"மரண பயம் அவன் கண்களில் தெரிந்தது" -இந்த வரிகளை கதைகளில் படிக்கும் போதெல்லாம் ரொம்ப யோசிக்காமல் காதைக் குடைந்துவிட்டு அடுத்த வரிக்கு தாவிவிடுவேன். ரொம்ப ஃபீலிங்காகயெல்லாம் யோசித்தது கிடையாது. சமீபத்தில் "குப்பி" படம் பார்த்தேன். நல்ல திரைக்கதையுடன் அருமையாக எடுத்திருந்தார்கள். படம் பார்த்துமுடித்த பிறகும் அதை அசை போடவைத்த அழுத்தமான படம். அதைப் பற்றி பிறகு வேறொரு பதிவில். ஆனால் நேற்று தான் மரண பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். இதை சும்மா சென்சேஷனிஸத்துக்காக இங்கே சொல்லவில்லை உண்மையாவே உணர்ந்து கொண்டேன். லண்டனில் மற்றும் இங்கிலாந்து முழுவதும் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தீவிரவாதம் குண்டு வைத்தல் என்று களேபரமாக இருக்கிறது. இந்த நிலையில் நகரமெங்கும் கண்காணிப்பு மிகத் தீவரமாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆபிஸுக்கு லேட்டாக கிளம்பினேன். "மைல் எண்ட்" ஸ்டேஷனில் சென்ட்ரல் லைனில் அவசர அவசரமாக மாறும் போது எதுவும் உறைக்கவில்லை. லண்டன் அண்டர்கிரவுண்ட் ட்ரெயின்களில் அதி வேகத்தில் போகக்கூடிய ட்ரெயின்களில் சென்ட்ரல் லைனும் ஒன்று என்பதால் பொதுவாகவே பீக் நேரத்தில் நல்ல கூட்டம் இருக்கும். நேற்று அவ்வளவாக இல்லாவிட்டாலும் உட்கார இடம் கிடைக்காமல் மிதமான கூட்டத்துடன் இருந்தது. உட்காருபவர்களுக்கு நடுவில் இருக்கும் கம்பியைச் சுற்றி அணைத்த மாதிரி கையைக் கோர்த்துக் கொண்டு எண்டமூரி வீரேந்திரநாத்தின் "இரவே உருவானவள்" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ட்ரெயின் நல்ல வேகம் பிடித்து இந்திர லோகத்து அப்சரஸ் ஹரிப்ரியா தேவராஜனுடன் பேச ஆரம்பித்தது விறுவிறுப்பாக போய்கொண்டிருந்தபோது "டொம்" என்று பாம் வெடித்தது போன்ற சத்தத்துடன் ட்ரெயினை தூக்கிப் போட்டது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் கம்பியில் இடித்துக் கொண்டு தூக்கிவீசப்பட்டேன். ட்ரெயினில் நின்று கொண்டிருந்த முக்கால் வாசி பேரும் இதே மாதிரி இடம் பெயர்ந்திருந்தார்கள். சென்ட்ரல் லைனின் டணல் மிகக் குறுகலாகக இருக்கும் ட்ரெயினுக்கு வெளியே ஒரு முழத்திற்கு மட்டுமே இடைவெளி இருக்கும். இவ்வளவு குறுகலான டணலில் ட்ரெயின் தாறுமாறுமாக இடித்துக்கொண்டு போக ஆரம்பித்தது. டெரெயினுக்குள்ளே ஒரே புகை மண்டலமாக ஆகிவிட்டது. இதில் தூசு வேறு கலந்து பயங்கர நெடி வேறு. மொத்தம் நாற்பத்தைந்து நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை தான் இருக்கும். ட்ரைவர் மிகக் கஷ்டப்பட்டு ட்ரெயினை ஒருவழியாக நிப்பாட்டி விட்டார். நான் ட்ரைவர் கேபினுடன் கூடிய முதல் கேரேஜில் இருந்ததலால் அவர் கேபினில் இருக்கிற எல்லா அலாரமும் அடிப்பது கேட்டது. இந்த நாற்பத்தைந்து வினாடி முழுவதும் ஒரே கூச்சலும் கூப்பாடுமாக இருந்தது. நிறைய பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள். எனக்குப் கேரேஜில் புகை நிரம்பியவுடன் மரண பயம் வந்துவிட்டது. அகல பாதாளத்தில், கதவுகள் பூட்டப்பட்டு இறங்கக் கூட முடியாத ஒரு சூழலில், கதவை உடைத்து இறங்கினாலும் வெளியே ட்ராக்கில் மின்சாரம் இருக்கும் அபாயத்தில், ட்ரெயினில் தீப்பிடித்தால் சந்தேகத்துக்கு இடமின்றி முடிவு என்ன என்று தெரிந்திருந்தது.
மக்களால் தீயைப் பார்க்க முடியாவிட்டாலும் அடுத்த காரேஜில் தீப்பிடித்திருக்குமோ என்ற நினைப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே இருந்த கதவு வழியாக அடுத்த காரேஜிற்கு போக ஆரம்பித்தார்கள். அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கிலி பிடித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த களேபரத்தில் எங்கள் கேரஜில் ஒரு சின்ன கதவு எப்படியோ தானாகவே திறந்திருந்தது. அதன் பயனாக இருந்த புகை மூட்டம் அடுத்த பதினைந்து நிமிடங்களில் குறைந்தது. இருந்த மயான சூழலில் அழுகைகளையும் விசும்பல்களையும் தவிர யாரும் வாயைத் திறக்கவில்லை. யாரோ கீழே விழுந்திருந்த என் புத்தகத்தை கையில் திணித்தார்கள்.
ட்ரைவர் ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார். அவர் குரலில் நடுக்கம் தெளிவாக தெரிந்தது. "உங்களைப் போலவே நானும் ஆடிப் போயிருக்கிறேன். ட்ராக்கில் ஏதோ இருந்ததால் ட்ரெயின் தடம்புரண்டிருக்கிறது. நான் கண்ட்ரோல் ரூமிற்கு சொல்லியிருக்கிறேன். அவர்கள் தடங்களில் இருக்கும் மின்சாரத்தை துண்டித்து எமர்ஜென்சிக்கு சொல்லியிருக்கிறார்கள் உதவி வந்துவிடும். கவலை வேண்டாம் யாருக்காவது மிக மோசமாக காயம் இருந்தால் நான் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி கொஞ்ச நேரத்தில் வந்தார். அவர் கையில் நடுக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. தூக்கிப் போட்டதில் யாரோ மோதி சன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யாருக்கும் ரத்த காயம் இல்லாதது ஆறுதலாக இருந்தது.
பிறகு நிலமை கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தது. மக்கள் பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டார்கள், கையைப் பிடித்துக்கொண்டார்கள். அழுது கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஒரு வயதான அம்மாள் மட்டும் அதிர்ச்சியில் பித்து பிடித்தவர் மாதிரி அப்படியே உறைந்து போயிருந்தார். நானும் சிலரும் அவரைத் தேற்ற முயன்றோம். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு போலிஸ்காரகள் வந்தார்கள். எல்லாரையும் நலன் விசாரித்தார்கள். அவர்கள் ட்ரைவரிடம் சென்று அவரி தேற்றினார்கள்.
அப்புறம் மக்கள் சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தார்கள். அதுவரை இழவு வீடு மாதிரி இருந்தது அப்புறம் கல்யாணவீடு மாதிரி மாற ஆரம்பித்தது. அழுபவர்கள் மூடை மாற்ற ஜோக் அடிக்க ஆரம்பித்தார்கள். வெவ்வேறு ஆங்கிளில் மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக கதையடிக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு வெள்ளைக்கார மாமி, மற்றும் பாட்டியுடன் அரட்டையடிக்க சேர்ந்து கொண்டேன். வெள்ளக்கார மாமிக்கும் பாட்டிக்கும் நான் பாம் வெடிப்பில் தப்பியது பற்றி சொன்னவுடன் ஒரே ஆச்சரியம். அதைப் பற்றி டாக்குமென்ட்ரியில் நடித்திருக்கிறேன் என்றதும்..ரொம்ப ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தார்கள். இந்த மாதிரி அசம்பாவிதங்களில் என்ன என்ன செய்ய்வேண்டும் என்று டிப்ஸெல்லாம் கேட்க ஆரம்பித்தாரக்ள். உள்ளே தூசி மற்றும் புகையினால் எல்லார் மேலும் கொஞ்சம் கரி படிந்திருந்தது. வெளியே அனேகமாக ஸ்கை மற்றும் பி.பி.ஸிகாரர்கள் இருப்பர்கள் என்று நான் சொன்னதும் மாமி கரியை துடைக்கிற சாக்கில் டச்சப் செய்துகொள்ள ஆரம்பித்தார். நாம முதல் கேரேஜ்ஜில் இருகிறோம், பின்னால் வழியாகத் தான் எவேக்குவேஷனை ஆரம்பிப்பார்கள். நாம் கடைசியில் தான் போவோம் அதற்க்குள் முதலில் வருபவர்களிடம் பேட்டி எடுத்து டெலிகாஸ்டே செய்திருப்பார்கள் என்று நான் சொன்னதும் அவருக்கு பலூனில் காத்து போனது மாதிரி ஆகிவிட்டது. பக்கவாட்டில் இடித்ததால் அவருக்கு இருந்த தோல் வலி ஒருவேளை அதிகமானால் அவரை முதலில் அழைத்துப் போவார்கள், அப்படிச் சென்றால் ஃபோட்டோ பேப்பரில் வர வாய்ப்பு இருக்கிறது என்றதும் அவருக்கு தோல் வலி அதிகரிக்கிற மாதிரி இருந்தது.
அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்தார்கள். எமெர்ஜென்ஸி பொரொசீஜர்களுக்குப் பிறகு இன்னும் ஒரு மணி நேரத்திற்க்குள் எல்லோரையும் வெளியேற்றிவிடுவோம் என்று உறுதியளித்தார்கள். அதை பாட்டியால் ஏதோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எல்லாம் எங்க ஊரில் ஒரு கேப்டன் இருக்கிறார் "விஜய்காந்த்" என்று பெயர் அவரிடம் டெரெயினிங் அனுப்பவேண்டும், அவர் மீசையை முறுக்கினால் எதிரிகள் விழுவார்கள், வேட்டியை மடித்துக் கட்டினால் எதிகள் பல்டியடிப்பார்கள், பவர் பாயிண்ட்டில் பாமை வெடிக்காமல் செய்வார், வெப் கேம் வைத்துக்கொண்டு எதிரி நாட்டு ராணுவ தளவாடங்களை கண்காணிப்பார், அவரிடம் சொன்னால் ஒத்த சணல் கயிற்றை கட்டி இந்த ட்ரெயினை இன்னொரு ட்ரெயினை வைத்து இழுத்துப் போட்டுவிட்டு கண்ணடித்துக்கொண்டு டூயட் பாடப் போயிருப்பார் என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை.
அதற்கப்புறம் ஒரு மணி நேரத்தில் எல்லாரையும் வெளியேற்ற ஆரம்பித்தாரக்ள். டணலில் நடந்து வரும் போது அடுத்த டாக்குமென்ட்ரியில் நடிப்பதற்க்கு என்ன கால்ஷீட் பேசலாம், இந்த முறை எப்படி வித்தியாசமாக நடக்கலாம், ஜூ.வி ஃபோட்டொவுக்கு என்ன சட்டை போடுக் கொள்ளலாம் என்று யோசனை செய்துகொண்டே வந்தேன். வெளியே வந்த போது வழக்கம் போல் போர்களம் போல திரும்பிய பக்கமெல்லாம் போலிஸ் ஆம்புலென்ஸ்...எதிர்பார்த்தது போல பி.பிஸி, ஸ்கை எல்லாம் அப்பீட் ஆகியிருந்தார்கள். யாரோ பேனாவும் பேப்பரும் கையுமாக வருவதைப் பார்த்து பேப்பர்காரனாய் இருக்கும் என்று நான் முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ள, "இருபத்தைந்து ஆக்ஸ்போர்ட் சர்கஸ் பஸ் எந்தப் பக்கம் வரும் தெரியுமா?" என்று கேட்க "போய்யா அந்தப்பக்கம்...நானே இங்க கால்ஷீட் குழப்பத்துல இருக்கேன்..ஆங்....இருபத்தைந்து வரும்... நல்லா வாயில வரும்" என்று கடுப்பாகி... எக்ஸ்பீரியன்ஸுக்கு இந்த உலகத்தில் மதிப்பே இல்லைங்க. அப்புறம் இன்னொரு தொப்பியணிந்த போலிஸ்காரர் வந்து பெயர் மற்றும் அட்ரெஸை எழுதி வாங்கிக் கொண்டார். "லோக்கல் டீ.வியெல்லம் அனுப்பி தொந்தரவு பண்ணிடாதீங்க சார்"ன்னு நான் சொன்னது அவருக்கு புரியவில்லை...தொழிலுக்கு புதுசாக வந்திருக்கும் கத்துக்குட்டியாயிருக்கும் "ஸ்காட்லாந்து யார்ட்" என்று ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆபிஸுக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் "இந்த தரமாவது குடும்பத்தோட தான் நடிப்பேன் இல்லைன்னா கால்ஷீட் இல்லைன்னு கறாரா சொல்லிடுங்க" என்று கறாரா சொல்லிவிட்டார். கால்ஷீட் கேக்கிறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சிக்கோங்க சொல்லிப்புட்டேன் ஆமா!
மேலும் விபரங்கள் அறிய மேலும் அறிய
Friday, July 06, 2007
Subscribe to:
Posts (Atom)