Tuesday, August 12, 2014

பாலியல் புரிதல்

குருதிப் புனல் சினிமாவில் கமல் கௌதமிக்கு முத்தம் கொடுக்கும் (தல...தல..) ஏகப்பட்ட காட்சிகளில் ஒன்றில்- அவர் உம்மா கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் பையன் வந்துவிடுவான். "நான் எதையும் பார்க்கலை நான் எதையும் பார்க்கலை" என்று அவன் நக்கல் விடும் போது..."டேய் கண்ணத் தொறடா இதுல ஒன்னும் தப்பில்லை உங்கம்மாள உங்கப்பன் முத்தம் கொடுக்கிறான் . இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, என்ன... நான் சொல்லிக் குடுக்கலைன்னா சாட்டிலைட் டெலிவிஷன் கத்துக் கொடுக்கும் அவ்வளவு தான் " - என்று தல ஒரு டயலாக் விடுவார் பாருங்கள் - அட்ரா சக்கை என்று என்னை அட போட வைத்த இந்த வசனம் - எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உடன்பாடான ஒரு விஷயம். தற்போது எங்கள் வீட்டில் (லண்டனில்) இது தான் கலாச்சாரம். அதுக்காக எல்லாமே ஒப்பனாத் தான் பண்ணுவீங்களான்னு குதர்க்கமாய் கேட்கக் கூடாது. அபத்தின் உச்சக்கட்டம் அந்தக் கேள்வி என்பது என் அபிப்பிராயம். பாலியல் தெய்வீகமானது என்று ஒரு துருவத்திலோ அல்லது மிகவும் ஆபத்தானது என்று அதற்கு நேர் எதிர் துருவத்திலோ இருந்து பார்க்காமல் மிக இயல்பான ஒன்று என்பது தான் என்னுடைய நிலைப்பாடு (கவனிக்க - என்னுடைய = என் தனிப்பட்ட) . இது இயல்பானது என்பதை என் மகள்களுக்குப் புரியவைத்து அதைப் பற்றி ஒரு பயமோ இல்லை மிரட்சியோ இருக்கக் கூடாது என்பதில் நானும் தங்கமணியும் உடன்பட்டிருக்கிறோம். கவனிக்க - கூச்சம் என்பது வேறு- அதைச் சொல்லவில்லை. அவர்களுக்கு பாலியல் ரீதியாய் casual and general awareness இருக்கவேண்டும் எனபதில் நானும் என் மனைவியும் மிகத் தெளிவாக இருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு ஆரம்ப வயது வரம்பு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

என்னுடைய இளம் பிராயத்தில் எல்லாம் பூவை கிலுகிலுவென்று க்ளோசப்பில் காட்டி தத்துவார்த்தமான பின்நவீனத்துவ குறியீடுகளுடன் கூடிய முத்தக் காட்சியோ, இல்லை கையைப் பிசையும் மேற்படி காட்சியோ  டி.வியில் வந்தால் எங்க வீட்டுப் பெரியவர்களை விட நான் தான் நிறைய டென்ஷனாகியிருக்கிறேன். ஏன் என்றால் அடுத்த கேள்வி, ஹோம்வொர்க் முடிச்சாச்சா? ஹோம்வொர்க் முடிச்சா அவ்ளோதானா..? மேலே படிக்கவேண்டாமா? அப்படியே டி.வில உட்கார்ந்து விடக்கூடாது எப்போதும் படிப்ப பற்றிய சிந்தனை இருக்கணும், மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கருமமே கண்ணாயினார் என்று ஆரம்பித்து விடுவார் மாமா. அவன் அங்க முத்தம் குடுத்ததுக்கு எனக்கு இங்க பாட்டு விழும்... நானும் கண்ணாயினார் சரியான கருமம்டா என்று புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டு பூவுக்கு பின்னாடி அந்தாள் கலகலன்னு என்ன பண்ணியிருப்பான்னு சாக்ரடீஸ் மாதிரி சிந்தனையிலாழ்ந்து விடுவேன். இதன் காரணமாகவே எனக்கு ரொம்ப பிடித்த ராஜா ராணி படங்களில் இந்தப் பயபுள்ள முத்தம் கித்தம்ன்னு கிளம்பிரக் கூடாதே என்று எனக்கு கிலியாய் இருக்கும்.

இந்த ஆழ்ந்த பூ கலாச்சாரம் இங்கிலாந்தில் இறங்கிய ஆரம்ப நாட்களில் நடுமண்டையில் நிறைய குட்டியிருக்கிறது. டிரையினில் யுவனும் யுவதியும் இறுக்கமான அணைப்பில் - லிப் டு லிப்பில் முனைப்பாக புதையலைத் தேடிக்கொண்டிருந்த போது எனக்கு உதறலெடுத்து வியர்த்துக் கொட்டியது. பொதுவில் இப்படிச் செய்யவேண்டுமா கரெக்டா எனபதெல்லாம் புறந்தள்ளுங்கள், அது அந்தந்த நாட்டின் கலாச்சார, தனிநபர் மற்றும் சமுதாயத்தின் கூட்டு நிலைப்பாடு. இங்கே நான் சொல்ல வருவது அதல்ல. இந்த நாள் இனிய நாள்ன்னு அன்றைக்கு அந்த முத்தக் காட்சியை கேஷுவலாய் கடந்து போக முடியாத என்னுடைய மனப்பாண்மையை. என்னமோ என்னை யாரோ கையைப் பிடித்து இழுத்து கூப்பிட்ட மாதிரி ஒரு படபடப்பு, உதறல் etc etc.  இன்றைக்கு இது நடந்தால் கேஷுவலாய் கடந்து போய் நல்ல வியூபாயிண்ட்டில் உட்கார்ந்து கொள்கிறேன் என்பது வேறு விஷயம்.

இங்கே வீட்டில் ஆங்கில சினிமாக்களிலோ, தமிழ் சினிமாக்களிலோ கொஞ்சம் முத்தத்தை மீறிய ரசாபாசமான காட்சி வரப் போகிற அறிகுறி தென்பட்டால் டி.வி.யை பாஸ் செய்துவிட்டு மகள்களிடம் ஓப்பனாகவே அந்தக் காட்சி அவர்களுக்கு அவர்கள் வயதின் காரணமாக உகந்ததல்ல என்று சொன்னால் சிரித்துக் கொண்டே தெரியும் தெரியும் என்று ஓடி விடுவாரக்ள் (அல்லது என்னைப் பார்த்து திரும்பி உட்கார்ந்து கொள்வார்கள் - இது காட்சியை விட இன்னும் சங்கடம்) . நான் ம்யூட்டில் போட்டு விட்டு படத்தைக் கண்டினியூ பண்ணுவேன். முன்னாடி எல்லாம் என் இரண்டாவது மகள் - நான் மட்டும் எப்படி அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம் என்று கேள்வி கேட்பாள். பதினெட்டு வயதுக்குப் பிறகு அந்தக் கேள்விக்குப் பதில் புரியும் என்று சொல்லி வைத்திருந்தேன். தற்போது அவளே சினிமா முதற்கொண்டு வயது ரேட்டிங்க் பார்த்தே தேர்வு செய்கிறாள். இந்த ரேட்டிங் விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் மிக எச்சரிக்கையாக கையாளப் படுகின்றன. கெட்ட வார்த்தைள் பீப் செய்யாமல் திட்டுவதாய் இருந்தாலே வயது ரேட்டிங் கூடிவிடும். தியேட்டரில் கைக் குழந்தைகளைக் கூட வயது மீறிய ரேட்டிங் இருக்கும் படங்களுக்கு கூட்டிப் போக முடியாது. இங்கே யூ.கேவில் இது தெரியாமல் தமிழ் சினிமா திரையிடப் படும் போதெல்லாம் நிறைய நம்ம ஊர் மக்கள் குழந்தைகளைக் கூட்டி வருவார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் செக்யூரிட்டி ஆட்கள் வந்து வெளியே அனுப்பி விடுவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் லைசன்ஸுக்கு ஆபத்து வரும். வீட்டில் வயதுக்கு மீறிய ரேட்டிங் படம் பார்க்க வேண்டுமென்றால் பஞ்சாயத்து என்னிடம் வந்த பிறகே மகள்கள் பார்ப்பார்கள்.

அதே போல் மேற்கத்திய நாடுகளில் இந்த தொட்டுக் கொள்வது முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் சகஜமாயிருந்தாலும் அந்த "எல்லாமே" எனும் அடுத்த கட்டம் பொது வெளியில் நடப்பது அல்ல. அங்கங்கே எக்ஸப்ஷனாய் நடப்பதும் உண்டு ஆனால் அவை எக்‌ஷப்ஷனாய் மட்டுமே இருக்கும். தினசரி மூன்று காட்சிகள் என்று அரங்கேறாது. அப்படி எப்போதாவது அரங்கேறும் போதும் கூட ஒரு நமுட்டு சிரிப்புடன் மக்கள் கடந்து போகிறார்களே தவிர கூட்டம் கூட்டி டிக்கெட் போட்டு எக்ஸிபிஷன் நடப்பது இல்லை. குழந்தைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த முத்தக் காட்சி விரசமில்லாத வரையில் மட்டுமே ஒ.கே இல்லையென்றால் மக்கள் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரங்களில் கூப்பிட்டு "Get a room" என்று சொல்லியே விடுவார்கள்.

ஆனால் பொது வெளியில் வராமால் இங்கே பத்தாம் க்ளாஸ் படிக்கும் போதே ரகசியமாய் திருட்டுத் தனமாய் செம்புலப் பெயல் நீர் போல கலப்பதெல்லாம் நடக்கும் எனும் போது என் மகள்களுக்கு பாலியல் பற்றி ஒரு புரிதல், ஒரு நிதானம், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி எங்களிடம் சகஜமாய் பேசும் ஒரு சூழ்நிலை இருக்கவேண்டியது அவசியம் என நம்புகிறேன். நான் ஆண் என்ற கூச்சத்தின் காரணமாக என்னிடம் இல்லாவிட்டாலும் என் மனைவியிடமாவது அவர்கள் சகஜமாய் பேச வேண்டிய அவசியம் இருப்பதாய் நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் கலாச்சாரமும் வெகு தூரத்தில் இல்லை. தற்கால இந்திய சினிமாவில் பூவெல்லாம் காட்டுவதில்லை, தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுக்கிறார்கள். இது இயல்பானது என்பதிலிருந்து உடம்பில் ஏற்படும் ஹார்மோன்கள் என்பது வரை கேஷுவலாய் தெளிய வைப்பது அவசியம் என்று கருதுகிறோம். ச்சே ச்சே இதெல்லாம் இங்க இல்லை என்ற நடிப்பு சென்னையில் குறைந்து ஓப்பனாய் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு மினி ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு பெங்களூரில் போவது மாதிரி சென்னையில் போக முடியாது என்று நிறைய பெண் தோழர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ரேப் நிறைய நடப்பதற்கு காரணம் இந்த மாதிரி உடையணிவது எனும் வாதம் அபத்தம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி உடையணிவது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், காரண காரியம், ஆனால் அதை சகஜமாய் கடந்து செல்லும் மனோபாவம் இல்லாததே பாலியல் வன்முறைகளுக்கு காரணம் எனும் தரப்பைச் சேர்ந்தவன் நான். உடை மட்டுமே காரணமாய் இருந்தால் மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எண்ணிக்கை நம் நாட்டை விட பல மடங்கைத் தொட்டிருக்கவேண்டும்.

இந்த பாலியல் புரிதல் விஷயத்தில் டாக்டர் மாத்ரூபூதம் அவர்களும் டாக்டர் ஷர்மிளா அவர்களும் தொன்னூறுகளில் தொகுத்தளித்து வந்த புதிரா புனிதமா நிகழ்ச்சியை நன்றியோடு நினைவுகூர்கிறேன். மிகக் கன்சர்வேட்டிவான தமிழ்நாட்டில் அந்த நிகழ்ச்சி வந்த காலகட்டத்தில் அது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்த நிறைய துணிவு தேவைப்பட்டது. மருத்துவ மாணவர் என்றாலும் கேள்விகளைத் தொகுத்தளிப்பது பெண் என்பது பெரிய புரட்சியாய் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நிறைய குடும்பங்களே வரவேற்பு அளித்தது ஒரு ஆராக்கியமான சூழ்நிலைக்கு வித்திட்டது. ஆனால் தற்போது அது மாதிரி நிகழ்ச்சிகள் வருகின்றனவா என்பது தெரியவில்லை.

இங்கே ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பில் வயதுக்கு வருவது பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பில் பாலியல் பற்றியும் வயது தொடர்பான ஹார்மோன்கள் செய்யும் விளைவுகள் பற்றியும் புத்தகமும் குடுக்கிறார்கள். புத்தகத்தை அம்மாவும் பெண்ணும் மறைத்து மறைத்து பேணிக் காக்கிறார்கள். ரகசியமாய் பேசிக் கொள்கிறார்கள். ரெண்டு வருஷமாச்சு இன்னிக்கு வரைக்கும் புக்கு கைக்கு சிக்கவில்லை. கேட்டால் நான் வயசுக்கு வரலையாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போங்கடீங்க...என்று பத்தாம் க்ளாசில் முதல் பொஸ்தவத்தை போணி செய்து அறிவுக் கண்ணைத் திறந்து வைத்த கிங்பெல்லை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் :)

22 comments:

Karthik Nilagiri said...
This comment has been removed by the author.
Karthik Nilagiri said...

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒரு "கிங்பெல்" இருந்திருக்கான்யா...

(sorry... spelling mistake in earlier comment...)

M.G.ரவிக்குமார்™..., said...

அவசியமான பதிவு!..

Nat Sriram said...

நல்ல பதிவு..நமக்கெல்லாம் இதுக்கு இன்னும் நேரம் இருக்கு..//இன்றைக்கு இது நடந்தால் கேஷுவலாய் கடந்து போய் நல்ல வியூபாயிண்ட்டில் உட்கார்ந்து கொள்கிறேன் என்பது வேறு விஷயம்.// ROFL..யானும் அவ்வண்ணமே கோரும் ஏன்யா, கமல்கிட்ட காப்பியடிக்க வேற விஷயமா இல்ல? உன்னால் முடியும் தம்பி மாதிரி மரம் நடுறது, ஏழைங்களுக்கு ட்யூசன் எடுக்குறது?

அமுதா கிருஷ்ணா said...

ம்ம்ம்ம்ம்....அது யாரு அந்த கிங்பெல்??

Madhu Ramanujam said...
This comment has been removed by the author.
Madhu Ramanujam said...

பெத்தவங்கல்லாம் ஒழுங்கா படிங்கப்பூ. இந்தக் காலத்துல, புள்ளைங்களுக்கு எதை எப்படிச் சொல்லித் தரதுன்னு ரொம்ப யோசிக்கவேண்டி இருக்கு. போனா போகுது சாட்டிலைட் டிவி சொல்லித்தரும்னு இருக்க முடியலை. நல்ல பதிவு ரெங்கா.

Anonymous said...

Excellent post Dubukku... I think the general public in India see that sex education is needed in the age of internet, 24x7 visual media but as usual the culture police there is creating unnecessary hurdles. Hope they realize being hypocritical will not help anyone.

Glad to see you have the same flow in your serious writing as in your "trademark" comic posts. - Girish

Anonymous said...

அப்போ உன் அறிவுக் கண்ணை தொறந்தது தலைவர் எசக்கி இல்லயா?

Anonymous said...

Iyyo enga veetlayum kissing scene vantha kadaikku poga soluvanga. Antha panjayathu mudiyumbothu scenem mudinjirukkum.vitruvanga.

சுசி said...

1. என் மகள் உடையணியும் விதம் கண்டவர்களும் விமர்சிக்கும் படியாகிவிட்டது. எனக்கு சரி என்று படுகிறதோ இல்லையோ, இவர்கள் வாய்க்காக அவளை கண்டிக்க வேண்டியதாய் இருக்கிறது. “why amma? what's odd in this?" என்று அவள் கேட்கையில் புரியவைக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

2. //ஒரு மினி ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு பெங்களூரில் போவது மாதிரி சென்னையில் போக முடியாது என்று நிறைய பெண் தோழர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.// சென்னையில் ஸ்லீவ் லெஸ் அணிந்து கொண்டு சென்ற பதின்ம வயது பெண் குழந்தையை எல்லோரும் ஆஆஆஆஆ என்று பார்த்ததை பார்த்த போது கோபம் பொத்துக்கொண்டுவந்தது.

3.இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் தேறிவிட்டார்கள். மிகவும் வெளிப்படையாய், தைர்யமாய் இருக்கிறார்கள். என் பெரிய மகளுடன் நான் எல்லாம் பேசுகிறேன். இரண்டு பெண் குழந்தைகளின் தாய் என்ற முறையில் இந்த பதிவை நான் வரவேற்கிறேன்.

கானகம் said...

முதலில் இந்த தலைப்பை எடுத்து அருமையாக சொன்னதற்கு ஒரு வாழ்த்து. கட்டுரையின் முதல் பத்தியில் கமலஹாசரை விதந்தோதியிருக்கும் சினிமா குறித்து சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், இதே கமலஹாசந்தான் பெண்களை மகா கேவலமாக சித்தரித்து ஓரங்கா, ஸ்ரீலங்கா கொப்பரத்தேங்கா எனப்பாடி ஆடினார்.

நிச்சயம் பாலியல் குறித்த தெளிவு வேண்டும். அது பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் வேண்டும். இன்றைக்கு கல்லூரி செல்லும் முன்னரே அபார்ஷன் செய்துகொள்ளும் குழந்தைகள் பெருகி வருகின்றனர். தடுக்க முடியாவிட்டாலும், பாதுகாப்பாக இருப்பது எனச் சொல்லிக்கொடுத்தால் குறைந்தபட்சம் இந்த உடல் ரீதியான சித்ரவதைகளில் இருந்து தப்பிக்கலாம். கொஞ்ச நாளில் சீ என்றாகிவிட்டால் சுஜாதா சொன்னது மாதிரி தலையை ஒழுங்காக சீவிக்கொண்டு கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.

நம் நாட்டில் பெண்கள் குறித்தான கேவலமான அபிப்ராயங்களை தமிழ் சினிமாதான் உருவாக்குகிறது. அது நேற்று வந்த வேலையில்லா பட்டதாரிவரைக்கும் நீள்கிறது. வேலையில்லாமல் இருக்கும், குடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், தண்டச்சோறு என திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் ஒருவனைத்தான் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு கிறுக்கி காதலிப்பாளாம். என்ன வேனும்னாலும் செய்ங்கடா, உங்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்ற செய்தியை சொல்கிறார்கள் போல.

அதேபோல இன்னொரு விஷயம் மாடர்ன் உடை அணிந்து வந்தால் நக்கல் கிண்டல் செய்ய வேண்டும் என்பதைஹ்தான் நம் சினிமாக்கள் சொல்லிக் கொடுக்கின்றன. மேலும், அந்தப்பெண்கள் எல்லாம் லூஸ் மாரலோடுதான் இருப்பார்கள் என்பதையும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. எம் ஜி ஆர் இப்படித்தான் இருக்க வேனும் பொம்பள என பாடி ஆடினால், சூப்பர் ஸ்டாரும் பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்கிறார்.

இதையெல்லாம் தாண்டி நல்ல பயகளாய் இருக்கிற நூத்தில் ஐந்து பேருக்கு கோவிலே கட்டலாம்.

பாலியல் கல்வி இன்றைக்கு ஆசிரியர்களுக்குக்கூட இல்லை என்பதைத்தான் தொடர்ந்த ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நமக்கு சொல்கிறது.

என்னமாச்சும் செய்யுங்கப்பா, ஆனா, சீக்கிரம் செய்யுங்கப்பா என்றுதா சொல்ல வேண்டியிருக்கிறது.

விசு said...

இரண்டு இளம் பெண்களுக்கு தகப்பன் என்ற முறையில் படித்தேன், ரசித்தேன். ஆங்கிலத்தில் சொல்வார்களே " Been there, Done that" என்ற வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. இங்கேயும் அப்படிதான், தங்கமணியும், கண்மணிகளும்... எனக்கு தெரியாமல் பேசி கொள்கின்றனர். உமக்கு ஓர் கிங்பெல் போல, எனக்கு ஷெல்டன். அருமையான பதிவு. வாழ்த்துகள்.

சுசி said...

@jeyakumar srinivasan : ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில்,”கன்னி பொண்ணு மீனா கல்லுரிக்கு போனா, கல்லூரியில் படிச்சதினால் கர்ப்பம் ஆனா” என்று வரும். இதை யாரும் கண்டிக்கவேயில்லை. கமலஹாசன் கேட்கவே வேண்டாம். பெண்கள் என்றாலே ஆண்கள் உபயோகபடுத்ததான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும்,எதாவது நடந்தால், “நீ என்ன பண்ணின? நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் அப்படி பண்றான்?” என்று பெண்ணை கேள்வி கேட்க வைத்ததும் தமிழ் சினிமா தமிழ் சமூகத்து கொடுத்த பரிசு.

Dubukku said...

கார்த்திக் - ஆமாம் அவர்களே நம் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர்கள். :)

MGR - நண்றிங்கோவ்

ரசனை -// "உன்னால் முடியும் தம்பி....
" // யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்க...:((((((

அமுதா - அவர் என் வாழ்வில் விள்க்கேற்றி வைத்த ஒரு மகான் :)

மது - நன்றிங்கோவ் சாமியோவ்

கிரீஷ் - பாராட்டுக்கு மிக்க நன்றி. அதே அதே இதில் தேவையில்லாத போலித்தனமோ மெத்தனமோ ஓவர் முன் ஜாக்கிரதையோ கறிக்கு உதவாது என்பதே என் வாதமும் மை லார்ட் :)

அண்ணாமலை - வெறும்ன போஸ்டர மட்டும் ஒட்டிட்டு போய்டீங்களே சார்...உண்டியல்ல காசு???

அனானி - டேய் (நீ நான் நினைக்கிறவர் என்ற உரிமையில் ;) ) தலைவர் இசக்கி ஞான ஒளி மாதிரி பசக்குன்னு ஒளிய கண்ணுல காட்டிட்டு அணைச்சுட்டார். கிங்பெல் தான் வாழ்க்கையிலேயே விளக்கேத்தி வைத்தவர். ஒருவர் மௌன குரு மற்றவர் ஞான குரு :)

அனானி 2 - ஹீ ஹீ உங்களுக்கு கடைக்கு போற ட்யூட்டியா...சூப்பர்

தானைத் தலைவி - உடை விஷயத்தில் நாங்கள் மற்றவர்களை என்ன சொல்வார்கள் என்பதை விட சிம்பிள் பாலிசி தான் "உனக்கு உடை சௌகரியமாய் நீயே சங்கோஜப் படாத மாதிரி இருக்கவேண்டும், உனக்கு உடை அணியும் போது சந்தோஷத்தையும் தன் நம்பிக்கையையும் கூட்ட வேண்டும், குறைக்க கூடாது" இந்த விதிகளில் எதுனாலும் சரிதான் என்ற பாலிசி தான். சென்னை கொஞ்சம் இன்னமும் பின் தங்கியுள்ளது. கூடிய சீக்கிரம் தேறினால் சரி

ஜெயக்குமார் - சினிமாவில் இந்த மாரல் போலிஸிங்
ஏகப்பட்ட உளறலுடன் இருக்கும். மினிஸ்கர்ட் போட்டு வந்தால் பக்கம் பக்கமாய் வசனம் பேசி விட்டு அடுத்த பாட்டில் அதே உடையில் ஆடினால் பரவாயில்லை. நீங்கள் சொல்லும் பெண்களை போகப் பொருளாய் மதிக்கும் போக்கு இன்று நேற்றல்ல நிறைய நாட்களாய் இருக்கின்றது.
அதே போல் அட்வைஸ் மழைகளும் :)

விசு - மிக்க நன்றி. நானும் இரண்டு பெண்களுக்குத் தகப்பன் என்ற முறையில் தான் எழுதினேன் :) உங்களால் உணர முடிந்தது மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

தானைத் தலைவி - :))) நீங்கள் சொல்வது மாதிரி அபத்தங்கள் நிறைய் நிறைய சினிமாவில் :)

saraswathi said...

Well written
very funny and very serious both at the same time
agree with u again

Anonymous said...

sema writing. Came here after a long time and enjoyed it.

தமிழ் பையன் said...

எல்லாஞ்சரி.. அதுவா பழுக்கறத பழத்த அடிச்சு பழுக்க வைக்கணுமா என்பதுதான் கேள்வி. அந்தக் காலத்தில் இல்லாத பாலியல் கல்வியா..? எல்லாத்தையும் வெளிப்படையாத்தான் பேசுனாங்க.. அவங்களைப் படிக்காதவங்க என்று இன்றும் நம்புகிறோம்.

Sriram said...

I do not see any comments from who have male children. What kind of issues do they face? Even though I accept parents with female children are more concerned about this, I don't think they can be totally irresponsible.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| இந்த மாதிரி உடையணிவது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், காரண காரியம், ஆனால் அதை சகஜமாய் கடந்து செல்லும் மனோபாவம் இல்லாததே பாலியல் வன்முறைகளுக்கு காரணம் எனும் தரப்பைச் சேர்ந்தவன் நான். உடை மட்டுமே காரணமாய் இருந்தால் மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எண்ணிக்கை நம் நாட்டை விட பல மடங்கைத் தொட்டிருக்கவேண்டும்.||
மொத்தப் பதிவின் உள்ளடக்கம் அருமையானதும் தேவையானதும், மேற்கண்ட பத்தியைத் தவிர.

உடை விதயம் ஆண்,பெண்களுக்கிடையையான ஆயிரக் கணக்கான ஆண்டு பழைய ஜெனிடிகல் கவர்ச்சி மற்றும் சூழல், பாலியல் வறட்சி, குடியர்கள் போன்ற பல தளங்களைத் தொட்டுச் செல்வது. இதில் கூடிய அளவுக்கு மற்றவர்களைத் தூண்டாத அளவில் உடை அணிவது நமக்கு நல்லது என்பது என் பார்வை.

நீங்கள் ஒரு வேளை யூகே விற்குச் செல்லவே இல்லை; பிறந்ததிலிருந்து சென்னையைத் தாண்டவில்லை என்ற சூழலில் உங்கள் கருத்து இதே விதமாக இருக்குமா என்ற கேள்விக்குத் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இதே நேரம் ஒரு யூகேயின் எலிசபெத்திற்கு இராமநாத புரத்தில் தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமத்து வயதான ராமாத்தாள் முலை தெரிய சேலை மட்டும் கட்டியிருப்பது நாகரிகமானதாகத் தெரியுமா என்ற கேள்வியையும் கேட்டுப் பாருங்கள்.

உடை என்பது பாலியலோடு சூழலியல் மற்றும் சமூகக் காரணிகளோடும் உடன் பட்டது; இவற்றில் ஒன்று மற்றதை உராயும் விதமாக நமது நடவடிக்கை இருக்கும் போது சமூகத்தில் அதிர்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.

க்ளிவேஜும் ஸ்லீவ்லெஸ்ஸின் விளிம்பில் கச்சையோ மார்பின் விளிம்போ தெரியும் படி சென்னையில் உடையணிந்தால் அனைவரும் எளிதாகக் கடந்து போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் என்று மட்டுமே சொன்வேன்.

நமது உடை நமக்கு எளிதாகவும் சுகமாகவும் இருக்கும் அதேவேளையில் எதிரில் இருப்பவருக்கும் சகஜ மனோநிலையைத் தரவேண்டுவது அவசியம்.

இந்தியாவில் குடியர்களைக் குறைத்தால் பெருமளவு பாலியல் குற்றங்கள் குறையும் என்பது இன்னொரு பார்வை.

\\மக்கள் முனுமுனுக்க\\ - முணுமுணுக்க
\\என்னுடைய மனப்பாண்மையை.\\- மனப்பான்மை

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மற்றபடி அவசியமான அழகான டுபுக்கு ப்ராண்ட் அல்லாத பதிவு. :))

Angel said...

மிக அருமையான பதிவு friend ..
என் பொண்ணு இங்கே ஸ்கூலில் செகன்ட்ரிக்கு போன வுடன் முதல் topic ..டெவலப்மண்டல் பையாலஜிதான்
படத்தோட விளக்கமா !! பதினோரு வயது பிள்ளைக்கு தேவையான்னு நினைச்சேன் ..தெரியாம திருட்டுத்தனமா அரைகுறையா தெரிஞ்சுக்கிரத்தை விட ..இவங்களுக்கு விளக்கபடுத்திட்டா ஒன்னும் பின்னாளில் கேள்வி கேக்க மாட்டாங்க ..
என் பொண்ணு அதுவே பேரண்டல் கைடன்ஸ் பார்த்துதான் செலக்ட் பண்ணும் ..தமிழ் படங்கள் மட்டும் பார்ப்பதில்லை அவள் ..வயலன்ஸ் ரோம்பவாம் :)
அன்னிக்கு வெளியில் நடக்கும்போது ஒரு எட்டு வயசு வாண்டு அவங்கம்மாகிட்ட gay /L அப்படின்னா என்னான்னு கேக்குது அவங்கம்மா விளக்கமா சொல்லிக்கிட்டு போறாங்க .
இதே நாமா சின்ன வயசில் கேட்டிருந்தா !! தலையில் கொட்டிருப்பாங்க அதிகப்ரசங்கின்னு !!!
//மேற்படி காட்சியோ டி.வியில் வந்தால் எங்க வீட்டுப் பெரியவர்களை விட நான் தான் நிறைய டென்ஷனாகியிருக்கிறேன். //
மீ டூ :) நான் எப்பவும் அப்போ நோட்புக்கோட உக்காருவேன் சட்டுன்னு தலையை கவுத்துபோட்டுப்பேன்:)

Post a Comment

Related Posts