Wednesday, October 03, 2012

என் பாட்டு உன் பாட்டு

பெரிய மகளை நான் தான் நிதமும் ஸ்கூலுக்கு கூட்டிப் போவேன். குறுக்கு வழியில் ஒரு பெரிய பார்க் வழியாக நடந்து செல்லலாம் என்றாலும், அந்த ஆள் அரவமற்ற பாதையில் காலையில் அவள் தனியாய் செல்ல வேண்டாமே என்று நான் காரில் ட்ராப் செய்வேன். இதற்காகவே சீக்கிரம் எழும்ப வேண்டிய கட்டாயம். ராத்திரி முழுவதும் கூட தூங்காமல் இருக்க முடியும், ஆனால் படுத்தால் இந்த அதிகாலையில் எழுந்திருப்பது என்பது இன்னமும் ரொம்பவே கஷ்டமான செயலாக இருக்கிறது. அதிகாலையில் எழுந்து ட்ராக் சூட், ஹெட்ஃபோன் சகிதம் ஜாங்கிங் போகவேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஆசை. முதலில் ரெண்டு நாள் தங்கமணி எழுப்பிப் பார்த்தார். நடுங்கும் குளிரில் "இல்ல நான் இப்படியே போர்வைக்குள்ளேயே படுத்துக்கொண்டே ஸ்டைலாய் ஜாங்கிங் போய் கொள்கிறேன்" என்று ஆரம்பித்து, டெய்லி ஜாங்கிங் மிஸ் பண்ணவே மாட்டேன். பாதி ஜாங்கிங் போய்க் கொண்டிருக்கும் போது "ஸ்கூலுக்கு நேரமாயிடும் எழுந்திரிங்க" என்று முதல் அலாரம் ஆறரை மணிக்கு அடிக்கும். . "தோ...இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று வாய்தா வாங்கினால், ஆறே முக்காலுக்கு பெரிய மகள், தங்கமணி அவளை எழுப்பிய கடுப்பில், போர்வையைப் பிடுங்கி "தூங்கினது போதும், போய் குளிக்கப் போப்பா"ன்னு ரெண்டாவது அலாரம் அடிப்பாள். "இந்த வீட்டுல யாரு குழந்தைன்னே தெரியலை எல்லாமே உல்டாவா இருக்கு"ன்னு வீடே ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனமாகிக் கொண்டிருக்கும் போது, அப்படியே கண்ணையும் போர்வையையும் மூடிக்கொண்டு அசையாமல் ஒரு பதினைந்து நிமிடம் தியானம் செய்தால், ஏழு மணிக்கு எழுந்து குளித்து அரக்கப் பரக்க ஓடுவதற்கு சரியாய் இருக்கும். அதென்னமோ தெரியவில்லை இந்த காலை ஆறிலிருந்து எட்டு வரை உள்ள இரண்டுமணி நேரம் மட்டும் அரைமணி நேரத்திலேயே ஓடிவிடும். ஆனாலும் இவ்வளவு அதகளத்திலும் டை கட்டிக் கொள்ளும் நாட்களில் மட்டும், ஜன்னல் பக்கம் நின்று கொண்டு மிதப்பாய் ஸ்லோமோஷனில் ஹாட் சாக்லேட்டை குடித்தால் தான் ஜீரணமாகும். மகள் ஸ்கூல் எட்டு மணிக்கென்றால் ஏழு அம்பதுக்கே ஸ்கூலில் இருக்கவேண்டும் என்று அடம் பிடிப்பாள். "ஒரு வேளை ஆஸ்பத்திரில மாத்திட்டாய்ங்களோ"ன்னு சந்தேகம் வருமளவுக்கு நேரம் காப்பதில் பொறுப்பாய் இருப்பாள்.(இந்த விஷயத்தில் அப்படியே தங்கமணி)

வீட்டிலிருந்து மகளின் ஸ்கூல், காரில் ஐந்து நிமிட பிரயாணம் தான். ஆனால் காரில் ஏறிய முதல் மூன்று நிமிடங்களுக்கு என்ன பாட்டு போடுவது என்று எனக்கும் மகளுக்கும் வாய்க்கா தகறாரு ஆகாவிட்டால் அந்த நாள் இனிய நாளாக அமையாது. இளையராஜா, ஏ.ஆர்.ஆர் மற்றும் இன்ன பிற தமிழ் கோஷ்டிகளுக்கும் நிக்கி மினாஜ், ஷகிரா, ரியானா கோஷ்டிகளுக்கும் தர்ம யுத்தம் நடக்கும். அன்றைக்கு இங்கிலீஷ் பாட்டு தான் தீர்ப்பாகிவிட்டால் ஒரு எழவும் புரியாது. எல்லா பாட்டிலும் கிட்டாரை "ங்கொய்ங் ங்யொங்" என்று காது பக்கத்தில் வைத்து ராவுவம் போது ஊரில் பஜனை கோஷ்டியில் பாட்டு தெரியாவிட்டால் பாட்டு சத்தத்தை குறைத்து ஜால்ரா வால்யூமை ஏத்தும் டெக்னிக் தான் நியாபகத்துக்கு வரும். இதெல்லாம் சரிபட்டு வராது என்று என்ன பாட்டு போடுவது என்பதற்கு சில போட்டிகள் வைத்துக் கொண்டோம். முதலில் "கே.வி.மஹாதேவன் இசையமைத்த முதல் படத்தின் பெயர் என்ன","ஆண்ட்ரியாவும் அநிருத்தும் எந்த பாட்டு பாடி பேமஸ் ஆனார்கள்" போன்ற குவிஸ்களில் தமிழே வெற்றி பெற்று தமிழ் கொடியை நாட்டின. ஆனால் அடுத்த வாரம் மகள் சுதாரித்துக்கொண்டாள். நிக்கி மினாஜ் தலை முடியின் ஒரிஜினல் கலர் என்ன போன்ற எதிர் கணைகள் வர ஆரம்பித்தன. கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, இந்தப் பெயராவது ஆம்பளையா பொம்பளையான்னு க்ளூ குடுக்கிற மாதிரி இருக்கா. எங்கூர்ல மனோஜ்லாம் ஆம்பிளைகள் தான் வைத்துக்கொள்வோம் என்றாலும் மகள் ஒத்துக்கொள்ளவில்லை. இதையும் மீறி  ஆங்கிலம் அரங்கேறும் போது "இப்போ என்ன பிரச்சனையாம் அவனுக்கு..?"என்ற எனது சரமாரியான நொய்ய நொய்ய நச்சரிப்பில் வெறுத்துப் போய், சில நாட்கள் தமிழ் பாட்டுக்கு மீண்டும் வெற்றி கிட்டும். தமிழ் பாட்டு போடும் போதெல்லாம் "பாட்டு கேட்டா மட்டும் போறாது ஜெனரல் நாலெட்ஜ்ஜையும் வளர்த்துக்கணும்" என்று "இந்த படம் ரிலீசான போது எங்க காலேஜுல ஒரு பொண்ணு இருந்தா..." என்று மகளுக்கு டெக்னிகலாய் நிறைய விஷயங்களை விளக்குவேன். அவளும் நான் பீலிங்காய் புன்முறுவலுடன் கோண பார்வை பார்த்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போது நைஸாக பாட்டை ரியானாவுக்கு மாற்றி விடுவாள்.

நிற்க நான் பொதுவாய் ஆங்கிலத்தில் ஆம்பளைக் கபோதிகள் பாடுவதையெல்லாம் கேட்பதே இல்லை. பாப் உலகில் பெணகள் தான் தேனாய் பாடுவார்கள் மானாய் ஆடுவார்கள். ஷகிரா மாதிரி ஆடிக்கொண்டே பாடினால் மானே தேனே பொன்மானே அடேங்கப்பா..அடுத்த வீட்டுக்காரன் சொத்த அப்படியே கிரயம் பண்ணிக் குடுத்துவிடலாம். ஆம்பளைக் கபோதிகள் வீடியோவில்லெல்லாம் மொட்டையடித்துக் கொண்டு குரங்கு மாதிரி குல்லா போட்டுக் கொண்டு தாவி குதிச்சு பளிச் பளிச்சுன்னு லைட்ட போட்டு கண்ணை மழுங்கடித்துவிடுவார்கள். கூலிங் க்ளாஸ் போட்டால் தான் பார்க்கவே முடியும் என்பதால் மெனெக்கடவே மாட்டேன். ஆனால் சமீபத்தில் காரில் ஒரு பாட்டு கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது. கொஞம் தமிழ் டியூன் சாயல் இருப்பதால் கூட இருக்கலாம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதோ...


18 comments:

ஹேமா (HVL) said...

படித்துவிட்டு வயிறு வலிக்க சிரித்தேன்.

sriram said...

ஒரு பாட்டை ஷேர் பண்றதுக்கு இவ்ளோ விரிவா பதிவு போட உம்மால் மட்டும்தான் முடியும்..
செமயா சிரிச்சேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிவக்குமரன் said...

நன்று நண்பரே நன்று!

CS. Mohan Kumar said...

உங்க பொண்ணுக்கிட்டே உங்களோட குறும்பு நிச்சயம் இருக்கும் போல; கார் பின்னாடி நாங்க உட்கார்ந்து வந்தது போல அருமையா narration !

லக்ஷ்மி said...

அது வேறொன்னுமில்லை ஸ்ரீராம், அண்ணன் இங்கிலீஷ் பாட்டெல்லாம் போட்டு பீட்டர் விடுறார் பாருன்னு யாரும் பல்லு மேல நாக்க போட்டு பேசிறக் கூடாதாம்... என்ன ஒரு முன்னெச்செரிக்கை... :))))

Anonymous said...

ஆங்கிலப் பாடல்கள் வரும்போதெல்லாம் நானும் என் தங்கைகளிடம் "என்ன அவனுக்கு கக்கா வரலையாமா?" என்று கேட்டிருக்கிறேன், அவ்வளவு தான் ஞானம்.

நன்றி, ramdaus.wordpress.com

Anonymous said...

ஆங்கிலப் பாட்டுப் போடும்போதெல்லாம் நானும் என் தங்கைகளிடம் இதே "என்ன ப்ராப்ளமாம் அவனுக்கு, பாத்ரூம் வரலையாமா" என்று கேட்டிருக்கிறேன். யாரோ ஒரு எளுத்தாளர் சொன்னாராம், சீக்கிரம் எழுந்துக்க்றதை விட என்ன வேணுமின்னாலும் செய்வேன் என்று. அவரும் அந்தப் பக்கத்துக்காரர் தான்.

நன்றி, ramdaus.wordpress.com

DaddyAppa said...

//"ஒரு வேளை ஆஸ்பத்திரில மாத்திட்டாய்ங்களோ"ன்னு சந்தேகம் //

எல்லா வீட்டிலையும் இது தான் கதை. எனக்கு டைம் ரொம்ப முக்கியம். நம்ம வீட்டம்மாவுக்கு ஏழு மணின்னு சொன்னா காதில எட்டுன்னு தான் கேக்கும். எனக்கு BP சும்மா ஜிவ்வுன்னு ஏறும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| அதிகாலையில் எழுந்து ட்ராக் சூட், ஹெட்ஃபோன் சகிதம் ஜாங்கிங் போகவேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஆசை. ||

இரண்டு நாள் பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்து போய்ப் பாருமய்யா..அப்புறம் நீரே எழுந்து கொள்வீர்..
அது ஒரு தனி உலகத்தில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.(யூகே'நில் மgக்கிங் எல்லாம் இல்லைதானே, அப்புறம் உண்மையிலேயே தனி' உலகமாய்ப் போய் விடும் ஆபத்து இருக்கிறது!?)

உலகின் பெரும் சாதனையாளர்கள் எல்லாம் அதிகாலை எழுந்திருப்பாளர்கள்' என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறதாக்கும்!(அடங்குடே,அடங்கு!)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
This comment has been removed by the author.
Anonymous said...

Enga vettu junior kitta appavai eluppunu anupuna, Appa avanaiyum thoonga vaipar. Uniformla:(

எல் கே said...

hilarious

Paavai said...

உங்க வீட்டுக்கு வந்து உங்க பொண்ணுகூட கார்ல பயணம் போன பீலிங் ... எப்பவும் போல சிரிச்சு சிரிச்சு வயத்து வலி

Deekshanya said...

Good song and nice post.
Hmm //"ஒரு வேளை ஆஸ்பத்திரில மாத்திட்டாய்ங்களோ"// - ROTFL

//ஜன்னல் பக்கம் நின்று கொண்டு மிதப்பாய் ஸ்லோமோஷனில் ஹாட் சாக்லேட்டை குடித்தால் தான் ஜீரணமாகும்.// rasanai :)

nice post, loved reading, keep writing.
cheers
Deeksh

uthra said...

Chance-a illa sooper, .....sir

Dubukku said...

ஹேமா - மிக்க நன்றிங்கோவ்

ஸ்ரீராம் - ஹி ஹி அதே அதே... அந்த மட்டுக்கும் திட்டாம விட்டீங்களே :)

கடற்கரை - மிக்க நன்றி நண்பரே

மோகன் குமார் - ஹி ஹி என்ன நல்ல அப்போ அப்போ வாருவா. மிக்க நன்றி தல

லஷ்மி - அட அதே அதே...இதுவரைக்கும் பார்த்துட்டு தான் இருந்தேன்..இப்போ கேட்கவும் செய்கிறேன் :)

ராமதாஸ் - :)))) இங்கயும் அதே ஞானம் தான் :)

டாடிஅப்பா - அப்போ நீங்க எதிர் கட்சியா :))) என்ன ஜிவ்வு வேண்டி கிடக்கு :P

அறிவன் - கரெக்ட் சார் அந்த இரண்டு நாட்கள் தான் ரெம்ப கஷ்டமா இருக்கு. இதுக்காகவே சாதனையாளர் ஆகி இதெல்லம் சும்மான்னு சொல்லனும் போல இருக்கு :) மத்தபடி நீங்க கேட்ட ஆள் இன்னும் சிக்கலை சார் :(

அனானி -
ஹா ஹா இது இன்னும் சூப்பர்...காட்சி கண்முன்னால் விரியுது
:)

எல்.கே - நன்னி ஹை

பாவை - வாங்க வாங்க அதுக்கென்ன...மிக்க நன்றி மேடம்

தீக்‌ஷண்யா - மிக்க நன்றி மேடம். வூட்ல எல்லோரும் நலமா

உத்ரா - மிக்க நன்றி மேடம்

அமுதா கிருஷ்ணா said...

எப்ப எல்லாம் மூட் அவுட் ஆகிறதோ அப்போதெல்லாம் உங்கள் பழைய பதிவுகளை படித்து சிரித்து மூட் சரியாகிறது. செமையா எழுதுறீங்க தம்பி. போர்வையை மூடி கொண்டு செய்யும் தியானம் கிட்னிக்கு ரொம்ப நல்லதாம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha...:)

Post a Comment

Related Posts