஃபோனில் பாட்டு கேக்க மாட்டேன். சவுண்ட் நல்லாயில்லைன்னு திட்டுவான்.
”ஆமாம் ஆனா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம் ஓரளவுக்கு ஸ்மார்ட் போதும்” சூப்பர்...

Anonymous said...

Onnu aadikku oru thadavai ammavasaikku oru thadavainnu elluthurathu, illa daily post podurathu....
Enna pannalam

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

டுபுக்ஸ்,
மொபைல் போன்களில் குறைந்தது ஐந்தாயிரம் டாலர்களைத் தொலைத்த என்னைப் போன்ற மொக்கை மணிகளுக்குத் தேவையான பதிவு.
இப்போது யோசித்துப் பார்த்தால் அபூபக்கர் வழி சிறந்த வழி என்று தோன்றுகிறது.
ஆனாலும் செப்டம்பர் 9 அன்று ரிலீஸ் ஆகும் ஐ ஃபோன் 6 ஐஸ்வர்யா ராய் 1987 ல் இருந்ததைப் போல இருக்கும் என்று மந்தையில் எல்லாம் பேச்சாக இருக்கிறது, என்ன செய்யலாம் என்று ஒரே சம்சயமாய் இருக்கிறது.

Dubukku said...

bandu - கரெக்டு தாங்க. ஆப்பிள் ஒரே ஒரு மாடல் வைச்சு அடிச்சு ஆடறாங்க. சூப்பரா சொன்னீங்க

இலியாஸ் - ஹா ஹா நானும் கொஞ்சம் நாள் முன்னாடி வர வைச்சிருந்தேன். இப்பவும் ஊருக்கு கூப்பிட ஒரு பேசிக் மாடல் வைச்சிருக்கேன். பேட்டரி சும்மா சூப்பரா வருது.

அமுதா - மிக்க நன்றிக்கா :))) கொஞ்ச நாள் முன்னாடி வரை பேசறதுக்குத் தான் ஃபோன்ங்கிற சங்கதுல மெம்பரா இருந்தேன். ஆனா சில ஆப்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கா...அதான் மாறிட்டேன் :) ஆனாலும் இந்த எக்ஸ்ட்ராக்காக சில சமயம் பேசற வசதில காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறோமோன்னு தோனுது அதான் இந்தப் பதிவு :)

அனானி - //nu aadikku oru thadavai ammavasaikku oru thadavainnu elluthurathu, illa daily post podurathu....
Enna pannalam // - ஹா ஹா அவங்கள கட்டி வைச்சு உதைக்கனுங்க... :))) ஆமா யாருங்க அது :P

ரூபன் - தகவலுக்கும் லிங்கிற்கும் மிக்க நன்றி ரூபன். நானும் போய் நன்றி சொல்லிவிட்டேன்

அறிவன் - ஹிஹி அதெல்லாம் அப்படித் தான் இருக்கும். எனக்கும் ஃபோன் மாத்தனும். ஐஃபோன் 6 போக மாட்டேன் ஆனாலும் இந்த சபலம் இருக்கே :)))

சுசி said...

//(முந்தைய ப்ளைட் ஜர்னி எப்போ என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன்....ஆயிரத்து தொள்ளாயிரத்தி தொன்னூத்தி. சொச்ச வருஷத்தில் போனது)// என்ன??? நிஜம்மாவா???? :)

சூப்பர் போஸ்ட். என் தலயும் இப்படித்தான் செலவே பண்ணமாட்டார். கஞ்சபிசினாரி. அதனால நிறைய இடத்தில் ஏமாறுவார். :)

சுசி said...

@ அமுதா கிருஷ்ணா : நானும் அதே மாடல் தான் வைத்திருக்கிறேன். யூ.கேயில் இருக்கும் என் அக்கா சொல்லித்தான் அதில் நிறைய் வேற ஃபேசிலிட்டீஸ் இருக்கிறதே இன்னிக்கு தான் தெரிஞ்சுது. :)

Post a Comment

Related Posts