Friday, February 01, 2008

வாழ்க்கை கல்வி - 2

For previous Parts --> Part 1

இந்த மாதிரி புஸ்தகங்களையெல்லாம் படிப்பது கெட்ட காரியம், மோசமான பையன்கள் தான் இதெல்லாம் படிப்பார்கள் என்று நம்மையும் கெட்ட பையனாக நினைத்துவிடுவார்களோ என்று வெளியே மூச்சே விடவில்லை. அந்த முதல் புஸ்தகத்துக்குப் பிறகு அப்புறம் கொஞ்ச நாளைக்கு வேறு கிடைக்கவும் இல்லை, மெனக்கடவும் இல்லை. ஸ்கூல் செட்டில் ஓவர் புத்திசாலியுமில்லாமல், ஓவர் மக்குமில்லாமல் எதோ முதல் ஆறு/ஏழு ரேங்கிற்குள் வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த முதல் ஆறு/ஏழு ரேங்க் குரங்குகளும் அப்பப்போ க்ரூப் ஸ்டடி பண்ணுவோம். இதில் இரண்டு வானரங்கள் மட்டும் அடிக்கடி மேத்ஸ் கெமிஸ்ட்ரீ என்று டைம்டேபிள் போட்டு படிப்பார்கள். ஒருவர் வீடு மாற்றி ஒருவர் வீட்டில் ஓவர் நைட் ஸ்டடியெல்லாம் வேறு உண்டு.

வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி என்னை ராத்திரி எல்லாம் வெளியே தங்க மாமா சம்மதிக்கமாட்டார். "நான் என்ன சின்னப் பையனா...அந்த பசங்களெல்லாம் க்ரூப் ஸ்டடி பண்ணி ஸ்டேட் பர்ஸ்ட் வந்துவிடுவார்கள் நான் மட்டும் இதே ஏழாவது ரேங்க்லயே இருக்கப் போறென்னு"ன்னு மாமியிடம் போய் ஒப்பாரி வைத்ததில் க்ரூப் ஸ்டடி பண்ண எனக்கும் ஒரு நாள் ரெக்கமண்டேஷனில் பெர்மிஷன் கிடைத்தது.

பொதுவாக க்ரூப் ஸ்டடி ராத்திரி ஒன்பது ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும். முதலில் தனித்தனியாக உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்போம். சரியாக பதினைந்து நிமிடங்களில் யாருக்காவது ஒருதனுக்கு "இது புரியவே இல்லைடா"ன்னு சந்தேகம் வரும். சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் மற்றொருவன் "இப்படித் தான்டா அன்னிக்கி நான் வீட்டுல படிச்சிண்டு இருக்கும் போது"ன்னு ஆரம்பித்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது என்ன நடந்ததுன்னு உபகதை ஒன்னு சொல்லி முடிக்கும் போது புஸ்தகத்தை மூடிவைத்துவிட்டு மற்ற ரெண்டு பேரும் எதிர்கதை சொல்வதற்கு தயாராக இருப்பார்கள். அப்புறம் ஒரு ஒரு மணிநேரத்தில் ப்ளாஸ்கிலிருந்து டீ குடித்துவிட்டு படிப்பைத் தவிர மத்த கதையெல்லாம் திரும்பவும் பேசுவோம். பண்ணிரெண்டு மணிக்கு "நாம படிக்கவே இல்லைடா"ன்னு உதறும். அதிகாலைல படிக்கிறது தான் என்னிக்கும் நியாபகம் இருக்கும்ன்னு யாரோட பாட்டியாவது சொல்லியிருப்பார்கள். அதை மேற்கோள் காட்டிவிட்டு இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு அரட்டையைப் போட்டுவிட்டு பிறகு தூங்கி அதிகாலை ஏழுமணிக்கு எழுந்து ஒரு அரைமணிநேரம் புஸ்தகத்தை புரட்டி விட்டு பரீட்சைக்குப் போனால் ராத்திரி பேசினதெல்லாம் கரெக்டாக நியாபகம் இருக்கும்.

இந்த க்ரூப் ஸ்டடியும் அதை மாதிரி தான் என்று போனால் மற்ற இரண்டு பேரும் ஒன்பதரை மணிக்கே சீரீயஸாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னடா நாம க்ரூப் ஸ்டடி பண்ணலாம்ன்னு வந்தா இவனுங்க நிஜ ஸ்டடி பண்றாங்களேன்னு எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அப்புறம் கூர்ந்து பார்த்தால் பெரிய சைஸில் இருக்கும் பாட்டனி ரெக்கார்ட் நோட்டை வைத்துப் படித்துக்கொண்டிருக்கிறாகள். "டேய் பாட்டனி நோட்ட வைச்சிக்கிட்டு என்னடா படிக்கிறீங்கன்னு பிடுங்கிப் பார்த்தால்...பருவமலர் மட்டுமே உலகமில்லை என்று சிரித்துக்கொண்டே மருதத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

"இதெல்லாம் தப்பே இல்லை...கண்டதைப் படிப்பவன் பண்டிதனாவான்னு பெரியவங்களே பழமொழி சொல்லிருக்காங்க...நாமெல்லாம் ட்ரெய்னீ பண்டிதர்கள்" என்று சமாதானமெல்லம் கரைபுரண்டு ஓடியது. இப்படியே பேசிக் கொண்டிருந்தால் படிக்க முடியாது "படிக்கும் போது கவனம் வேண்டும்" என்று மீண்டும் பாட்டி சொன்னதை மேற்கோள் காட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கு க்ரூப் ஸ்டடி ஏகத்துக்கு சக்சஸ்.

பருவ மலருக்கும், மருதத்துக்கும் பெரிய வித்தயாசம் ஒன்றுமில்லை என்றாலும் மருதத்தை ரெக்கார்ட் நோட்டில் பிரவுண் அட்டைக்குள் ஈ.ஸியாக ஒளித்து வைக்கமுடிந்தது. மருதம் புஸ்தகத்தை மணி அண்ணாச்சி முக்கு கடையில் வெத்தலை வாங்கும் போது பார்த்திருக்கிறேன். மணி அண்ணாச்சி கடையில் மட்டும் தான் 25 பைசாக்கு வாங்கினால் நிறைய வெத்தலை தருவார் என்று மாமி அங்கு தான் என்னை வெத்தலை வாங்கிவரச் சொல்லுவார். அண்ணாச்சி கொடுவா மீசையும் குங்குமப் பொட்டுமாய் பயங்கரமாய் இருப்பார். "மருதம்" புஸ்தகத்தை வெறும் பெயர் மட்டும் தெரியுமாறு கயிற்றில் தொங்கவிட்டிருப்பார். அதற்கு மேல் ஞானபூமி மறைத்தவாறு தொங்கிக்கொண்டிருக்கும். அதனால் மருதமும் "வானாகி...மண்ணாகி...எம்பெருமான்" வகையறா என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஊரில் எல்லாரையும் எல்லாருக்கும் தெரியுமாகையால் இந்த மாதிரி புஸ்தமெல்லாம் ஊரில் வாங்க சான்ஸே இல்லை. திருநெல்வேலியில் பஸ்டாண்டு பக்க கடையிலிருந்து ஒருத்தனுடைய கசின் மூலம் புத்தகம் கிடைத்திருந்தது. அடுத்த முறை குரூப் ஸ்டடி கூடிய போது எத்தனை நாள் தான் ஒரே புத்தகத்தை ரிவிஷன் செய்வது என்று பசங்களுக்கு எரிச்சல் மண்டிப்போயிருந்தது. நான் வேறு அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என்று வேறு சொல்லிவிட்டேனா...பசங்களுக்கு முழு பண்டிதர்களாவதற்க்கு ஆர்வம் ஏகத்துக்கும் கூடியிருந்தது.

அப்பிடி இப்படின்னு இரண்டு ரூபாயைத் தேத்தி புஸ்தகம் வாங்கலாம்ன்னு கிளம்பியாயிற்று. "அவனே நீ போய் வாங்கு, இவனே நீ போய் வாங்கு" என்று குழப்பம் முந்தின தெருவிலேயே ஆரம்பித்துவிட்டது. "நீ தான் அந்தக் கடையில புஸ்தகத்த பார்த்திருக்க..உனக்கு தான் அது எங்க இருக்குன்னு தெரியும்" என்று எனக்கு மரியாதை செய்ய ஆரம்பித்தார்கள். "ஐய்யைய்யோ... மணி அண்ணாச்சிக்கு மாமவை ரொம்ப பழக்கம்...கையப் பிடித்து தரதரன்னு இழுத்துண்டு போய் மாமா முன்னாடி நிப்பாட்டிவிட்டுவார். இந்த புஸ்தகம் படிக்கறதுக்கெல்லாம் எங்க மாமா தொட்டனைத்தூறும் மணற்கேணி மேற்கோள் காட்டமாட்டார்..விளக்குமாத்தை எடுத்து காட்டு காட்டுன்னு காட்டிருவார்...அப்புறம் க்ரூப் ஸ்டடிக்கு என்னால் ஜென்மத்துக்கும் வரவே முடியாது" என்று என்க்கு ஜுரமே வந்துவிட்டது.

"ஹை..இவரு க்ரூப் ஸ்டடிக்கு வருவாராம்...நாங்க புஸ்தகம் வங்கி ரெடியா வைச்சிருக்கனுமாம் ஐய்யா நோகாம நொங்கெடுப்பாராம்..."

"ஏண்டா நாங்க மாட்டினா எங்க வீட்டுல மட்டும் என்ன ஆரத்தியா எடுப்பாங்க? எங்கவிட்டுலயும் செருப்பு தான் எடுப்பாங்க...அப்போ நாங்க மாட்டினா மட்டும் பரவாயில்லையா?"

"இதெல்லாம் சரிப்பட்டு வராது, சரிடா நாங்களே வாங்கிக்கறோம்...நீ அப்படியே வீட்டுக்கு ஓடிப்போயிடு...மவனே திரும்ப க்ரூப்ஸ்டடிக்கு வந்த... மாமா இவன் மருதத்த மாங்கு மாங்குன்னு படிக்கிறன்ன்னு உங்க மாமா கிட்ட நாங்களே போட்டுக்கொடுத்துருவோம்"

"ரீடிங் மேக்ஸ் அ ஃபுல் மேன்"ன்னு சர் ப்ரான்சிஸ் பேகான் சும்மாவா சொல்லியிருக்கார்? இவர்கள் அடித்த வேப்பிலையும், இலக்கிய தாகமும் மணி அண்ணாச்சி கடையில் ரிஸ்க் எடுக்கலாமோ என்று யோசிக்கவைத்தது.

அன்றைக்கு கரெக்டாக கடையில் மணி அண்ணாச்சி இல்லை. அவருடைய சின்னப் பையன் தான் நின்று கொண்டிருந்தான். அண்ணாச்சி சாப்பிட போகும் போது,சூச்சா போகும் போது, என்று அண்ணாச்சி இல்லாத சமயமெல்லாம் அவன் தான் கடையில் பிசினெஸ் கன்டினியுட்டி பார்த்துக்கொள்வான். அவனுக்கு எங்க மாமாவைத் தெரியாது என்பதால் எனக்கு தைரியம் பிறந்தது.

"டேய் உங்க புத்திய காட்ட்டீங்கல்ல...நம்ம பிரண்ட்ஷிபையே துச்சமா மதிச்சிட்டீங்கல்ல...காசக் குடுங்கடா..எத்தன புஸ்தகம் வேணும் உங்களுக்கு.. எது வேணும் மருதமா பாலையா நெய்தலா...துணிஞ்சவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை.."ன்னு கிடச்ச சான்ஸை விடாமல் வீரவசனம் பேசிவிட்டு இரண்டு ரூபாய் சில்லறையை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். "டேய் நான் வாங்கும் போது ஒருவேளை அண்ணாச்சியோ மாமாவோ அந்தப் பக்கம் வந்துட்டா...." என்று இவா ஊதினா அவா வருவா ஏற்பாடுகள் ஏற்பாடாகியிருந்தது.

மனசுக்குள் உதறல் பலமாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், கடையிலிருந்த பையனிடம் புஸ்தகம் இருந்த திசையைக் காட்டி அத எடுப்பான்னு சொல்ல, பையன் பண்ணிய காரியம் என்னை தூக்கிவாரிப் போட்டது. வாழ்நாளில் மறக்கமுடியாதது. கடையில் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அண்ணாச்சி கீழே தரையில் சட்டப்பரக்க உட்கார்ந்து கொண்டு சோத்துச் சட்டியில் சாப்பாடு சாபிட்டுக்கொண்டிருந்தார். பையன் நான் குத்துமதிப்பாக காட்டிய புஸ்தக வரிசையை எட்டுவதற்காக அப்பாவை நகர்ந்துகொள்ள கூப்பிட்டே....விட்டான்.

நல்லவேளை அண்ணாச்சி புரியாம்ல் "என்னப்பா என்ன கேக்கிறாங்க"ன்னு எச்சிக்கையோடு யார் வந்திருக்கார்கள் என்று பார்க்க எழுந்திருக்க எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது.

"ஓ தம்பியா...என்ன தம்பி வேணும்?..வழக்கம் போல வெத்தலையா?.."ன்னு அண்ணாச்சி கேட்ட போது என்னையுமறியாமல் தலையாட்டி, நாலணாவை குடுத்துவிட்டு பையன் குடுத்த வைத்தலையை வாங்கிக்கொண்டு விட்டால் போதும் என்று ஓடியே வந்து விட்டேன்.

மருதம் புஸ்தகம் வரும் என்று தெரு முக்கில் இருட்டில் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு தேவுடு காத்துக்கொண்டிருந்த இரண்டு வானர நண்பர்களுக்கும் நான் வெத்தலையை வாங்கிக் கொண்டு வந்தது ரசிக்கவில்லை.

"டேய் அறிவுகெட்ட கபோதி...நீ என்ன வாங்கப் போன..என்ன வாங்கிட்டு வந்து நிக்கற? அண்ணாச்சி இருந்தா என்னடா...என்னம்மோ துணிஞ்சவனுக்கு... குனிஞ்சவனுக்குன்னு வீர வசனமெல்லாம் பேசின? உன்னால முடியாதுன்னா முதல்லயே சொல்லி இருக்கலாம்ல...படிக்கனும்ன்னு இலக்கிய தாகம் இருந்தா மட்டும் போதாதுடா..தில்லு வேணும்..."

"டேய் அண்ணாச்சி இன்னிக்கு பெரிய குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு அய்யனார் மாதிரி பயங்கரமா இருந்தார்டா...எனக்கு உதறல் எடுத்திரிச்சி அதான் சொதப்பிட்டேன்.." என்னுடைய விளக்கமெல்லாம் அங்கு எடுபடவே இல்லை.

"போடா பரதேசி...உன்னால இருபத்தைஞ்சு பைசா நஷ்டம்..என்னம்மோ இங்க யாருக்கோ சீமந்தம் மாதிரி வெத்தலைபாக்கு வாங்கிட்டு வந்து நிக்கிறான்...போடா ..போய் வீடு வீடா கதவ தட்டி குடுத்துட்டு வா..." ரொமப நேரம் ஆயிற்று அவர்கள் கோபம் அடங்க.

அப்புறம் இதைச் சொல்லி சொல்லி கொஞ்ச நாளுக்கு வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கப்புறம் புஸ்தகம் வாங்கிக் கொண்டு வரும் பொறுப்பு மட்டும் எனக்கு வரவே இல்லை.

-தொடரும்

21 comments:

இலவசக்கொத்தனார் said...

மருதம் தெரியும் அது என்ன பாலை, நெய்தல் எல்லாம் சொல்லி இருக்கீங்க? அதெல்லாம் நம்ம கண்ணில் காட்டவே இல்லையே. என்னதான் சீனியரா இருந்தாலும் இம்புட்டு மருவாதியா?

அப்புறம் அந்த கன்னடப் பைங்கிளி நடிகை (சரோஜாதேவி பத்தி எழுதினா கேஸ் எல்லாம் போடுவாங்களாமே)எழுதின சேப்டர் புத்தகங்கள் எல்லாம் அடுத்த பகுதியா? அப்புறம் அந்த டெபோனேர் படங்கள் எல்லாம் எப்போ? :P

Anonymous said...

நாங்க எல்லாம் வாழ்க்கை கல்வியை கல்லூரி விடுதில தான் படிச்சோம்.
தமிழ் இங்கிலீஷ்னு பாகுபாடு இல்லாம படிச்சோம். நாங்க கல்லூரி படிக்கும் போது வாழ்க்கை கல்வி ஏட்டில் இருந்து இன்டேர்நேட்கு மாறிவிட்டது அதனால் எங்களுக்கு கடையில் சென்று வாங்கும் பிரச்சனை இருந்தது இல்லை.

நல்ல பதிவு அருமையான நடை

Girl of Destiny said...

you paint a very nice pocture with your words! The conversations, in particular, are insightful!!!

Anonymous said...

vikatanla thodara vandhadhu. latest.padicha namma pasanga ethavathu EDAKUDAMA kettakuda patharama pathil sollalam.
unga palaya post(2004,5,6) ippothan padichom.nalla improvement.writing style nalla iruku
-isthri potti

Anonymous said...

டுபுக்கு,

'மேட்டர்' கிடைத்ததானால் இந்த வாரத்திலே இரண்டு போஸ்டா? கலக்கிட்டேங்க !!

\\அதிகாலை ஏழுமணிக்கு எழுந்து ஒரு அரைமணிநேரம் புஸ்தகத்தை புரட்டி விட்டு பரீட்சைக்குப் போனால் ராத்திரி பேசினதெல்லாம் கரெக்டாக நியாபகம் இருக்கும்.//

\\பசங்களுக்கு முழு பண்டிதர்களாவதற்க்கு ஆர்வம் ஏகத்துக்கும் கூடியிருந்தது//

\\"டேய் அண்ணாச்சி இன்னிக்கு பெரிய குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு அய்யனார் மாதிரி பயங்கரமா இருந்தார்டா...எனக்கு உதறல் எடுத்திரிச்சி அதான் சொதப்பிட்டேன்.." என்னுடைய விளக்கமெல்லாம் அங்கு எடுபடவே இல்லை.//

கலக்கல் ... நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உள்ளது வித் டைம்மிங்.

\\நல்லவேளை அண்ணாச்சி புரியாம்ல் "என்னப்பா என்ன கேக்கிறாங்க"ன்னு எச்சிக்கையோடு யார் வந்திருக்கார்கள் என்று பார்க்க எழுந்திருக்க எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது//

நச்சு ஒரு கதை போட்டிக்கு அனுப்பி இருந்திருக்காலம்.

-அரசு

Vg said...

Kalakureenga dubukku.. U explain the life incidents in a lively manner..
"கடையில் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அண்ணாச்சி கீழே தரையில் சட்டப்பரக்க உட்கார்ந்து கொண்டு சோத்துச் சட்டியில் சாப்பாடு சாபிட்டுக்கொண்டிருந்தார்"
Sudden twist.. :))

Hats off.. Keep posting..

dubukudisciple said...

he he he ... supera kalakiteenga...

Sumathi. said...

ஹாய் டுபுக்ஸ்,

//"ஹை..இவரு க்ரூப் ஸ்டடிக்கு வருவாராம்...நாங்க புஸ்தகம் வங்கி ரெடியா வைச்சிருக்கனுமாம் ஐய்யா நோகாம நொங்கெடுப்பாராம்..."//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா......
//அண்ணாச்சி கேட்ட போது என்னையுமறியாமல் தலையாட்டி//

ஹா ஹா ஹா இது நிஜமாவே சூப்பர்

நல்லாவே சொல்லுறீங்க...

Chakra said...

டேய் உங்க மாமா கிட்ட பேச வேண்டிய விஷயங்களும், அவர பாக்கறதுக்கு முன்னடி printout எடுக்க வேண்டிய documents-ம் நிறைய இருக்கு.

ambi said...

//அரைமணிநேரம் புஸ்தகத்தை புரட்டி விட்டு பரீட்சைக்குப் போனால் ராத்திரி பேசினதெல்லாம் கரெக்டாக நியாபகம் இருக்கும்.//

ஹஹா! ROTFL :)

இரண்டாவது பாகம் ரொம்ப நல்லா வந்ருக்கு.

//அவர பாக்கறதுக்கு முன்னடி printout எடுக்க வேண்டிய documents-ம் நிறைய இருக்கு.
//

@சக்ரா அண்ணே! documents இல்ல evidenceனு சொல்லுங்க.

எப்போ ஊருக்கு போகறீங்க?னு சொல்லுங்க. என்னால முடிஞ்ச உதவிய தாராளமா வழங்கறேன்! :p

Anonymous said...

adi pinnitinga. amaa.... athena kaalai padam vimarsanathula still pathi oru kelvi. ennamma thangamani ithellam pakarathu illaya?- isthri potti thangamani

Anonymous said...

ஸாரி டுபுக்கு அவர்களே! பின்னூட்டமாதான் தொடங்கினேன், ஆனா, கிட்டதட்ட ஒரு 'பின்‍பதிவு' சைஸுக்கு வந்திடுச்சு. மன்னிச்சுகிடுங்க, ஆமா, சொல்லிட்டேன்!

நமக்கு வாழ்க்கை கல்வியெல்லாம் ஹை ஸ்கூல்லயே தொடக்கம். முதல் அறிமுகமே, குரங்கு பெடல் சைக்கிள்லருந்து கான்கார்டுக்கு தாவின மாதிரி டேக் ஆஃப்தான்.

ஒரு சுபயோக சுபதினத்தில் கொஞ்சம் சீக்கிரமே ஸ்கூலுக்கு போயிருந்தேன். பசங்கல்லாம் ஒரு பென்ஞ்ல கூட்டமா என்னத்தையோ ரொம்ப சிரத்தையா பாத்திட்டிருந்தானுஙக. ஊர்ல நம்ம பள்ளிகூடம் படிப்ப தவிர எல்லாத்திலயும் வெகு பிரசித்தம். அதனால, திடு திப்புனு இவனுங்களுக்கு அறிவு தாகம் வந்திருக்காதேன்னு எனக்கு ஒரு சந்தேகம். கிட்ட போயி பாத்தா, 'ச.தேவி' யின் காவிய படைப்புலதான் பசஙக அப்படி மெய் மறந்து போயிருந்தானுங்க! எங்க இருந்து வந்தது, எப்படி வந்ததுன்னு‍ல்லாம் விஜயகாந்த் மாதிரி கேள்வி கேக்க நேரம் இல்ல. அப்படியே நானும் ஜோதியில ஐக்கியமாகி... ஒரு அஞ்சு நிமிஷம்தான், இப்படி கூட எழுதுவாங்களான்னு ஒரே குமட்டல்... ஹி ஹி, எல்லாம் சளி காய்ச்சல் மாதிரி ரெண்டு நாள்லயே சரியாடுச்சு :) இப்டியா ஒரு வாரம் ஓடிச்சு. அந்த வருஷத்திலயே உருப்படியா பசங்க கத்துகிட்ட ஒரு சமாச்சாரமா இது வளந்துட்டிருக்க சமயத்தில, ஒரு நாள் எங்க க்ளாஸ் டீச்சர்( சார் தானுங்க, மேடம் இல்ல! :)) எதுக்காகவோ பெல் அடிக்கறதுக்கு முன்னாலயே வந்துட்டார். ம்ஹூம்.., பசங்க என்ன ட்ரை பண்ணியும் மறைக்க முடியல. அவரும், என்ன.. என்ன இங்க கலாட்டான்னு கோவை சரளா மாதிரி வந்து பாக்க, ப‌சங்க பே பே‍‍ன்னு முழிக்க, பேண்ட நனைக்காத குறைதான். காச் மூச்‍னு சத்தம் போட்டுட்டு, புத்தகத்தை பிடுங்கிட்டு வேக வேகமா ஹெட் மாஸ்டர் ரூம் பக்கமா போனார். அதுக்குள்ள பெல்லும் அடிச்சு, க்ளாஸ் ஆரம்பிச்சாச்சு( அவர் க்ளாஸ் இல்ல) பசங்களுக்கு இங்க ஒன்னும் மண்டையில ஏற‌ல ( சும்மாவே ஒன்னும் புரியாது.. இந்த நிலமையில சொல்லவே வேணாம்) ரெண்டு மணி நேரம் ஆகியும் ஒண்ணும் நடக்கல... லேசா அப்பதான் பசங்களுக்கு மூச்சு( அட சே, மூச்சா இல்லங்க:) ) வந்துச்சு... விஷயமும் கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்ச்சுச்சு... சார் புத்தகத்தோட எஸ்ஸாயிட்டாருன்னு! இருந்தாலும், அவர்கிட்ட என்ன கேக்கவா முடியும்? அவர் இல்லாதப்ப அவரை கிண்டலடிச்சுட்டும், அவர் இருக்கற‌ப்ப பயந்த மாதிரி நடிச்சுகிட்டே மனசுக்குள்ள படு பயங்கரமா சாபம் குடுத்துட்டும் அந்த வருஷத்த ஓட்டினோம்.( அவரு அட்டென்டென்ஸ் மாதிரி ஆப்படிக்கக் கூடிய விஷயஙகள்ள எங்க க்ளாஸுக்கு இன்சார்ஜ் ஆனவர். நாம செஞ்சதும் ஒன்னும் ராக்கெட் ஸயன்ஸ் பத்தின ஆராய்ச்சி இல்லங்கிறதால, மூச்!) இப்படியா வாழ்க்கை கல்வி ஒரே வாரத்திலயே முடிஞ்சு போனதில எல்லாருக்கும் வருத்தம்தான். என்ன செய்ய!:)

Anonymous said...

அண்ணா, மாசகடைசியில் ஊருக்கு போகும் போது பெரியப்பாவை பாத்துட்டு வந்து பேசிக்கரேன்.

regards,
ganeshan

Anonymous said...

/* "டேய் அறிவுகெட்ட கபோதி...நீ என்ன வாங்கப் போன..என்ன வாங்கிட்டு வந்து நிக்கற? அண்ணாச்சி இருந்தா என்னடா...என்னம்மோ துணிஞ்சவனுக்கு... குனிஞ்சவனுக்குன்னு வீர வசனமெல்லாம் பேசின?" */ - இதுல ஏதோ உள்ளர்த்தம் இருக்கற மாதிரி இருக்கு.

பின்னிட்டீங்க ...வழக்கம்போல நடை(கம்பி மேல) ஸூப்பர்...

Anonymous said...

part 1oda part 2 LOL.sir,unga mama unga blog ellam padikkara vazhakkam unda?
nivi.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்லாயிருக்கு.

Aani Pidunganum said...

Super dubukaareh.

Correctaaah 10th padikarappa thaan Ilakiya Kaaviyangal padikara vaipu vandhadhu. Appala Madras vandhadhula innum vasadhiyapochu, Marudham, Kurinjinu college padikarappa kidaichudhu. Aana paarunga indha Vilaiyatu Paiyan madhiri Kalai kaaviyam irukunu edhuvum teriyalai. Terinjurundha innum Mel padippu padichu terinjundurukalaam.

Eppavum pola kalakiteenga

Anonymous said...

இவா ஊதினா அவா வருவா
என்னடா நாம க்ரூப் ஸ்டடி பண்ணலாம்ன்னு வந்தா இவனுங்க நிஜ ஸ்டடி பண்றாங்களேன்னு ---
super dubukks. kalakkitteenga. naangallaam indha maari books padichadhe illa. thanga mani kitta detail-a pesikkaren idhu pathi hi hi. - umakrishna

ஆடுமாடு said...

அட, இப்படியொரு அனுபவம் உங்களுக்குமா?

எல்லாரும் பசங்களா இருக்கும் போது இதை தாண்டித்தான் வந்திருக்கோம் போல.

கலக்கிட்டீங்க பாஸூ.

Mahesh said...

Hello Mr Dubukku....anga suthi inga suthi...thideernu eppidiyo unga blog-la nuzhainju paatha...kusumbu summa kummi adichu koozh oothikitu irukku....apram enna....oru 3 mani neram vettiya poga vendiyathu mahaaaa vettiya poachu. Inime inga regular attendance kudukkanum pola. Namakku blog pona varusham-than arimugam aachu. Etho naamum konja naal otti pathuttu ippa kidappula irukku. Neenga blog-gikitte irunga...naanga padichikitte irukkom.

Btw...your style has more resemblance to Sujatha's. That subtle humor and analogies are simply superb. Keep it up. Are you...by any chance working with "Change Pond"?

Mahesh

Dubukku said...

கொத்ஸ்- எங்க காலத்துல அந்த(கன்னடப் பைங்கிளி) புஸ்தகமெல்லாம் இல்லவே இல்லை. :) அடுத்த மேட்டர்லாம் போட்டாச்சு புது பதிவா :))

அனானி - அதே அதே இப்போல்லாம் எல்லாமே இன்டர்நெட்டுல தடுக்கி விழுந்தா கிடைக்குது. இருந்தாலும் அந்த கடைக்குப் போன த்ரில் மாதிரி கிடைக்காது :))

Girl of Destiny -வாங்க...உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ரொம்ப ஊக்கமா இருக்கு

இஸ்திரி பொட்டி - வாங்க...நான் கொஞ்ச நாளா படிக்காம கேப் விழுந்திடுச்சி...நீங்க சொன்னத கண்டிப்ப படிக்கனும்ன்னு நினைக்கறேன். உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி

அரசு - வாங்க ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு ஊக்கமாக இருக்கு. நச்சு கதையா...அது உண்மையிலேயே நடந்தது ...செம திரில்லிங்கான அனுபவம் :))

விஜி - ரொம்ப டேங்க்ஸ்ங்க...உங்க பாராட்டுக்கு..அடிக்கடி போஸ்ட் போட முயற்சிக்கிறேன்.

டுபுக்கு டிசைப்பிள் - வாங்க நன்றி மேடம்

சுமதி - நன்றிங்கோவ்....:)))

சக்ரா - வாடா நல்லவனே...நாம் பேசித் தீர்க்கவேண்டியது நிறைய இருக்கு :))

அம்பி -தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க...இங்க தம்பிக்கே அஞ்சவேண்டி இருக்கும் போல இருக்கெ :))

இஸ்திரி பொட்டி தங்கமணி- அடாடா..உங்க கடமை உணர்ச்சி சிலிர்க்கவெக்குதுங்க...கரெக்டா கேக்கிற மாதிரி கேட்டு போட்டுக் குடுத்துட்டீங்களே...நியாயமா :))

கொயந்த - ரொம்ப நன்றிங்க உங்க அனுபவத்த (??!!) பகிர்ந்துகிட்டதுக்கு ..வாத்தியார் செம உஷாரான வாதியார் போல இருக்கே :))) அதுக்கப்புறம் வேற புஸ்தகமே கிடைக்கலையா??? :))

தம்பீ- நல்லா இருக்கியாப்பா...ராஜா...நான் ஊருக்கு வரும் போது இந்த அண்ணா என்ன வாங்கிட்டு வரனும்ன்னு சொல்லுப்பா ராஜா... (சை....தம்பிங்க தொல்லை தாங்கமுடியலைப்பா எல்லாரும் ஆளாளுக்கு மிரட்டறாங்க :)))) )

இராமச்சந்திரன் - நன்றி தல. ஐய்யைய்யோ எந்த உள்ளர்த்தமும் இல்லை நீங்க வேற எதையாவது கிளப்பி விடாதீங்க :))

நிவி - நன்றி மேடம். அவர் படிக்க மாட்டார்...ஆனா இங்க பாருங்க போட்டுக்குடுக்க எத்தன பேரு துடிக்கிறாங்கன்னு

சாமான்யன் சிவா - நன்றி ஹை:)

ஆணி - வாங்கண்ணே...ரொம்ப நன்றி. ஆமாங்க எனக்கும் விளையாட்டுப் பையன் அறிமுகமெல்லாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப லேட்டு

உமா - நன்றி மேடம். படிச்சதே இல்லையா...சரி நம்பிட்டேன்...ஆஹா இதுல தங்கமணிகள் கான்பரென்ஸ் வேறயா :)))

ஆடுமாடு - ஆமாங்க எல்லாரும் கடந்து வந்த பாதை தானே :)))உங்க பாராட்டுக்கு நன்றிண்ணே

மகேஷ்- வாங்க வாங்க...அப்பாடா வந்து மாட்டிக்கிட்டீங்களா...ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு (பாராட்டு தானே? :P) இல்லைங்க சேஞ்ச் பாண்ட் இல்ல..ஆனா அங்க இருக்கிறவங்களை தெரியும் :))

Post a Comment

Related Posts