Thursday, June 24, 2010

பில்லியர்ட்ஸ்

லாங் லாங் அகோ சோ லாங அகோ என்று அழைக்கப்படுகிற சுமார் ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இங்கிலாந்தில் ஒரு நண்பர் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள். சும்மா கூப்பிட்டால் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு போவோம், அவர்கள் சாப்பாட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டதால, முந்தின நாளே பட்டினியாய் இருந்து வெற்றிவேல் வீரவேல்ன்னு குடும்பத்தோடு போய்வந்தோம். அவர்கள் வீட்டில் நண்பருடைய மாமனார் மாமியார் ஊரில் இருந்து வந்திருந்தார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பஸ்தர்க்ள் வீட்டில் சம்மரில் பெரும்பாலும் ஊரில் இருந்து மாமனார் மாமியார் வந்திருப்பது சகஜம். முதல் தரமாய் வந்திருந்தால் - பாவம் முதல் இரண்டு வாரங்கள் வித்தியாசமாய் இருக்கும் ஊர், தட்ப வெப்பம், ஊரளவு இருக்கும் மால்கள், பிரஷ்ஷாய் கிடைக்கும் தக்காளி, கள்ளி சொட்டாய் கிடைக்கும் திக் பால், உட்கார்ந்து இலை போட்டு சாப்பிடும் அளவு சுத்தமாய் இருக்கும் ரோடுகள், சன்னம்மாய் துணியணிந்தாலும் துளியும் குளிராமல் உலவும் மாதர்கள் என்று வியந்து வியந்தே முதல் மூன்று வாரங்கள் அவர்களுக்கு பொழுது போய்விடும். அதற்கப்புறம் அவர்கள் ரொம்பவே பாவம். "ஊராய் இருந்தால் காலாற நடந்து கோயிலுக்கு போய் வரலாம் இங்க அடுத்த தெருவுக்கு போறதுக்கே அவன் ஆபீஸ்லேர்ந்து வர வேண்டியதாய் இருக்கு..எவ்வளவு நேரம் தான் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருப்பது" என்று ஆயாசம் வந்துவிடும். இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு யாராவது ஏஷியன்ஸைப் பார்த்தாலே "எங்களுக்கு மாயவரம் உங்களுக்கு...?" என்றளவுக்கு காய்ச்சல் வந்துவிடும்.

கூப்பிட்ட நண்பர்...நண்பர் என்றால் நெருங்கிய நண்பர் கிடையாது கொஞ்சம் தான் பழக்கம். எனவே ரொம்ப ஃபார்மலாய் "ஹௌ ஆர் யூ" கேட்டுவிட்டு தான் "சாப்பாடு ரெடியா"ன்னு டீஜென்டாய் படம் விட வேண்டியிருந்தது. பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு தண்ணி குடிக்கப் போவது மாதிரி "நைஸ் கிச்சன்" என்று சமையல் ஆகிவிட்டதா என்று நோட்டம் விட நழுவினேன். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மேலே மாட்டிக்கொண்டிருந்த பலூனை எடுத்து தரும் படி கேட்க, பக்கத்தில் இருந்த குச்சியை வைத்து பலூனை இழுத்து எடுத்துக் குடுக்கவேண்டியிருந்தது. அப்பொழுது அந்தப் பக்கம் வந்த நண்பரின் மாமனார் "அப்பவே உங்கள பார்க்கும் போதே நினைச்சேன்..நீங்களும் பூல் விளையாடுவீங்கன்னு" என்று குஷியாய் பிடித்துக் கொண்டார்.

எனக்கு மாமா எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியாவிட்டாலும், வெள்ளைக்காரர்கள் வழவழ கொள கொள ஜோக் மாதிரி புரியாமலே "ஹீ ஹீ ஆமா ஆமா..." என்று நடுவாந்திரமாய் சிரித்து வத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்கள் மாமா குஷியாய் பேசிக்கொண்டே "வாங்க கீழ மாப்பிள்ளை பூல் டேபிள் போட்டிருக்கிறார் ஒரு கேம் போடுவோம்" என்று கையை பிடித்து கூட்டிக்கொண்டு போய்விட்டார்.

நானும் மூனு சீட்டாய் இருக்குமோ என்று குழம்பிக் கொண்டே போன பிறகு தான் அவர் பில்லியர்ட்ஸ் பற்றிப் பேசுகிறார் என்றும் நான் பலூன் எடுக்க பயன்படுத்திய குச்சியை தான் மாம க்யூ என்றழைக்கிறார் என்றும் புரிந்தது.  இநத ஊரில் பூல் என்று விளிக்கிறதை எங்க ஊர் பஜனைமடத்தில் நானும் கன்னுக்குட்டி கணேசனும் பில்லியன்ஸ் என்று தான் சொல்லுவோம். சீனாதானா மாமா வந்து பில்லியர்ட்ஸ் என்று திருத்தி, ஞாயிற்றுக் கிழமை "குலமகள் ராதை" டி.டி சினிமாவுக்கு முன்னால் தேவுடு காக்கும் போது சில சமயம் டெல்லி தூர்தர்ஷனில் இந்த இழவை பார்த்துத் தொலையவேண்டியிருக்கும். "என்னடா பெரிய கேம்...இதோ இருக்கிற ஓட்டைகுள்ள பந்த அடிக்கிறதுக்கு அவ்வளவு பெரிய குச்சி...அத அந்த ஆள் குனிஞ்சு குனிஞ்சு வேற ஆங்கிள் பார்க்கிறான்...தூ ஒத்தயடி  அடிச்சா பந்து தானா போய் விழப்போறது...என்னம்மோ போ ஒரு சேலேஞ்சும் இல்ல..இந்த இழவுக்கு கோட் சூட் வேற...இந்த கேம் ரொம்ப ஈஸிடா எங்க வீட்டுல மடையில சத்தை அடைச்சி தண்ணி போகலைன்னா இத மாதிரி ஒரு குச்சிய வைச்சு என்னா குத்து குத்தியிருக்கேன் தெரியுமா...பார்க்கிறதுக்கு தான் கஷ்டமா இருக்கு ஆனா இந்த கேம் ரொம்ப ஈஸி தான்
"- கன்னுக்குட்டி கணேசனுக்கு இந்த விளையாட்டு கைவந்த கலை.

எனக்கும் இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹம் ஆப் கே ஹைன் கௌன் ஹிந்திப் படத்தில் மாதுரி தீட்சித் புடவையை அந்தப்பக்கமாய் கட்டிக் கொண்டு மாடியிலிருந்து வரும் போது சல்மான் கான், கவிதை சொல்லி இந்த க்யு குச்சியை வைத்துக் கொண்டு லெப்ட் ரைட் சென்டர்ன்னு போட்டுத் தாக்கி மாதுரிக்கு ப்ராக்கெட் போடுவார். சுத்தி இருப்பவர்கள் எல்லோரும் "வரே வா வா" என்று புகழ்வார்கள்.......ஹூம்ம்ம்ம்ம்ம்.

மாமா வேற ஸ்னூக்கர் விளையாடனுமா இல்லை பில்லியர்ட்ஸான்னு ஜார்கனெல்லாம் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார். "நீங்க முதல்ல சொன்னேளே அந்த விளையாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு குத்துமதிப்பாய் சொல்லி வைத்தேன். நாம பார்க்காத விளையாட்டா என்று குச்சிய வாங்கி கிட்டிபுல் மாதிரி ஒரு போடு போட்டதில்  க்ரிக்கெட்டாய் இருந்தால் சிக்ஸர் குடுத்திருப்பார்கள். பந்து டேபிளை விட்டு எகிறிவிட்டது. அப்புறம் மாமா சல்மான் கான் மாதிரி லெவல் காட்ட நான் சிக்ஸர் சிக்ஸராய் அடித்து தாக்க...தங்கமணி அன்ட் கோ வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டது.

தங்கமணி நம்ம கேப்டன் விஜயகாந்த் படத்துல எதிர் கட்சி ட்ரெயினிங் எடுத்தவர். திறந்தவெளி ஜீப்பில் ஏன் எதுக்குன்னு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெங்காயத்தை கடித்து வீசுகிற மாதிரி போகிற போக்கில் அலேக்காய் வெடிகுண்டை வீசி என் மானத்தை எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்கி கப்பலேற்றும் விற்பன்னர்..


 "நான் என்னிக்கும் வயசுக்கும் பாரம்பரியத்துக்கும் மரியாதை குடுக்கிறவன்னு அதான் முழு திறமைய இன்னும் காட்டல"ன்னு சமாளித்தாலும்... தங்கமணி கருணை காட்டவில்லை. குஷியாய் "இவருக்கு கோல்ப் பந்தையும் பில்லியர்ட்ஸ் பந்தையும் கலந்து வைச்சா வித்தியாசமே தெரியாது இதுல இவர எதுக்கு இந்த விளையாட்டுக்கு சேர்த்தீங்க"ன்னு கரெக்ட்டாய் நம்ம பெருமையை எடுத்து விட ஆரம்பித்துவிட்டார். ஒருதரம் செகண்ட் ஹாண்டில் இந்த குச்சியை ஒரு சீமான் தள்ளுபடி விலையில் போட்டிருக்க, "பீரோக்கு அடியில எதாவது போச்சுன்னா எடுக்க வசதியா இருக்கும் வாங்கிப்போடுங்க"ன்னு அவர் சொல்லி "மொட்டைக் கம்புக்கு இத்தனை விலையா...எல்லாம் ஒன் பவுண்ட் ஷாப்பில பார்த்துக்கலாம் அங்க துடைக்கறதுக்கு துணியும் அட்டாச் பண்ணி தருவான்"னு நான் அந்தக் குச்சியை வாங்க ஒத்திவைப்பு தீர்மானம்  போட்ட கோபம் அவருக்கு.

"இல்ல மாமா எனக்கு இங்க லைட்டிங் கரெக்டா இல்ல, எல்லா லைட்டையும் அணைச்சுட்டு சினிமால வர்ற மாதிரி ஒரே ஒரு நாப்பது வாட்ஸ் பல்ப ஷேடோட நடுவுல கீழ வரைக்கும் தொங்கவிட்டா தான் எனக்கு ஆங்கிள் பார்த்து விளையாட வரும்னு அப்புறம் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகிவிட்டேன்.

சமீபத்தில் ஒரு கார் பூட் சேலில் மொத்தமாய் இந்த செட் வைத்திருந்தார்கள். டேபிள் இல்லாவிட்டாலும் ஷோகேஸில்  சும்மா ஒரு பந்தாவாய் இருக்குமேன்னு வாங்கிப் போடலமான்னு ஒரே சபலம் எனக்கு. பக்கத்திலேயே வேறு ஒரு சீமான் கோல்ப் மட்டை வைத்திருந்தார். குணம் நாடி குற்றம் நாடி...கோல்ப் மட்டை நல்ல காத்திரமாய் இருக்கு..எலியோ திருடனோ வந்தா அடிக்க உபயோகப் படும் என்று அதை அடுத்த தரம் வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Wednesday, June 02, 2010

டைம் மேனேஜ்மென்ட்

கொஞ்சம் தொழில் முறை நிமித்தமாக பல்வேறு வேலைகள் மென்னியைப் பிடித்துவிட்டது. "எப்படீங்க வேலைக்கும் போய்வந்துகிட்டு அத்தோட இந்த சினிமா குறும்படம்ன்னு எதையுமே எடுக்காம எல்லாத்தையும் எடுத்த மாதிரி ஃபிலிம் காட்டிக்கிட்டு ...இதுல குடும்பம், குழந்தை குட்டின்னு எப்படீங்க எல்லாத்தையும் மேனேஜ் பண்றீங்க..?"ன்னு ஒரு நண்பர் சமீபத்தில் ரொம்பவே நெஞ்சை நக்கிக்கொண்டிருந்தார்.

"யோவ் குடும்பமும் குழந்தைகளும் மட்டும் தான்யா...குட்டியெல்லாம் (இதுவரைக்கும்) கிடையாது...நீ பாட்டுக்கு தேர இழுத்து தெருவில விட்டுடாதய்யா... எல்லாம் டைம் மேனேஜ்மென்ட் மகிமை..இன்னிக்கு டைம் மேனேஜ்மென்ட் தான் எல்லாமே....அந்த டெக்னிக்க மட்டும் கரெக்ட்டா கத்துக்கிட்டோம்ன்னு வை...அப்புறம் சில பெரிய மனுஷங்க மாதிரி நாமளும் அதைப் பத்தி நாலு புஸ்தகம் எழுதலாம்...அப்புறம் மல்டி டாஸ்கிங்க்லாம் சும்மா இடது கையால அசால்ட்டா பண்ணலாம்ன்னு எடுத்து விட்டேன். நண்பர் கொஞ்சம் அப்ராணி, முதல் பந்திலேயே ஹாட்ரிக்.

ஷேக்ஸ்பியர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா...."Better three hours too soon, than one minute too late". அதாவது ஒரு நிமிஷம் லேட்டா போறதுன்னு ஆயிட்டா மக்கா மசுரே போச்சு, மூனு மணி நேரமே லேட்டா போகலாம்..சட்டத்துல இடமிருக்குன்னு. நமக்கு ஒரு நாளைக்கு முடிக்க வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டது இருக்கும் அதை நினைத்தாலே மலைப்பாக இருக்கும். இந்த அயற்சியே ஒரு வேலையும் செய்யவிடாது. இதற்கு டைம் மேனேஜ்மென்ட்டில் தீர்வு இருக்கிறது. முதலில் எல்லா வேலைகளையும் மனதில் ப்ளான் பண்ணவேண்டும். வெறும்ன ப்ளான் பண்ணினா போதாது. ஒரு நாப்பது பக்க டைரியில உயில் எழுதற மாதிரி ரெண்டு பக்கமும் டீட்டெயில்டா எழுதி வைக்கனும். கான்பரன்ஸ் கால் பண்றதுலேர்ந்து கக்கூஸ் கால் கழுவறவரைக்கும் எல்லாத்தையும் நேரம் நிமிஷம்ன்னு காலண்டர் போடனும். ஒன்னு ரெண்டுன்னு அவ்வையார் மாதிரி வரிசைப் படுத்தி எல்லா டாஸ்க்குக்கும் ப்ரியாரிட்டி அசைன் பண்ணனும்.

இது எல்லாத்தையும் விட டைம் மேனேஜ்மென்ட்டில் முக்கியமான் ஒன்னு மேலே சொன்ன படி டைரியில் டெய்லி காலண்டர் போட்டா மட்டும் பத்தாது, அதை நாலு பேர் கண்ணுல படற மாதிரி, ஸ்ட்ராடிஜிக்கான ஒரு இடத்துல பெப்பரப்பேன்னு திறந்துவைச்சிருக்கனும். நோட்டு காத்துல மூடிடக்கூடாதுன்னு ஒரு பால்பாயிண்ட் பேனாவ நடுவில சொருகி அண்டக் குடுக்கனும். பக்கத்துலயே ஒரு ஏ4 பேப்பர ரெண்டா மடிச்சு, உள்ள தாயக்கட்டை வரைஞ்சு பொழுது போகாத போது யாரும் பார்க்கமுடியாத மாதிரி நாடில பேனாவ தட்டி யோசிச்சு யோசிச்சு விளையாடனும்.

எழுதி வைச்ச டாஸ்கில் ஒரு டாஸ்க் இன்றைக்கு டாஸ்க் லிஸ்டில் ஒரு டிக்காவது போடனும்ன்னு எழுதி வேண்டும். அதை பூர்த்தி செய்கிற மாதிரி அந்த டாஸ்க்கு நேரா ஒரு டிக்கு போட வேண்டும்.  "செய் அல்லது செத்து மடி"ங்கிற மாதிரியான டைம் மேனேஜ்மென்ட் வாசங்களை ப்ளோ அப் செய்து வீட்டு ரூமில ஆணி பொத்தல் இருக்கிற இடத்துலெல்லாம் மறைக்கிற மாதிரி ஒட்டனும்.

அன்னிக்கு நாலு மணி ஆனவுடனே எப்படியும் எழுதிவைச்சதுல ஒரு வேலையும் செஞ்சிருக்க மாட்டோம், அதனால அடுத்த நாள் தேதி போட்டு முந்தின நாள் டாஸ்க் எல்லாத்தையும் காப்பி பண்ணி அலெகேட் பண்ணனும். ஒரு வேளை டாஸ்க் லிஸ்ட் நீளமாயிருந்தா முத நாள் தேதியிட்ட இடத்துல அத அடிச்சிட்டு அடுத்த நாள் தேதி போட்டுக்கனும்.

எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான மேட்டர்...நீங்க விடற அல்ப்பரய பார்த்துட்டு யாராவது ஒரு விக்கெட் நீங்க பந்து போடறதுக்கு முன்னாடியே உங்க கிட்ட வந்து "எப்படீங்க இதெல்லாம்..."ன்னு கேட்கும் அப்போ நீங்களும் ரெண்டாவது பத்தியிலேர்ந்து அதுக்கு தெளிவா ஆரம்பிக்கனும்.

அன்புடையீர்,
நிற்க. நிகழும் விக்ருதி ஆண்டில் ஏப்ரல் பதினெட்டாம் திகதியிலிருந்து ஜூன் ஒன்றாம் திகதி வரையில் எனக்கு ப்ளாக்கில் கண்டம், பின்னூட்டம் பக்கம் கூட போகக் கூடாது என்று ஆஸ்தான ஜோதிடர் கூறிவிட்ட படியால் மட்டுமே இங்கு வரவில்லை. மற்றபடி ப்ளாக் எழுதுவது தான் எனது அன்றாட டாஸ்க் லிஸ்ட்டில் டாப்பிலிருக்கிறது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

The time you enjoy wasting is not wasted time.
- Bertrand Russell