Thursday, October 10, 2013

கற்றதும் பெற்றதும் - Dubukku 10.0

இந்தப் பதிவு இந்த வலைத்தளத்தின் பத்தாவது அனிவெர்சரி அன்று பதிவதாய் இருந்தது. ஹீ ஹீ வழக்கம் போல....

2001ம் ஆண்டு  - இங்கிலாந்து வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எழுத்துரு எல்லாம் நிறுவி இடுப்பழகி சிம்ரன் ஆப்பிள் சூஸ் குடிக்கும் போது செகெண்ட் ஹீரோயினை என்ன சொல்லி திட்டினார் என்று இணையத்தில் கிசு கிசு படித்த காலம். அப்போது தமிழ் யுனிகோட் வரவில்லை (வந்திருந்தாலும் என்னைப் போன்ற பாமரர்களிடையே பிரபலமடையாத ஒரு காலம்). எங்கிருந்தோ ஒரு தமிழ் நிரலி கிடைக்க, நாய் கையில் (அதாவது காலில்) கிடைத்த தேங்காய் மாதிரி உருட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே பிரவாகமாய் வருவதையெல்லாம் எழுதி யாருக்காவது எப்படியாவது காட்டவேண்டும் என்று ஒரு உத்வேகம்.  "எனது பக்கத்து வீட்டுக்காரர் பல்லே தேய்க்காமல் டெய்லி வந்து குட்மார்னிங் சொல்கிறார் அவரை திருத்த நீங்கள் தான் ஒரு வழி காட்டவேண்டும்" என்று அன்புள்ள அல்லிக்கு எழுதி போடுவது வரை யோசித்திருக்கிறேன்.

2003ல் நெருங்கிய நண்பன் சக்ரா ஆங்கிலத்தில் ப்ளாக் என்ற உலகத்தை அறிமுகப் படுத்தினான். அவனுடைய பதிவுகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது தான் நாம் ஏன் அன்புள்ள அல்லியை இங்கே அரங்கேற்றம் செய்யக் கூடாது என்று பல்பு எரிந்தது. அப்போதெல்லாம் என்ன பதிவுகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள திரட்டிகள் கிடையாது. முகவரி தெரிந்தால் மட்டுமே ஒருவர் பதிவிற்குப் போக முடியும். அதனால் ஆபிஸில் முக்கிய வேலையே தெரிந்தவர் பதிவுகளுக்குப் போய் அங்கே கமெண்டியிருக்கும் மற்றவர்களின் (முக்கியமாய் பெண் பதிவர்) பதிவுக்குப் போய் "Excellent post, very nice, keep it up" என்று கமெண்ட் போட்டுவிட்டு வருவது தான். மூன்று நான்கு தரம் இவ்வாறு செய்தால் (பெண்களுக்குப் பத்து தரம்) அவர்களும் நம் பதிவில் வந்து "உங்க ப்ளாக் தீமே நன்றாக இல்லை கண்ணை உறுத்துகிறது please change it" என்று விளக்கேற்றி வைத்து விட்டுப் போவார்கள். அப்போது பதிவு பெயர்களெல்லாம் ஆங்கிலத்தில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டுவார்கள். ப்ளாக் பெயரைப் பார்த்தாலே பத்து ஆஸ்கர் வாங்கிய படம் மாதிரி கேராக இருக்கும், அத்தோடு ஆங்கிலப் படங்கள் மாதிரி "The whole world is a bathroom" என்று ஒரு ஒன் லைன் டேக் வேறு உண்டு. ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் இப்படித் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு தமிழில் தான் எழுத வரும் என்று நன்றாகத் தெரியுமாகையால் தமிழ்ப் பெயராகவே வைக்கலாம் என்று எண்ணம். சங்கத் தமிழில் லொடுக்குப் பாண்டி என்று வைக்கலாமா இல்லை டுபுக்குன்னு வைக்கலாமா என்று இங்கி பிங்கி போட்டு டுபுக்கு என்ற பெயரே அழகாக இருக்கிறது என்று ஆரம்பித்துவிட்டேன்.  வைகறையில் வைதேகி, புல்வெளியும் பனித்துளியும் என்று கவித்துவமான பெயர்களுக்கிடையே "What is this name Dubukku ya very funny " என்று பெண்கள் கேட்கவும் "Planning makes Perfect" அப்பாடா பட்ட கஷடம் வீண்போகவில்லை என்று எனக்கு திருப்தியாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து "யோவ் அது ஒரு கெட்ட வார்த்தைய்யா உடனே மாத்து" என்று அன்பாய் எச்சரிப்பார்கள். போங்கண்ணே நான் லத்தீன் மொழியில் உள்ள சாமி பெயர் டுபுக்குல்லா வச்சிருக்கேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ் யுனிகோடு இல்லாததால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பதிவேற்ற ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே "There is no use of playing violin at the back of the buffalo"ன்னு புரிந்தது. நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும். முதலில் இரண்டு ஆம்பிளைப் பசங்க வந்து கட்டம் கட்டமாய் தெரியுது என்றார்கள். வீட்ல யாரும் இல்ல ரெண்டு வீடு போய்ட்டு வாங்கப்பான்னு அனுப்பிவிட்டேன். அப்புறம் இரண்டு பெண்கள் வந்து "ஹே நத்திங் விசிபிள் யா ஒன்லி பாக்சஸ்" என்றார்கள். ஆஹா கோவில்ல கச்சேரி சாமிக்கா வாசிக்கிறோம், இது பெரிய பிரச்சனையாச்சே என்று ரூம் போட்டு யோசித்து பதிவை பிக்கசர் வடிவிலும் ஏற்றி வர ஆரம்பித்தேன். பெண்களும் LOLன்னு ஆதரவளிக்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.

ப்ளாகரில் ஆரம்பத்தில் கமெண்ட் வசதி கிடையாது. ரொம்ப நாள் கழித்து கூகிள் வாங்கிய பிறகு தான் அதெல்லாம் வந்தது. ஆரம்பகாலத்தில் backblog  போன்ற வேறு plugins தான் பின்னூட்டத்திற்கு உபயோகப் படுத்த வேண்டும். அவர்களும் "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க,  "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.

- தொடரும்

Tuesday, October 01, 2013

அம்மாவாசை

நிறைய நாட்கள் இங்கே எழுதவில்லை. இருந்த போதும் இங்கே வந்து பார்த்து நினைவூட்டி,  மிரட்டிய உங்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றி, இதயப் பூர்வமாய் மன்னிப்பும் கோருகிறேன். வராததற்கு காரணங்கள் நிறைய (சொல்லமுடிபவை கொஞ்சம் :) ) இந்த மாதிரியான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பது நின்று போன புல்டோசரை தள்ளி ஸ்டார்ட் செய்வது மாதிரி. தள்ள ஆரம்பித்திருக்கிறேன் பார்ப்போம் :)

போன மாதம் இந்தியா பயணம் இனிதே முடிந்து திரும்பினோம். சில முக்கியமான காரணங்களுக்காக இந்தியா பயணம் என்பதால் சென்னையில் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது பெரிய வருத்தம். சென்னையில் இறங்கிய கையோடு அப்துல்லா அண்ணாச்சியை ஃபோனில் பிடித்த போது நாமக்கல்லில் பிசியாய் இருந்த்தார். சரி ஊருக்குப் போய்விட்டு திரும்ப வரும் போது எல்லாரையும் சந்திக்கலாம் என்று நினைத்தால் திரும்ப வந்த நான்கு நாட்களில் அங்கே இங்கே என்று அலைந்தே போய்விட்டது. இதில் ஜல்பு மற்றும் உடல் நலக் குறைவு வேறு. அப்துல்லா அண்ணாச்சி,அனன்யா, நர்மதா, தீக்‌ஷண்யா, சங்கரலிங்கம் அண்ணாச்சி மற்றும் நான் சந்திக்க நினைத்திருந்த/வாக்குறுதியளித்திருந்த ஏனையோரும் கோவிக்காதீர்கள் ப்ளீஸ் மன்னித்தருளவும்.

ஜெட் ஏர்வேஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல் ஸ்கர்டில் 2004 வரை வலம் வந்த பைங்கிளிகளெல்லாம் தற்போது ஆவாரா ஹூன் ராஜ் கபூர் மாதிரி தொள தொளாவென்று கால்சராய் அணிந்து சும்மா கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டு டீ வேணுமா, சூஸ் வேணுமா என்று கேட்கிறார்கள். "ஹூ இஸ் தேட் டிஸ்டர்பர்ன்ஸ்" என்று தூக்கம் தான் வருகிறது. வாஸ்துபடி என்னை 25டி சீட்டிற்குப் பக்கத்தில் உட்காரச் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டுப் பார்த்தேன். டாஸ்மார்க்கில் வேலைப் பார்ப்பது மாதிரி சாரி சார், புல் என்று சொல்லிவிட்டார்கள். அப்புறம் ஒரு போர்வையாவது குடுங்கம்மா என்று கேட்டு வாங்கிக் கொண்டு தூங்கியேவிட்டேன்.

நண்பர்களை சந்திக்க முடியாமல் போன தலையாய வருத்தத்திற்கு பிறகு அடுத்து வருவது  இப்போ வாங்கலாம் அப்போ வாங்கலாம் என்று எனது லிஸ்டில் ஒரு புத்தகம் கூட வாங்காமல் மகள்கள் 28 - 0 என்ற ஸ்கோரில் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருப்பது. மகள் வாங்கிய "The Alchemist"- ஐ கடன் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மும்பையில் இண்டர்நேஷனல் டெர்மினலலிருந்து டொமஸ்டிக் டெர்மினலுக்கு அழைத்து செல்லும் பேருந்தில் கூட்டம் அதிகமாகி இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருந்த சீட்டில் போலீஸ்காரர் இன்னொரு குழந்தையை உட்காரவைக்க, அது என்.ஆர்.ஐ ஆக்சண்டுடன் இப்படி உட்கார்ந்தா போலிஸ் பிடிக்கமாட்டார்களா என்று அம்மாவைக் கேட்க, அந்த போலிஸ்காரரே இவர்தான்மா என்று அம்மா சொல்லாமல் காட்டிய ரியாக்‌ஷனை இந்த மாதிரி ஒரு பத்திக்கு இழுக்காமல் ராஜேந்திரக்குமார் “ஞே” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்திருப்பார்.

கோலம் போடுவது, பால் பாக்கெட் வாங்குவது, போன்றவற்றிற்கு மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களுக்கு ஒரு தாலி என்று சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள்.

சரவண பவன் வைத்திருக்கும் ஐந்து ரூபாய் விலைகுறைப்பு போர்டு தவிர விலைவாசி எங்கும் குறைந்ததாகக் காணக் கிடைக்கவில்லை. முதல் நாள் குடுத்த ஸ்பெஷல் டீ நன்றாக இருக்கிறதே என்று அடுத்த நாள் குடித்தால் வாயில் வைக்க விளங்கவில்லை.

இந்த முறையும் சென்னையில் வாய்த்த ஆட்டோகாரர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருந்தார்கள். அதுவும் ஒரு ஆட்டோக்காரர் இரவு 10:45 மணிக்கு நான் தங்கமணியுடன் பேசிய உரையாடலை கவனித்து, வாங்க மறந்த மொபைல் சார்ஜருக்காக அவரே ஒரு கடை கண்டுபிடித்து வெயிட்டிங் செய்து ஒற்றை பைசா கூட அதிகம் வாங்க மறுத்த பண்பு மறக்க முடியாதது.

குத்தால துண்டை துப்பட்டா மாதிரி போர்த்திக் கொண்டு அதிகாலையிலும் சந்தி வேளையிலும் உலாத்தும் நைட்டி தேவதைகள் ஊர்ப் பக்கத்தில் இன்னும் மாறவே இல்லை.

மயிலை டேங்க் சரவணபவனில் டி.வி. செலிபிரிடீஸை நிறையக் காணக் கிடைக்கிறது. ஏனோ இந்த முறை இந்தியா ட்ரிப்பில் டேங்க் சரவணபவன் தவிர வேறு எந்த ஹோட்டலிலுமே சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்த முறை திகட்டத் திகட்ட சென்னை பல்லவனில் பயணம் செய்தேன். சென்னையில் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த வேலை நாட்கள் நியாபகம் வந்தது.


வீட்டில் இருக்கும் விஜய் பேஃன் நச்சரித்து தலைவாவை எக்ஸ்ப்ரெஸ் மால் சத்யமில் முதல் நாளே காணும் பாக்கியம் கிடைத்தது. விஜய் ஓப்பனிங் சீனிற்கு விசில் அடிப்பதற்கு பேரம் பேசி நூறு ரூபாய் மகளிடமிருந்து தேறியது. காண்ட்ராக்ட்டில் இல்லாத அமலா பால் ஓப்பனிங் சீனிற்கு காதைப் பிளக்கும் வண்ணம் நான் மட்டுமே விசில் அடித்தது மிகுந்த வருத்தமளித்தது. என்ன மாதிரி ஒரு சமூ....

இனிய தோழி சுபா பிரபாகருக்காக சேம்பர் ஆஃப் காமெர்ஸில் மதுரையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச ஆரம்பித்த மைக் மோகன் யோகம் அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளாகி என்னடா இன்னுமா உன்ன இந்த ஊரு நம்புது என்ற உயரத்திற்குப் போய் நாலாவது வாய்ப்பாக மாறி அடுத்த முறை செய்கிறேன் ப்ளீஸ் என்று வாய்தாவாங்க வேண்டிய லெவலுக்குப் போய்விட்டது.

சுபா குடும்பத்தாரின் விருந்தோம்பல் மறக்கமுடியாதது. அவ்வளவு இனிமையான குடும்பம். ஃபோட்டோவ விட நேர்ல நீங்க ஹீரோ மாதிரி அழகா இருக்கீங்க சார் என்று பிரபாகர் மூன்று முறை தங்கமணி முன்னால் புகழ்ந்தது இந்த ட்ரிப்பின் ஹைலைட். அடடா மதுரையின் மாணிக்கம்ங்க அவர்.
முதன் முறையாய் ஆத்தெண்டிக் ஜிகர்தண்டா சுவைக்கும் பாக்கியம் இவர்களால் கிட்டியது.

ஊரில் குத்தால சீசன் ரம்மியமான தூறலும் காற்றுமாய் களை கட்டியது. ஸ்கூல் நண்பர்களின் மீட் குற்றாலத்தில் நடைபெற்றது. அப்படியே மகள்களுக்கு அருவியைக் காட்டி வரலாம் என்று பார்க்கப் போனால் அருவியைப் பார்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும் போல் அவ்வளவு கூட்டம்.

சென்னையில் கால் டேக்ஸி தரம் குறைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ட்ரைவர்களெல்லாம் ஆட்டோ ட்ரைவர் மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் புக் செய்யும் போது எங்க போறீங்க, யாரப் பார்க்க போறீங்க, என்ன வாங்கிட்டு போறீங்க என்று நோண்டு நோண்டுன்னு நோண்டி விட்டு போக வேண்டிய நேரத்தில் அதிகாலை நாலு மணிக்கு ட்ரைவர் கால் செய்து எங்கய்யா போனும் உனக்கு..? முதல்ல நீ எங்க இருக்க எங்கேர்ந்து போகனும் என்று எரிச்சல் படுகிறார். வருகிற ட்ரைவருக்கு புக் செய்த கஸ்டமர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற அடிப்படைத் தகவல் கூட போகாவிட்டால் அப்புறம் என்ன இதுக்கு புக் பண்ணும் போது வீட்டுப் பக்கத்து லேண்ட் மார்க் முதற்கொண்டு அவ்வளவு கேள்விகள் கேக்கறீங்க...?

மதுரைக்கு இந்தப் பக்கம் மதுரைக்கு அந்தப் பக்கம் என்று எஃப்.எம் ரேடியோவில் போடும் பாட்டுக்களின் ரகமே தனியாக இருக்கிறது. அதுவும் நெல்லை சூரியன் எஃப்.எம்.ல் கிராமிய மணம் மணக்க மணக்க மொட்டை ஆட்சி தான். இரவில் பொதிகை காற்றில் ராசாவின் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டே காரில் பயணித்தது அடா அடா அடா

மயிலாப்பூரில் நிறைய தெருக்களில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த குழி அப்படியே இருக்கிறது. இந்த வருடம் இருந்த ஒரே வித்தியாசம் அதில் யாரோ ஒரு கம்பு நட்டு சாயம் போன உள்பாவாடையை மற்றவர்களில் எச்சரிக்கைக்காக தொங்க விட்டிருக்கிறார்கள்.
மயிலை ஆழ்வார்பேட்டை ட்ராபிக் முழிபிதுங்குகிறது. வள்ளுவர் சிலையிலிருந்து இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னல் வரை மாலை ட்ராஃபிக்கில் கால் டாக்ஸியில் நகரமுடியாமல் அடி அடியாய் எடுத்து வைத்து கடைசியில் சென்றடைந்த இடத்தில் நூற்றைம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா தண்டம் அழுதேன்.


இருந்த இருபத்தைந்து நாட்களுக்குள் ஏதாவது மசோதா போட்டு மாத்தியிருக்கமாட்டார்களா என்ற நப்பாசையில் ப்ளைட் ஏறினால் வரும் போதும் ஜெட் ஏர்வேஸில் ஆவாரா ஹூன் தொள தொளா பேண்ட் தான். ஒரு சூஸு குடுமா என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டு திரும்பவும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டேன். இல்ல இல்ல இல்ல சொக்கா எனக்கில்லை

*********************************

அக்டோபர் மூன்றாம் திகதியுடன் டுபுக்குவிற்கு பத்து வயது பூர்த்தியாகிறது :)) உங்கள் அன்பையும் ஆதரவுவையும் என்றும் நாடும் - உங்கள் டுபுக்கு


Friday, June 14, 2013

சுசி

ஊருக்குப் போனால் அம்மா கையால் சின்ன வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் ஒரு கட்டு கட்டிவிட்டு அடிக்கிற வெய்யிலில் தலைகாணியப் போட்டு சாய்ந்தால் அஹம் பிரம்மாஸ்மி அப்படியே அடானா ராகத்தில் அடைபடும். ஆனால் ரொம்ப நிலைக்காது. நாலு மணி நேரம் இரண்டு நிமிஷமாய் ஓடி சாயங்கால காப்பிக்கு எழுப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அன்றும் அப்படித் தான்.

டேய் எழுந்திருடா...ஊருக்கு வர்றதே கொஞ்ச நாள், அதுல பாதி தூங்கியே கழியறது. எழுந்திருடான்னா...யாரு வந்திருக்கா பாரு....சுசிடா

சுசி முன்னாள் முறைப் பெண் அல்ல, என்னுடய அம்மாவுடைய சித்தி பையன். சின்ன வயதில் மழலையில் சுந்தரத்தை அப்படி சுருக்கி கூப்பிட்டு சிக்குன்னு இருக்கிறது என்று எல்லாரும் அப்படியே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேலை அந்த வேலை என்று பார்த்துவிட்டு இப்போது கொஞ்ச வருடங்களாக ஏதோ க்ளியரிங் அண்ட் பார்வேர்டிங்கில் ப்ரோகரேஜ் பிஸினெஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்ல துடியான மனிதர். மும்பையில் கொஞ்ச நாள் இருந்ததால் ஹிந்தி தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள டிவி ஹிந்தி பட ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பார். இன்னமும் பிரம்மச்சாரி. பாவம் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. கொண்டார் கொடுத்தார் மாதிரி என்னமோ லண்டன் ராயல் வம்சாவளியில் மிகுந்த ஆர்வம் அவருக்கு.

டேய் என்னடா குயினோட புது நாட்டுப்பெண் எப்பிடி இருக்கா. என்னதான் சொல்லு டயானாவோட க்ரேஸ் இல்லை.

ஆமாமா உங்களுக்குத் தான் எவ்வளவு கவலை என்றாலும் விடமாட்டார். சின்னவன் ஹாரிக்கு எப்போ பார்க்கறாளாம் என்று நச்சரிப்பார்.

ஏன் மாமா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. உங்களுக்கே இன்னும் பார்த்து முடியலை ஜாதகத்த வேணா தாங்கோ ராயல் பேமிலில எதாவது வரன் இருக்கான்னு பார்க்கச் சொல்றேன் என்று நக்கலடித்தால் அவரும் சேர்ந்து சிரிப்பார். கல்யாண விஷயத்தில் அவருக்கு சுயபச்சாதபமே கிடையாது. அனுஷ்கா வேண்டாண்டா.. வாட்ட சாட்டமா இருக்கா போட்டோக்கு போஸ் குடுக்கக் கூட என்னால தூக்க முடியாது, அதான் இப்போல்லாம் சில்லுவண்டா வர்றாளே அதுல யாரையும் பாரேன் என்பார். எப்போதாவது தான் தண்ணியடிப்பார் என்றாலும் சின்னச் சின்னதாய் வரும் லிக்கர் சாம்பிள் பாட்டில்கள் சேர்ப்பதில் அலாதியான ஆர்வம். அதிலும் பேன்ஸியாய் இருந்தால் போதும் ரொம்பவே குஷியாகி விடுவார். எல்லாவற்றையும் ஷோகேஸில் தான் வைத்திருக்கார் ஒன்றைக் கூட திறந்து குடித்ததில்லை. சும்மா வைச்சு பூஜை செய்யறதுக்கு எதுக்கு உங்களுக்கு, அதான் இந்த முறை கொண்டு வரவில்லை என்று விளையாடினால் "என்னவோ பண்ணிட்டுப் போறேன் எதுக்கு உனக்கு இந்த நொர்நாட்டியம்?" என்று முகம் வாடி விடும்.

காலேஜ் அட்மிஷன் முதல் லிஸ்டில் என் பெயர் இல்லையென்றதும், காலேஜ் செக்ரட்ரியோட பி.ஏ என் ப்ரெண்டு தான் வா பார்க்கலாம் என்று உரிமையோடு கூட்டிக் கொண்டு போய்விட்டார். ரெண்டாவது லிஸ்டில் என் பெயர் இருக்கு என்று சொல்லியும் ரெண்டாவது லிஸ்ட் மெதுவா வரட்டும், இன்னிக்கு நல்ல நாள் எதுக்கும் இன்னிக்கே பீஸைக் கட்டிவிடுகிறோம் என்று அடம் பிடித்து என்னை சேர்த்துவிட்டு வந்த பிடிவாதம் இப்பவும் டெக்னாலஜி விஷயத்தில் வெளிப்படும். இமெயில் கம்ப்யூட்டரெல்லாம் வேப்பங்காய்.

மேட்டர் ஒன்னுமேயில்லை மாமா, இங்க பாருங்கோ இங்க க்ளிக் பண்ணி இங்க தட்டினா போய்டும்.ஏல்கேஜி பசங்களுக்கு சொல்லித்தராங்க. மூக்கு ஒழுகிண்டு இருக்கிற அரைக்கால் டிக்கெட்லாம் கம்ப்யூட்டர்ல கேம்ஸ் என்னம்மா விளையாடறாங்க தெரியுமா. நீங்க அந்த கால எம்.ஏ வேற, உங்களுக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்றாலும் கம்ப்யுட்டர் பக்கமே வரமாட்டார்.

எனக்கு இமெயில் அடிக்க ஜெராக்ஸ் கடை அனந்தலெக்ஷ்மி இருக்காடா. மேட்டர சொன்னாப் போதும் ரெண்டே நிமிஷத்தில தடதடன்னு தட்டி அனுப்பிடறா. அன்னிக்கு அரைமணிக்குள்ள க்ளையண்ட் அடிச்ச ரிப்ளையயும் கொண்டு வந்து தோ பாருங்கோ சார்ன்னு கைல குடுத்துட்டா.

அகால வேளைல அவசரமா மெயில் அடிக்கனும்ன்னா அனந்தலெக்ஷ்மி வீட்டுக் கதவத் தட்டுவேளா? அவ புருஷன் தட தடன்னு தட்டிட மாட்டானா?

டேய் இந்த இமெயில்லாம் இப்போத் தான், முன்னாடியெல்லாம் எட்டணா போஸ்ட் கார்ட் தான். அடேயப்பா இதுக்கு லேப்டாப்பென்ன, கையாலயே தட்றதுக்கு மெஷினென்ன...கேட்டா ஒரு லட்சம்ங்கிறான், ஒன்றரை லட்சம்ங்கிறான். வாங்கிட்டு ஓரமா உட்கார்ந்து நடிகையப் பார்த்துண்டு இருக்கான்.

இப்பவும் இருக்கே போஸ்ட் கார்ட், யூஸ் பண்ண வேண்டியதுதானே. எதுக்கு ஜெராக்ஸ் கடை அனந்தலெக்ஷ்மி?

போதும்டா வயசுக்கு ஒரு மட்டு மரியாதை கிடையாதா? அவன் உனக்கு மாமா, இன்னமும் என்ன சுசி வேண்டியிருக்கு. சுசி நீ இவன் வாயப் பிடுங்காத, இந்தக் கால பிள்ளைகளுக்கு எல்லாமே தங்களுக்குத் தான் தெரியும்ங்கிற நினைப்பு.... அதான் டீ.வில பளிச்சுன்னு காட்றானே எத்தனை பேர் ஏமாந்திருக்கா. துபாய்லேர்ந்து இமெயில்லயே காதலிச்சு இமெயில்லயே கட்டைல போய், கல்யாணம் பண்ணிக்க வந்தானே...என்னாச்சு எல்லாத்தையும் பிடுங்கிண்டு விட்டா, ஒரே சமயத்துல எட்டு பேர காதலிச்சு ஏமாத்தி இருக்கா...- இமெயில்லயே, போலிஸ் என்ன பண்ணும்? கேட்டா எல்லாமே இமெயில் கீமெயில் தான். விட்டா கம்ப்யூட்டர்ல பிரசவமே பார்ப்பா போல இருக்கு

பார்த்தாளே..ஷங்கரோட படத்துல நண்பன், டீவில போட்டானே, அக்கா எல்லாத்தையும் மறந்துடுவா, சம்சாரி. அதில்லைடா இதெல்லாம் பைசாக்கு பிரோஜனம் இல்லை. நாங்க பார்க்காததா, எவ்வளவு நாளா எக்ஸைஸ்ல லைசன்ஸுக்கு நாயா பேயா அல்லாடறேன், பி.வி.வெங்கடரமணன் ஒரு கையெழுத்து போட்டா போதும் உடனே சாங்கஷன் ஆகிடும். அவரப் பார்க்க முடியறதா? எல்லா பார்மாலிட்டியும் முடிச்சாச்சு. அங்கயும் இமெயில் இருக்கே யார் யூஸ் பண்றா? அனந்தலெக்ஷ்மி அனுபிச்சா...ஆளே இல்லைன்னு திரும்ப வந்துடுத்தாம். நீங்க நேர்ல போங்கோ சார்ன்னுட்டா. போனா அந்த பாரம் தப்பு  இந்த பாரம் கோணல், அவன் அட்டெஸ்ட் பண்ணனும் இவன் கிட்டெஸ்ட் பண்ணனும், ஆபிஸர கவனிக்கணும், ப்யூனுக்கு சலாம் போடணும். உட்கார்ந்து கம்ப்யூட்டர்ல மூனு சீட்டு விளையாடறான். போங்கடான்னு வந்துட்டேன். ப்ரோக்கரேஜ் போறும்பா எனக்கு.

அது அப்படியில்லை சுசி, அந்த ஜெராக்ஸ் சுந்தரி இமெயில் அட்ரெஸ் தப்பா அடிச்சிருப்பா

என்னடா இது சுந்தரி கிந்திரின்னு அசிங்கமா பேசிண்டு, சுசி இந்தப் பேச்சு போதும் நிப்பாட்டுங்கோ. சுசி, நீ செண்ட் பாட்டில வாங்கிக்கோ, ரொம்ப சின்னதா கொண்டு வந்திருக்கான் பெருசா கேட்கப்பிடாதோ இது உன் அக்குளுக்கே காணாதே.

செண்ட் பாட்டிலா...நான் எங்க...ஓ ஆமா ஆமா நான தான் கேட்டேன். ஒரே வெய்யிலா இருக்கே அதான் சின்னதா கேட்டேன். டேய் மாமாக்கு கொண்டுவந்திருக்கியா. எடு பார்போம் இதென்ன ஜேக் டேனியல் செண்டா...

அதற்கப்புறம் சுசியை இமெயிலுக்குள் இழுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. என் முயற்சியில் ஒரு சுயநலம் இருந்தது. ஆனால் மனிதர் சிக்கவே இல்லை, மூன்று மாதங்கள் முன் வரை. அதுவும் ஒரே நாளில்.

மாமா நீங்க நேரா எக்ஸைக்கு போய் கலக்க்ஷன் டிப்பார்ட்மெண்ட்ல சந்திரசேகர்ன்னு ஒருத்தர் இருப்பார் பாருங்கோ. ரெவன்யு இண்டெலிஜன்ஸ்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி தான் மாத்தலாகி வந்திருக்கார் சீனியர் ரேங்க். நான் எல்லாம் பேசியாச்சு. bonafideலாம் எடுத்துண்டு போங்கோ. ட்ரேடிங் ஹிஸ்டரியையும் எடுத்துண்டு போங்கோ மத்ததெல்லாம் அவர் பார்த்துப்பார்.

குறி வைத்து அடித்த காரம் போர்ட்டு மாதிரி விழுந்தது.

டேய் சந்திரசேகர் ரொம்ப தங்கமான மனுஷன்டா என்ன செல்வாக்கு தெரியுமா. மூனே வாரத்துல டக்குன்னு பேப்பர்லாம் மூவ் ஆகறது. உன்னப் பத்தி பெருமையா சொன்னார். ஆன்லைன்ல தான் பழக்கமாமே. பார்த்ததே இல்லையாமே. ஊரப் பத்திலாம் எழுதறன்னு சொன்னார். நீ சொல்லவே இல்லியே. என்னமோ ஒருத்தருக்கொருத்தர் கமெண்ட்லாம் பண்ணிப்பேள் ஓட்டு போடுவேள்ன்லாம் சொன்னார், எனக்குப் புரியலை. ஆனா கத்துக்கனும். எல்லாம் சொல்லித் தா. ரொம்ப தாங்க்ஸ்டா.

சே சே என்ன மாமா இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்லிண்டு. எவ்வளவு செஞ்சிருக்கேள் எனக்கு

கெட்டிக்காரன் டா. நிமிஷமா சாதிச்சுட்டியே. இந்த ஊருக்கு மாத்தலாகி வர்றேன்னு ஏதோ போட்டாராம் நீ தான் ஆன்லைன்லயே அவ்வளவு உதவியும் செஞ்சியாம். இப்படித் தான் இருக்கணும். அப்புறம் அடுத்த தரம் நீ வரும் போது ஒரு நல்ல லேப்டாப் ஒன்னு வாங்கிண்டு வா. அப்பிடியே நல்ல இமெயிலும் ஒன்னு செட்டப் பண்ணனும், என்ன செலவானாலும் பரவாயில்ல

".............."

என் முயற்சியில் ஒரு சுயநலம் இருந்தது. எனக்கும் கூடுதலா ஒரு லைக்கும் கமெண்ட்டும், வோட்டும் தேறும் :)

Sunday, June 02, 2013

சோஷியல் நெட்வொர்க்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வைபவம் எப்போதாவது நடக்கும். அதிலும் வீட்டில் யாருமே இல்லாத போது வேலை பார்க்கும் யோகம் அத்திப் பூத்த மாதிரி தான் வரும். பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு பெண்டாட்டியை ஷாப்பிங்க்கு அனுப்பிவிட்டு இரைச்சல் இல்லாத நிசப்தத்தில் ஒருமுகமாய் வேலை பார்க்கும் போது productivity அமோகமாய் இருக்கும் என்று மேல் நாட்டு சைண்டீஸ்ட் கூறியிருக்கிறார். அதை கருத்தில் வைத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேஸ்புக்கைத் திறந்தால், productivityக்கு தீனி போடும் வகையில் அப்டேட்ஸ் ஏகத்துக்கு முழித்துக் கொண்டிருக்கும். யாஹூ சேட், 123இண்டியா என்று எனக்குத் தெரிந்த முதலாம் சோஷியல் சங்கம் வளர்த்த தேசீ நெட்வொர்க்கிங் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தில் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று மூன்று முக்கிய தொகுதிகளில் மட்டுமே போட்டி போடுகிறது. . இதற்கப்புறம் லிஸ்டில் ஆர்குட், ப்ளாகர் என்று பலவும் வந்தாலும் அதில் மட்டுமே புழங்குபவர்கள் எல்லாம் "அந்தக் காலத்துல நாங்களெல்லாம்" என்று தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

இந்த மூன்றில் கூகிள் பிள்ஸுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு ஓடியே வந்துவிட்டேன். சை ஒரே ஆம்பிளப் பசங்க கூட்டம். அத்தோடு இங்கே போனாலே என்னாவோ மதுரை பக்கத்து கிராமத்தில் அருவாளும் கையுமா கிடா மீசைகள் கலந்து கொள்ளும் பங்காளி வீட்டு விசேஷம் மாதிரி திகிலாகவே இருக்கிறது. எந்தப் பக்கம் போனாலும் ஜீப்பில் கூட்டமாய் திரிகிறார்கள். "நீ நல்லா என்ன வெட்டுண்ணே எனக்கு இன்னும் ரத்தமே வரலை பாரு, எலேய் மொக்கராசு அண்ணன் வெட்டுறாருடா வந்து தலையக் காமி" என்று சிரித்துக் கொண்டே செளஜன்யமாய் வெட்டிக் கொள்ளுகிறார்கள். ரத்த பூமியா இல்லை நான் தான் தக்காளி சட்னியைப் பார்த்து பயப்புடுகிறேனா என்று தெரியவில்லை. காது குத்துக்கு வாங்கண்ணே-ன்னு தெனாவட்டாய் என்னையும் உள்ளே இழுத்து போடப் பார்த்தாரகள். "எலேய் தங்கராசு லைட்ட அமர்த்துடா, இன்னிக்கு ஒரு பய தப்பிச்சி போயிரக்கூடாது" என்று பலமாய் சவுண்டுவிட்டு லைட்டை அணைத்ததும் நைஸா ஓடி வந்துவிட்டேன். இப்பவும் என்னை யாராவது அவர்கள் வட்டத்தில் சேர்க்கும் போது முன்னாடி போய்கிட்டே இருங்கண்ணே, பால் கார்ட குடுத்துட்டு பின்னாடி வந்துகிட்டே இருக்கேன்னு நழுவிக் கொண்டிருக்கிறேன். எப்போதாவது ரொம்ப போர் அடிக்கும் போது மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு சத்தமே போடாமல் கோட்டுக்கு அந்தப்புறம் நின்று பார்த்துவிட்டு வருகிறேன்.

ட்விட்டர் கொஞ்சம் தேவலாம். திட்டினால் கூட 140 எழுத்துக்குள் திட்டவேண்டும் என்பதால் யாரும் ரொம்ப மெனக்கெடுவதில்லை. ஆனால் பெரும்பாலும் ட்விட்டர் மேட்டர் இல்லாத மலையாளப் படம் பார்பது மாதிரியே இருக்கிறது. எதைப் பற்றி ட்ரெண்டுகிறார்கள் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. திடீரென்று 1930ஜோக்குகள் என்று போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு கனவான் இதைப் பாருங்கன்னு சுருக்கெழுத்தில் இருக்கும் ஒரு லிங்க் அனுப்புகிறார். க்ளிக்கினால் ஏதோ சப்பான் எழுத்தில் எதையோ பற்றி இருக்கு. இதை எதுக்கு நமக்கு அனுபினாங்கன்னு யோசித்துக் கொண்டே திரும்ப ட்விட்டருக்கு வந்தால் ராதா ராதா என்று ஏதோ ட்ரெண்டிக் கொண்டிருக்கிறார்கள். யெப்பா யாருப்பா ராதா எந்த ராதா, எனக்கு ஏகப்பட்ட ராதாக்களைத் தெரியும்ன்னு தலையை சொறிந்து கொண்டே "who is ராதா"ன்னு டிவிட்டினால் ஏதோ ஒரு வெள்ளைக்கார பெண்மணி வந்து அந்த டிவிட்ட பேவரிட் செய்துவிட்டுப் போகிறது. பெரும்பாலும் குழப்பமான ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த மாதிரி தான் இருக்கிறது. நானும் "டேய் அப்படியே லெப்ட்ல வா வா ஒடி ஒடி, வந்திகினே இரு"ன்னு சவுண்டி விட்டு எதாவது தேறுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது தவிர வாழ்க்கை, தோல்வி, காதல் பற்றி தத்துவங்கள் ஒரு நாளைக்கு 500 ட்வீட்டுக்கு குறையாமல் டைம்லைனில் குப்பை சேருகிறது.

இந்த பேஸ்புக் இருக்கே இருக்கே பேஸ்புக் இது தான் நம்ம பேட்டை.  சமந்தா போட்டோ போட்டால் டாண்ன்னு வந்து முகப்பில் நிற்கிறது. பல்வேறு காண்பதற்கு அரிய வீடியோக்கள், தகவல்கள் கிடைக்கின்றன. நம்மாட்கள் நிறைய பேர் ப்ளாக் மாதிரி அங்கேயே எழுதி நிறைய கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பேஸ்புக்கும் மகா சத்ரு. முதலில் எல்லாம் "உயரமாய் இருக்கும் இடத்தில் உட்காராதே, கீழே பார்த்தால் கழுத்து வலிக்கும்" என்பது மாதிரி ஏதாவது ஒரு ரெண்டு வரி போதனை விவேகானந்தர் / நாராயணமூர்த்தி / அப்துல் கலாம் / ஜென் குரு  இதில் யாராவது ஒரு பெயரைப் போட்டு, எதாவது ஒரு படத்தோடு வந்து கொண்டிருந்தது. அப்புறம் "ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சின்னப் பையன் இருந்தான் அவன் அப்பா ஆபீஸ் போகும் போது பல்பம் கேட்டான்..." என்று ஒப்பனிங் சீனை ஆரம்பித்து கடைசியில் பொண்டாட்டி துடைப்பம் கேட்டா உடனே வாங்கிக் கொடுங்க என்று நெஞ்சை நக்கும் கதையாய் முடியும். அப்புறம் வெங்கடாஜலபதி போட்டோவோ சாய்பாபா போட்டோவோ அடுத்த அரை நிமிஷத்தில் ஷேர் செய்யச் சொல்லி ஆத்தீக சமாஜ அன்பர்கள் ஆரம்பித்தார்கள். இதற்கு அடுத்த படியாக பேஸ்புக் டாக்டர்ஸ், தனியா இருக்கும் போது உச்சா வந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் போன்ற மெடிகல் இன்பர்மேஸன் கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் காக்கா வலிப்பு, ஹார்ட் அட்டாக் என்று எல்லா டீட்டெயில்ஸும் வந்து பேஸ்புக்கில் வழியே படித்து எங்க ஊரில் ரெண்டு பேர்கள் டாக்டர் ஆகியிருக்கிறார்கள். இதிலெல்லாம் சேதாரம் ரொம்ப இல்லையாதலால் பிரச்சினையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதுக்கப்புறம் வைச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. பரோட்டா சாப்டாதீங்க மைதா மாவு உடம்புக்கு நல்லதில்லை சாப்டீங்க செத்தே போவீங்க என்று அடி மடியில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ராத்திரி கனவில் "நான் தான் முகேஷ்....ஒரு நாளைக்கு பத்து பரோட்டா தின்பேன்" போன்ற காட்சிகளெல்லாம் வேறு வர ஆரம்பித்திருக்கிறது. சாப்பிட்டவுடன் டீ குடித்தால் இரும்புச் சத்து குறைந்து விடும்ன்னு பேஸ்புக்கில் படித்துவிட்டு தங்கமணி இப்போதெல்லாம் டீயே கண்ணில் காட்ட மறுக்கிறார். அதுல இது இருக்காம் இதுல அது இருக்காம்ன்னு சோத்துல கைவைக்கிற தகவல்கள் "Ignorance is bliss" தத்துவத்தை நாடச் சொல்லுகிறது. இப்படியே போனால் தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் இருக்கிறது அந்த ஹைட்ரஜனை வைத்து பாமே தயாரிக்கிறார்கள் என்று அதையும் வாயில் வைக்க விளங்காது செய்துவிடுவார்கள் போல.