Wednesday, June 08, 2005

டெலிபோன் மணி போல்....

for picture version of this post click here

அவசரமாக கார் இன்ஷுரன்ஸை மாற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை. நான் காரிலே பிறந்து வளர்ந்து வாழாததைக் காரணம் காட்டி இந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் கேட்ட தொகைக்கு ஒரு எண்ணைக் கிணறு வாங்குவதே உச்சிதமாகப் பட்டது. நம்பர் மேல் நம்பர் போட்டு ஓய்ந்த போது மதுரமாய் அந்தப் பெண்ணின் குரல்...

தொழில் சம்பந்தப்பட்ட சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு

"உங்கள் பெயர்?"

"....."

"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா.."

"ஆமாம் "(எனக்குத் தெரிந்து விக்டோரியா மகாராணி குடும்பத்தில் இந்த பேர் இல்லை)

"இந்தியாவில் எங்கே...தமிழ்நாடா?"

"அட ஆமாம்..." அப்புறம் தான் மண்டையில் பல்பு எரிய ஆரம்பித்தது. அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டுப் பாணியில் பேசுவதில் நல்ல தேர்ச்சி. ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாணியிலிருந்து வெளிவந்து நார்மலாக பேச ஆரம்பித்தார்.

"இந்த கால்சென்டர் எங்கு இருக்கிறது? சென்னையிலா?"

"இல்லை..பெங்களூரில்"

"ஓ.." (கன்னடத்துப் பைங்கிளி)

"பெங்களூருக்கு வந்திருக்கிறீர்களா?"

"துரதிஷ்டவசமாக இதுவரை இல்லை...மிகவும் அழகான (**பெண்கள் நிறைந்த**) ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இந்த கால்சென்டர் இந்தியாவில் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது "

"எனக்கும் ஒரு இந்தியரோடு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது"

அப்புறம்...காவிரி நீர் பிரச்சினை தவிர எல்லா சொந்தக் கதை சோகக் கதையும் நிறையப் பேசினோம்.

"இங்கு எங்கள் கால்சென்டரிலும் நிறைய தமிழ் பையன்கள் இருக்கிறார்கள். எனக்கும் அவர்களிடமிருந்து இரண்டு வார்த்தைகள் தெரியும்...வேலை ஆரம்பிக்கும் முன் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து இதைத் தான் கோஷமாக சொல்லிவிட்டு ஆரம்பிப்போம் %£&$^$*$ இதற்கென்ன அர்த்தம்"

நினைத்த மாதிரி ...தமிழன் நிப்பான்ல....

"இதற்கு அர்த்தம் சொல்லமுடியாது. இது ஒரு கெட்டவார்த்தை" (**எல்லாரும் வேறு சொல்லுகிறீர்களா பிரமாதம்..தமிழா தமிழா**)

"ஓ அப்பிடியா...மற்ற பெண்களிடமும் சொல்கிறேன்"

அம்மணி...ஆட்சேபனையே இல்லாமல் அரட்டை அடித்தார். கால்சென்டர்களில் இந்த மாதிரி அடிக்கலாமா என்று ஆச்சர்யமாக இருந்த்து. சினேகமாகப் பேசினதுமில்லாமல் இன்ஷுரன்ஸ் தொகையையும் டிஸ்கவுண்ட்லாம் போட்டு குறைத்துக் குடுத்தார். (அட உண்மையாப்பா!)

வழக்கமாக எதாவது பிரச்சனைக்கு விஷயமாக சண்டை போட அழைக்கும் போது தான் இந்திய கால்சென்டருக்குப் போகும். நம்மாளுக்கிட்டப் போய் கத்தவேண்டியிருக்கே என்று நினைப்பேன்.

இந்த முறை வித்தியாசமாக இனிமையாக இருந்தது. வாழ்க இந்திய கால் சென்டர்கள்.

No comments:

Post a Comment

Related Posts