இந்திய விடுமுறைப் பயணம் மிக மிக இனிமையானதாய் இருந்தது என்று எழுத ஏகப்பட்ட ஆசை. ஆனால் இறங்கிய ஒரு மணிநேரத்திலேயே அகலக் கால் வைத்து மாடிப் படியில் தடுக்கி விழுந்து தோள்பட்டையை அல்மோஸ்ட் உடைத்துக் கொண்டு, இன்னும் வலி போகாமல் டயாப்டீஸ் மாமா மாதிரி காலையில் கையை தூக்கி உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஊரில் இண்டர்நெட் செண்டரில் மெயில் பார்த்த அடுத்த நாள் ஈமயிலை ஹாக் செய்து மங்களம் பாடி விட்டார்கள். மெயில் ஹாக் செய்யப்பட்ட பிறகு தான் இந்தியாவில் சந்திக்க நினைத்தவர்க்ளின் போன் நம்பர்கள் ஈமெயிலில் இருப்பது நியாபகம் வந்து தொலைத்தது. ஆகையால் நான் ஆவலோடு சந்திக்க நினைத்தவர்களையெல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது.
அம்பாசமுத்திரத்தில் முக்கால்வாசி பேருக்கு அம்பானி ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்ன...அடுத்தவனை ஏமாத்தியாவது அம்பானி ஆகவேண்டும் என்று இருப்பது தான் வருத்தமாய் இருக்கிறது. தெரிந்தவர் தெரியாதவர் என்று ஏகப்பட்டபேர் எமாற்றி என்னை கும்பகோணம் கும்பானி ஆக்கிவிட்டார்கள்.. அதற்கப்புறம் "தம்பிக்கு எந்த ஊரு." கேள்விக்கு ஆட்டையாம்பட்டி சொல்லிப் பார்த்தேன்...நம்புவாரில்லை. "எது இந்த லண்டன்ல இருக்கே அந்த ஆட்டையாம்பட்டியா"ன்னு உஷாராய் கேட்டார்கள். மண்டையில கொண்டை கூட இல்லீயேடா அப்புறம் எப்படிடா கண்டிபிடிக்கிறீங்கன்னு மண்டை காய்ந்துவிட்டது.
இதற்கு சென்னை மிக பரவாயில்லை. நான் இந்த ஏரியா கிடையாது சார்..நீங்களே பார்த்து ஒரு கரெக்ட்டான அமௌண்ட குடுங்க என்று பின்னிரவில் ஏறிய ஆட்டோகாரர் அசத்தினார்.
மதுரையில் ஒரு இனிய நண்பியையும் குடும்பத்தாரையும் பார்த்தது மட்டும் தான் ப்ளான் படி நடந்தது. மற்ற ப்ளான் எல்லாம் காம்ப்ளான் தான்.
ஊரில் ஏகப்பட்ட மாற்றங்கள். சன் டீவியில் மிட் நைட் மசாலா போடுவதை நிப்பாட்டி விட்டார்கள். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு நாலு நாள் சவரம் செய்யாத தாடியை ஒரு கதாநாயகன் கத்தியால் சொறிந்து கொண்டிருந்தார். சந்தோஷம்.
பொக்க வாயக் காட்டிக்கிட்டு குட்டைச்சுவரில் மொட்டைத் தாத்தா உட்கார்ந்திருப்பார், ப்ளாக் அண்ட் ஒயிட்ல ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்ல போடணும்ன்னு இருந்தேன். கலைப்பணிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.
ஜெயா டீவியில் அழகிப் போட்டி என்று அழகிகள் கையில் படமெடுக்கும் பாம்பை குடுத்து போஸ் குடுக்கச் சொல்கிறார்கள். அவர்களும் பாம்புடன் போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு அப்புறமாய் வீல் வீல் என்று அழுகிறார்கள். எந்தப் புண்யவான் ரூம் போட்டு இந்த மாதிரி ஐடியாலாம் யோசித்தாரோ...ஹூம் பிக்கினியில் வலம் வருவதே எவ்வளவோ தேவலையாய் இருந்தது
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில்... யுவதிகளெல்லாம் சர்வ தேச தரத்தில் உடையணிந்து அழகாய் வலம் வருகிறார்கள். கடைகளில் சிப்பந்திகள் இங்கிலீஷில் வரவேற்று சர்வ தேச தரத்தில் பில் போடுகிறார்கள். எல்லா கடைகளிலும் வாசலிலேயே பையை வாங்கிக் கொள்கிறார்கள். "அப்படியே பர்ஸையும் வாங்கி வைச்சிக்கலாம்ல...நாலு காசாவது மிஞ்சும்"ன்னு நான் அடித்த ஜோக் கடை செக்யூரிட்டிக்கு பிடிக்கவில்லை. விட்டால் அரெஸ்ட் செய்துவிடுகிற துவேஷத்தை முகத்தில் காட்டினார்.
டீவீ சீரியல்களில் மனைவிகள் மாங்கல்யத்தைக் காட்டி கற்பூரம் ஒற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து "இப்படியே பேசிக்கிட்டிருந்தீங்கன்னா தூங்கும் போது மண்டையில ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டு கொன்னுடுவேன்"னு புருஷனை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சீரியலகளை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
பம்பாய் மற்றும் சென்னை ஏர்போர்ட்டும் இருக்கும் லட்சணத்திற்கு ஹைதராபாத் விமான நிலையம் இப்போது தான் கல்யாணம ஆகிய மாதிரி புத்தம் புதுசாய் சூபராய் பளபளத்துக்கொண்டிருக்கிறது. என்ன ஏர்போர்ட்டில் இட்லி தோசா என்று என்னத்தையோ குடுத்து ஒரு குண்டு ராவ் பைசா பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன் ரோடு ரோடாய் பைக் ஓட்டிய சென்னை மேம்பாலங்களினால் அன்னியமாகி கிழக்கு மேற்கு கூட தெரியவில்லை. கிண்டி வழியா போகட்டுமா அடையார் வழியா போகட்டுமா என்று கேட்ட கால்டாக்ஸி ட்ரைவருக்கு "அவ்வ்வ்வ்வ்"ன்னு நான் சொன்னது புரியவில்லை.
முக்கால்வாசி பேர் செல் போனில் அம்மாவைப் பற்றி உருகி உருகி காலர் சாங் போட்டிருக்கிறார்கள். சன் ம்யூசிக்கிற்கு "ஐ லவ் மை ஃவைப்" போன்ற அபத்த டெக்ஸ்ட் இன்னும் வந்துகொண்டிருக்கிறது.
சரவணா மாளிகையில் வெள்ளி விற்கும் செக்க்ஷனில் அங்காடித் தெரு மாதிரியே நாலைந்து பெண்களும் பையன்களும் நல்ல ஜாலியாய் பேசினார்கள். அங்கேயும் ஒரு காதல் கதை ஓடிக்கொண்டிருப்பதை கண்ணால் காண முடிந்தது. "தவறாய் நினைக்காதீர்கள்.." என்று அங்காடித் தெரு பற்றி கேட்டபோது...."மூன்னாடியெல்லாம் இப்படித் தாங்க இருந்தது அதத் தான் எடுத்திருக்காங்க..ஆனா இப்போலாம் ரொம்ப மாறிடிச்சு"ன்னு ஒரு பெண் சொன்னது ஆறுதலாய் இருந்தது.
ப்ரஜைல் ஸ்டிகர் ஒட்டி கஷ்டப்பட்டு பழைய புடைவையெல்லாம் சுத்தி பேக்கிங் செய்து கொண்டு வந்த அல்ட்ரா கிரண்டர் லக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்த போது கடமுடா என்று ஒரே சத்தம். வீட்டில் ஒரு இஞ்சினியர் இருக்கிறேன் என்று இப்படியெல்லாமா முருகா சோதிப்பது என்று திறந்து பார்த்தால் மோட்டார் ஹவுசிங் சுக்கல் சுக்கலாய் போயிருந்தது. இந்த மோட்டாரை வைத்து இனிமேல் வயலுக்குத் தான் தண்ணி பாய்ச்சமுடியும் தோசைமாவெல்லாம் அரைக்கமுடியாது தூக்கி போடு என்று எவ்வளவோ சொல்லியும் தங்கமணி என்ன காரணத்திற்காகவோ குழவிக் கல்லை மட்டும் எடுத்து பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறார். மேலே சொன்ன டீவி சீரியலைப் பார்த்து கெட்டுப் போயிருப்பாரோ என்று பயமாய் இருக்கிறது.
Tuesday, September 21, 2010
Subscribe to:
Posts (Atom)