படங்கள் கீழே கடைசியில் இருக்கின்றன.
ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு வாரங்கள் முன் நண்பர் கதிர் வலைப்பதிவை படித்து விட்டு ஒரு மடல் தட்டி இருந்தார். முதல் மடல் என்பதால் மானே தேனே போட்டிருந்தார். ஆஹா ஒரு விக்கெட் விழுந்தாச்சு...சென்னையில் சந்திக்கலாமா (போண்டாக்கு ஆச்சு) என்று நூல்விட்டுப் பார்த்தேன். கண்டிப்பாக என்று தெகிரியம் குடுத்ததில் சரி நெல்லை சந்திப்பு மாதிரி சொந்த செலவில் போண்டா என்று பிசுபிசுக்காது என்று கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அடுத்தடுத்து போண்டா என்ன போண்டா, சாப்பாட்டுக்கே நாங்க கியாரண்ட்டி என்று குரு நிஷா, டோண்டு, பிரகாஷ், உண்மைத் தமிழன், பாபா, பிரபு கார்த்திக் - லிஸ்டு மெதுவாக நீண்டது. எதுக்கும் ஒரு தரம் ஃபோன் பண்ணி கண்பர்ம் பண்ணுவோம் என்று நம்பர் தந்த அனைவருக்கும் டயல் செய்ய ஆரம்பித்த உடனேயே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.
"சிட்டி சென்டர் சரி சார் ஆனா கரெக்டா எங்க? டி.நகரா, மைலாப்பூரா...எந்த இடம்? என்று டோண்டு கேட்டவுடன் எனக்கு குழம்பிவிட்டது. விட்கோ மாதிரி இல்லையே எனக்கு தெரிந்து சிட்டி சென்டர் ஒரு இடத்தில் தானே இருக்கிறது என்று அப்புறம் நான் சொன்னது நகர மையம் இல்லை ராதாகிருஷ்ணன் சாலை ஷாப்பிங் மால் என்று விளக்கிச் சொல்லி போனை வைத்தால், மனுஷன் அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் திரும்ப கூப்பிட்டு "சிட்டி சென்டருக்கு நீங்க இங்கேர்ந்து வந்தா இப்படி வரனும், அங்கேர்ந்து வந்தா அப்படி வரனும்"ன்னு ஒரு அல்வா குடுத்தார் பாருங்கள்...கரெக்ட் பதத்தில் வந்திருந்தது.
ஐகாரஸ் பிரகாஷ் மீட்டிங்கில் இருந்ததால் அவர் நண்பர் தான் போனை எடுத்தார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நான் ஐ.சி.ஐ.சியையோ என்று சந்தேகம் என்று நினைக்கிறேன். நான் வேற ஏகப்பட்ட சொதப்பல்
பிரண்டா...? லண்டனா? இப்போ எங்கேர்ந்து பேசறீங்க? உங்க பேரு என்ன? என் பேரு இது..ஆனா டுபுக்கு சொன்னா தான் தெரியும்ன்னு சொன்னவுடன் ஒரு ஐந்து வினாடி மௌனம்....அவர திரும்ப பேசச் சொல்றேங்கன்னு உஷாராக வைத்தார்.
பிரபு கார்த்திக் கரெக்டாக லஞ்ச் டயமில் மாட்டிக்கொண்டார் "இங்கிலீஷ் ப்ளாகெர்ஸ்லாம் நிறைய பேர் இருக்காங்களே..நீங்க ஏன் ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு பந்தாவா ப்ளாகர்ஸ் மீட்க்கு வரக்கூடாது" என்று கூட்டத்துக்கு அடியப் போட்டவுடன் பிரபு கார்த்திக் "(ஆபிஸுல) மீட்டிங்க்கு போனும் மேடம் வைய்யும்"ன்னு நழுவிட்டார். இருந்தாலும் உடனே செல் நம்பரை மாற்றாமல் பொறுப்பாய் அடுத்த நாள் சந்திப்புக்கு அவ்யுக்தாவை அழைத்துவந்தார்.
சிட்டி சென்டர் வாசலில் இரண்டு பேர் டுபுக்குன்னு அவர்களுக்குள் விளித்துக்கொண்டது தெரியாமல் அவர்களும் ப்ளாகர்ஸ் மீட் தான் போலன்னு போய் வழிந்து சுதாரித்து அப்புறம் நாலாவது மாடிக்கு எப்படி போகனும்ன்னு வழி கேட்டு அவர்களும் "எல்லா இடத்தையும் மாதிரி இங்கையும் மேலே தான் போகனும்"ன்னு பொறுப்பாய் வழி சொல்லி, நான் போன அப்புறம் துப்புகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனால் தோளை தட்டி "நீங்க டுபுக்கு தானே" என்று ஒருவர் கேட்டார். சரிதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கு போல என்று இந்த தரம் சொதப்பினால் மூனாவது மாடிக்கு வழி கேட்கலாம் என்று கூச்சமே இல்லாமல் ஆமாம் நானே தான் டுபுக்கு என்றவுடன் செந்தில் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.
(குரு) நிஷா தவிர , கட்டாயம் வருகிறேன் என்று அடித்து சொன்ன அம்மணிகள் எல்லாரும் கரெக்ட்டாய் டிமிக்கி குடுத்துவிட்டார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லாருக்கும் கடைசிக்கு முந்தின நிமிடத்தில் வேலை வந்துவிட்டது. அதிலும் நித்யாவிற்கு ஆட்டோவில் ஏறியதுக்கு அப்புறம் ஆபிஸில் கூப்பிட்டு சனிக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு அப்ரைசல் வைத்துவிட்டார்கள். அம்பிக்கு முந்தின நாளே தங்கமணியிடம் பெர்மிஷன் கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியுமாகையால் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அம்பி போன் போட்டு நங்கநல்லூரில் பனி மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்தார். விக்கியும் குருவும் ஏன் பெண் பதிவர்கள் ஒருவரும் வரவில்லை என்று என்னிடம் ஏமாற்ற தொனியில் கேட்கவே இல்லை. அதிலும் விக்கிக்கு ஏகப்பட்ட வருத்தம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. பதினான்கு பேர்கள் வந்திருந்தோம். ஓரிரண்டு பேரைத் தவிர முந்தின நாளே தொலைபேசியிருந்ததால் தெம்பாகவே போயிருந்தேன். போன பிறகு தான் அடுத்த நாள் இன்னோரு மாபெரும் வலைப்பதிவர் கூட்டம் ஒன்று நடக்கப்போவதாக தெரிந்தது. தெரிந்திருந்தால் அந்த நாளிலேயே போய் ஜோதியில் ஐய்க்கியமாகியிருப்பேன்.
குரு நிஷா முதலிலேயே சிட்டி சென்டருக்கு வந்து சாப்பாடுகடையை முடித்துவிட்டார்கள். படு க்யூட்டான குழந்தைகளை பார்த்துக்கொள்ள நிஷா கிளம்ப்பி முதல் மாடிக்குச் செல்ல மெதுவாக எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். பாபா இரண்டு சேர் தள்ளி முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டு சாப்பாடு ஒரு கட்டு கட்டி முடித்தவுடன் நைஸாக போன் பண்ணி எங்கே இருக்கிறீகள் என்று புதுசா கேட்கிற மாதிரி கேட்டு ஜோதியில் சேர்ந்துகொண்டார்.
கதிர், செந்தில், இகாரஸ் பிரகாஷ், உண்மைத்தமிழன், பாபா, பாபாவின் அண்ணன், விக்கி, சிமுலேஷன், டோண்டு, அவ்யுக்த்தா, குரு, பிரபு கார்த்திக் என்று நீளமேசை மாநாடு தொடங்கியது. சமுதாயம், தமிழ், வலைப்பதிவுகளின் எதிர்காலம் - என்று பொறுப்பில்லாமல் பேசாமல், அனானி ஆட்டம், ஏன் அனானிக்கள் சில பதிவுகளை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள், இட்லி வடை இந்நேரம் இந்த சந்திப்பு போட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருப்பாரா? ப்ளாகர்ஸ் மீட் நடத்த சென்னையில் இது மாதிரி கல்ர்புல்லான இடங்கள் வேறென்ன என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மைத்தமிழன் கடமை வீரராக பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த காதல் ஜோடிகள் ஒரு மணிநேரமாய் ஒரு சூஸை உறிஞ்சிக்கொண்டே கடலைப் பார்த்து கடலை போட்டுக்கொண்டிருந்ததை சொல்லி பெருமூச்சோடு சமூக பிரக்ஞை காட்டினார்.
டோண்டுவுக்கு போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன், அடிக்காத போனை காதில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கூப்பிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வீட்டில் விருந்தாளிகள் வந்து காத்துக்கொண்டிருப்பார்களே என்று கேட்பதற்கு முன் அவரும் அதையே சொல்லி அப்பீட் ஆகிவிட்டார். சிமுலேஷனும் ஜூட் விட மீதமிருந்த கூட்டம் பீச்சுக்கு போய் காத்தாட உட்கார்ந்து பேசலாம் என்று கிளம்பினோம். நடுவில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் அப்படி என்ன பீச்சுக்குப் போய் அரட்டை என்று நிஷா குடுத்த மண்டகப்பிடியில் "எனக்கு பீச்சுல கண்டம்" என்று குருவும் ஒதுங்கிக் கொண்டார்.
பீச்சுக்கு போன மிச்சம் பத்துபேரும் ஐ.நா சபை மாதிரி ஒரு முடிவுக்கே வராமல் நிறைய விஷயங்களைப் பேசினோம். பாபாவிற்க்கு ட்விட்டரிலிருந்து எவ்வளவு கமிஷன் என்று கேட்ட மறந்துவிட்டது. டிவிட்டர் பற்றி நிறைய பேசினார். பி.கே, அவ்யுக்தா, விக்கி, கதிர் பிரகாஷ் எல்லாரும் பல்வேறு விஷயங்களில் லெவல் காட்டினார்கள். உண்மைத்தமிழன் இனிமையாக பழகினார். நான் வழக்கம் போல தமிழ் திரையுலகில் மலையாள மற்றும் மும்பை நடிகைகளின் மேலாண்மை குறித்தும், மேற்படி சமூகத்தின் தாக்கத்தை இல்லறம் தாக்காமல் சமச்சீருடன் நெறியாள்கை புரிவது எப்படி என்று கருத்தாடலில் ஈடுபட்டேன்.
மொத்தத்தில் நிறைய பேரை சந்தித்ததில் மிக இனிமையாக இருந்தது ஆனாலும் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது உண்மை.(அவர்களுக்கும் இதுவே தோன்றியதா தெரியவில்லை).
அடுத்த நாள் நண்பர் ஆடுமாடு-வை சந்திக்க முடிந்தது. மிக சுவாரசியமான மனிதர் சுவாரசியமான வேலை வேறு பார்க்கிறார். என்னுடைய சேலஞ்ச் விஷ்யத்தில் ஏற்கனவே உதவி செய்வதாக வக்களித்ததை மறக்காமல் சினிமாவில் தலையைக் காட்டுவதற்க்கு இயக்குனர் வசந்தபாலனிடம் வேறு பேசி வைத்திருந்தார். அக்டோபரில் திரும்ப வருவேன் அதற்குள் பெர்சனாலிட்டியை ஏத்தி "சார் போஸ்ட்" டயலாக் எல்லாம் பேசி பழகிவருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் முன்னாடியே வார்னிங் கொடுத்துக்கொள்கிறேன் :))
இதில் சந்தித்தவர்களிடம் கேட்க மறந்த இன்ன பிற கேள்விகள்
•பிரகாஷ் - ஐகாரஸ் - காரணப் பெயரா?
•பாபா - ப்ளாகர்ஸ் மீட்டுக்கெல்லாம் முக்கா டவுசர் போட்டுகிட்டு வருகிற இரகசியம் என்ன? இந்த முறையும் என்.ஆர்.ஐ கோட்பாடின் படி ரோட்டோர பாட்டி, சுவரோர போஸ்டர், சூச்சா போகிற நாய்குட்டி நிழற்படங்கள் எடுத்தீர்களா?
•கதிர் - வெறும்ன படித்துவிட்டு ஊக்குவிக்கிற உங்கள் எனர்ஜி எங்கிருந்து சீக்கிரட் என்ன?
•செந்தில் - அடுத்த தரமாவது காராசேவ் வாங்கித் தருவீங்களா?
•பிரபு கார்த்திக் - என்னை வைத்து சூசகமாக He- He சீரிஸில் மேட்டர் ஏதாவது வருமா?