Monday, September 24, 2007

ஹாலிடே-2

தங்கமணியின் கடுகு எடுத்து வைச்சாச்சா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது. "இதோ பாரு பெட்ரோல் விக்கிற விலைக்கு கடுகு மேட்டருக்கெல்லாம் காரைத் திருப்பமுடியாது" என்று டயலாக் விட வாயைத் திறக்கும் போது சேட் நேவ்வின் ரிமோட் மற்றும் மொபைல் போன்கள் இருக்கும் பையை வீட்டிலேயே வைத்து விட்டது நியாபகம் வந்தது.

"எலே மண்டைன்னா பொடுகில்லாம இருக்க முடியாது, சமையல்ன்னா கடுகில்லாம இருக்கமுடியாது நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துலேர்ந்து சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்துலயும் யாராவது கடுகில்லாம சமைச்சிருக்காங்களான்னா பொறந்து குழந்தை கூட 'இல்லை'ன்னு பத்து லாங்குவேஜ்ல சொல்லும்டா.. என்னடா பர்த்துட்டிடுருக்க...சண்முகம் வண்டிய வூட்டுப் பக்கம் திருப்புலான்னு" விஜயக்குமார் மாதிரி டயலாக்வுட்டு சமாளிச்சு வீட்டுக்குப் போய் பார்த்தா கடுகைத் தவிர இன்னும் இரண்டு மூன்று முக்கியமான பைகளையும் வைத்துவிட்டு வந்திருந்தது தெரிந்தது.

எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்ப பயணத்தை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து வழியிலிருந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நிப்பாட்டும் போது "தயிரை பிரிஜிட்லிருந்து எடுத்து வெளியே வைச்சிருக்கேன் கிளம்பறதுக்கு முன்னாடி நியாபகப் படுத்துங்க"ன்னு தங்கமணி நியாபகப் படுத்தச் சொன்னது நியாபகத்துக்கு வர "மண்டைன்னா மயிரில்லாம இருக்காது சாப்பாடுன்னா தயிரில்லாம இருக்காது"ன்னு மீண்டும் விஜய்குமார் டயலாக் விட்டால் வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் என்பதால் ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.

"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.

சேட்நாவ் புண்யத்தில் பயணம் எந்த குழப்பமோ, சண்டையோ இல்லாமல் சப்பென்றிருந்ததால் குழந்தைகளும் போரடித்து நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஐந்தரை மணி நேரத்துக்கப்புறம் வேல்ஸ் எல்லையை தாண்டி உள்ளே போகும் போது வேல்ஸின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மலையில் அடர்ந்த காட்டுக்கு நடுவே காட்டாறைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது மிக ரம்யமாக இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தார்கள்.

தங்கப் போகும் இடத்தை பார்த்ததும் மனம் குதூகலித்தது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகான மரவீடு. இறங்கி கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அடுத்த நாள் பீச் பீச்சாக சுத்தினோம். இதற்கு முன் ஏப்பிரலில் நண்பர்களோடு ஐல் ஆஃப் வொய்ட் போயிருந்தோம். வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான பயணம் அது. மிக மிக குதூகலமாக காலேஜ் வாழ்கை மாதிரி ஜாலியாக இருந்த பயணம். எனக்கு ஒரு நீண்ட நாளைய ஆசை ஒன்று உண்டு. "தீப் பிடிக்க தீப் பிடிக்க" பாட்டில் ஆர்யா போட்டுக் கொண்டு வருவது மாதிரியான முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் மணலில் ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரவேண்டும் அதை படமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. தங்கமணியிடம் எப்படி கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு எல்லாத்தையும் விளக்கு விளக்கு என்று முன்பே விளக்கியிருந்தேன். கிடைத்த சந்தர்பத்தை கோட்டை விடாமல் காறித் துப்பிவிட்டு ஒருவழியாக சம்மதித்திருந்தார். பீச்சுக்கு போன பிறகு லொக்கேஷன் ஃபைனலைஸ் பண்ணிவிட்டு அம்மணியைத் தேடினால் காணோம். தனது தோழியோடு ஜாலியா செல் போனை வேறு ஆஃப் செய்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பீச்சில் ஒரு நீளமான குட்டைச் சுவர் இருந்தது. நான் அதற்க்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன் நீ லாங் ஷாட்டில் ரெடி சொன்னவுடன் குட்டைச் சுவற்றில் ஏறி குதித்து ஹீரோ மாதிரி ஓடி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். நன்றாகத் தலையை ஆட்டிவிட்டு அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விட்டார்.

இது தெரியாமல் நான் குட்டைச் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்போ ரெடி சொல்வார் அப்போ ரெடி சொல்வார் என்று பார்த்தால்...வழியக் காணும். இதற்குள் நண்பர்கள் என்ற பெயரில் கூட வந்த வானரக் கூட்டம் எடுத்த படம் தான் கீழே.(க்ளிக்கியவரும் பிரபல ப்ளாகர் தான்)

ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.

Sunday, September 09, 2007

ஹாலிடே

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது லீவுவிட்டா ஊரிலிருக்கும் காத்தாடுகிற கிருஷ்ணா தியேட்டரில் எங்க தாத்தா பார்த்து ஜொள்ளுவிட்ட அஞ்சலி தேவி படம் போடுவான் (மூதேவி ஹாஃப் இயர்லி எக்ஸாம் போதுதான் புத்தம் புதிய ரிலீஸ்லாம் போடுவான்). அதுக்கு கெஞ்சிக் கூத்தாடி பிரெண்ட்ஸோடு போறோம்ன்னு சொல்லி ரெண்டு பேர் போவோம். அதுக்கு கூட புது ட்ராயர்லாம் போட்டுக்கொள்ள முடியாது. நாங்கள் வழக்கமாக போகிற சிமிண்ட் பென்ச் டிக்கெட்டில் தேய்த்து தேய்த்து ட்ராயர் கிழிந்துவிடும் என்று மாமி ஆட்சேபிப்பார் என்பதால் குலேபகாவல்லி டிராயர் மட்டும் தான் அனுமதி. அது டிராயரா பாவாடையா என்று பார்ப்பவர் சந்தேகம் தீருமுன் கூட்டமில்லாத பெண்கள் வரிசையையில் புகுந்து டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் முன்னாடி சாய்ந்து கொள்ள வச்சதியாக திண்டு இருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்துவிடுவோம். இருபத்தைந்து பைசாவுக்கு ஒரு நீளமான மைசூர்பாகு கிடைக்கும் அதை வாங்கி, எழுத்து போடும் போது உறிஞ்ச ஆரம்பித்தோமானால் அஞ்சலி தேவி இரண்டாவது டேன்ஸ் பாட்டு ஆரம்பித்து முடிப்பதற்க்குள் காணாமல் போயிருக்கும். அதற்கப்புறம் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து, அப்புறம் டொய்ங் என்று பி.ஜி.எம்ல்லி அஞ்சலி தேவி அழும் போது திண்டில் சாய்ந்தால் அப்பிடி ஒரு கிறக்கத்துடன் கண்ணைச் சுழற்றும், அழுகையெல்லாம் முடிந்து ஜெமினி கணேசனுக்கு வீரம் வரும் போது "இனிமே டேன்ஸ் கிடையாதுபா வெறும் சண்டை தான் " என்று பக்கதிலிருக்கும் பெரிசு அங்காலாய்த்து எழுப்பிவிடும். இந்த சமயத்தில் கருப்பு உள்பாவாடை ஸ்லிவ்லெஸ் சோளி தாடி மந்திரவாதி, மந்திரக்கோல், பாம்பு, உம்மாச்சி என்று கதை பட்டயக் கிளப்பும். அப்பிடியே மயிற்கூச்செரியும் முடிவை பார்த்து விட்டு பத்து நாளைக்கு அந்த படத்தை பற்றி பார்க்காதவர்களிடம் பேசி அதற்க்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டால் இல்லாத ரெண்டு மூன்று காட்சியை வேறு சேர்த்துக்கொண்டு இப்படியே ஹாலிடே போய்விடும்.

இங்கே மகளுக்கு ஸ்கூல் விடுமுறை விட்ட அடுத்த நாளே "வேர் ஆர் வி கோயிங்" ஆரம்பித்துவிட்டது. கலெக்க்ஷனில் இருக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" போட்டாலே காத தூரம் ஓடுகிறாள். தங்கமணிக்கு " நான் உழைத்து உழைத்து ஓடாய் போகிறேன்" என்று கவலை வேறு. அவர்களுக்குப் பிடித்த இடமாய் எங்காவது ஹாலிடே போய் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் என் மன உளைச்சலெல்லாம் சொஸ்தமாகும் என்று வேல்ஸ் போகலாம் என்று ஏகமனதாய் தீர்மாணமாகியது. ஊரிலிருந்து மாமியார் வேறு வந்திருக்கிறார்கள் என்பதால் நமக்கு கொஞ்சம் சப்போர்ட், தங்கமணி பக்கம் ஓவரால் மெஜாரிட்டி கிடையாது இருந்தாலும் நானும் வழிமொழிய ஓகே ஆனது. அடர்ந்த காட்டுக்கும் நடுவில் காட்டேஜும் புக் செய்து பிரயாண யத்தம் களை கட்ட ஆரம்பித்தது.

"நாலு நாளுக்கு தானே போறோம் இதுக்கு எதுக்கு ஆயிரெத்தெட்டு பேக்? "

"எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்"

"என்ன எல்லாத்துக்கும் சும்மா சேஃப்டிக்கு..சேஃப்டிக்குன்னு சால்ஜாப்பு"

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் ஆனானப்பட்ட சுப்பர்மேன் ஷூ போட்டுக்கொண்டு இருக்கிறார், வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஆளாளுக்கு அடுக்க, எடுத்துக்கொண்டு போக வேண்டிய சாமான்கள் அபாய நிலையை அடைந்தது. "இந்த லெவலில் போச்சுன்னா இதையெல்லாம் நிரப்பி வெறும் காரை மட்டும் ஹாலிடெக்கு அனுப்ப முடியும்" என்று நான் திட்டவட்டமாக சொல்லிவிட, தங்கமணி பயந்து போய் குட்டி எலுமிச்சம்பழத்தை எடுத்து வெளியில் வைத்துவிட, "அது...தலையப் பார்த்து அந்த பயமிருக்கட்டும்.." என்று அஜீத் மாதிரி சவுண்ட் விட எதுவாக இருந்தது. செல்ப் கேட்டரிங் காட்டேஜ் என்பதால் சமையல் சாமான்கள் வேறு எடுத்துப் போக முடிவு செய்திருந்தோம். நாலு நாள் மளிகை சாமான் பட்ஜெட் மாச பட்ஜெட்டை தாண்டியிருந்தது. மாமியார் சப்போர்ட் இருந்ததால் சில முக்கய மேட்டர்களில் சீனியர் மெம்பர் வீட்டோ உபயோகப்படுத்த முடிந்தது. ஆனால் அதையும் "எட்டு வருஷமா மாப்பிளைக்கு அடிச்ச ஜால்ரா போதும் ரொம்ப ஓவரா ஜிங்கிச்சா போடாதே" என்று தங்கமணி அவர் வீட்டோவையும் ஓவர் ரூல் செய்துவிட்டார்.

காலை ஆறு மணிக்கு கிளம்புவதாக ப்ளான். எடுத்துப் போகவேண்டிய சாமான் செட்டுகளையெல்லாம் அடுக்கிவைத்து கிளம்புவதற்கு ஏழு மணியாகிவிட்டது. ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். தெரு திரும்பியதும் வரும் வழக்கமான "வீட்டைப் பூட்டியாச்சா சந்தேகத்துக்குப் பதிலாக தங்கமணிக்கு "கடுகு எடுத்து வைச்சேனா " சந்தேகம் வந்துவிட்டது.

- நீளமாகிடுச்சு அடுத்த பதிவில் முடிக்கிறேன்