for picture version of this post click here
போயே போச்சு ஒரு வாரம். கிளம்பினதும் தெரியலை வந்ததும் தெரியலை. ஆனா உடம்பில் "மன்மதராசா" பாட்டுக்கு ஆடின அசதி இருக்கு. நான் சொன்ன மாதிரி வெய்யில் கொளுத்தவில்லை. அக்னிநட்சத்திரம் இந்த வருடம் ப்ளாப். எங்க ஊர் பக்கம் உண்மையிலேயே ஜிலு ஜிலுவென்று இருந்த்தது. குற்றாலம் சீசன் இந்த வருடம் வழக்கத்தைவிட சீக்கிரமாம். பஞ்சத்தில் அடிபட்டவன் போல சரவணபவன் மிக்ஸட் பரோட்டா, 14 இட்லீஸ், ஹாட் சிப்ஸ் சன்னா மஸாலா, ரோட்ரோர கொத்து பரோட்டா இன்னும் என்னவெல்லாமோ சாப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறங்கின ரெண்டாம் நாள் கார்க் பிடுங்கிக் கொண்டு ஊத்து ஊத்தென்று ஊத்தியதில் நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக் கொண்டு வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மேற்சொன்ன காரணத்தினாலேயே ஊரில் இருந்து வலைப்பதிய முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக்கொள்கிறேன்.
ப்ளைட்டில் திருமலையும், முத்தக் காட்சிகள் மட்டுமே வருகிற ஒரு ஆங்கிலப் படமும் போட்டார்கள். பக்கத்து சீட்டிலிருந்த இரு பொடியர்கள் "அம்மா இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று ஆங்கிலத்தில் சமாதானம் சொல்லிக் கொண்டு பார்த்தார்கள். அதிலொரு பொடியன் அடிக்கடி என்காலில் எத்தி எழுப்பியதால் திரும்பவும் "திமிசுக் கட்டையை" பார்த்துத் தொலைய வேண்டி இருந்த்தது. மெட்ராஸிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்ஸில், "இங்கிலாந்தில் எங்காத்தில் மொத்தம் ஒரே ஒரு பக்கெட் தான் வைத்திருக்கிறோம் அதிலும் தண்ணீர் பிடித்து வைக்கமாடோம்" என்று சொல்லி பக்கத்து சீட் நங்கநல்லூர் மாமாவின் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன். காய்சலானாலும் டாக்டரைப் பார்க்க ஒரு வாரம் கழிச்சுத்தான் பார்க்கமுடியுமென்று சொன்ன பிறகு தான் ந.மாமா மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். அப்புறம் "ஜனா" பட புண்ணியத்தில் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கினேன். அஜீத் இன்னமும் "என்னை என் வழியில் போக விடு.." என்று த்த்துப் பித்தென்று உளறிக் கொண்டிருக்கிறார் போல இருக்கு. இப்போ இப்பிடி பேசறது தான் பேஷனோ?
ஊரில் அடித்த கொஞ்ச நஞ்ச வெய்யிலும் பாழாய்ப் போகமால் அலைந்ததில் நன்றாகக் கருத்திருக்கிறேன். (இல்லாட்டாலும் இங்கே ஒன்னும் கமலஹாசன் நிறம் இல்லை). சி.டி கடைக்கு முன் பஸ் நிற்க பழைய படம் வேண்டும் என்று அலைந்ததில் இருக்கிற எல்லா படங்களையும் விட்டுவிட்டு தாடிக்கார மாமா படம் போட்டிருக்கிறதே...ராஜா காலத்துப் படமாயிருக்கும், அதுவும் ஜெமினி கணேசன் வேறு, நன்றாக இருக்கும் என்று அவசர அவசரமாக "சௌபாக்கியவதி" படம் வாங்கி வந்திருக்கிறேன். அப்பா அம்மாவிற்கே அந்தப் படத்தைப் பற்றி அவ்வளவு தெரியவில்லை. பார்க்கிற அன்னிக்கு இருக்கு மண்டகப் படி.
எதை எடுத்தாலும் பத்து ரூபாய் மாதிரி மெட்ராஸில் எங்கே போனாலும் இருநூறு ரூபாய் தான் என்று மெட்ராஸ் ஏற்போர்ட்டில் ஏ.சி.வேன் சர்வீஸ் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல விஷயம். பெட்டியெல்லாம் அவர்களே வாங்கிக் கொண்டு ராஜ உபசாரம் செய்கிறார்கள். அந்தக் கால ஜமீன் மாதிரி மாதிரி எட்டுப் பேர் போகக் கூடிய வண்டியில் ஒரு ஆளாக போவதற்குத் தான் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. ஆனால் ரொம்ப நல்ல சர்வீஸ். அடுத்த தரம் ட்ரை பண்ணிப் பாருங்க.
வரும்போது ப்ளைட்டில் பாய்ஸ் போட்டார்கள். ஒரு சேஞ்சுக்கு ஏர்ஹோஸ்டஸைப் பார்ப்பதைவிட்டு விட்டு படத்தைப் பார்ப்போமே என்று பார்த்து வைத்தேன்.
Tuesday, June 01, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment