For picture version of this post(split into two parts) Part 1 Part 2
"கோந்தே நோக்கு ஏதோ மணியாடர் தபால் வந்திருக்காம்"
"தபாலா? மணியாடரா? நேக்கா? " க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி மூன்று தரம் கேட்டதில் மாமியே குழம்பி போனாள்.
"ஆமாம் அம்பி உமக்குத் தான்..வாரும்" வாசலில் இருந்து தபால்காரர் உரிமையோடு விளித்தார்.
"என்ன அம்பி பத்திரிகைக்கெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீர் போல" விட்டால் போஸ்டர் அடித்து விடுகிற ரேஞ்சில் தபால்காரர் சவுண்டு குடுத்ததில் பக்கத்தாத்து ராஜாமணி கோவணம் அவுந்தா கூட தெரியாத வேகத்தில் ஓடி வந்தான்.
"இந்தாரும்" என்று 75 ரூபாயும் மணியாடர் குறிப்பையையும் கையில் திணித்து விட்டு, என்னமோ கைக் காசை போட்டுக் குடுத்த தோரணையில் பக்கத்து வீட்டுக்கு பெருமை பேச போய்விட்டார்.
கதை எப்பவோ வெளி வந்தது, லேட்டா பணம் அனுப்புவதற்கு மன்னிக்கச் சொல்லி குறிப்பு இருந்தது.
பின்னாலிருந்து எட்டிப் பார்த்தே படித்துவிட்டான் ராஜாமணி.
"எலேய் ரமேஷு (நானே தான்) பெரிய ஆளாயிட்ட எங்களையும் கவனிச்சுக்கோ " நான் என்னமோ அப்துல்கலாம் மாதிரி மனு குடுத்தான்.
நான் இன்னமும் விளக்கெண்ணை குடித்த மாதிரி 'ஙே'ன்னு முழித்துக் கொண்டிருந்தேன்.
அப்போ புரியவில்லை, சாயங்கலாம் தான் புரிந்தது. தெரு கிரிக்கெட் டீம் நிதிக்கு எல்லாரையும் விட கூட கொஞ்சம் கறந்து விட்டான்.
"எதை எழுதினாலும் சமூக பிரக்ஜையோடு எழுது" மாமா அவர் பங்குக்கு அள்ளி விட்டுக் கொண்டிருந்த பொழுது தெருவில் இருக்கும் சொல்ப பிகருகளில் யாரவது இதை பார்திருக்க மாட்டார்களா என்று கவலை பட்டுக் கொண்டிருந்தேன்.
"ராஜாமணி இதைப் பற்றி நாலு பேரிடம் சொன்னால் உனக்கு 50 பைசா போடுகிறேன்" தெரு பிள்ளயாரிடம் மனமுருக பிரார்த்தித்தேன்.
இருந்தாலும் பிள்ளையாரை நம்பாமல், கல்யாண பத்திரிகை தவிர வேறெந்த பத்திரிகையும் வாங்காத பிக்ர்களின் வீட்டுக்கெல்லாம் போய் "உங்காத்துல இந்த வாரம் இந்த பத்திரிகை வாங்கினேளா?"ன்னு சும்மானாச்சுக்கும் கேட்டேன்.
அதனாலோ என்னமோ ராஜாமணியும் பிள்ளையாரும் கைவிட்டு விட்டார்கள். பண்ணின பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் எல்லாம் பிளாப் ஆகியது.
கொஞ்ச நாளில் மனம் தேறிய போது கண்ணில் பட்டது அந்த பத்திரிகை விளம்பரம். மிகவும் பிரபலமான "சிறுகதை போட்டி". ஏற்கனவே நிறைய கேள்வி பட்டிருக்கேன். சரி முயற்சி பண்ணித்தான் பார்கலாமே மனம் சபலப் பட்டது.
பாரதிராஜா படத்தில் வருகிற பெரிய எழுத்தாளர் மாதிரி ஆத்தங்கரைக்கு போய் பச்சை பசேலென்று இருக்கும் வயலைப் பார்த்துக் கொண்டு எழுதலாமென்று கிளம்பி போனேன். வெறுமென தலையை சொறிந்து கொண்டு பராக்க பார்த்துவிட்டு வெத்து பேப்பரோடு திரும்பி வந்தேன்.
இதெல்லாம் வேலைக்காகாது என்று நாட்டுப்பற்றை கருவாக வைத்துக் கொண்டு பாதி ராத்திரி ஒரு வழியாக எழுதி முடித்தேன்.
கோழி கிறுக்கலை எல்லாம் திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் என்று அக்காவிடம் குரங்குக் கூத்தெல்லாம் ஆடிக் காட்டி பிரதி எழுதி வாங்கி அனுப்பினேன்.
அனுப்பி ஒரு மாதம் ஆனதிலிருந்து தபால்காரரை தொல்லை பண்ண ஆரம்பித்தேன். அதிலிருந்து என்னமோ சல்மான்கானைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் மாதிரி என்னை பார்த்தாலே ஓடி ஒளிய ஆரம்பித்தார்.
மனசுக்கு பிடிச்ச பெண்ணிடம் விளையாட வேண்டிய விளையாட்டையெல்லாம் இந்த பெருசுடன் விளையாட வேண்டி இருக்கேனு நொந்து நூடூல்ஸ் ஆனது தான் மிச்சம்.
சரி அம்புட்டு தான்! புட்டுகிச்சு போலனு கை கழுவின சமயம் அந்த லெட்டர் வந்தது,
"மொத்தம் ஆராயிரத்துக்கும் மேலே பேர் கலந்து கொண்டதால் முடிவு அறிவிப்பதில் தாமதமானது, முதல் மூன்று பரிசுகள் போக, மிச்சம் ஏழு ஆறுதல் பரிசு கதைகளில் உங்கள் கதையும் தேர்வாகி இருக்கிறது. உங்களைப் பற்றிய குறிப்புடன் புகைப்படத்தையும் அனுப்பவும்"
அம்புட்டுத்தான்....சலங்கை ஒலி கமலஹாசன் மாதிரி பிள்ளையார் முன்னாடி "ஜிங் ஜிங்னு" ஆட வேண்டும் போல இருந்தது. ஒரு வேளை ஜெயப்பிரதா பக்கத்தில் இருந்தால் ஆடி இருப்பேனோ என்னவோ.
இருந்த பழைய போட்டோவில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை...ம்ஹும் இந்த முறையும் சந்தர்பத்தை நழுவ விடக் கூடாது.
மாமியிடமிருந்து பத்து ரூபாய் வாங்கி பவுடரெல்லாம் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்.
--- தொடரும்
Wednesday, March 17, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment