Thursday, September 08, 2016

நாயகன்

இரவு ஒன்றரை மணி. ஆன்லைனில் ஓசோனைப் பற்றி ஓஷோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று நோண்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று இங்கே இங்கிலாந்தில் இருக்கும் தோழியிடமிருந்து வாட்ஸப்பில் ”ஆர் யூ தேர்” என்று பிங் வந்தது.  இரவு பத்து மணிக்குத் தான் அவரிம் மாட்லாடியிருந்தேன்.  ராத்திரி ஒரு மணிக்கு ஆன்லைனில் யோக்கியனுக்கு என்ன வேலை என்று நம்பளைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாய் நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். (நல்லவனுக்கு நாளெல்லாம் சோதனை). இப்பத் தான் தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன், டைம் என்னன்னு மொபைலை பார்க்கலாம்னு ஆன் பண்ணினா ஹய்யைய்யோ நீங்க என்று அளவளாவ ஆரம்பித்தேன்.

நாளைக்கு எங்கயும் கமிட் ஆகாமல் ரெடியாய் இருங்கள் ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி என்று சுருக்கமாய் முடித்துக்கொண்டார். அந்த காலக் கட்டத்தில் வேலை மாறும் படலத்தில் இருந்ததால் காலையில் மகள்களுக்கு ரொட்டியில் வெண்ணெய்யையும்,  மிச்ச நேரங்களில் வீட்டில் பெஞ்ச்சையும் தேய்த்துக் கொண்டிருந்தேன். எதாவது க்ளு கொடுக்கலாமே க்ரோர்பதிலேயே மூனு ஆப்ஷன் தர்றாங்க என்றது  “உங்காளுங்க” என்று  ஏகத்துக்கு க்ளூ கொடுத்தார்.  இருக்கறவனுக்கு ஒரு ஆள் நமக்கு ஊரெல்லாம் என்று நினைப்பு  (நோட் த பாயிண்ட் நினைப்பு நினைப்பு) . வேதிகாவா இருக்குமோ, இல்லை நயந்தாரா அடிக்கடி லண்டனுக்கு வருகிறாரே  இல்லை சமந்தாவா என்று ஏகத்துக்கு குழப்பம்.  எதாய் இருந்தாலும் காலையில் தான் கன்ஃப்ர்ம் ஆகும் என்று கறாராய் சொல்லிவிட்டார்.  அவ்ளோ தான் ஓஷோவையும் ஓசோனையும் ஓரங்கட்டிவிட்டு யாரெல்லாம் லண்டனுக்கு வந்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஏழு மணிக்கு திரும்ப கால் வந்தது. சொக்கா சொக்கா சொக்கா என்று பதற ஆரம்பித்துவிட்டேன். ஏங்க அவரு என் ஆளாங்க..... தலைங்க என்னோட தலை என்று தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதுவும் நாங்க செல்லவேண்டிய வேலையும் அவ்வளவு சோக்கானது. சிங்கத்தையே..படம் பிடிக்க வேண்டிய பொன்னான வாய்ப்பு. (அவரை டைரக்ட் செய்ய என்பதெல்லம் ரொம்ப ரொம்ப ஓவரான வார்த்தை). எங்கே என்ன எதற்கென்ற விபரங்கள் இங்கே தர முடியாத நிலையில் இருக்கிறேன் - தோழிக்கு வாக்கு கொடுத்திருக்றேன் எனபதால் அந்த விபரங்கள் பதிய முடியவில்லை. ப்ளீஸ் மன்னித்து விடுங்கள் ஆனால் அது சினிமாவல்ல...ஒரு வாழ்த்து அவ்வளவு தான் அந்த காணொளி எல்லாம் ஊடங்களில் எப்பவோ வெளிவந்துவிட்டது அவ்ளோ தான். (இது நடந்து கொஞ்ச காலங்கள் ஆயிற்று)

பதினோரு மணிக்கு அங்கே இருக்கிற மாதிரி வந்துவிடுங்கள் என்று இடத்தைச் சொல்ல பத்து மணிக்கே ஏரியாவிற்கு போய்விட்டென். பெரிய ஹோட்டல் என்பதால் லாபியில் மீட் பண்ணுவதாய் ப்ளான். முன்னாடியே  போய் லாபியில் உட்காருவதற்கு பதில் சும்மா பக்கத்தில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். பத்தரை மணிக்கு தோழியிடமிருந்து செய்தி. எங்கிருக்கிறீர்கள் சார் அல்ரெடி வந்தாச்சு இங்கே தனியாய் இருக்கிறார் என்று. பின்னங்கால் தலையைத் தாண்டி மேல் வயிற்றில் வந்து படுமளவிற்கு ஓட்டம். மூச்சிறைக்க லாபிக்கு வந்தால் அமைதியாய் உட்கார்ந்திருக்கிறார் தலைவர். பக்கத்தில் போக எழுந்து கொண்டார். குணா கமல் கோயில் சீன் மாதிரி அவரையே  பரவசமாய் ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி ரொம்ப மரியாதையாய் ‘சார் இவர் உங்களோடு பெரிய டை ஹார்ட் ஃபேன்...அது இது’ என்று என்னை கமலுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவரும் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  “எப்படி இருக்கிறீர்கள்” என்று பாந்தமாய் கேட்கிறார். பதில் சொல்லத் தோன்றவில்லை. பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை...மூச்சிறைப்பும் தான். “கேன் ஐ ஹக் யூ” என்று கேட்கிறேன். பதிலுக்கெல்லாம் காதிருக்கவில்லை. அவர் கை லேசாக திறந்ததும் அவரை அணைத்துக் கொள்கிறேன். முப்பது விநாடிகள் நீண்ட அணைப்பு. முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.  வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று எதிர் சோஃபாவை காண்பிக்கிறார். எதிர் சோபா தள்ளியிருந்தது. அங்க வேண்டாம் ரொம்ப தள்ளியிருக்கு நான் இப்படியே இங்க உங்க சோபா கைப்பிடியில் இன்பார்மலாய் உட்கார்ந்து கொள்கிறேனே என்கிறேன். சிரித்துக் கொள்கிறார். கைப்பிடி வசதியாய் இல்லை ஒரு காலை மடித்து காலேஜில் அரட்டை அடிப்பது போல் அப்படியே முட்டியை சோபா பக்கத்தில் வைத்து தரையில் ரெண்டுங்கெட்டானாய் முட்டி போட்டு உட்கார்ந்து கொள்கிறேன். சாரி ஏதோ கேட்டீங்க காதுல விழலை என்று திரும்ப கேட்டு பதில் சொல்கிறேன். உங்களைப் பார்த்தா சார்ன்னுலாம் சொல்லக்கூடாது நீங்க எனக்கு கமல் அதுனால கமல்ன்னு கூப்பிடம்ன்னு இருதேன் ...இப்போ முடியலை என்கிறேன். நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். தோழி மேலும் என்னுடைய கமல் பைத்தியத்தைப் பற்றி சொல்கிறார்.  தோழியைப் பார்த்து உங்களுக்கு கோயில் ஒன்னு கட்டி அடுத்த ஆடியில் கும்பாபிஷேகம் என்பது போல் நன்றியோடு பார்க்கிறேன்.  கேமிரா கொண்டுவரும் நண்பர் வழியில் ட்ராபிக்கால் தாமதமாகிறது என்ற செய்தி வருகிறது. ட்ராபிக்குக்கும் பக்கத்திலேயே ஒரு கோயில் கட்டவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஹய்யோ கமலைக் காக்க வைக்க முடியாதே என்று தோழி பதறுகிறார்.  சார் எங்களுக்கு இப்போ ஒரு மணி நேரம் முன்னால் தான் விஷயமே தெரியும் தவறாக நினையாதீர்கள் நண்பர் தள்ளியிருந்து வருகிறார் என்கிறேன்.  அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லீங்க எனக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கு அதுக்குள்ள முடிச்சிட்டா போதும், டோண்ட் வொர்ரி  ரிலாக்ஸ்என்கிறார். நண்பருக்கு ஃபோன் போட்டு ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாய்யா (நான் பேசிக்கொண்டிருக்கிறேன்) என்று சொல்லலாமா என்று குறுக்கு புத்தி போகிறது. தோழி டக்கென்று இவருடைய நாற்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டமே உஙக் தீம் தான் என்று கரெக்ட்டாய் எடுத்துக் கொடுக்கிறார். ஆஹா தெய்வமே குல தெய்வமே என்று அவரைப் பார்க்கிறேன். அட அப்படியா என்கிறார் கமல். கொஞ்சம் புரியவில்லை அவருக்கு. அந்த பார்ட்டிக்கு கமல் எனபது தான் தீம். நண்பர்கள் கமலின் வெவ்வேறு பட கெட்டப்பில் தனியாகவோ ஜோடியாகவோ வந்திருந்தார்கள். ஆளவந்தான் கமல்,  சண்டியர் கமல், அவ்வை சண்முகி கமல் என்று பல பேர் மெனெக்கட்டு தீவிர கெட்டப்பில் வந்து கலக்கியிருந்தார்கள். பேஸ்புக்கில் ஆல்பம் இருந்தது. இங்க பாருங்க என்று டக்கென்று பேஸ்புக் ஆல்பத்தை எடுத்து காட்டுகிறார் தோழி. கமல் புன்னகையுடன் பார்க்கிறார். அட இவ்வளவு மெனக்கெட்டு தீவிரமா வந்திருக்காங்க என்று ஆச்சரியப் படுகிறார். எனது ப்ரொபைல் பிக்ச்சர் வேறு சலங்கை ஒலி இன்விடேஷன் சீன் கெட்டப்பில் நானும் தங்கமணியும் எடுத்த ஒரு படம். அதையும் க்ளிக் செய்து பார்க்கிறார். கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் இது எது மாதிரி என்று தெரிகிறதா என்று கேட்கிறேன். கொஞ்சம் பலமாய் புன்னகைத்து தலையாட்டுகிறார். நினைத்துக் கூட பார்க்கவில்லை அந்த பார்ட்டி படங்களை எல்லாம் கமல் பார்ப்பார் நான் அவருக்கு பக்கத்திலிருந்து காண்பிப்பேன் என்று. தோழியும் என் மற்ற நண்பரும் (அவர் கணவர்)  மற்ற் வேலைகளை பார்க்க் நகருகிறார்கள். கமலுக்கும் எனக்குமான ஒன் டு ஒன் அரட்டை ஆரம்பிக்கிறது. சொக்கா சொக்கா....அத்தனையும் எனக்கேவா...

முப்பத்தைந்து நிமிடங்கள் ஓடியதே தெரியவில்லை. அரசியல், சினிமா, சக மனிதம் என்று பேச்சு பலவற்றைத் தொட்டது. மனிதத்தில் நிறைய உண்ர்ச்சி வசப்பட்டார்.  உங்க பாதிப்புல நமக்கு நாமே திட்டத்துல் என்னை ’உன்னால் முடியும் தம்பி கமல்’ என்று தான் சொல்லிக்கொள்வேன் என்று நைசா சொருகிவிட்டேன். உணர்ச்சி வசப் படுவதை நிப்பாடி விட்டார். ஆன்லைன் உலகத்தைப் பற்றி சொன்னேன். ப்ளாக் உலகம் பற்றியும் தற்போது ஆன்லைன் உலகில் நடக்கும் பல நல்ல விஷயங்கள் பற்றியும் சொன்னேன்.  சினிமா மட்டுமே குறைவாகப் பேசப்பட்டது.  எங்கேயும் அவரின் கம்ஃபோர்ட் சோன் தாண்டிப் பேசக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். ஆனால் அவர் வெளிப்படையாகப் பேசினார். ஆன்லைன் உலகில் சாதி அரசியலை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்றார். பதில் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டேன். தாமதமான நண்பர் வந்து சேர்ந்தார். இவ்ளோ அவசரமா சித்த மெதுவா வரப்பிடாதா சித்தப்பு என்று அவரைப் பார்க்கிறேன். கேமிரா செட் செய்து லைட்டிங் பார்த்து சவுண்ட் செக் செய்து அடா அடா அடா...எங்களின் இந்த ஆர்வம் பற்றியும் எங்கள் சோத்துக் கடமை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். சார் லண்டன் ஃபிலிம் அக்காடமியில்..என்று செல்ஃப் டப்பாவையும் சேர்த்துக் கொண்டேன். அந்தப் பல்கலைக் கழகம் அமைதியாகக் கேட்டுக் கொண்டது. கேமிராவில் சில டிப்ஸ் கொடுத்தார். தள்ளி சென்று ஒரு நிமிடம் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். வசனத்தை ப்ரிப்பேர் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். திரும்ப வந்து இங்க நின்னா சரியாக இருக்குமா  என்று கேட்டுக்கொண்டது நிறை குடம்,  அந்த அந்த அந்த ஒரு நிமிடம் வந்தது. வாழ்வின் பொன்னான நேரம் ஆக்‌ஷன் என்று குரல் கொடுக்க  - பேச்சுக்கு சொல்லவில்லை ...சிங்கம்ன்னா சிங்கம் அப்படியே வேறொரு காட்சி. குரல் அவ்வளவு தெளிவு. பே என்று பேஸ்தடித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கேமிராவில் ஹெட் ரூம் கொஞ்சம் பெட்டராய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வசனத்தின் நடுவில் சிறிது முன்னால் வந்து விட்டார். முடிந்து தான் தெரிந்தது. அவரே ஹெட்ஃபோன் வாங்கிப் போட்டுப் பார்த்து ’ஆமாம் கொஞ்சம் டைட்டாக இருக்கு இன்னொரு டேக் போலாமா’ என்றார். அட்ரா சக்க இன்னொரு டேக்கா எங்களுக்கு டபுள் ஓக்கே. இந்த முறை இடத்தை சரியாக பிக்ஸ் செய்துகொண்டார்.  திரும்பவும் ஆக்‌ஷன். திரும்பவும் சிங்க கர்ஜனை. வார்த்தை மாறாமல் பிசகாமல் கலக்கலாய் அதே டயலாக் டெலிவர். நிஜமாய் இதய்ப் பூர்வமாய் சொல்கிறேன் - வாய் வொய் கமல் இஸ் க்ரேட்.

எல்லாம் முடிந்து விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்த போது நம்பவே முடியவில்லை. முப்பத்தைந்து நிமிட ஒன் டு ஒன்.... வாவ் சான்ஸே இல்லை - பிரமிப்பு அடங்க நிரம்ப நேரம் பிடித்தது. அவருக்கு எங்காவது நம்மைத் திரும்ப பார்த்தால் நியாபகம் இருக்குமா என்று இன்று வரை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. முக்கால் வாசி என்னை மறந்து இந்த விஷயமே நியாபகம் இல்லாமல் போகலாம்  - அவருக்கு இது போல் ஆயிரம், லட்சம் ரசிகர்கள். ஆனால் எனக்கு அவர் ஒரே ஒரு கமல்.