Monday, February 27, 2006

கீபோர்ட்

சின்ன வயதிலிருந்தே மிருதங்கம், ட்ரம்ஸ்க்கு அடுத்தபடியாக கீபோர்டின் மேல் எனக்கு ஒரு மோகம் உண்டு. சென்னையில் ராம்கோ சிஸ்டம்ஸில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே ஒரு மியூசிக் ட்ரூப் உருவாக்கினோம். எல்க்டிரானிக் ட்ரம்ஸுக்குப் பதிலாக கீபோர்டிலேயே ட்ரம்ஸ் வாசித்தேன். இப்படி ஆபிஸ் விழா ஒன்றில் நான் வாசித்த போது என் மனைவியும் வந்திருந்தார். கல்யாணமான புதிதாகையால் அந்தப் பாட்டில் முக்காலேவாசி சைட் முயூசிக் நான் வாசித்த கீபோர்டிலிருந்து தான் வந்தது என்று அன்று நான் புருடா விட்டது எனக்கே வினையாக வரும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. லண்டன் வந்தலிருந்தே நான்கு வருடங்களாக கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆசை. "உங்களுக்குத் தான் நல்லா வாசிக்கத் தெரியுமே...வாங்குங்கோளேன்...குழந்தைகளுக்கும் கத்துக் குடுக்கலாம்" என்று மேலிடத்துப் பிரஷர் அடிக்கடி வரும். "ஹூம் வாங்கிருலாம்...ஆனா நம்ம லெவலுக்கு நல்ல கீபோர்டா பார்த்துத் தான் வாங்கனும்" இப்பிடி அப்பிடி என்று தள்ளிப்போட்டு ஒரு நாள் வாங்கியே விட்டேன். வந்ததுக்கப்புறம் தான் மனைவிக்குத் தெரிந்தது, நமீதாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரிந்த அளவுக்குத் தான் எனக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியுமென்று.

"என்னம்மோ அன்னிக்கு நான் தான் வாசிச்சேன்னு சொன்னேள்?"

"அது வாசிச்சு ஐந்து வருடங்கள் ஆச்சே...டச் விட்டுப் போச்சு இப்போ..."

"உணமையச் சொல்லுங்கோ உங்களுக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியுமா இல்லையா?"

"வாசிக்கத் தெரியும்னா...தமிழ், ஆங்கிலம், ஹீந்தி மூனு பாஷையிலயும் கீபோர்ட்ன்னு எழுதி வைச்சா வாசிப்பேன்"

அப்புறம் என் கீபோர்ட் ரெண்டாவது மகளுக்கு சாப்பாடு குடுக்க ரொம்ப உபயோகப் பட்டது. "இப்போ சாப்பிடப் போறியா இல்ல அப்பாவ கீபோர்ட் வாசிக்கச் சொல்லவா" என்றால் பயந்து ரெண்டே நிமிஷத்தில் சாப்பிட்டுவிடுவாள். சரி மனைவிக்குத் தான் எல்லாம் தான் தெரிஞ்சு தொல்லைச்சாச்சேன்னு கீபோர்ட் க்ளாசில் சேர்ந்தேன். அங்கே என் மூத்த மகளுடைய க்ளாசில் படிக்கும் ஐந்து வயது பெண் என் க்ளாஸ்மேட். பாடங்களில் எனக்கு சீனியர். சினிமாவில் வருவது மாதிரி நாலு நாளில் பட்டயைக் கிளப்பிவிடலாமென்று பார்த்தால் வாத்தியார் "சி, டி " என்று ஏ.பி.சிடி சொல்லிக்குடுத்துக் கொண்டிருந்தார். இதில் சி. மேஜர் சி. மைனர் என்று ஒன்றுமே மண்டைக்குள் ஏறவில்லை. இந்த லட்சணத்தில் நான் ஏ.பி.சிடி. படித்து எப்போ டிகிரி வாங்குவதென்று கடைசியில் இந்த வாத்தியாருக்கு "ஒட்டகத்த கட்டிக்கோ.." வாசிக்க சொல்லித் தரத் தெரியவில்லை என்று க்ளாசை நிப்பாட்டிவிட்டேன்.

"பாருங்கோ உங்க பெண்ணே...சாப்பாடு போது தட்டி தட்டி இப்போ கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறாள்" என்று மனுஷன் தன்மானத்துக்கு அப்போ அப்போ சவால் வரும். ஒரு நாள் ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ராத்திரி முழுதும் உட்கார்ந்து என்னம்மோ ட்ரை பண்ணி ஒரு ம்யூசிக் கம்போஸ் செய்து அதை தீபாவளிப் பார்டியில் ரிலீஸும் செய்தாச்சு. இதை இத்தனை நாளாக இந்த ப்ளாகில் போட்டு உங்கள் நக்கலையும் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று ஆசை. இதோ கீழே இருக்கும் லிக்ங்கில் க்ளிக் செய்தால் என்னுடைய கீபோர்ட் சேட்டை கிடைக்கும். இதில் வரும் எல்லா வாத்தியஙளையும் நான் நான் நான்னே வாசிச்சு 5 ட்ராக் ரெக்கார்டிங்கில் மிக்ஸ் செய்திருக்கிறேன். (இந்த விஷயம் உண்மை). நேராக கீபோர்டிலிருந்து டவுண்லோட் செய்யமுடியாமல் மைக்கில் ரெக்கார்ட் செய்திருக்கிறேன் அதனால் கொஞ்சம் இரைச்சல் இருக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள். கேட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க.ப்ளீஸ்... திட்டுவதாய் இருந்தாலும் பரவாயில்லை...ரொம்ப காறித் துப்புவதாக இருந்தால் இங்கு ஆபிஸில் ஒருத்தருடைய இ-மெயில் தருகிறேன் :)

டுபுக்குவின் இசைவெள்ளத்தில் நனைய...
(இரண்டரை எம்.பி. இருப்பதால் லோட் ஆக கொஞ்சம் நேரம் பிடிக்கலாம்)

Thursday, February 23, 2006

நம்மளப் பத்தி நாலு விஷயம்

ராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க...ஒரு சங்கிலிப் பதிவு

Four jobs I have had:

  • மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் - சென்னையில் பார்ட் டைமாக படித்துக் கொண்டிருந்த போது நம் வயதிலுள்ள எல்லோரும் வேலைக்குப் போகிறார்களே என்று நம நமவென்று அரித்து..இந்த வேலையை எடுத்துக் கொண்டேன். எந்த எக்ஸ்பீரியன்ஸும் இல்லாமல் எடுத்த எடுப்பில் ரொம்ப நல்ல சம்பளம். கம்ப்யூட்டர் அப்போது தான் ஆபிஸ்களிலேயே புழங்க ஆரம்பித்திருந்தது. அந்த நேரத்தில் எல்லோ பேஜஸ் சி.டிக்கு(வெறும் சி.டி மட்டும் தான்) ஆர்டர் பிடிக்கும் வேலை. பாரிஸ் கார்னரில் எல்லா செட்டித் தெருக்களிலும் பீடா போடும் சேட்டுகளிடம் எதையுமே கண்ணுல காட்டாமல் இதுக்கு ஆர்டர் பிடிக்கறதுக்கு பதிலா பேக்கிரவுண்டில் "ஓம்" கேசட் போட்டு மடம் வைத்து ஊரை ஏமாத்துகிற சாமியார் வேலை தேவலை. எனக்குத் தெரிந்த "கலம் கஹாங் ஹை" ஹிந்தி அங்கே உதவாது என்பதால் "தன்யவாத்", "மாஃப் கீஜியே" என்று புதிதாக இரண்டு பதங்களை தெரிந்து கொண்டு மொத்தம் மூன்று நாட்கள் வேலை பார்த்தேன். முதலாளி நல்லவர் மூன்று நாட்களானாலும் நல்ல சம்பளம் போட்டுக் குடுத்தார். அப்புறம் கடையை மூடி விட்டு ஓடிவிட்டார் என்று கேள்விப் பட்டதும் கொஞ்ச நாளைக்குப் பாரிஸ் கார்னர் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. அந்த நேரத்தில் தான் "முஜே பச்சாவ்"ம் எனது ஹிந்தி புலமையில் சேர்ந்து கொண்டது.


  • ப்ரோக்ராமர் - டை கட்டிக் கொண்டு ப்ராஜெக்ட் மேனேஜரை ஏமாத்தும் வேலை


  • டேடாபேஸ் ஆர்கிடெக்ட் - கோட் சூட் போட்டுக் கொண்டு ப்ராஜெக்ட் மேனேஜரோடு சேர்ந்து கொண்டு கோட் சூட் போட்டுக் கொண்டிருப்பவர்களை ஏமாத்தும் வேலை


  • Four movies I would watch over and over again:
  • லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்

  • **ahem***உன்னால் முடியும் தம்பி

  • சலங்கை ஒலி

  • இதற்கடுத்த படியாக உள்ள படங்களில் பேசும் படம் காதலிக்க நேரமில்லை, தெனாலி தில்லுமுல்லு, தில்லானா மோகனாம்பாள் என்று நிறைய தேறும்.


  • Four places I have lived (for years):
  • அம்பாசமுத்திரம்

  • சென்னை

  • லண்டன்

  • என் மனைவியின் இதயத்தில் (ஹீ ஹீ ரொமாண்டிக்கா இருக்கு இல்ல?)



  • Four TV shows I love to watch:
  • குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை சிதம்பர ரகசியம் வேணும்னா தேறும்.


  • Four places I have been on vacation:

  • கொடைக்கானல்

  • பாரிஸ்

  • அம்பாசமுத்திரம் (இப்போ விடுமுறைக்கு அங்க தான் போவோம்...சொந்த ஊருக்குப் போவதே தனி சுகம் தான்)


  • Four of my favourite foods:

    வெறும் நாலு தானா?
  • வட இந்திய , தென்னிந்திய சாப்பாட்டு வகைகள்ன்னு சொன்னா கரெக்டா இருக்கும்னு நெனைக்கறேன்.(சப்பாத்தி சென்னா மசாலா இருந்தா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்)


  • Four places I'd rather be now:
  • யாருமே இல்லாத நீலமான தெளிவான கடற்கரையில் (என் குடும்பத்தோடு) - ஒரு வாரத்திற்கு

  • எந்த தொந்தரவும் இல்லாமல் ஹாயாக பாரிஸில் - முதல் நாள்

  • மனைவி குழந்தைகளோடு பாரிஸ் டிஸ்னி லேண்டில் விளையாட்டு - இரண்டாவது நாள்

  • மனைவியையும் குழந்தைகளையும் டிஸ்னி லேண்டில் விளையாட விட்டுவிட்டு நான் மாட்டும் ஹோட்டல் ரூமில் இண்டர்னெட் கனெக்க்ஷனோடு ப்ளாகில் -மூன்றாவது நாள்


  • Four sites I visit daily:

  • டுபுக்குவோட ப்ளாக்

  • டுபுக்குவோட ப்ளாக் கமெண்ட்ஸ்

  • யாஹூ (பழைய ப்ளாகில் யாராவது கமெண்ட் போட்ருக்கிறார்களான்னு பார்க்க)

  • டுபுக்கோட ப்ளாக் ட்ராபிக் பேஜில் - யார் யார் எங்கிருந்து எப்போ வந்திருக்கிறார்கள்ன்னு பார்க்க


  • Four People I would like to tag:
    செயின் பதிவுகளில் ரொம்பப் பெரிய ஆர்வம் இல்லை...அதனால் யாரையும் பெயர் சொல்லிக் கட்டாயப் படுத்த விரும்பவில்லை. ஆர்வமிருந்தால் இங்கே வரும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.(டுபுக்கு அழைக்கிறார்)..ஆர்வமிருந்தால் செய்யவும்.

    Monday, February 20, 2006

    கிங் காங்

    பீட்டர் ஜாக்ஸன் மேல் மிகுந்த மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு இந்த படம் ஈடுகொடுக்கவில்லை. க்ராபிக்ஸ் மாயையில் மனுஷன் கொஞ்சம் சிக்கி விட்டரோ என்று தான் தோன்றியது. ஆனால் அவர் மீது இருக்கும் மரியாதை இன்னும் குறையவில்லை. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" ஒன்று போதாதா? இன்னும் இருபது வருஷத்துக்குத் தாக்குப் பிடிக்கும். இந்த படம் அவ்வளவகப் பிடிக்காததற்குக் காரணம் வேறு ஒரு படம் பார்த்தேன் அதுவாக இருக்கலாம். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

    படம் அருமையாக ஆரம்பிக்கிறது. கதாநாயகியை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். நிதானமாக அதே சமயம் தொய்வில்லாமல் முதல் முக்கால் மணிநேரத்துக்கு கதை அழகாக நகர்கிறது. கிங் காங் இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று நம்மை ஆவலோடு எதிர்பார்க்கவைக்கிறார். திடீரென்று கிங் காங்குக்கு பதிலாக பழங்குடி மக்கள் வருகிறார்கள். சரி இவர்கள் எல்லோரும் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று பார்த்தால் நம்க்குப் பூச்சாண்டி காட்டிவிட்டு கதாநாயகியை கிங்க் காங்குக்கு தாரை வார்த்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

    கதாநாயகனை (கிங் காங்) அறிமுகப் படுத்துவதிலும் நேர்த்தி இருந்தது. ஆனால் அதற்கப்புறம் சொதப்பல் ஆரம்பிக்கிறது. திடீரென்று டைனோஸர்களெல்லாம் வர ஆரம்பிக்கின்றன. என் மகளுக்கு நான் டைனோசர் வரும் என்று சொல்லவே இல்லையே என்று கோபம். எனக்கே தெரியாது என்று சொன்னால் நம்பினால் தானே. அதற்கப்புறம் டைனோஸ்ர், பாச்சா, பல்லி, புழு என்று எல்லாக் கழுதைகளும் வருகின்றன - கிங் காங் மாதிரி எல்லாமே மெகா சைசில் இருக்கின்றன. அப்புறம் டைனோஸர்களுக்கும் கிங் காங்குக்கும் சண்டைக் காட்சி வேறு. ராம நாராயணன் படத்தை உல்டா பண்ணுவதற்கு ரொம்ப மெனெக்கெட வேண்டாம். கிங் காங்கை பால் குடம் தூக்க விட்டு, காட்டில் அம்மன் கோவில் முன்னே "ஊஊ" என்ற குலவையுடன் ஒரு கரகாட்டம் போட விட்டால் "காட்டைக் காத்த காளியம்மன்" ரெடி. பி,சி சென்டர்களில் பிச்சுக் கொண்டு ஓடும். ஹாலிவுட் என்பதால் கதாநாயகி பதவிசாக அழுகிறார். க்ராபிக்ஸின் பாதிப்பு கதையின் ஓட்டத்தை தடை செய்கிறது. அங்கங்கே கதை அவுட் ஆப் போகஸாகிறது. இந்த பிரம்மாண்டம் மட்டும் இல்லாவிட்டால் பாதிக்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக பேசாமல் சீரியலில் அப்பா வேஷம் கட்டப் போய்விடலாம் (ஒன்றரை வயசுக் குழந்தைக்கு).

    கதநாயகி நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் கிங் காங்கைத் தான் எனக்குப் பிடித்தது.அவர் நடிப்புக்கோ அழக்குகோ ஒன்னும் குறைசல் இல்லையென்றாலும் என்னம்மோ மனதில் ஓட்டவில்லை. அசின், திரிஷாவையெல்லாம் பார்க்கும் போது எனக்கென்னமோ வீட்டுக்கு கூப்பிட்டு ரெண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும் என்று தான் தோன்றும் எனக்கு.இந்தக் கதாநாயகியும் அது மாதிரி தான். (ஏன்ஞ்ஜீ அம்பாள் மட்டும் இதில் சேர்த்தி இல்லை). அந்த உடம்பை வைத்துக் கொண்டு கோணக்கால் ஆட்டமெல்லாம் என்னம்மாய் ஆடுகிறார்கள்? உடம்பில் பிடித்துக் கொள்ளாதோ?

    கடைசிக் காட்சியில் கிங் காங் இறந்துபோகும் போது என் மகள் அழுது விட்டாள். "டாடி நாமும் ஒரு கிங்க் காங் வைத்துக் கொள்ளலாமா ப்ளீஸ்" என்று அவள் கேட்ட போது யார் காதில் விழக்கூடாது என்று நினைத்தேனோ அவர் காதில் விழுந்துவிட்டது. இன்ஸ்டென்ட்டாக ரிப்ளை வந்தது - "வேண்டாண்டா செல்லம்...நான் இங்க ஒன்ன கல்யாணம் பண்ணிக் கொண்டு கஷ்டப்படறது போறாதா..."

    எனக்கும் பயங்கர கோபம் வந்து விட்டது. பின்ன இதையெல்லாம் கேட்டால் வராதா? ஒரு அளவில்லை? "கூடக் கொஞ்சம் வெங்காய சாம்பார் விடும்மா ப்ளீஸ்" என்று பயங்கரமாக கன்னா பின்னாவென்று திட்டிவிட்டேன்.

    Friday, February 17, 2006

    டீ.வி

    வழக்கம் போல் முந்தாநாள் ஆபிஸில் வேலை செய்து ப்ளாகி களைத்து வீட்டுக்குள் நுழைந்த போது கோலங்களில் வழக்கம் போல் அபி அழாமல், அபியின் மாமனார் அழுது கொண்டிருந்தார். (இப்போவெல்லாம் சீரியலில் ஆண்களும் அழ ஆரம்பித்து இருக்கிறார்கள்). அவர் அழ ஆரம்பித்த முஹூர்த்தம் எங்கள் வீட்டு டீ.வி எல்லாவற்றையும் பச்சை பச்சையாக காட்ட ஆரம்பித்தது. அந்த கால ஈஸ்ட்மென்ட் கலரில் பார்ப்பது மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் சொட்டு நீலம் போட்டது மாதிரி நீல கலருக்கு மாறியது. அப்புறம் கொஞ்ச நேரம் சிகப்பு கலர் சிங்கிச்சா..அப்புறம் திரும்பவும் பச்சை. அப்புறம் நான் எதோ டி.வி.யில் கையை வைக்க ஊமையாகி விட்டது.

    அதோட சும்மா இருந்திருக்கமாட்டேனோ...ஒன்றரையணாவுக்கு வாங்கிய ஸ்குரூ ட்ரைவர் உபயோகமே இல்லாமல் இருக்கிறதே என்று எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்துவிட்டேன். என் மூத்த மகளுக்கு ஒரே ஆச்சரியம். "டாடி டிட் யூ டூ இட் அலோன்?" அவ அப்பா இதனையும் பிரித்துப் போட்டேன் என்று அவளுக்குப் பெருமை. எங்கம்மாவும் இப்படித் தான். ஊரில் ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தினாலே "எம் பையன் பெரிய இன்ஞ்சினியரா வரவேண்டியவன் " என்று பெருமிதம் குரலிலேயே தெரியும். இரண்டாவது பெண்ணுக்கு அவளுக்குப் போட்டியா நான் வீடெல்லாம் குப்பையாக்கி இருக்கிறேனே என்று குழப்பம்.

    "செல்விக்கு ஆரம்பிக்கப் போறான் சீக்கிரம்" மேலிடத்துப் பிரஷர் வேற.

    "இரும்மா என்ன பிரச்சனைன்னு பார்க்கட்டும் " - உண்மையிலேயே பழைய பாடாவதி டீ.வி. என்பதால் சும்மா ஒரு குருட்டுத் தைரியத்தில் பிரித்துப் போட்டுவிட்டேன். எதாவது ஒயர் அறுந்து இருந்தால் முறுக்கி விடலாம் என்று பார்த்தால் அந்த மாதிரி எதையும் காணோம்.

    "அனேகமா பி.சி.பில எதாவது பிரச்சனையா இருக்கும்ன்னு நினைக்கறேன்" - சும்மா ஜார்கனெல்லாம் போட்டு உண்மையிலேயே உள்ளே தூசி அடித்துக் கொண்டிருந்தேன்.

    மகளும் சேர்ந்து கொண்டாள்.

    "அப்பா இதென்னப்பா?..."

    "அதாண்டா கபாஸிட்டர், இது ட்ரான்ஸிஸ்டர்"

    "நீங்க படம் போட்டது போறும் டீ.விய மாட்டி போடுங்கோ அதுல எதாவது பார்கலாம்"

    "இரு..குழந்தை கேக்கறா நாளைக்குப் பெரிய இன்ஞ்சினியரா வருவா"

    "அதனால தான் சொல்லறேன் நீங்க சொல்லிக்குடுக்காதீங்கோ...தூசியடிச்சது போதும் திரும்ப மாட்டி ஆன் பண்ணுங்கோ.."

    மாட்டிப் போட்டால்....தெளிவாக வெத்து ஸ்கிரீன் தான் தெரிந்தது.

    "செல்வி ஊமைப் படமாகவாவ்து பார்த்திருப்பேன்...இப்படி டீ.விய உடச்சுட்டேளே..."

    "என்னது நானா..." திரும்ப கழட்டி மாட்டியதில் கொஞ்சம் விட்டு விட்டு தெரிந்தது. அப்புறம் தான் உரைத்தது...பிரச்சனை ஸ்கார்ட் சாக்கெட்டில்(ஏரியல் சாக்கெட் மாதிரி ஐரோப்பாவில் இது தான் ஸடாண்டேர்ட்) இருக்கலாம் என்று.

    அப்புறம் அதை வி.சியாரில் குடுத்து வி.சி.ஆரிலிருந்து நார்மல் ஏரியல் சாக்கெட்டில் போட்டால் படம் தெளிவாக ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தெரிந்தது.

    "கலர் டீ.விய ப்ளாக் அண்ட் ஒயிட் டீ.வியா மாத்தறதுக்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்க கிட்ட தான் இருக்கு" என்று ஒரே புகழாரம் தான் அப்புறம்.

    "எல்லாம் இந்த ஸ்க்ரூ டிரைவர்னால தான்...ஒத்த ரூபாய்க்கு வாங்கினா இப்படித் தான் இருக்கும். அடுத்த தரம் பி அண்ட் க்யூவில நல்லதா வாங்கணும்"

    இப்போதைக்கு பிரச்சனை தக தக தக தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனின் புடவைக் கலரை பார்க்க முடியாதே என்று வந்து நிற்கிறது. வீகெண்டில் டி.வீ வாங்க போகனும்.

    இன்றைக்கு ஹாரி பாட்டர், கிங்காங், நார்னியா, வார் ஆப் த வேல்ட்ஸ் என்று கலக்கலாக பத்து டி.வி.டிகளை ...ஆபிஸில் மேனேஜர் கொடுத்திருக்கிறார் (பொய்யில்லை எல்லாம் க்ரிஸ்டல் க்ளியர் டி.வி.டி நல்ல பிரிண்டாம்)

    கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்...காற்றடிக்கும் நேரம்......

    Tuesday, February 14, 2006

    அன்புள்ள காதலிக்கு

    அன்புள்ள காதலிக்கு,
    இன்றைக்கு காதலர் தினம். வருடத்தில் இந்த நாளுக்காத் தானே நான் காத்திருந்தேன். எல்லா நாட்களும் பொங்கல் வைத்தாலும் பொங்கல் அன்று வைக்கும் பொங்கலுக்கு தனிச் சுவை அல்லவா? எல்லா நாட்களுமே உன் நினைவு தான் என்றாலும் இன்று காதலைச் சொல்லுவதில் காதலுக்கே தனி சுகம் அல்லவா? நம் காதல் காலத்தால் அழியாதது, சரித்திரங்கள் அறியாதது. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே - இளங்கோ முந்திக்கொண்டான், காவியம் படைத்திருப்பேன் இந்நாளில். இருந்தாலும் காவியமெல்லாம் கால் காசு பெறுமோ உன் கடைக்கண் பார்வைக்கு?

    காதலராய் ஆவதற்கே மண்ணில் மாதவம் செய்திட வேண்டுமென்றால் அதுவும் நம்மைப் போன்ற காதலாரய் ஆவதற்க்கு கேட்கவும் வேண்டுமோ? என்ன பரிசு தருவேனடி உனக்கு. பெண்ணே பொன்னைத் தருவேனா..மண்ணைத் தருவேனா...இல்லை என்னைத் தருவேனா...ஓ நானே என்வசம் இல்லையடி...ஒருவேளை உனக்கே உன்னைத் தருவேனா...எதைத் தருவேனடி அன்பே எதைத் தருவேன்...

    (அன்பே, இந்த முறை வேலன்டைன்ஸ் டே வாழ்த்து அனுப்ப கொஞ்சம் லேட்டாகிவிட்டது. நீ கோவித்துக் கொள்ளக் கூடாதே என்று இந்த லெட்டரை பாதியில் அனுப்புகிறேன்...காண்டினுக்க்கு லேட்டாகிவிட்டது. ரொம்ப லேட்டாப் போனால் வறண்ட இட்லி தான் கிடைக்கும் கெட்டி சட்னி கிடைக்காது அப்புறம் எனக்கு இன்றைக்கெல்லாம் பேஜாராகி விடும் அதனால் வந்து மிச்சத்தைப் பூர்த்தி செய்கிறேன்)

    - உனக்காக எதையும் கொடுக்குத் தயாராக இருக்கும் உன் ஆருயிர்க் காதலன்

    Sunday, February 12, 2006

    சண்டைக் கோழி

    பத்தோடு பதினொன்னாத் தான் இருக்கும் என்று நினைத்தேன். பரவாயில்லை என்னம்மோ மனதில் நின்று விட்டது. கதை ரொம்ப ஒன்னும் வித்தியாசமான கதையாக இல்லாவிட்டாலும் களத்தை வித்தியாசப் படுத்த மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் சில இடங்களில் தேவர்மகன் பாதிப்பு இருக்கிற மாதிரி தெரிகிறது. (முதல் இருபது நிமிடத்தைத் தவிர)விறு விறுப்பாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

    கதாநாயகன் நல்ல தேர்வு. பாந்தமாக இருக்கிறார். நான் படித்த காலத்தில் எங்க காலேஜிலும் இது மாதிரி சில சண்டியர் வீட்டுப் பிள்ளைகளும் படித்திருக்கிறார்கள் என்பதால் ஊரில் கூடப் படித்தவர் மாதிரி ஒரு ஃபீலிங் வந்தது. குடுத்து வைத்த மகராசன் மாமா மாமா என்று சுத்தி வர இரண்டு முறைப்பெண்கள் வேறு. சரி இதற்கு மேல் காலம் தாழ்த்த முடியாது..மேட்டருக்கு வருகிறேன்...தாவணி போட்ட தீபாவளி மீரா ஜாஸ்மின் மனசெல்லாம் மத்தாப்பாக மலர்கிறார். படத்தை சும்மா ஒரு தரமும் ஜாஸ்மினுக்காக இன்னும் மூன்று தரமும் பர்க்கலாம். அவ்வளவு அட்டகாசமாக நடித்திருக்கிறார். இயக்குனர் சில இடங்களில் சீக்வன்ஸை தப்ப விட்டிருக்கிறார். கதாநாயகன் மீரா ஜாஸ்மினை முறைப் பெண்களுக்கு அறிமுகப் படுத்தும் காட்சியில் மீரா ஜாஸ்மின் சோக்கர் செட் போட்டுக் கொண்டிருக்கிறார். அனால் அடுத்தக் காட்சியில் அது காணாமல் போய்விடுகிறது. வீட்டில் படம் பார்க்கும் போது இந்த அப்ஸர்வேஷன் தொண்டை வரை வந்துவிட்டது. அப்புறம் "எவருரா..நா .ஒதலவா"ன்னு சந்திரமுகி பிட் ஓடுமேன்னு கம்முன்னு இருந்துவிட்டேன்.தீபாவளி புராணம் போதுமென்று நினைக்கிறேன் அப்புறம் வீட்டுல எனக்கு பொங்கல் தான்.

    ராஜ்கிரண் இந்தப் படத்திலும் நன்றாகச் நடித்திருக்கிறார். மதுரை வட்டாரப் பேச்சு அவர் பேசும் போது காதில் தேனாகப் பாய்கிறது. அட்சர சுத்தமாக பேசுகிறார். பின்னணி இசை மிக அருமை. படத்திற்கு தேவையான டெம்போவை அள்ளி வழங்குகிறது. ராஜ்கிரண் அறிமுகப் பாடல் மிக மிக அருமை. "ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா" -பாக்யராஜ் படத்தில் வரும் ஹிந்தி வாத்தியார் இந்தப் படத்திலும் வாத்தியார். மீரா ஜாஸ்மினின் அப்பாவாக நடித்திருக்கிறார். இன்னமும் பாடம் சொல்லிக் குடுக்கும் போது அடிக்கிறார்.

    மவனே மீரா ஜாஸ்மினுக்கு மட்டும் அவார்ட் குடுக்கலை அண்ணா சாலையில் உண்ணாவிரதம் தான். எண்ட மலையாள பகவதீ...

    Monday, February 06, 2006

    Alma மேட்டர் - 5

    For previous parts --> part1   part2   part3   part4

    இந்த பதிவு நீளம் சற்று அதிகமாகி விட்டது ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலாகி விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ( A picuture is worth a thousand words இல்லையா? :P)





    இது நான் அனேகமாக ஒன்றாவதோ ரெண்டாவதோ படிக்கும் போது எடுத்த புகைப்படம். இந்தப் படத்தை காட்டி என்னைக் கண்டுபிடி என்று சொன்ன கொஞ்ச நேரத்திலேயே என் மனைவி என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
    "அம்மாடி பரவால்லயே புருஷனை அப்பிடியே கண்ணுக்குள்ளையே வைச்சிருக்கியே... கலக்குறியேம்மா"ன்னு நான் சிவாஜி ஃபீலிங்க் காட்டுவதற்குள் 'எப்பிடி கண்டு பிடித்தேன்' என்று காரணம் சொன்னார் பாருங்கள். நொந்து நூடுல்ஸாகி அதெல்லாம் எதுக்கு...பொழுது போகாம நீங்களும் போட்டிக் கோட்டிப் ப்ரியர்களாகி இருந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்...ரெபரென்ஸ்க்கு என்னுடைய குருதிப் புனல் கெட்டப் போட்டோவை வேண்டுமானால் பிட் அடித்துக் கொள்ளுங்கள்.
    (குட்டிப் பையனாய் இருந்த போது நான் சோ..ச்சுவீட்...ன்னு யாராவது சொல்லுங்கப்பு...தக தக தங்கவேட்டையில அம்பது கிராம் போட்டுத் தரச் சொல்லறேன்...ஹூம் வூட்டுல லொள்ளு தாங்கலப்பு)

    பி.கு. என்னுடைய குருதிப் புனல் போட்டோவைப் பார்த்துப் பாராட்டி லண்டனில் சினிமாவில் நடிக்க அழைப்பு கொடுத்த சிறுமி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நல்ல படமா பார்த்துப் போட்டுக் குடுங்கம்மா!

    Wednesday, February 01, 2006

    Alma மேட்டர் - 4

    For previous parts --> part1   part2   part3


    முதலில் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் மட்டும் பஸ்ஸில் வருதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது. அந்த மூன்று சீனியரில் ஒரு பெண் எனக்கு முந்திய ஊரிலிருந்து வருவாள். அவள் அணிந்திருக்கும் கொலுசில் வழக்கத்தை விட கூட கொஞ்சம் சலங்கைகள் இருக்கும். நடனம் வேறு பயின்றிருந்ததால் ஜில் ஜில் என்று நடையே கொஞ்சம் ஒய்யாரமாகத் தான் இருக்கும். அதனாலேயே சீனியர் பசங்கள் அவளுக்கு "ஜில் ஜில் ரமாமணி" என்று நாமகரணம் சூட்டி "ஜில்லு" என்று செல்லமாக வழங்கப் பட்டு வந்தாள். இரண்டாவது பெண் எனக்கு அடுத்த ஸ்டாப்பில் ஏறுவாள். இந்தப் பெண் எனக்கு எந்த முன்னறிவிப்பும் குடுக்காமல் திடீரென்று நடுவில் இருந்து ஒரு நாள் பஸ்ஸில் வர ஆரம்பித்ததால் கொஞ்ச நாளைக்கு நான் கவனிக்கவே இல்லை. மூன்றாவது பெண் அவ்வப்போது தான் பஸ்ஸில் வருவாள். நான் சொல்லப் போகும் கதைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல அதனால் அவளை விட்டுவிடுவோம்.

    ஏற்கனவே நானும் என் நண்பனும் ரொம்ப சமத்து..இதில் இருப்பதிலேயே(பையன்களில்) சீனியர் வேற.. கேட்கவா வேண்டும்? சமத்து பஸ்ஸெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். போகிற நண்டு சிண்டுகளையெல்லாம் ரவுசு கட்டிக் கொண்டு இருப்போம். திருவிளையாடல் முருகன் மாதிரி பஸ்ஸில் எங்களுக்கு என்று ஒரு தனி இடம், ஜால்ரா போட நாலு ஜூனியர் பையன்கள் என்று ஜமாய்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் உட்காரும் இடத்தில் ஜில்லு நான் மேலே சொன்ன ரெண்டாவது உருப்படியை சேர்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டது. எனக்கு உண்மையிலேயே ரொம்ப கோபம். ஆனால் 'ஜில்லு'வின் வாய் துடுக்குக்கும் தைரியமும் ஸ்கூல் அறிந்தது. அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் என் நண்பன் இருக்கானே அவன் உன்மையிலேயே தளபதி. "போய் அடிடா" என்றால் அடித்துவிடுவான். அதற்கப்புறம் பிரின்ஸிபாலிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் என்றால் அங்கேயே மூச்சா போய்விட்டு "காய்ச்சல்" என்று மூன்று நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிடுவான். நண்பனின் உளறல்களும் எங்கள் க்ளாஸில் பிரசித்தம். இருந்தாலும் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஜில்லுவிடம் வீரவேசமாக சண்டை போட்டு விட்டு வந்தேன். ஜில்லு அதற்கெல்லாம் அசரவில்லை. அசால்டாக எங்களை சமாளித்து போய்ட்டு வாங்கடா என்று பெப்பே காட்டிவிட்டாள். அதனால் நாங்களே அவர்களுக்குப் பெருந்தன்மையாக அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு குடித்தனத்தை மாத்திவிட்டோம்.

    வந்ததுக்கப்புறம் தான் நண்பன் மெதுவாக கேட்டான்.."டேய் அவளப் பார்த்தியா?"

    "யார ஜில்லயா?"

    "இல்லடா அவ பக்கத்தில புதுசா "

    கூச்சமே படாமல் திரும்பிப் பார்த்தேன். அழகாய் இருந்தாள். "இது யாருடா புதுசா? "

    "டேய் நான் அவள சைட் அடிக்கப் போறேன்டா.." நண்பன் காவிரியைத் திறந்துவிட்ட மாதிரி சத்தம் போட்டு உளற ஆரம்பித்தான். "சைட்" என்ற வார்த்தை அந்த வருடம் தான் எங்களுக்குப் பரிச்சயம். அந்த வயதில் அது கெட்ட வார்த்தை மாதிரி. மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம், கிளுகிளுப்பாக இருக்கும். "என்னடா இன்னிக்கு சைட் அடிச்சியா" என்று ஒருவருக்கொருவர் பெருமையாக விசாரித்துக் கொள்வோம். முக்கல்வாசி பேருக்கு விவரம் தெரியாமல் வீம்புக்காக சொல்லவேண்டுமே என்று சைட் அடிப்பதாக சொல்லுவார்கள். சில பேர் "சே சே...நான் இல்லைப்பா" என்று நல்ல பையன்களாகப் படம் போடுவார்கள். "சைட்" என்ற இந்த வார்த்தையை உபயோகப் படுத்துவதில் அந்த வயதில் என்னவோ அப்பிடி ஒரு ஆனந்தம்.

    "டேய் என்னடா சொல்லற...?"

    "ஆமாண்டா நான் அந்த பெண்ணை சைட் அடிக்கலாம்ன்னு இருக்கேன்..."

    "உண்மையாவா?...சரி என்னம்மோ பண்ணிக்கோ..."

    நான் திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்த போது என்னை அவள் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்கு தோன்றியது. லேசாக சிரித்தாள்.

    அப்புறம் ஸ்கூல் பஸ் பயணம் எங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாகிவிட்டது. அப்பிடியே எட்டாவதிலிருந்து ஒன்பதாவது வந்துவிட்டோம் ஆனாலும் பஸ்ஸில் தான் வந்து கொண்டிருந்தோம். வீட்டில் சைக்கிள் எல்லாம் கேட்டு அடம் பிடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜில்லும் 'அவளும்' சிரித்துப் பேசும் அளவுக்கு நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.

    -தொடரும்