Thursday, August 14, 2014

மாற்றான்

"மாற்றம் ஒன்றே மாறாதது" - கோட் சூட் அணிந்த கார்ப்பரேட் கிருஷ்ண பரமாத்மாக்கள் டீயை உறிஞ்சிக் கொண்டே ஏமாளி க்ளையண்டிடம் பவர்பாயிண்ட்டில் அடிக்கடி ஆட்டையைப் போடும் தத்துவம். க்ளையண்ட் கொஞ்சம் டரியலாகி டணாராகிவிட்டால் போதும், "மாத்றோம்..எல்லாத்தையும் மாத்றோம்" என்று கூட்டமாய் ஒரு டீமைக் கூட்டிக் கொண்டு வந்து "இது ஜானகிராமன் அவர் சீனியர் மோஸ்ட் கன்சல்ட்டண்ட். இதுக்கு முன்னாடி யூ.என். ல பார்ட் டைம் பிரசிடெண்ட்டா வேலைப் பார்த்தார். ஒபாமா வீட்டில வாஸ்து சரியில்லைன்னு ரீ டிசைன் செஞ்சதே இவர் தான்". சீட்டுக் கட்டை கலைத்துப் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால் இந்த மாற்றம் என்பது அவ்வளவு எளிதாய் ஒத்துக் கொள்ளக் கூடியதல்ல. அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் பென்சிலைக் கூட மாற்ற ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு கம்ப்யூட்டர், ஈ.ஆர்.பி. அக்கவுண்டிங் சாப்ட்வேர் வந்தாலும் பேப்பர் முக்கில் நுணுக்கி நுணுக்கி கூட்டல் கணக்கு போட்டுவதை விடமாட்டார்கள். போன மாதம் எக்ஸ்பென்ஸ் வவுச்சர் குடுக்கப் போயிருந்தேன். அந்தப் பெண்மணி அவ்வப்போது போவதால் கொஞ்சம் சிரிப்பார். என்னம்மோ தேடிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறீர்கள் உதவட்டுமா என்று கேட்டால் அழி ரப்பரைக் காணும் என்றார். இதில் அவருக்கு மூன்று கம்ப்யூட்டர் மானிட்டர். நான் வேணா என் பெண்ணிடமிருந்து கேட்டு கடன் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். அதிலிருந்து சிரிப்பதை நிப்பாட்டி விட்டார்.

பிரச்சனை அவரிடம் மட்டுமல்ல. கன்சல்டிங் கமபனிகளில் பெரிய முதலாளிகளும் சீனியர் மேனேஜர்களும் முதல் நோட்டத்திற்கு பிறகு ஒரு மீட்டிங் போடுவார்கள். க்ளையண்டோடு வேலைகளில், ப்ராசஸ்களில் என்னென்ன ஓட்டைகள் இருக்கு, எங்கே வீக்னெஸ் இருக்கு நாம என்னென்ன அவர்கள் மண்டையில் அரைக்கலாம் போன்றவை விவாதிக்கப்படும். க்ளையண்டிடம் போய் முகத்திற்கு நேராக "நீ ஒரு அடி மக்கு" என்று சொல்ல முடியாதாகையால், இந்த வீக்னெஸ்ஸை வாய்புகள் அதாவது ஆப்பர்ச்சுனிடீஸ் என்று அழைப்பார்கள். அங்கே விழுபவர்கள் எழுந்திருக்க ரொம்ப நேரமாகும். இடத்தைக் கேட்டு மடத்தைப் புடுங்கிற கதை. முக்கால் வாசி மடத்தைப் பிடுங்கிய பிறகு தான் க்ளையண்ட் முழித்துக் கொள்வார் "அண்ணாச்சி எங்க கிட்ட இதுக்கு மேலே பணம் இல்லை" என்று வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டிவிடுவார். "ஓ.கே இந்த சூரணத்தை சாப்பாடுக்கு அப்புறம் இதே மாதிரி மூனு வேளை சாப்டுட்டு வாங்க, ஒரு மாசத்துல நல்ல முன்னேற்றம் தெரியும்"ன்னு இடத்தைக் காலி செய்து அடுத்த மடம் பார்க்க கிளம்பிவிடுவார்கள்.

இவர்கள் வருவதற்கு முன்னால் க்ளையண்ட் பருத்திக் கொட்டையையும் புண்ணாக்கையும் ஒரு வேலையாள் வைத்து கண்ணளவில் தொட்டியில் கையால் கலந்து வைத்து இரண்டு மாட்டைப் போஷித்துக் கொண்டிருந்திருப்பார். அது பாட்டுக்கு வேளைக்கு மூன்று லிட்டர் என்று போய்க் கொண்டிருந்திருக்கும். இவர்கள் இங்கே ப்ராஸஸ் இம்ப்ரூவ்மெண்ட் ஆப்பர்சுனிட்டியை கண்டுபிடித்து க்ளையண்டையை பருத்திக் கொட்டையும் புண்ணாக்கையும் அப்படியே மூட்டையாக கொடவுனில் வைக்கச் சொல்லியிருப்பார்கள். அவர்களுடைய ஆட்டமேட்டட் ப்ராஸஸ் முந்தின நாள் ராத்திரி கொடவுனுக்குப் போய் மூட்டையைப் பிரித்து அவர்கள் இதற்கென்று ஸ்பெஷலாய் செய்த பாத்திரத்தில் எடுத்து, நேராக கிணற்றிலிருந்து ஒரு பைப் வைத்து வேண்டிய தண்ணீரை டாப் வைத்து கொண்டு வந்து, சரி விகிதத்தில் கலந்து, மாடு இருக்கும் கொட்டகைக்கு கொண்டு போய் இதற்கென்று வைத்திருக்கும் புதிய கலயத்தில் வைத்து, "டிங்" என்று  ஒரு மணியடித்து மாட்டுக்கு சாப்பாடு வந்ததைத் தெரிவித்து விட்டு, "இன்றைக்கு மாடு இவ்வளவு கலோரீஸ் சாப்பிட்டது, இந்த மாதத்தில் இது வரை இவ்வளவு கலோரீஸ் சாப்பிட்டு இருக்கிறது. இதே மாதிரி மாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இந்த வருஷ கடைசியில் கொழுப்பெடுத்த மாடு இத்தனை கலோரீஸ் சாப்பிட்டிருக்கும். இதனால் நாளொன்றுக்கு மூன்று லிட்டர் கறந்த உங்கள் மாடு நாளொன்றுக்கு எழுபத்தி ஒன்பது லிட்டர் கறக்கும். ஒரு மாடுக்கே இப்படீன்னா ரெண்டு மாடு வைச்சிருக்கற நீங்க..சந்தேகமே வேணாம் அடுத்த வருஷம் நீங்க தான் மல...அண்ணாமலை" என்று ஒரு ரிப்போர்ட்டை க்ளையண்டுக்கு டெய்லி ஸ்டேடஸாக ஈமெயில் செய்யும்.

ஆனால் நிதர்சனமோ வேறாக இருக்கும். முதல் வாரம் கரெக்ட்டாக போகும். க்ளையண்ட் "நெசமாத் தான் சொல்றியா" என்று கேட்பதற்கு முன்னால் அடுத்த வாரம் பருத்திக் கொட்டை ஸ்டாக் சாக்கின் அடியில் போய்விட்டதை அறியாமல் சாக்கோடு எடுத்துக் கொண்டு போய், கிணற்றிலிருந்து வரும் தண்ணீர் டாப்பில் வராமல், வெறும் சாக்கையும் புண்ணாக்கையும் கலக்க முற்பட்டு கலக்கும் அகப்பை உடைந்து, சாக்கையும் உடைந்த அகப்பையும் கொண்டு மாட்டுக் கொட்டகையில் புதிய கலயத்தில் வைத்து, "டிங் என்று மணியடித்து அந்த மணி சத்தத்தில் மாடு கலைந்து தடுப்புக்கு வைத்திருந்த கட்டை சுவற்றோடு பெயர்ந்து வந்து, மாடு எழுபத்தி ஒன்பது லிட்டர் கறக்கும் என்ற அண்ணாமலை ரிப்போர்ட் மட்டும் கரெக்ட்டாய் இமெயிலில் வந்தது.

க்ளையண்ட் மண்டையில் கைவைத்துக் கொண்டு கன்சல்டிங் கம்பெனியைத் தொடர்பு கொள்ள ரிப்ளை வந்தது.

சாக்கு நிறைய பருத்திக் கொட்டை இருக்கும் என்பது தான் காண்டிராக்ட், இல்லாதது உங்க பிரச்ச்னை அதுக்கு ஒரு ஆளைப் போட்டு டய்லி ஸ்டாக் செக் பண்ணச் சொல்லுங்க. இல்லையென்றால் அதற்கு எங்களிடம் இன்னொரு மாட்யூல் இருக்கிறது அதற்கான விற்பனை கோட் இணைக்கப் பட்டுள்ளது. கிணற்றில் இருந்து தண்ணீர் வரும் டாப் ரிப்பேர் ஆனது அகெய்ன் உங்க பிரச்சனை.ஆனா நீங்க எங்க கூட ஒரு மெயிண்டனஸ் காண்ட்ராக்ட் சைன் பண்ணினீங்கன்னா அத நாங்க பார்த்துக்குறோம், அதற்கான வருடாதிர ஏ.எம்.சி. கோட் இணைக்கப் பட்டுள்ளது. அகப்பை உடைந்ததிற்கு மூல காரணம் ஸ்டாக் பிரச்சனை. அதனால் வாரண்டியில் கவர் ஆகாது. புதிய அகப்பைக்கான ஆர்டர் ப்ளேஸ் செய்யப்பட்டு இன்வாய்ஸ் இணைக்கப் பட்டுள்ளது. பதினான்கு நாளில் டெலிவரியாகும். மணி சத்தத்தில் மாடு கலைந்தது ட்ரெயினிங் இஷ்யூ. மாட்டை எங்கள் ட்ரெயினிங் ப்ரோக்ராமிற்கு அனுப்பி வைத்தால் ஒரு மாதம் ட்ரெயினிங் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் - கோட் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு வேளை அது வேண்டாம், உங்களால் மாட்டைப் பிரிந்து இருக்க முடியாது என்றால் உங்கள் இடத்திற்கே எங்கள் ட்ரெயினர் வந்து மாட்டுக்கு மணியடித்து ட்ரெயினிங் குடுப்பார் அதற்கான கோட்டும் இணைக்கப்பட்டுள்ளது. இன் த அன்லைக்லி ஈவெண்ட் ஆப் மாடு கலைதல் அகெய்ன் தடுப்பு சுவர் உடையாமல் இருக்க அது பலப்படுத்த வேண்டும். எங்கள் சிஸ்டர் கன்சேர்ன் இதில் வல்லவர்கள். அதன் ரீஜினல் மேனேஜருக்கு உங்கள் தகவலை பகிர்ந்துள்ளோம் அவர் உங்களை அடுத்த வாரம் வந்து சந்திப்பார். உங்களுடன் பிசினெஸ் செய்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். கஷ்டமர் சர்வீஸே எங்கள் பெருமை - நமீபியா வல்லரசு ப்ரோக்ராம் 2030 அபிஷியில் ஸ்பான்சர்.

மாட்டிற்கு இப்போது க்ளையண்டே மணியடித்து ட்ரெயினிங் குடுத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. மாமா, கடைசி வரை பென்ஷன் பணம் பேங்கிலிருந்து எடுத்து வர மஞ்சப் பையைத் தான் எடுத்துக் கொண்டு நடந்து போவார். "இதெல்லாம் அம்பது அறுபது வருஷ சர்வீஸ். பைத்தாரப் பய மாதிரி மஞ்சப் பைய எடுத்துண்டு போனாத் தான் களவாணிப் பய கண்ணுலயே பட மாட்டோம்". ஸ்கெட்ச் போட்ட மாதிரி போகிற வழியைக் கூட மாற்ற மாட்டார். அதே மூத்திரச் சந்து தான். "அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் கூட்டிண்டு போறேன் போனதும் தெரியாது வந்ததும் தெரியாது இவ்வளவு ஏன் உங்களுக்கே நீங்க பேங்க் போய்ட்டு வந்தது தெரியாது" என்று ரொம்பப் பாடாய் படுத்தி ஒருதரம் ஆட்டோவில் கூட்டிக் கொண்டு போனேன். பேங்கிற்கு மிக அருகில் வண்டி ஆஃப் ஆகி ஆட்டோக்காரர் ரொம்ப முயன்று அப்புறம் மிச்சம் இருந்த சொச்ச தூரத்தை கை ரிக்‌ஷா மாதிரி ஜானவாசமாய் இழுத்துக் கொண்டு போனார். கார்பரேட்டரை துடைச்சு போடுப்பா, கிக்கரை நல்லா இழுப்பா, தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணுப்பா, வண்டிக்கு சரிவீஸ் ட்யூவாயிருக்கும், இதெல்லாம் சவாரிக்கு முன்னாடி செக் பண்ணவேண்டாமா, பார்த்து கூட்டிட்டுப் போப்பா என்று போவோர் வருவோர் எல்லாம் ஃப்ரீ கன்சல்டிங். "நான் பாட்டுக்கு வந்ததும் தெரியாது, போனதும் தெரியாதுன்னு போயிருப்பேன்" மாமா தலையிலடித்துக் கொண்டார். பேங்கிற்குள் போய் பார்த்தால் லாக்கர் சாவியைக் காணோம். ஆட்டோவை கூட சேர்ந்து தள்ள இறங்கியதில் லாக்கர் சாவி பையை ஆட்டோவிலேயே வைத்து, "ஹோய் ஹோய்"ன்னு கூப்பிட்டு ஆட்டோ கிளம்புவதற்குள் ஓடிப் போய் எடுத்து வந்து அன்றைக்கு பேங்கிற்கு தண்ணி கேன் போட வந்தவர் முதற்கொண்டு ஒருத்தர் விடாம எல்லோர் கண்ணும் எங்கள் மேல் :)

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. இப்பவெல்லாம் தலையிடுவதே கிடையாது. "பதினைஞ்சு வருஷமா இத வைச்சுண்டு அல்லாடறேன்" என்று தங்கமணி அடுக்களையில் அங்கலாய்க்கும் போதெல்லாம் மகள்கள் டாண்ணென்று என்னை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். "பிச்சிப் புடுவேன் பிச்சு.... உங்கம்மா க்ரைண்டர சொல்றா, என்னை ஏன்டி பார்க்கறீங்க" என்று மாடிக்கு ஜோலியாய் போய்விடுவேன்.

Tuesday, August 12, 2014

பாலியல் புரிதல்

குருதிப் புனல் சினிமாவில் கமல் கௌதமிக்கு முத்தம் கொடுக்கும் (தல...தல..) ஏகப்பட்ட காட்சிகளில் ஒன்றில்- அவர் உம்மா கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் பையன் வந்துவிடுவான். "நான் எதையும் பார்க்கலை நான் எதையும் பார்க்கலை" என்று அவன் நக்கல் விடும் போது..."டேய் கண்ணத் தொறடா இதுல ஒன்னும் தப்பில்லை உங்கம்மாள உங்கப்பன் முத்தம் கொடுக்கிறான் . இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, என்ன... நான் சொல்லிக் குடுக்கலைன்னா சாட்டிலைட் டெலிவிஷன் கத்துக் கொடுக்கும் அவ்வளவு தான் " - என்று தல ஒரு டயலாக் விடுவார் பாருங்கள் - அட்ரா சக்கை என்று என்னை அட போட வைத்த இந்த வசனம் - எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உடன்பாடான ஒரு விஷயம். தற்போது எங்கள் வீட்டில் (லண்டனில்) இது தான் கலாச்சாரம். அதுக்காக எல்லாமே ஒப்பனாத் தான் பண்ணுவீங்களான்னு குதர்க்கமாய் கேட்கக் கூடாது. அபத்தின் உச்சக்கட்டம் அந்தக் கேள்வி என்பது என் அபிப்பிராயம். பாலியல் தெய்வீகமானது என்று ஒரு துருவத்திலோ அல்லது மிகவும் ஆபத்தானது என்று அதற்கு நேர் எதிர் துருவத்திலோ இருந்து பார்க்காமல் மிக இயல்பான ஒன்று என்பது தான் என்னுடைய நிலைப்பாடு (கவனிக்க - என்னுடைய = என் தனிப்பட்ட) . இது இயல்பானது என்பதை என் மகள்களுக்குப் புரியவைத்து அதைப் பற்றி ஒரு பயமோ இல்லை மிரட்சியோ இருக்கக் கூடாது என்பதில் நானும் தங்கமணியும் உடன்பட்டிருக்கிறோம். கவனிக்க - கூச்சம் என்பது வேறு- அதைச் சொல்லவில்லை. அவர்களுக்கு பாலியல் ரீதியாய் casual and general awareness இருக்கவேண்டும் எனபதில் நானும் என் மனைவியும் மிகத் தெளிவாக இருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு ஆரம்ப வயது வரம்பு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

என்னுடைய இளம் பிராயத்தில் எல்லாம் பூவை கிலுகிலுவென்று க்ளோசப்பில் காட்டி தத்துவார்த்தமான பின்நவீனத்துவ குறியீடுகளுடன் கூடிய முத்தக் காட்சியோ, இல்லை கையைப் பிசையும் மேற்படி காட்சியோ  டி.வியில் வந்தால் எங்க வீட்டுப் பெரியவர்களை விட நான் தான் நிறைய டென்ஷனாகியிருக்கிறேன். ஏன் என்றால் அடுத்த கேள்வி, ஹோம்வொர்க் முடிச்சாச்சா? ஹோம்வொர்க் முடிச்சா அவ்ளோதானா..? மேலே படிக்கவேண்டாமா? அப்படியே டி.வில உட்கார்ந்து விடக்கூடாது எப்போதும் படிப்ப பற்றிய சிந்தனை இருக்கணும், மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கருமமே கண்ணாயினார் என்று ஆரம்பித்து விடுவார் மாமா. அவன் அங்க முத்தம் குடுத்ததுக்கு எனக்கு இங்க பாட்டு விழும்... நானும் கண்ணாயினார் சரியான கருமம்டா என்று புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டு பூவுக்கு பின்னாடி அந்தாள் கலகலன்னு என்ன பண்ணியிருப்பான்னு சாக்ரடீஸ் மாதிரி சிந்தனையிலாழ்ந்து விடுவேன். இதன் காரணமாகவே எனக்கு ரொம்ப பிடித்த ராஜா ராணி படங்களில் இந்தப் பயபுள்ள முத்தம் கித்தம்ன்னு கிளம்பிரக் கூடாதே என்று எனக்கு கிலியாய் இருக்கும்.

இந்த ஆழ்ந்த பூ கலாச்சாரம் இங்கிலாந்தில் இறங்கிய ஆரம்ப நாட்களில் நடுமண்டையில் நிறைய குட்டியிருக்கிறது. டிரையினில் யுவனும் யுவதியும் இறுக்கமான அணைப்பில் - லிப் டு லிப்பில் முனைப்பாக புதையலைத் தேடிக்கொண்டிருந்த போது எனக்கு உதறலெடுத்து வியர்த்துக் கொட்டியது. பொதுவில் இப்படிச் செய்யவேண்டுமா கரெக்டா எனபதெல்லாம் புறந்தள்ளுங்கள், அது அந்தந்த நாட்டின் கலாச்சார, தனிநபர் மற்றும் சமுதாயத்தின் கூட்டு நிலைப்பாடு. இங்கே நான் சொல்ல வருவது அதல்ல. இந்த நாள் இனிய நாள்ன்னு அன்றைக்கு அந்த முத்தக் காட்சியை கேஷுவலாய் கடந்து போக முடியாத என்னுடைய மனப்பாண்மையை. என்னமோ என்னை யாரோ கையைப் பிடித்து இழுத்து கூப்பிட்ட மாதிரி ஒரு படபடப்பு, உதறல் etc etc.  இன்றைக்கு இது நடந்தால் கேஷுவலாய் கடந்து போய் நல்ல வியூபாயிண்ட்டில் உட்கார்ந்து கொள்கிறேன் என்பது வேறு விஷயம்.

இங்கே வீட்டில் ஆங்கில சினிமாக்களிலோ, தமிழ் சினிமாக்களிலோ கொஞ்சம் முத்தத்தை மீறிய ரசாபாசமான காட்சி வரப் போகிற அறிகுறி தென்பட்டால் டி.வி.யை பாஸ் செய்துவிட்டு மகள்களிடம் ஓப்பனாகவே அந்தக் காட்சி அவர்களுக்கு அவர்கள் வயதின் காரணமாக உகந்ததல்ல என்று சொன்னால் சிரித்துக் கொண்டே தெரியும் தெரியும் என்று ஓடி விடுவாரக்ள் (அல்லது என்னைப் பார்த்து திரும்பி உட்கார்ந்து கொள்வார்கள் - இது காட்சியை விட இன்னும் சங்கடம்) . நான் ம்யூட்டில் போட்டு விட்டு படத்தைக் கண்டினியூ பண்ணுவேன். முன்னாடி எல்லாம் என் இரண்டாவது மகள் - நான் மட்டும் எப்படி அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம் என்று கேள்வி கேட்பாள். பதினெட்டு வயதுக்குப் பிறகு அந்தக் கேள்விக்குப் பதில் புரியும் என்று சொல்லி வைத்திருந்தேன். தற்போது அவளே சினிமா முதற்கொண்டு வயது ரேட்டிங்க் பார்த்தே தேர்வு செய்கிறாள். இந்த ரேட்டிங் விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் மிக எச்சரிக்கையாக கையாளப் படுகின்றன. கெட்ட வார்த்தைள் பீப் செய்யாமல் திட்டுவதாய் இருந்தாலே வயது ரேட்டிங் கூடிவிடும். தியேட்டரில் கைக் குழந்தைகளைக் கூட வயது மீறிய ரேட்டிங் இருக்கும் படங்களுக்கு கூட்டிப் போக முடியாது. இங்கே யூ.கேவில் இது தெரியாமல் தமிழ் சினிமா திரையிடப் படும் போதெல்லாம் நிறைய நம்ம ஊர் மக்கள் குழந்தைகளைக் கூட்டி வருவார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் செக்யூரிட்டி ஆட்கள் வந்து வெளியே அனுப்பி விடுவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் லைசன்ஸுக்கு ஆபத்து வரும். வீட்டில் வயதுக்கு மீறிய ரேட்டிங் படம் பார்க்க வேண்டுமென்றால் பஞ்சாயத்து என்னிடம் வந்த பிறகே மகள்கள் பார்ப்பார்கள்.

அதே போல் மேற்கத்திய நாடுகளில் இந்த தொட்டுக் கொள்வது முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் சகஜமாயிருந்தாலும் அந்த "எல்லாமே" எனும் அடுத்த கட்டம் பொது வெளியில் நடப்பது அல்ல. அங்கங்கே எக்ஸப்ஷனாய் நடப்பதும் உண்டு ஆனால் அவை எக்‌ஷப்ஷனாய் மட்டுமே இருக்கும். தினசரி மூன்று காட்சிகள் என்று அரங்கேறாது. அப்படி எப்போதாவது அரங்கேறும் போதும் கூட ஒரு நமுட்டு சிரிப்புடன் மக்கள் கடந்து போகிறார்களே தவிர கூட்டம் கூட்டி டிக்கெட் போட்டு எக்ஸிபிஷன் நடப்பது இல்லை. குழந்தைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த முத்தக் காட்சி விரசமில்லாத வரையில் மட்டுமே ஒ.கே இல்லையென்றால் மக்கள் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரங்களில் கூப்பிட்டு "Get a room" என்று சொல்லியே விடுவார்கள்.

ஆனால் பொது வெளியில் வராமால் இங்கே பத்தாம் க்ளாஸ் படிக்கும் போதே ரகசியமாய் திருட்டுத் தனமாய் செம்புலப் பெயல் நீர் போல கலப்பதெல்லாம் நடக்கும் எனும் போது என் மகள்களுக்கு பாலியல் பற்றி ஒரு புரிதல், ஒரு நிதானம், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி எங்களிடம் சகஜமாய் பேசும் ஒரு சூழ்நிலை இருக்கவேண்டியது அவசியம் என நம்புகிறேன். நான் ஆண் என்ற கூச்சத்தின் காரணமாக என்னிடம் இல்லாவிட்டாலும் என் மனைவியிடமாவது அவர்கள் சகஜமாய் பேச வேண்டிய அவசியம் இருப்பதாய் நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் கலாச்சாரமும் வெகு தூரத்தில் இல்லை. தற்கால இந்திய சினிமாவில் பூவெல்லாம் காட்டுவதில்லை, தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுக்கிறார்கள். இது இயல்பானது என்பதிலிருந்து உடம்பில் ஏற்படும் ஹார்மோன்கள் என்பது வரை கேஷுவலாய் தெளிய வைப்பது அவசியம் என்று கருதுகிறோம். ச்சே ச்சே இதெல்லாம் இங்க இல்லை என்ற நடிப்பு சென்னையில் குறைந்து ஓப்பனாய் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு மினி ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு பெங்களூரில் போவது மாதிரி சென்னையில் போக முடியாது என்று நிறைய பெண் தோழர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ரேப் நிறைய நடப்பதற்கு காரணம் இந்த மாதிரி உடையணிவது எனும் வாதம் அபத்தம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி உடையணிவது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், காரண காரியம், ஆனால் அதை சகஜமாய் கடந்து செல்லும் மனோபாவம் இல்லாததே பாலியல் வன்முறைகளுக்கு காரணம் எனும் தரப்பைச் சேர்ந்தவன் நான். உடை மட்டுமே காரணமாய் இருந்தால் மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எண்ணிக்கை நம் நாட்டை விட பல மடங்கைத் தொட்டிருக்கவேண்டும்.

இந்த பாலியல் புரிதல் விஷயத்தில் டாக்டர் மாத்ரூபூதம் அவர்களும் டாக்டர் ஷர்மிளா அவர்களும் தொன்னூறுகளில் தொகுத்தளித்து வந்த புதிரா புனிதமா நிகழ்ச்சியை நன்றியோடு நினைவுகூர்கிறேன். மிகக் கன்சர்வேட்டிவான தமிழ்நாட்டில் அந்த நிகழ்ச்சி வந்த காலகட்டத்தில் அது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்த நிறைய துணிவு தேவைப்பட்டது. மருத்துவ மாணவர் என்றாலும் கேள்விகளைத் தொகுத்தளிப்பது பெண் என்பது பெரிய புரட்சியாய் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நிறைய குடும்பங்களே வரவேற்பு அளித்தது ஒரு ஆராக்கியமான சூழ்நிலைக்கு வித்திட்டது. ஆனால் தற்போது அது மாதிரி நிகழ்ச்சிகள் வருகின்றனவா என்பது தெரியவில்லை.

இங்கே ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பில் வயதுக்கு வருவது பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பில் பாலியல் பற்றியும் வயது தொடர்பான ஹார்மோன்கள் செய்யும் விளைவுகள் பற்றியும் புத்தகமும் குடுக்கிறார்கள். புத்தகத்தை அம்மாவும் பெண்ணும் மறைத்து மறைத்து பேணிக் காக்கிறார்கள். ரகசியமாய் பேசிக் கொள்கிறார்கள். ரெண்டு வருஷமாச்சு இன்னிக்கு வரைக்கும் புக்கு கைக்கு சிக்கவில்லை. கேட்டால் நான் வயசுக்கு வரலையாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போங்கடீங்க...என்று பத்தாம் க்ளாசில் முதல் பொஸ்தவத்தை போணி செய்து அறிவுக் கண்ணைத் திறந்து வைத்த கிங்பெல்லை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் :)

Wednesday, August 06, 2014

மொபைல்

முன்பொரு காலத்தில் எங்கள் வீட்டில் ஊதுபத்தி தீர்ந்து போகும். கடைக்குப் போய் வாங்கி வரச் சொல்லி மாமா அனுப்புவார். நானும் கடைக்குப் போய் "கடைக்காரரே ஒரு நல்ல ஊது பத்தி குடுங்க" என்று கேட்பேன். அவரும் "எதுப்பா.." என்று கேட்பார். "அதோ எல்லாத்துக்கும் மேலே இருக்கே டாப் த்ரீ ஊதுபத்தி அத எடுங்க" என்பேன். அவரும் அதை எடுத்து கண்ணில் காட்டிவிட்டு "அம்பி இது பதிமூனு ரூவா, வாங்கிட்டு போனா உங்க மாமா சத்தம் போடுவார், இரு நந்தி டைமண்ட் தர்றேன் அதான் மாமா வாங்குவார், அவ்ளோ தான் சில்லறை தந்திருப்பார்" என்று அதைத் தருவார். வாங்கிப் போய் மாமாவிடம் குடுத்தால் "வெரி குட்" என்று சொல்லிக் கொளுத்துவார். கம்முன்னு நிதானமாக ஏத்தினதே தெரியாமல் அரை மணி நேரம் எரியும். எளிமையான உலகமாய் இருந்தது.

சமீபத்தில் மொபைல் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. ஃபோன் வந்தால் ரிங் அடிக்கவில்லை, அடித்தாலும் தகரத்தில் கீச்சுவது மாதிரி கேட்டது. எட்டை அமுக்கினால் நான்கை காட்டும்.நான்கை அமுக்கினால் நட்சத்திரத்தைக் காட்டும். தெரிந்தவரிடம் காட்டினேன்

புட்டுக்கிச்சு

..ஆங்?

புட்டுக்கிச்சு, ஹோ கயா, வேற ஃபோன் வாங்கிக்கோங்க

வேற ஃபோனா...எதுக்கு... இத ஓவராயில் பண்ண முடியாதா?

பண்ணலாம் இந்த டெக்னாலஜி தெரிஞ்ச ஆள் லோக்கல்ல இருக்க மாட்டான், ஜப்பான்லேர்ந்து ஸ்பெஷலா கூட்டிட்டு வரணும் பரவாயில்லையா? பேசாமா புது ஃபோன் வாங்கிக்கோங்க சார்.

அது தான் ஆரம்பம்.

அப்பா ஆப்பிள் வாங்குப்பா

ம்க்கும் உங்கப்பா காஷ்மீர் ஆப்பிளே விலை கூடன்னு வாங்கமாட்டார் இதுல அமெரிக்க ஆப்பிளா அதெல்லாம் நாப்பதாயிரம் ஆகும்.

எந்த மாதிரி பார்க்கறீங்க, டச்சா இல்ல பட்டன் வைச்சததா? (ஜிப் வைச்சது இருக்கா?)

பேசாமா ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கேன், டச் ஃபோன், சாம்சங்ல சல்லீஸா கிடைக்கும்.

சார் நல்ல கடையா பார்த்து வாங்குங்க.. ஏமாத்திருவாங்க. சாம்சங் லோகோல `ஏ`-க்கு நடுவுல கோடு இல்லாம இருக்கா பாருங்க. கோடு போட்டிருந்தா டுப்ளிகேட். சைனா மேக்

ப்ளூடுத், என்.எஃப்சி, எஸ் பீம், டீ.என்.எல்.எம் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிகோங்க  (டி.எல்.என் கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு போயிட்டார்ன்னு சொன்னாங்களே?)

ஏரோப்ளேன் மோட் இருந்தா சொஸ்தம். ப்ளைட்ல போனா ஆஃப் பண்ணவேண்டாம். ஃபோன திருப்பிக் காட்டிட்டா போதும். அவா ரைட் ரைட்ன்னு போயிடுவா. (முந்தைய ப்ளைட் ஜர்னி எப்போ என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன்....ஆயிரத்து தொள்ளாயிரத்தி தொன்னூத்தி. சொச்ச வருஷத்தில் போனது)

ரெண்டு கேமிரா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி மாதிரி யூஸ் பண்ணிக்கலாம் (பத்து ரூபாய்க்கு அவசரப்பட்டு கையகலக் கண்ணாடி வாங்கிட்டேனே வேஸ்டா)

ட்யூயல் சிம் இருந்தா பெஸ்டு. ரெண்டு ஃபோன்லாம் சுமக்க வேண்டியது இல்லாம ஒரே போன்ல சமாளிக்கலாம் (இதுக்காகவே ரெண்டாவது சிம் வாங்கணும்)

எப்.எம் ரேடியோ இருக்கான்னு பாருங்க. ராத்திரியில் ராஜான்னு ஒரு ப்ரோக்ராம். சுண்டி இழுக்கறான்.

மெமரி எவ்வளவு அதிகமா இருகோ அவ்வளவு அதிகமா பாட்டு, படம் எல்லாம் போட்டு வைச்சுக்கலாம் ( நூத்தம்பது நம்பர் ஸ்டோர் பண்ண முடியுமோ? முடியுமா...இருநூறு? அப்போ நானூறு?)

4G சப்போர்ட் பண்ணுமான்னு செக் பண்ணிக்கோ. (எல்லாத்துக்கும் என்ன பிரயோஜனம்ன்னு கேக்காத லேட்டஸ்ட் டெக்னாலஜி, வாங்கிப் போடு, பின்னாடி உபயோகப்படும்)

ஆப்ஸ்லாம் அங்கயே லோட் பண்ணித் தரச் சொல்லு. ஸ்டார் கேல்க்ஸின்னு ஒன்னு இருக்கு. வான சாஸ்திரம். ஃபோன வானத்தைப் பார்த்து காட்டினா போதும். வீனஸ் எங்க இருக்கு, ப்ளூட்டோ எங்க இருக்கு, சனி எங்க இருக்குன்னு அழகா காட்டும். (சனி அப்போ நாக்குல இல்லையா?)

எல்லாவற்றையும் நோட் பண்ணிக் கொண்டேன்.

"கடைக்காரரே ஒரு நல்ல மொபைல் ஃபோனா குடுங்க" என்று கேட்ட போது எல்லாத்துக்கும் மேலே இருக்கிற ஃபோனை எடுத்துத் தராமல் மேலும் கீழும் பார்த்தார்.

ப்ராண்டட்டா சைனாவா?

சாம்சங்

ஸ்மார்ட் போனா?

ஆமாம் ஆனா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம் ஓரளவுக்கு ஸ்மார்ட் போதும்

இதுல வைபை இருக்கா?

சார் ஸ்மார்ட் ஃபோன்னா வைபை இருக்கும் சார். ப்ளூடூத் இருக்கு, ப்ளூடூத்னா தெரியுமா? இன்னொரு ஃபோனோட பேர் பண்ணிக்கலாம் அப்படியே பாட்டு மத்த ஃபைல்ஸ்லாம்...

தெரியும் சார். நானும் படிச்சிருக்கேன். ப்ளூடூத் தெரியாதா. ப்ளூம்பர்க் தெரியுமா உங்களுக்கு? "SIM" கார்டுல சிம்க்கு எக்ஸ்பான்ஷன் சொல்லுங்க பார்போம்.

சாரி சார். இதுல ஜி.பி.எஸ் கூட இருக்கு சார். இப்போ ஆபர்ல இருக்கு  - பத்தாயிரத்தி இருநூறு.

ஒரிஜினல் தானே சைனா மேக் இல்லையே?

சார் ஒரிஜினல் தான் சார். ஆப்பிளே சைனால தான் சார் மெனுபாக்சர் பண்றாங்க

டப்பாவில் என்னவெல்லாம் போட்டிருக்குன்னு படித்தேன். ப்ளூடூத், எம்.பி.3, ஜி.பி.எஸ், எஃப்.எம்...ஏகப்பட்டது போட்டிருந்தது.

எல்லாம் கரெக்டாக வேலை செய்யுங்களா? டப்பால போட்ருவாங்க ஆனா சில சமயம் அதெல்லாம் இருக்கவே இருக்காது.

சார் இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார். டப்பால போட்டிருக்கிறது எதாவது ஒன்னு குறைஞ்சாலோ இல்ல அது வேலை செய்யலைனாலோ எடுத்துட்டு வாங்க, ரெடியா ரூபாய் வாபஸ் குடுக்கறோம்.

இன்னும் இரண்டு முறை உறுதிபடுத்திக் கொண்டேன். சலித்துக் கொண்டார். நீங்க சொன்னத அப்படியே எழுதித் தாங்க என்றேன். கோபப்பட்டார். மானேஜரைக் கூப்பிடச் சொன்னேன். இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார் க்யாரண்டில கவர் ஆகும் சார் என்று சலித்துக் கொண்டே எழுதிக் கொடுத்தார். டப்பால எழுதியிருக்கறது மட்டும் ஏதாவது இல்லை, அடுத்த நிமிஷம் இங்க இருப்பேன் என்று அழுத்திச் சொன்னேன்.

பில்லை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை எல்லா ஃபோனையும் நோட்டம் விட்டேன்.

அதோ எல்லாத்துக்கும் மேல இருக்கே அந்த ஃபோன எடுங்க.

சார் அது ஹெட்ஃபோன் சார்

ம்ம்ம் சரி..ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க.

சார் இது அல்ரெடி ஆஃபர் ப்ரைஸ் சார். போன வாரம் வாங்கியிருந்தீங்க இரண்டாயிரம் கூட குடுத்திருப்பீங்க. சாருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவர் குடுப்பா

வீட்டுக்கு வந்து கடை விரித்து டப்பாவை வைத்துக் கொண்டு ஒவ்வொண்ணாய் சரி பார்த்தேன். எல்லாம் இருந்தது. யாருகிட்ட...என்று காலரை உயர்த்தி சார்ஜில் போட்டேன்.

ராத்திரி எட்டு மணிக்கு நாராயணன் ஃபோன் பண்ணினார் . பெருமிதமாய் காதில் வைத்தால் நாராயணன் அவரோட வயல் கிணற்றுக்குள் இறங்கி அங்கேர்ந்து பேசுவது மாதிரி இருந்தது.

அவசர அவசரமாய் டப்பாவைப் பார்த்தால் தெளிவாக, சத்தமாக பேச்சு கேட்கும் என்று எங்கயுமே எழுதியிருக்கவில்லை.

Tuesday, August 05, 2014

ஜிகர்தண்டா விமர்சனம் அல்ல

நேற்று தான் ஜிகர்தண்டா காணக் கிடைத்தது. நல்ல மேக்கிங்குடன் கூடிய ஒரு நல்ல படம். 2014-ல் இது வரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முதல் மூன்று ரேங்கிற்குள் வரத் தகுதியுள்ளது. முதல் பாதி நல்ல க்ரிப்பிங்காய் நம்பகத்தன்மையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது எதார்த்தமல்ல, நிறைய இடங்களில் ஒன்றுக்குப் பத்தாய் மிகைப்படுத்தி சொல்லும் ட்ராமாட்டிக் மீடியா. ஆனால் அந்த மிகைப்படுத்துதலை சினிமா பார்க்கும் ரசிகன் உணராத படி, அவன் அறிவு முழித்துக் கொள்ளாதபடி கொண்டு சொல்வது மிக முக்கியம். அந்த வகையில் எனக்கு இன்றைக்கு கால் மேல் கால் போட்டு யோசிக்கும் போது இரண்டாவது பகுதியில் தெரியும் மிகைப்படுத்துதல் நேற்று படம் பார்க்கும் போது அவ்வளவு தெரியவில்லை.(அத்தாம் பெரிய ரவுடிகள் கூட்டமாய் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு குரங்காட்டம் ஆடுவதெல்லாம் கொஞ்சமாய் நெருடியது) ஆனால் இரண்டாம் பாதியில் கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டார்களோ என்று கண்டிப்பாய் தோன்றியது. படம் முடிந்துவிட்டது நல்ல எடுத்திருக்காங்க என்று நாம் மனதில் எண்ட் கார்ட் போட்ட பிறகும் படம் இருபது நிமிடத்திற்கு ஓடுகிறது. க்ரிஸ்ப்பாய் முடித்திருக்கலாம். சரி விடுங்க படத்தை பற்றி எல்லோரும் கதறக் கதறக் கருத்து சொல்லிவிட்டார்கள். தலையில் ஒற்றை ரோஜாவை சொருகிக் கொண்டு கமலோடு "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" ஆட்டம் ஆடிய அம்பிகா, பாயா கடை ஆயாவாக வருகிறார். காலத்தின் கோலம் சகிக்கவில்லை. லஷ்மி மேனனிடம் அவர் தான்  ஹீரோயின் என்ற சொல்லி படத்தில் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ பாவம். சங்கிலி முருகனுடைய அந்தப் பொட்டிக் கடை தாத்தா ரோலையாவது லஷ்மி மேனன் கேட்டு வாங்கி நடித்திருக்கலாம் கொஞ்சம் ஸ்கோப் இருந்திருக்கும். சித்தார்த்துக்கும் அவருக்கும் செட்டே ஆகவில்லை. சின்ன சின்ன குறைகள் மட்டுமே. புல் பேக்கேஜாய் பார்க்கும் போது ஒரு நல்ல மேக்கிங்குடன் கூடிய நல்ல படம். இயக்குநருக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி, கல்ட் ஃபிலிம் ட்ரெண்ட் செட்டர் என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. சமீபத்திய தமிழ் சினிமாவில் என்னளவில் அது ஆரண்ய காண்டமாகவே இன்று வரை இருக்கிறது. இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் எந்தத் தொய்வுமில்லாமல் நல்ல இண்ட்ரஸ்டிங்காய் ஓடும் படங்கள் தமிழில் அரிதாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்தப் படம் கானல் நீராய் வந்ததால் இந்தக் கொண்டாட்டமாய் இருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு வித்தை தெரிந்திருக்கிறது, அவரின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

On a different subject - தமிழ் சினிமா ரவுடி கலாச்சாரத்தை ஓவராக glorify செய்வது கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறது. கத்தியை எடுத்து அப்படியே ஒரு சொருவு சொருவுவது, போகிறவர் வருகிற பொதுஜனத்தை மண்டையில் போடுவது, பெட்ரோலை ஊத்திக் கொளுத்துவது, கக்கூஸில் கட்டையால் அடிப்பது  போன்ற எல்லா காட்சிகளிலும் நாம் தான் அந்த அடிவாங்குகிற பொதுஜனம் என்பதை மறந்து தியேட்டரில் கை தட்டிக் கொண்டிருக்கிறோம். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்த மாதிரி இந்த ரவுடிகளை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் திகட்டும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் படுகிறது. "இந்தியன்" படம்  எடுத்து பொதுமக்களோ அதிகாரிகளோ லஞ்ச லாவண்யத்தில் திருந்தவில்லை, ஆனால் இந்த ரவுடித்தனத்தை அஸ்வமேத யாகம் நடத்திய மாதிரி இப்படி ஒரேடியாய் ஹீரோத்தனமாய் காட்டினால், ரவுடி ஆகலாமா என்று நினைக்கும் அப்ரசண்டிகளெல்லாம் சினிமாவைப் பார்த்து விட்டு வெளிய வரும் போதே சம்பவம் நடத்தி க்ராஜுவேட் ஆகும் டீட்டெயில் வவுத்தக் கலக்குது.