for picture version of this post click here
9/f, பொன்னம்பலம் சாலை - கே.கே.நகர் - இது தான் நாங்கள் சென்னையில் முதன் முதலில் வசித்த வீடு. இங்கு எங்களுக்கு முன்பு கஸ்தூரி ராஜா இருந்தார். செல்வராகவன் இந்த அனுபவங்களைத் தான் எடுத்திருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் படத்தில் பல சீன்களில் கே.கே.நகர் நியாபகம் வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிதில் இதே மாதிரி காலை 4 மணிக்கெல்லாம் தண்ணியடிக்க எழுந்திருக்கவேண்டும். தாமிரபரணித் தண்ணி குடித்து வந்த மதமதப்பில் டேங்கில் வரும் கிணற்றுத்தண்ணி வாயில் வைக்க விளங்காது. அதிகாலையிலேயெ நாங்கள் இருந்த கே.கே.நகர் பகுதி கலகலப்பாக இருக்கும். அம்மா இரண்டாவது மாடியிலிருந்து கிணற்றில் இறைப்பது மாதிரி வாளியை மேலே இழுப்பார். நானும் அப்பாவும் அடிபம்ப்பில் அல்லாடிக்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அது எரிச்சலாக வரும்.(படத்தில் வருவது மாதிரி மத்த மாமிகளையெல்லாம் சைட் அடிக்கல்லாம் முடியாது எல்லார் வீட்டிலும் ஆம்பளைகள் தான் வருவார்கள்). ஆனால் இப்படி காலை 4 மணிக்கு எழுந்து உண்மையாக தண்ணியடித்து விட்டு படுத்தால் ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...அதன் சுகமே தனி.
அதே மாதிரி தான் பால் வாங்குவதும். பாக்கட் பாலைவிட க்யூவில் நின்று வாங்கிவரும் பால் நல்ல கொழுப்பாக இருப்பதாக அம்மாவும் அப்பாவும் அடம் பிடிப்பார்கள். அப்பா தான் பெரும்பாலும் வாங்கி வருவார் ஆனால் பலமுறை நானும் போகவேண்டிவரும். பால் பூத் இன்ட்ரெஸ்ட்ங்காக இருக்கும். ஏகப்பட்ட அனுபவங்கள், வித விதமான மனிதர்கள், விதவிதமான சண்டைகள். முதலில் எல்லா பையன்கள் மாதிரி நானும் சலித்துக்கொண்டு தான் போனேன். சர்வைவல் பார் த பிட்டஸ்ட் தத்துவதை கண்கூடாகப் பார்கலாம். பண்டிகை காலங்களில் பால் லாரி வராது, தேவுடு காக்கவேண்டும். வ்ந்தாலும் அரை லோடு தான் வரும். அரைத்தூக்கத்தில் க்யூவில் இடத்தை விட்டுவிடக் கூடாது. க்யூவில் முன்னாடி நிற்கும் நைட்டி பரதேவதைகள் தெரிந்தவர்கள்,மச்சான் மதினி தூக்கையெல்லாம் வாங்கி சேவை புரிவார்கள். அப்போது சவுண்டு விடுபவர்களோடு சேர்ந்து கொண்டால் தான் நமக்கு பால் கிடைக்கும் இல்லாவிட்டால் வெறும் தூக்குச் சட்டி தான். பால் லாரி வந்தவுடன் பூத் பக்கத்தில் வீடு இருக்கும் கனவான்கள் நைசாக உள்ளே புகுந்து விடுவார்கள். இது போக பூத்காரனுக்கு தெரிந்த குடுத்து வைத்த ஆத்மாக்கள்.... இவ்வளவிலும் அடிச்சு பிடிச்சு தில்லாலங்கடி வேலை காட்டி பால் வாங்கி வருவது பெரிய சாதனை தான். எல்லாம் முதல் ஒன்றரை வருடம் மட்டும் தான் அப்புறம் நாங்களும் சென்னை நகர ப்ளாட் சோம்பேறிகளாகி விட்டோம். ஆனால் தண்ணியடிப்பவர்கள், ஐய்யப்பன் கோவில், அம்மன் கோவில், பால் பூத் என்று நாங்கள் வசித்த கே.கே.நகர் காலை நான்கு மணிக்கெல்லாம் அசாத்திய சுறுசுறுப்புடன் இருக்கும்.(இன்னமும் அப்பிடித் தான் என்று நினைக்கிறேன்). அதெல்லாம் ஒரு அனுபவம் தான்.
இந்தப் படம் செல்வராகவனின் சொந்த அனுபவம் என்று ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். (ஹும்ம்ம்ம்ம் சோனியா அகர்வாலை மடக்க கதாநாயகன் படும் பாடு உள்படவா என்று தெரியவில்லை...:P). படதில் எல்லாரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில படங்களில் கதாநாயகி ரெட்டை ஜடை போட்டால் ஸ்கூல் போவார், இல்லாவிட்டால் அம்மாவாகிவிடுவார். அதுமாதிரி இல்லாமல் சோனியா நிஜமான சேட்டு வீட்டுப் பொண்ணு மாதிரி பாத்திரத்திற்கு எதுவாக உள்ளார். கதாநாயகன் முதல் படமாக இருந்தாலும் பட்டைய கிளப்பி இருக்கிறார். கடைசியில் டைரக்டர் மனதை தொட நினைத்து கதாநாயகியைக் கொன்றாலும் எனக்கென்னவோ டச்சிங் டச்சிங் ஆகவே இல்லை. இதைவிட காதல் கொண்டேன் என்னவோ மனதைத் தொட்டது.
Tuesday, November 30, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment