Saturday, November 27, 2010

இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்

முருகன் கோயிலில் சைக்கிள் கேப்பில் காரை பார்க் செய்யும் போது போதே தெரிந்துவிட்டது அன்றைக்கு கோவிலில் கூட்டம் எக்கச்சக்கம் என்று. "என்னங்க இவ்வளவு கூட்டம்.?..." என்று தங்கமணிக்கு குரலில் கவலை தொற்றிக்கொண்டது. கதவைத் திறந்துகொண்டு நுழைந்த போது சென்ட்ரல் ஹீட்டிங்கையும் தாண்டி ஜனசமுத்திரத்தின் வெப்பம் முகத்தில் தாக்கியது. இந்தப்பக்கமாய் தானே மெயின் முருகன் சன்னிதி இருந்தது என்று பக்கத்தில் இருப்பவரிடம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. தீபாராதனை காட்டும் தருணத்தை ஒரு பக்திமான் வேகமாய் கோயில் மணியடித்து தெரிவிக்க, பக்கத்திலிருந்த இன்னொரு பக்திமான் துள்ளிக் குதித்து என் கை வழியாக மண்டையை நுழைத்து, முருகனை நினைத்துக் கொண்டு, தெரிந்த ஜனத்தின் பின்புறத்தை நோக்கி கண்ணத்தில் அரகரா அரகரா என்று போட்டுக் கொள்ள "என்னடா இன்னிக்கு வெண்பொங்கல், சாம்பார் சாதத்திற்க்கு ஏகப்பட்ட காம்பெடிஷன் இருக்கும் போல இருக்கே" என்று எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. சர்கரைப் பொங்கல் கிடைக்காது என்பது நிச்சயமாய் தெரிந்தது.

கோவில் நோட்டிஸ் போர்டில் "கந்த சஷ்டி முதல் நாள்" என்று எழுதிப் போட்டிருந்தார்கள். வீக்கெண்ட், தீபாவளிக்கு அடுத்த நாள் என்று அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. "இதுக்குத் தான் விசேஷம் இல்லாத நாளா பார்த்து கோவிலுக்குப் போகலாம் என்று தலை தலையா அடித்துக் கொண்டேன்...இப்ப பாரு முருகனே க்யூல நின்னாலும் சர்கரைப் பொங்கல் டவுட்டு தான்" என்று தங்கமணி பக்கம் திரும்பினால், அவர் சோத்துக் கவலையே இல்லாமல் கண்ணை மூடி முருகனை வேலோடு பிடுங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.  சரவணபவன் பக்கத்தில் தான் இருக்கு என்றாலும் அன்றைக்கு கோயில் வெண்பொங்கல், சாம்பார் சாதம் என்று மூடு செட் செய்துவிட்டதால் விட்டுப் போக மனதில்லை. இந்த மாதிரி விசேஷ நாட்களில் இருக்கும் ஒரே ஒரு சின்ன அட்வான்டேஜ் கூட்டத்தை சமாளிக்க கோயிலில் டபுள் ஸ்வீட் போடுவார்கள். முதல் பந்தியில் சில பேருக்கு ராஜயோகமாய் ரெண்டு ஸ்வீட்டும் கிடைக்கும்.

திடீரென்று கோயில் நிர்வாகம் ஸ்பீகரில் கந்தசஷ்டி கவசம் போட, நின்று கொண்டிருந்த கூட்டம், நல்ல சம்மணம் போட்டு உட்கார்ந்து கோரஸாய் சூலமங்கலம் சகோதரிகள் கூட சேர்ந்து கவசம் சொல்ல ஆரம்பித்விட்டது. போச்சு "இதுல நடுவே டிங் டிங்குன்னு மீசிக்லாம் வருமே" என்று எனக்கு ஆயாசமாகிவிட்டது. நான் சின்னப் பையானாக இருந்த போது ஊரில் கந்த சஷ்டி சொல்கிறேன் என்று ஆடிய போங்கு ஆட்டமெல்லாம் இந்த பக்தகோடிகள் ஆடுகிற மாதிரி தெரியவில்லை. ஆஞ்சநேயர் பக்கம் அப்பிடைசராக வடை ஏதாவது குடுக்கிறார்களா என்று பார்க்கலாமென்று இடம் நகர்ந்தேன். அப்போது தான் ஆஞ்சநேயர் சன்னிதியில் அவரைப் பார்த்தேன். ஆளைப் பார்த்தால் என்னை மாதிரி வடையை நோட்டம் விட வந்தவர் மாதிரி தெரியவில்லை. வெள்ளையும் சொள்ளையுமாய் நல்ல பதவிசாக இருந்தார். பத்து விரலில் பன்னிரெண்டு மோதிரம் போட்டிருந்தார். பெரிய பெரிய மோதிரமாய், கட்டைவிரலில் ஒரு பெரிய மோதிரமும் அது விழுந்துவிடாமல் இருக்க ஒரு சின்ன வளையுமும் போட்டிருந்தார். ரெண்டே பேர் தான் இருந்தோம் என்பதால் சினேகமாய் சிரித்துக்கொண்டோம்.

"தம்பிக்கு ஆஞ்சநேயர்னா இஷ்டமா" என்று அவரே பேச்சை ஆரம்பித்தார்.

"ஆமா இஷ்டம், அதுவும் வடைமாலை சாத்தி இருந்ததுன்னா ரொம்பவே இஷ்டம்"

"ஹா ஹா..உங்களை எனக்கு பிடிச்சிருக்கு தம்பி" என்றார். என்ன்டா ஒரு வரி பேசினதுக்கே இப்படி பிடிச்சிருக்குன்னு சொல்கிறாரே என்று கொஞ்சம் கவலையாயிருந்தாலும், எனக்கு ஒரு வரி கூட பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே  கத்ரீனா கைஃபை பிடித்துவிட்டது நியாபகத்து வந்து நிம்மதியானேன்.

"அப்புறம் தம்பி என்ன பண்றீங்க" என்று வினவ "வெண்பொங்கலுக்காக வெயிட்டிங்ண்ணா" என்று நான் உண்மையைச் சொல்லாமல், பொதுவாக பேச ஆரம்பித்தோம். சாம்பார் சாதத்தை தற்காலிகமாக மறக்க எனக்கு அந்த அரட்டை  தேவைப்பட்டது. இங்கிலாந்து குளிர், ப்ளைட் ப்யூவல் சர்சார்ஜ் என்று சாத்வீகமாய் போய்கொண்டிருந்தவர் திடீரென்று "இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சி சுடனும்" என்று சொடக்கு போட்டு டி.ஆர் மாதிரி கொதிக்க ஆரம்பித்தார்.

"எவ்வளவு பெரிய பெயரு கிடைக்கவேண்டியது நம்மளுக்கு. எவ்வ்ளவு பேர் விளையாட வராங்க...எப்படி கட்டியிருக்கனும்...ஒவ்வொரு ஊர்ல கக்குஸே பெட்ரூம் மாதிரி ஜம்ன்னு வைச்சிருக்கான் இவனுங்க பெட்ரூம கக்குஸ் மாதிரி கட்டியிருக்கானுங்க...எத்தன கோடி அடிச்சிருக்கானுங்க..."

"...."

"பெயருல மட்டும் கல்லுமாடி மண்ணுமாடின்னு இருந்தா போதாது தம்பி ...நாம கட்டுற கட்டடம் பெயர சொல்லனும் ...பார்த்தீங்களா இங்க நம்மூர் பெயர எப்படி போட்டோ போட்டு நாறாடிச்சிட்டானுங்கன்னு ..."

"ஆமாங்க சார் என்னாலா ஆபிஸ்ல தலையக் காட்ட முடியலை...பார்க்கிறவன் எல்லாம் உனக்கு எவ்வளவு கமிஷன் தேறிச்சுன்னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."

"சுத்த வேஸ்டு தம்பி நம்மூர்...என்ன பண்ணியிருக்கனும்....மைதானத்துக்கு நடுவுல வரிசையா நிக்க வைச்சு இவனுங்கள் சுட்டிருக்க வேண்டாமா?...செஞ்சாங்களா...இல்லையே...கடைசி நாள் கூப்பிட்டு மைக்குல இல்ல பேசச் சொல்லி மரியாதை...சரி கடைசிலயாவது ஏதோ செஞ்சு கொஞ்ச நஞ்ச மானத்த காப்பாத்தினாங்க...அத விடுங்க இப்போ என்ன நடக்குதுன்னு பாருங்க..."

பயங்கர கோபத்தில் முகம் சிவக்க, அவர் கைகளை வீசிப் பேசிக்கொண்டிந்தார். எனக்கு கோவிலுக்குள் கந்த சஷ்டி சொல்லாமல் இப்படி கத்திப் பேசினால் வெண்பொங்கல் கிடையாது என்று பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ என்று பயம். இரண்டாவது மகள் தேடி வந்து வந்து சட்டையை இழுக்க.."இருங்க சார் பொண்ணுக்கு பசிக்குதாம் சாப்பாடு ரெடியாயிடுச்சான்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துவிடுகிறேன்" என்று வாய்தா வாங்கி சமையல் கூடத்திற்கு நழுவினேன்.

ஒரு ஆறு வயது குழைந்தோயோடு அப்பாவுக்கு என்று சொல்லியும், "மெயின் தீபாராதனை முடிஞ்ச பிறகு தான் சார் சாப்பாடு"ன்னு கையை விரித்துவிட்டார்கள். ஆனால் டபுள் ஸ்வீட் உண்டு என்பதை கன்பேர்ம் செய்து கொண்டேன். வேஸ்டாக வெயிட் செய்வது எனக்கு பிடிக்காது.

"என்ன தம்பி பொண்ணுக்கு ரொம்ப பசிக்குதா" என்று மோதிரக்கை மாமா சமையல் கூடத்திற்கே வந்துவிட்டார். இரண்டு மகள்களும் வெண்பொங்கலைப் பார்த்தாலே காத தூரம் ஓடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்காக நானே வாங்கி கடமையாற்றுவேன். வேஸ்ட் செய்வதும் எனக்கு அறவே பிடிக்காது.

"ஊழல் பெருகிடிச்சு தம்பீ இங்க பாருங்க நம்மாளு எழுபதினாயிரம் கோடிங்கிறாங்க. நிலையா இல்லாம அஞ்சு வருஷத்துகொரு தரம் தேர்தல்ன்னு இருக்கறதுக்கே இவ்வளவு அடிக்கிறாங்களே இவங்கள நிக்க வைச்சு சுடவேண்டாமா?"

"எத்தனை ப்ரோகர்கள், எத்தனை வியாபார காந்தங்கள்...எவ்வளவு பேருக்கு எவ்வளவு கோடி போயிருக்குன்னு பாருங்க....இந்த ராடியா பாருங்க பங்காளி பிரச்ச்னை மாதிரி இவரு வருவாரு இவர்கிட்ட பேசுங்க அவர தள்ளுங்கன்னு சொல்லுது...அவரு என்னாடான்னா...சரி அவர இவர்கிட்ட பேசச் சொல்லுன்னு.....மாடு விக்க போனா கூட ப்ரோக்கர்ன்னு பதவிசா சொல்லிக்கிறாங்க...இவனுங்க தொழிலதிபர், பத்திரிகையாளர்ன்னு..தூ ஊர அடிச்சு உலைல போடறதுக்கு இதெல்லாம் ஒரு பொழைப்பா"

"பிரதம மந்திரிய பாருங்க...அவரே சொல்லிட்டார் அவரு இதுல ஊழல் பண்ணலன்னுன்னு சொல்றார் எந்த ஊர்லயாவது நடக்குமா? ஒரே வழி எல்லாரையும் க்ரவுண்டுல வரிசையா நிக்க வைச்சி சுடனும் சுட்டுத் தள்ளனும்ங்கிறேன்" மோதிரக் கை மாமா லண்டனுக்கு ஆட்டோ வராது என்ற தைரியத்தில் சவுண்டாய் பேசிக்கொண்டிருந்தார்.

"லஞ்சம்ங்கிறது அக்சப்ட்டட் நார்ம் ஆகிடிச்சு, ஊழல்ங்கிறது இப்போல்லாம் கட்சிகளுக்கு பெருமைக்குரிய விஷயமாகிடிச்சு. அவன் இவ்வளவு அடிச்சா நாம அதுக்கு ஒரு படி மேல போய் நிக்கனும்ன்னு வெறியா இருக்காங்க..மக்கள் சேவை எங்க இருக்குன்னு சொல்லுங்க? இன்னிக்கு ஊழல் செய்யாத கட்சின்னு ஒன்னுமே கிடையாது. யார் குறைவா ஊழல் செஞ்சிருக்காங்கன்னு தான் பார்க்க வேண்டியிருக்கு...அதுவும் கபடி மேட்ச் மாதிரி ஸ்கோர் மாறிகிட்டே தான் இருக்கு. எல்லாம் ஓட்டு போடற ஜனத்த சொல்லனும்...இவனுங்களுக்கு அறிவு எங்க போச்சு.... வோட்டு போட்டவன் வயித்தலடிச்சா அடுத்த தரம் அவனுக்கு வோட்டு போடாத வேற யாருக்காவது போடு. எவ்ளோ பெரிய பவர் அவங்க கையில இருக்கு தெரியுதா அவுங்களுக்கு? அவங்களையும் எல்லாரையும் நிக்க வைச்சு சுடனும்ங்கறேன்" 

மோதிரக்கை மாமா 'கால் ஆஃப் ட்யூட்டி' வீடியோ கேம் மாதிரி எல்லாரையும் நிக்க வைச்சு சுட்டுக்கொண்டிருந்தார். அவர் பேசியதில் நிறைய பாயிண்ட்ஸ் மனதில் குறித்துக்கொண்டேன். அடுத்த தரம் பர்த்டே பார்ட்டியிலோ, கெட் டுகதரிலோ சொந்த சரக்கு மாதிரி எடுத்து விடுவதற்கு உபயோகப் படும். இதற்கு நடுவில் கந்த சஷ்டி முடிந்து கூட்டம் சமையல் கூடம் நோக்கி வர, முதல் பந்தியில் மாமாவுக்கும் எனக்கும் வடை, டபுள் ஸ்வீட்டுடன் வெண்பொங்கல் கிடைத்தது. சர்கரைப் பொங்கலை பார்த்தவுடன் தான் "சாப்பாட்டுல தமிழன் நிக்கிறான்ல" என்று மாமா கொஞ்சம் கூலாகிவிட்டார். சாம்பார் சாதம் திவ்யமாயிருந்தது.

கார் பார்க்கில் விடைபெறும் போது மாமாவுக்கு சொந்த ஊர் மதுரைக்கு பக்கம் என்று தெரிந்தது. "என்ன சார் இடைத் தேர்தல்ல நோக்கியா  என்95 ஃபோன், ரொக்கம், வெள்ளிகுத்துவிளக்குன்னு ஏகத்துக்கு குடுத்தாங்களாமே அப்படியா..? பேப்பரில் பக்கம் பக்கமாய் படித்தேன்" என்று எனக்கு ஆர்வம் தாங்காமல்  கேட்டேன்.

"அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க தம்பி...அந்த மாசம் பார்த்து என் ரெண்டாவது பெண்ணோட பிரசவத்துக்கு டெல்லிக்குப் போயிட்டோம். ஏகப்பட்டது குடுத்திருக்காங்க இன்னும் என்னல்லாமோ சொல்றாங்க...எனக்கு ஒன்னும் கிடைக்கல....எத்தன தரம் ஓட்டு போட்டிருப்பேன்..அந்த நன்றிக்காவது பக்கத்து வீட்டுல குடுத்துட்டு போயிருக்கலாம்ல...அடுத்த தரம் ஓட்டுக்கு வரட்டும் இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்"

Tuesday, November 23, 2010

Guzaarish


மு.கு - இந்தப் பதிவில் படத்தின் கதை ஓரளவுக்கு வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் அது படம் பார்க்கும் அனுபவத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்காது. கதையின் அவுட்லைன் கூட தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள் படிக்க வேண்டாம்.
************

புறக்கடையில் ஹெலிகாப்டரை நிப்பாட்டிவிட்டு, டென்னிஸ் மட்டையை தூக்கிக் கொண்டுவரும் ஹீரோ, எல்லை மீறிய பயங்கரவாததிற்கு உட்படுத்தப்பட்ட் ஸ்கர்ட் அணிந்துவரும் ஹீரோயின், பாத்ரூம் போவதற்க்கு கூட கோரஸாய் சிரித்துக் கொண்டு நெக்லெஸும் காக்ராவும் அணிந்துகொண்டு கூட்டமாய் போகும் பத்து பெண்கள்,லோகட் மாமியார்,ஹீரோவை நினைத்து ஏங்கும் இன்னொரு சூப்பர் ஃபிகர் என்று அடிக்கடி அபத்தமாய் பார்க்கும் ஹிந்தி சினிமா, வழக்கத்துக்கு மாறாக சமீபத்தில் நிறைய ஆச்சர்யங்களை கொடுத்து வருகிறது. இந்தப் படம் அந்த வகையைச் சார்ந்தது.

இணையத்தில் கதையின் முதல் வரி தெரியாமல் கண்ணில் பட்டுவிட இது "தி ப்ரெஸ்டீஜ்" படத்தின் உல்டாவோ என்று சந்தேகத்தோடு தான் தியேட்டரில் நுழைந்தேன். ஆனால் முதல் அரை மணிநேரத்திலேயே அது இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஏனோ ஐஷ்வர்யா ராயை இப்போவெல்லாம் பார்த்தாலேயே அபிநய சரஸ்வதி பட்டம் தான் நினைவுக்கு வருகிறது. அத்தனை ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அம்மணியின் சில அலட்டல்கள். அம்மணியோடு ராவணன் பேட்டி பார்த்தீகளா?...ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்கலடா சாமி அதிலிருந்து பிடிக்காமல் போனது கூட காரணமாய் இருக்கலாம்.

'ப்ளாக்' பார்த்த பிறகு சஞய் லீலா பன்சாலி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்த படத்திற்கு பிறகு அது கூடி இருக்கிறது. இந்திய படங்களில் (மெல்லிய) உணர்வுகளை பிரதானப் படுத்தி எடுக்கப்படும் படங்கள் மிகக் குறைவு. அந்த குறைவான படங்களில் இந்தப் படமும் ஒன்று. ஈதுனேசியா/அசிஸ்டெட் சுயிசெய்ட்/மெர்சி கில்லிங் விஷயம் நம் பக்கங்களில் குறைவு. ஸ்பைனல் கார்ட்டில் அடிபட்டு கழுத்துக்கு கீழ் செயல்பாடட்ற்று இருக்கும் ஹ்ரிதிக் ரோஷன் ஈதுனேசியாவிற்க்கு போராடுகிறார். இதற்கு நடுவில் அவருடைய போராட்டங்கள், உணர்வுகள், அவருக்கும் நர்ஸாய் வரும் ஐஷ்வர்யாவிற்க்கும் மலரும் உறவு என்று ஒரே உணர்வுப் பூர்வமாய் இருக்கிறது கதை.

இந்த ஈதுனேசியா/ மெர்ஸி கில்லிங் என்பது முரண்பாடாயிருக்கக் கூடாதே என்று  களத்தை மிக அழகாக கோவாவில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பம் என்ற சூழலில் பின்னியிருக்கிறார் சஞ்சய். படத்தில் வரும் வீடு ஆர்ட், காஸ்ட்யூம், கலாச்சாரம் அனைத்தும் இதே விஷயத்தை ரொம்ப சட்டிலாக மனதில் ஏறுவதால் ஈதுனேசியா முரண்பாடாக இல்லை.

படத்தின் ஹீரோ ஹ்ரித்திக் உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். இவரின் கதாபாத்திரம் ஒரு சிக்கலான கேரக்டர். கொஞ்சம் சொதப்பினாலும் கதையே கேலிக்கூத்தாகிவிடும் அபாயம். ஆனால் இதையெல்லம் அநயாசமாக ஊதித் தள்ளியிருக்கிறார் ஹ்ரிதிக். பரட்டை தலையும் தாடியும் மீசையுமாய் கோலம், உடம்பை அசைக்க முடியாமல் வெறும் முகத்தை மட்டும் வைத்து நடிக்க வேண்டிய கட்டாயம். முக்கால்வாசி படத்தில் கழுத்து வரை போர்வை, இவற்றுக்கு நடுவில் வெறும் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டும், கோபம், ஆற்றாமை, நக்கல் என்று வித்தியாசமாய் அதகளப்படுத்தியிருக்றார். இவருடைய வாய்ஸ் மாடுலேஷனும், டயலாக் டெலிவரியும் படத்தில் அசத்தலாய் இருக்கின்றன. இவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான மைல்கல்.

எனக்கு படத்தில் மிக மிக மிக பிடித்தது வசனங்கள். அதுவும் ஹ்ரிதிக் ஈதுனேசியா மனுவிற்காக கோர்ட் செல்லும் போது பாதிரியார் எதிர்பட்டு கடவுள் பெயரை சொல்லி நம்பிக்கை இழக்கக்கூடாது என்று அவர் மனதை மாற்றப் பார்ப்பார். அதற்கு ஹிரித்திக் தானும் கடவுளை நம்புவதாகவும் "Yes I am dying to meet him" என்று பதிலளிக்கும் டயலாக் பயங்கர நச். படம் நெடுக ஹிரிதிகின் வசனங்கள் எல்லாமே குறும்புத்தனத்துடனே அமைக்கப்பட்டிருப்பது அழகு. அதுவும் க்ளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் மிக மிக அழகாக எழுதப் பட்டிருக்கும். வசனகர்தாவிற்கு ஒரு மிகப் பெரிய ஷொட்டு போடலாம்.

அதற்கடுத்தபடியாக ஆர்ட் டைரக்க்ஷன் கலக்கலாயிருக்கிறது. படம் நெடுக அற்புதமான லைட்டிங்கில் காமிரா ஆர்ட்டை அப்படியே உள்வாங்கி மிக நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் சென்டிமென்டலான முடிவென்றாலும் ஒரு மிக நல்ல படம். கதையைக் கேட்டு பயந்துவிடாதீர்கள். படத்தின் ஸ்க்ரீன்ப்ளேயும் டயலாக்கும் மிக மிக சுவாரசியாமான ஒரு படம் பார்த்த திருப்தியைத் தரும். ஆனால் மனம் கணப்பதை என்னவோ தவிர்க்க முடியாது.
பார்க்க வேண்டிய படம்.
******
அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன்

Monday, November 22, 2010

ஜில்பான்ஸ் 221110

கொத்துபரோட்டா, கதம்பம், பிரியாணி, கூட்டாஞ்சோறு என்று ஏகப்பட்ட பெயர்களில் பரபரப்பாய் கேபிள் சங்கர் உட்பட பல வலையுலக பிரபலங்கள் நிறைய பேர் எழுதி வருகிறார்கள். நான் அந்த பெரிய லீக்கில் இல்லாவிட்டாலும், மனம் போன போக்கில் தோன்றியவற்றை அப்பப்போ தோன்றும் தலைப்புகளில் கிறுக்கி வந்திருக்கிறேன். இனிமேல் இந்த மாதிரியான அலைபாயும் எண்ணங்களுக்கு  சின்னி ஜெயந்த் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு  "ஜில்பான்ஸ்" என்று நாமகரணம் சூட்டிருக்கிறேன். என்றும் உங்கள் ஆதரவு அன்பனுக்குத் தேவை.

சமீபத்திய வெட்டிமுறிப்பு
இரண்டு கார்ப்பரேட் வீடியோக்களை எடுத்து முடித்து வருவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. தற்போது ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் அவர்களின் மியூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிக அருமையான கர்னாட்டிக் ஃபியுஷன். முதல் முறை கேட்கும் போதே மிகவும் பிடித்துப் போனது. அருமையாக இசையமைத்திருக்கிறார் ஜோத்ஸ்னா. இது முடிந்தவுடன் மீண்டும் சில குறும்படங்கள் என களமிறங்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்.

சமீபத்திய துக்கம்
சமீபத்தில் இங்கே இங்கிலாந்தில் தீ விபத்தில் ஒரு நெருங்கிய நண்பரின் மறைவு, எங்களையும் மற்ற நண்பர்களையும் குடும்பத்தோடு மனதளவில் பெரிதாக பாதித்தது. மெட்ராஸில் ராம்கோவில்லிருந்து தெரிந்த இந்த இனிய நண்பனின் திடீர் மறைவு, எனதளவில் வாழ்க்கை தத்துவங்களில் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. ஹூம்ம்ம்ம்ம்ம்

சமீபத்திய சந்தோஷம்
சினிமா தியேட்டரில் முறுக்கு விற்கும் வேலை கிடைக்க கூடாதா என்று ஏங்கிய ஒரு காலம் எனக்கு உண்டு. அப்புறம் அதுவே தியேட்டரில் முறுக்கு கடை வைத்தால் என்ன, தியேட்டர் ஓனர் பொண்ணை டாவடித்து கல்யாணம் செய்தால் என்ன என்று வயதுக்கேற்ற முதிர்ச்சியடைந்து, எதுவும் நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த ஆசைக்கெல்லாம் அடிப்படை காரணம் வேண்டிய போது சினிமா பார்க்கலாம் என்ற நப்பாசை தான். ஆனால் அந்த ஆசை தற்போது இங்கே யூ.கேவில் சினிவேர்ல்டின் புண்யத்தில் நிறைவேறி இருக்கு. மாதம் ஒரு தொகையை கட்டிவிட்டால் "ராசா எத்தனை படம் வேணும்னாலும், எத்தன தடவ வேணா, நினைச்ச போது பார்த்துக்கோ" என்று அன்லிமிட்டட் கார்டு ஸ்கீம் ஒன்று இருக்கிறது. இதில் ஓஹோ மேட்டர் என்னவென்றால் ஒரு மாததிற்கான சந்தா தொகை ஒன்றரை பட டிக்கெட் காசு தான். இந்த தியேட்டரில் தான் தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகும்.

இன்னாது காந்தி செத்துட்டாரா

என் தானைத் தலைவன் கமலஹாசன் படத்திற்கு கூட டெம்ட் ஆகாமல் காலந்தாழ்த்தி...எந்திரன் ஜுரத்தில் அன்லிமிட்டெட் கார்டு வாங்கி இரண்டாம் நாளே பார்த்துவிட்டு வந்த பிறகு தான் ஜுரம் இறங்கியது. எந்திரன் என்னை வியந்து பார்க்க வைத்திருக்கிறது. ஒரு மண்ணும் இல்லாத கதை, அலட்டல் அவுட்டேட்டட் ஐஷ்வர்யாராய், இத்தனைக்கும் நடுவில் நான் வியந்து பார்ப்பது இரண்டு விஷயங்களைத் தான்.  என்னதான் சூப்பர் படமாயிருந்தாலும் தமிழ் வியாபார மார்க்கெட் இவ்வளவு தான் என்றிருந்த ஒரு மாயையை உடைத்து, நூத்தி அறுபது கோடி போட்டு எடுத்து அதை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே திரும்ப எடுத்து எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கும் சன் பிக்சர்சின் வியாபார நுணுக்கத்தையும், தைரியமும் - உண்மையிலேயே ஒரு பிஸினஸ் கேஸ் ஸ்டடி.

(தலீவர் பாணியில்) படம் பிடித்ததா...என்றால் அதில் இருக்கும் பாடம் பிடித்தது என்று தான் சொல்வேன். மேலே சொன்ன சன் பிக்சர்ஸின் வியாபார நுணுக்கமாவது கேல்குலேடட் கேம்ப்ளிங். ஆனால் அதையெல்லாம் தாண்டி விளக்கமே இல்லாமல் வியக்க வைத்தது ரஜினி என்ற தனிமனிதரின் வெற்றி. ரஜினி மட்டும் இல்லாவிட்டால் எந்திரனின் இந்த வியாபாரம் சாத்தியமே இல்லை. மனிதரின் கரிஷ்மாவிற்க்கு விளக்கமே இல்லை.

இந்த வார கிசுகிசு
"டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியும் வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம். "அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு...எல்லாம் அடுத்த வாரமே பழைய குருடி கதவ திறடின்னு ஆகிடும்" என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனவாம்.