Friday, April 13, 2007

தாய்லாந்தில் தைப்பூசம்

நண்பர் பஸ்பாஸ் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர். என் மேல் இன்னமும் நம்பிக்கையும் நல்லெண்ணம் கொண்டிருப்பவர். சமீபத்தில் நம்ம நடிப்பில் வெளிவந்து ஓகோன்னு ஓடின படத்தைப் பார்த்து இம்ப்ரெஸாகி அவரது "ஓகோ புரெடெக்க்ஷன்ஸில்" மூன்று படங்களுக்கு நம்மை புக் செஞ்சு பூஜை போட்டு ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் அனுப்பியிருந்தார். என்னடா நம்மை வைச்சு காமெடி பண்ணியிருக்கிறாரே நமக்கு தான் விளம்பரமே பிடிக்காதே (அப்பிடியான்னு கேக்காதீங்க...எனக்கே இன்னும் இந்த விஷயம் தெரியாது) ஒரே யோசனையா இருந்தது. இருந்தாலும் நம்ம பஸ்பாஸின் முயற்சி வீணாகக்கூடாதே என்று இங்கே போட்டுவிட்டேன். என்ன "தாய்லாந்தில் தைப்பூசத்துல" மட்டும் யானை, பாம்பு, ஆடுன்னு எல்லாத்தையோடும் நடிக்கவேண்டியிருக்கும். ஹீரோயினா மீரா ஜாஸ்மின மட்டும் போட்டுட்டா எந்தக் கழுதையோட வேணும்னாலும் நடிக்க ரெடி :)) எதாவது நல்ல ஸ்கிரிப்டு வெச்சிருக்கீங்களா?




இனி Over to BussPass. ஒரிரண்டு இடைச்செருகலைத் தவிர அனைத்தும் பஸ்பாஸின் ஓகோ புரெடெக்க்ஷன்ஸ் சரக்கு.

சுடுவேன்...டா..

ஹீரோ அறிமுகம்:

நீங்க ஒரு பிரபலமான MNC-ல ரொம்ப ரொம்ப நேர்மையான செக்யூரிட்டி ஆபிஸர்... ஓகே.. வாட்ச்மேன். பகல் நேரத்துல ராம்போ கெட்டப்புலயும் பொழுது சாய்ஞ்சா ஒரு கிழிஞ்ச சால்வைய போர்த்திகிட்டு கைல லாந்தர் விளக்கோட காம்பவுண்ட சுத்தி வருவீங்க. என்னதான் வாட்ச்மேன்னாலும் உங்களுக்கு கீழ வேல பாக்குற இன்டெர்ன் வாட்ச்மேன் முதற்கொண்டு சி.ஈ.ஓவோட ஒன்னு விட்ட தங்கச்சி வரைக்கும் எல்லார்க்கும் நீங்கதான் செல்ல பிள்ளை.

வில்லன் அறிமுகம்:

இப்படியாபட்ட உங்களுக்கும் புட்டு மாதிரி தெளிவா இருக்கிற உங்க கேரியருக்கும் இடியாப்ப சிக்கல் மாதிரி வர்றாரு R.சம்பத்குமார். வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடியே R.சம்பத்குமார் ஐடி கார்டு வச்சிருக்கிறத பார்த்து நீங்க பொங்கிடுறீங்க. அவர தடுத்தும் நிறுத்திடுறீங்க. அவரு உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போதே நீங்க சட சடன்னு மாடிக்கு ஓடி போயி.. அங்கிருந்து R.சம்பத்குமார் மேல பாய்ஞ்சி அவர பிரிச்சி மேய்ஞ்சிடுறீங்க.

R.சம்பத்குமாரோட சித்தப்பா V.சம்பத்த்குமார் தான் உங்களுக்கு மிகப்பெரிய எதிரின்னு உங்களுக்கு அப்போ தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல.. ஏன்னா நீங்க தர்ம அடி அடிக்கும் போது நிதானத்த இழக்குற dysfunctional hit-hit syndrome அப்படிங்கிற நோயோட கிரிட்டிக்கல் ஸ்டேஜில இருக்குறீங்க.

ஹி..ஹி..ஹீரோயின் அறிமுகம்.

இப்படி நீங்க வில்லன் மேல தவ்வுறதுக்காக மாடிப்படி ஏறுனீங்க இல்ல... நீங்க டைவ் பண்ணி குதிக்குறதுக்காக ஒரு ஸ்பிரிங் போர்ட் தேவை பட்டது, சுத்திமுத்தி பார்த்துட்டு அந்த வழியா போயிட்டு இருந்த ஹீரோயினோட ஹை ஹீல்ஸ சப்ஸ்டிட்யூட் பண்ணிடுறீங்க. VP of Strategy and Planning'ஆன ஹீரோயின் செருப்பு போடாத காலோட Board meeting அட்டெண்டு பண்ணத Directors பாக்குறாங்க.. காப்பி பிஸ்கட் எடுத்துட்டு வர்ற அஸிஸ்டண்ட் பாக்குறாரு, Live conference'ல Onsite team பாக்குது,ஹீரோயினோட கார் டிரைவர் வாய் விட்டு அழறாரு...

ப்ளாஷ் பேக்

ஒரு நாள் நீங்க மசால் வடைய மானாவாரியா சாப்பிட்டுட்டு பல் குத்திட்டு இருக்குப் போது உங்க நினைவலைகள் பின்னோக்கி பாயுது... நீங்க ஹார்வார்ட் யுனிவர்சிடி'ல PhD Gold medallist. Thesis defense போது Professor கேட்ட கேள்விக்கு நீங்க சம்பந்தம் இல்லாம watchman ஆக போறதையும் ambassador of the economically deprieved, the cornerstone of the society ஆக போறதையும் சொல்லி இருக்குறவங்கள மிரள வச்சத பெருமையோட அசைபோடுறீங்க...

திருப்பம்

ஒரு தடவ, நீங்க V. சம்பத்த்குமார் பார்கிங்க் பெர்மிட் இல்லாம கார் பார்க் பண்ணதுக்காக அவர் சட்டைய பிடிச்சுடுறீங்க. ஆனா அவர் நீங்க கையெழுத்து போட்டு குடுத்த பார்கிங்க் Decal'அ காட்டுறார். வில்லன் பழி வாங்குறதுக்காக ஏமாத்துறாருன்னு தெரிஞ்சும் ஹீரோயின் உங்கள சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. இப்பவும் ஹீரோயினோட கார் டிரைவர் வாய் விட்டு அழறாரு...

க்ளைமாக்ஸ்
இவ்ளோ நடந்த பிறகு உங்களுக்கு நரம்பு முறுக்கேறி Scuba diving suit, முதுகுல ஆக்ஸிஜன் டாங்க் மாட்டிக்கிட்டு கைல gloves போட்டுகிட்டு டூப்ளிகேட் சாவி வைச்சி வில்லன் கார்'ல நுழைஞ்சி அவர் கிட்ட இருந்தே பார்கிங்க் பெர்மிட திருடிடுறீங்க. அப்புறம் வில்லன துரத்துறீங்க.

அப்புறம் போலீஸ் வந்துடுது. வில்லன் சிரிச்சிகிட்டே இன்ஸ்பெக்டர் கிட்ட போயி "எங்கிட்ட பெர்மிட் இருக்குது" அப்படிங்குறார். இன்ஸ்பெக்டரும் "Show me..." அப்படிங்குறார். கார தொறந்து பார்த்தா (டான்..டான்) பெர்மிட்ட காணோம். அப்போ ஹீரோ ஆக்ரோஷத்தோட இடது கைல பெர்மிட்ட தூக்கி காமிச்சி. வில்லன பார்த்து வலது கைய நீட்டி சொல்லுறாரு.... "சுடுவேன் டா!"

லொட்டு லொசுக்கு

ஹீரோயினோட on site போறது.. கிராமத்துல இருக்கிற அத்தை பொண்ணுக்கு gmail ID க்ரியேட் பண்ணுறது, நைட் டுட்டி போது குத்து பாட்டுக்கு ஆடுறது.. அப்படீன்னு பல ஐட்டத்த சேர்த்து விட்ருவோம்.

ஹீரொ ராதிரியெல்லாம் கண்ணு முழிச்சு சேட்ல பொண்ணுங்கள கடலை போட பிடிக்க கம்ப்யூட்டர்ல ரொம்ப ட்ரை பண்றது...அதுனாலா காலைல அவரு கண்ணு பொங்கி அவங்க அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் இவரு எண்ணமோ சின்னக் குழந்தை மாதிரி எண்ணை தேய்ச்சு குளிப்பாட்ட எண்ணைய தூக்கிட்டு அவரு பின்னாடி ஓடறது. பின்னாடி அப்பிடியே ஒரு செண்டி சாங்க்.

ஒருதரம் ஹீரோயின் ஏய் வாட்ச்மேன்னு கூப்பிட ஹீரோ பொங்கியெழுந்திடறாரு. "தமிழ் நாட்டுல இருக்கிற அப்பார்ட்மெண்ட்ஸோட எண்ணிக்கை மொத்தம் என்பது லட்சத்தி நாப்பதாயிரத்தி நானூத்தி மூனு இதுல வாட்ச்மேன் இருக்கிற அப்பர்ட்மெண்ட் அறுபத்தியிரண்டு லட்சத்தி ஏழாயிரத்தி ஒன்பது, இதுல வேலைக்கு இருக்கிற வாட்ச்மேன்கள் அம்பது லட்சத்தி ஒன்பதாயிரத்தி பத்து, இதுல யூனிஃபார்ம்ல இருக்கிறவங்க நாலு லட்சத்தி அம்பதாயிரத்தி நூத்தி பதினேழு. இவங்களுக்கு வெய்யிலுண்டா மழையுண்டா, வேலை செய்யும் போது படுத்து தூங்கிறதுக்கு பெட் உண்டா, சேட் செய்யறதுக்கு ப்ராட்பேண்ட் கனெக்க்ஷன் உண்டா, அரட்டை அடிக்கிறதுக்கு செல் போன் உண்டா...வெறும்ன ஒட்டடை அடிக்கிற ஒரு குச்சியக் கைல குடுத்து சுத்திவரச் சொல்லுகிற இவங்கள பத்தி யாராவது கவலப்பட்டிருக்கீங்களா?
நாங்க இந்தக் குச்சியப் பிடிச்சா தான் நீங்க தூங்கி எந்திரிச்சு காலைல பல் தேய்க்கிற குச்சிய பிடிக்க முடியும்,(பி.ஜி.யெம்)
நாங்க ரோந்துக்கு கருப்புப் போர்வைய போத்தினா தான் நீங்க தூங்கிறதுக்கு இழுத்திப் போர்த்திப் படுக்க முடியும்.(பி.ஜி.யெம்)

இனிமே வாட்ச்மேன வாட்ச்மேன்னு யாரும் கூப்பிடாதீங்க...வாட்ச்சார்ன்னு தான் கூப்பிடனும்...இல்லைன்னா நான்...." என்று ஸ்கிரீனைப் பார்க்கிறார்...பேக்கிரவுண்டில் டுமீல்ன்னு சுடுகிற சத்தம். அப்பிடியே தியேட்டர்ல க்ளாப்ஸ்.பிச்சிக்கிது.

Thursday, April 05, 2007

வியர்டு

இந்த வியர்டு பதிவுல என்னையும் இழுத்துவுட்டுட்டு போடுறயா இல்லையான்னு கொத்ஸ் தொல்லை தாங்கமுடியலை. தீக்க்ஷன்யா முன்னாடி ஒரு சங்கிலி பதிவுக்கு கூப்பிடிருந்தாங்க...அவுக நல்லவக.. நான் போடாட்டாலும் பெருந்தன்மையா மன்னிச்சுவிட்டுட்டாங்க (அப்படித் தானே? தப்பா எடுத்துகாதீங்க மேடம் உண்மையிலேயே அப்பிடியே விட்டுப் போச்சு).

இந்த வியர்ட்டு பதிவு ரொம்பவே கஷ்டமாயிருந்தது. ஏதாவது ஒன்னு ரெண்டு கேனத்தனமா செய்யிற பார்ட்டியா இருந்தா டக்குன்னு போட்டிருலாம். எல்லாமே கேனத்தனமா செய்யும் போது..என்னன்னு போடறது?

சின்ன வயசுலேர்ந்தே வீட்டுல தெருவில ரொம்ப மரியாதை சொல்லிக் கொடுத்து ஒரு பழக்கம் உண்டு. யாரையாவது தெரியாம காலால மிதிச்சுட்டோம்னா உடனே தொட்டு கும்பிடனும். இநத பழக்கம் எனக்கு ரொம்பவே பத்திக்கிச்சு...எவ்வளவுதூரத்துக்குன்னா...நான் மிதிச்சேன்னா மட்டும் இல்ல யாராவது என்ன தெரியாம மிதிச்சுட்டாலும் நான் அவங்கள தொட்டு கும்பிடுவேன். இந்த பழக்கம் அப்பிடியே டாப் கியருல போய்..யாராவது என்ன மிதிச்சுட்டு நான் அவங்கள தொட்டு கும்பிடாட்டா கஞ்சா கிடைக்காம கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இழுத்துக்கிற மாதிரி ஆகி விடும். எப்பேற்பட்டாவது மிதித்தவர்களை தொட்டு கும்பிடனும்ன்னு உள்ள ஒரு வெறி வந்துவிடும். அவங்கள எப்பிடியாவது தொட்டுட்டு அந்த கைய எங்கயும் டச் பண்ணாம யாரும் பார்க்காத போது(பார்த்தா கேலி பண்ணுவாங்களேன்னு) அப்பிடியே கண்ணுல ஒத்திக்குவேன்.

ஒரு தரம் எங்க ஊர் திருவிழா கூட்டதுல போகிற அவசரத்துல ஒரு பொண்ணு ஒன்னு கால மிதிச்சிடுச்சு. (ரொம்ப கற்பனை பண்ணாதீங்க..அப்போ எனக்கு பத்து வயசு தான் இருக்கும்) மிதிச்சதோடு அல்லாம கூட்டத்தோடு கூட்டமா அவங்க அப்பா அம்மாவோட அந்தப் பொண்ணு போய்கிட்டு இருக்கு. எனக்கு கடமையுணர்ச்சி மேலிட எப்பிடியாவது அந்த பொண்ண தொட்டு கும்பிடனும்னு சாமி வந்து விட்டது. கூட இருக்கிற நாசமா போகிற பயபுள்ளைகளெல்லாம் "விடாதடா நமக்கு நம்ம லட்சியம் தான் முக்கியம்ன்னு" ஏத்தின் ஏத்துல எப்படியாவது தொட்டு கும்பிட்டுவிடவேண்டும்ன்னு கூட்டத்துல விடாம ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். அந்த பொண்ணு அடிக்கடி திரும்பி வேற பார்த்துவிட்டது. ஒரு சர்பத் கடையில் அவங்க அப்பா அம்மோவோடு ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது இதான் சமயம்ன்னு நானும் கடைக்கு பக்கதுல போக, நம்ம நல்லெண்ணம் தெரியாம அந்தப் பொண்ணு தேமேன்னு ஜூஸ் குடிக்கிறத விட்டுட்டு அவங்க அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்துவிட்டது. அது தான் சின்னப் பொண்ணு எதோ தெரியாம பண்ணிருச்சுண்ணா அவங்க அப்பாக்கும் அறிவில்லை...அவரு முறைச்சிக்கிடே என்னை நோக்கிவர...விடுவேனா நான்?..நிக்கலையே... ஒரே ஒட்டம் தான். அவங்க அப்பாவும் என்ன மாதிரி தொட்டு கும்பிடற பாலிஸி வைச்சிருந்தார் போல...கொஞ்ச நேரம் தொடர்ந்து தொரத்திக்கிட்டு வந்தார். ஆனா அவரு பாலிஸி நம்மள மாதிரி ஸ்ட்ராங்கா இல்லாததுனால அப்புறம் திரும்ப ஜூஸ் குடிக்கப் போயிட்டார். நல்லவேளை அதுக்கப்பறம் தொட்டு கும்பிடுகிற பழக்கம் படிப்படியா குறைஞ்சு டீனேஜ் வர்றதுக்குள்ள போயே போயிடிச்சு.

டாப் ஐந்தில் அடுத்து வருவது...நம்ம கூச்ச சுபாவம். அது என்னமோ தெரியலை வெளிப் பெண்கள் முன் பனியன் மட்டும் அணிந்து கொண்டிருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கூச்சப்படுவேன். கையில்லா முண்டா பனியன் தான் போடுவேன். சில சமயம் கோவில்களில் எல்லார் முன்னும் சட்டையில்லாமல் கூட இருந்திருக்கிறேன் ஆனால் பனியன் அணிந்துவிட்டால் உடனே சட்டை அணியவேண்டும். அதாகப்பட்டது வெற்றுடம்போடு இருப்பதை விட பனியோடு இருந்தா கூச்சம் ஜாஸ்தியாகிவிடும். "ரொம்ப வெட்கமா இருந்தா பேசாம பனியனை கழட்டிவிடு"ன்னு வீட்டில் தங்கமணீயும் கசின்களும் நிறைய ஓட்டியிருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம். இப்போ கொஞ்சம் அந்தக் கூச்சம் போய்வருகிறது. இன்னும் முழுவதும் இல்லை. இந்த வாரம் இதற்கு ஒரு பரீட்சை இருக்கிறது பார்ப்போம்.

இது போல் சின்னவயதிலிருந்து ஒட்டிக் கொண்ட ஒரு விஷயம் பாயசத்தில் சேமியா போட்டால் சுத்தமாய் பிடிக்காது. தொடவே மாட்டேன். சின்ன வயதில் நான் புழு சாப்பிடுவேன் தெரியுமான்னு சேமியா பாயாசத்தை உதட்டில் வழிய சாப்பிட்டுக் காட்டிய நண்பன் ஒருவன் விட்ட புருடாவில் அந்த வெறுப்பு அப்பிடியே தங்கிவிட்டது. இன்னும் கண்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது. அதுவும் சேமியா நிறைய போட்டு கெட்டியக இருந்தால் கேடகவே வேண்டாம். அது என்னம்மோ தெரியவில்லை ஹோட்டல் அளவு சாப்பாடிலிருந்து ஊரில் விருந்துக்கு கூப்பிடும் சொந்தக்காரர்கள்/தெரிந்தவர்கள் வீடு வரை அனைவரும் இந்த சேமியா பாயசம் தான் வைக்கிறார்கள். தஙகமணி உறவுக்கார வீட்டில் "இது அணில் சேமியா" என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார்கள். அணிலாவது ஆட்டுக்குட்டியாவது...வாயில வைக்க முடியலை. வயிறெரிந்து கொண்டு தங்கமணி அன்ட் கோ சப்புக்கொட்டி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வியர்ட்டு இப்போதைக்கு அம்புட்டுத்தேன்...

விருப்பமுள்ள அனைவருக்கும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.